Home / அரசியல் / காக்கிச் சட்டைக்குள்ளும் நாற்றமெடுக்கும் சாதி!

காக்கிச் சட்டைக்குள்ளும் நாற்றமெடுக்கும் சாதி!

நாங்கள் யூனிபார்ம் போட்டவர்கள். சாதி, மத, தேசிய, பாலின உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்  என்று சொல்லிக் கொண்டு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடும் காவல் துறைக்குள் இப்போது சாதிச் சிக்கல் வெளிப்பட்டுள்ளது. செப்டம்பர் 18 ஆம் அன்று திருச்செங்கோடு மாவட்டத் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்தது. வழக்கம் போல் இதுவும் ஒரு சந்தேகத்திற்குரிய மரணமாகவே உள்ளது. தற்கொலையா? கொலையா? என்று ஒரு நேர்மையான விசாரணை மூலம்தான் அறிய முடியும். விஷ்ணுப்பிரியாதான் இரண்டு மாதங்களுக்குமுன் நடந்த தலித் இளைஞர் கோகுல்ராஜின் கொலை வழக்கை விசாரித்து வந்தவர்.  விஷ்ணுப்பிரியா கடலூர் மாவட்டம் கோனூரைச் சேர்ந்தவர்; 27 வயதே நிரம்பியர்; 2.2.2015 அன்றுதான் திருச்செங்கோடு டி.எஸ்.பியாகப் பதவியேற்றார். ஏழே மாதங்கள்தான் பணியில் இருந்துள்ளார். கோகுல்ராஜ் வழக்கு மட்டுமின்றி பள்ளிப்பாளையம் மில் உரிமையாளர் ஜெகநாதன் கொலை வழக்கையும் விசாரித்து வந்தவர். விஷ்ணுப்பிரியா  அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் அதிகாரி.

எப்போதும்போல் காவல்துறையினர் அமைதி காத்துக் கொண்டிருந்த போது, உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாகத் தான் தற்கொலைக்கு தள்ளப்பட்டார் விஷ்ணுப்பிரியா, நேர்மையான அதிகாரிக்கு இதுதான் நிலைமை, எனது வேலை போனால்கூட பரவாயில்லைஎன்று  கீழக்கரை துணைக் கண்காணிப்பாளரும் விஷ்ணுப்பிரியாவின் நண்பருமான மகேஸ்வரி துணிச்சலுடன் மெளனத்தைக் கலைத்தார். இதை தொடர்ந்து உயரதிகாரி கண்காணிப்பாளர் செந்தில்குமாரின் பெயர் அம்பலமானது. கடைசியாக விஷ்ணுபிரியாவுடன் பேசியவரும்  இவரே. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு அதில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. குற்றம் செய்யாத நிரபராதிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் போட்டு சிறையில் அடைக்கச் சொல்லி உயர் அதிகாரி விஷ்ணுப்பிரியாவை நிர்பந்தித்துள்ளார். விஷ்ணுப்பிரியா மன உளைச்சலுக்கு ஆளானதற்கு இதுவொரு காரணம். அதுமட்டுமின்றி, திருச்செங்கோடு பகுதியில் நடக்கும் சாதியப் பிரச்சனைகளின் போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி விஷ்ணுப்பிரியா வழக்கு பதிவு செய்தால் அதை கடுமையாக கண்டித்திருக்கிறார்கள் உயர் அதிகாரிகள். மேலும் விஷ்ணுப்பிரியாவை ‘உதவாக்கரை’ (useless), சோத்து மூட்டை, இதுகூட தெரியவில்லைஎன்றெல்லாம் அடிக்கடி வொயர்லெஸ் மைக்கில் திட்டியுள்ளார். தலித்தாகவும் பெண்ணாகவும் இருக்கும் விஷ்ணுப்பிரியாவின் சுயமரியாதையைக் காலில் போட்டு மிதித்ததுதான் அவர் தற்கொலை (ஒருவேளை உண்மை எனில்) செய்வதற்கு காரணமாக உள்ளது. விஷ்ணுப்பிரியா யுவராஜின் மனைவி சுவிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சொன்ன போது அவரை தேற்றினார் விஷ்ணுப்பிரியா என்று சுவிதா பதிவு செய்துள்ளார்.

கோகுல்ராஜைக் கொடூரமாகக் கொன்ற தீரன் சின்னமலைப் பேரவையின் தலைவர் யுவராஜ் நூறு நாட்களைக் கடந்து தலைமறைவாக இருக்கிறார். அவ்வப்போது வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தவர், அக்டோபர் 4 ஆம் நாளன்று புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுக்கிறார். உயர் அதிகாரிகள் தொடங்கி அரசியல் புள்ளிகள் வரை யுவராஜைப் பாதுகாத்து வருகின்றனர் என்று செய்தி வருகிறது. இடை நீக்கம், பணியிட மாற்றம் என்று எந்தவிதமான நடவடிக்கையும் எஸ்.பி. செந்தில் குமார் மீது இல்லை. சென்னை ஐ.ஜி. அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை.  செந்தில்குமார் பற்றி ஊடகங்களில் வெளிவரும் செய்தியும் காவல்துறையின் யோக்கியதையை அம்பலப்படுத்தி கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில், கோகுல்ராஜ் கொலை வழக்கையும், விஷ்ணுப்பிரியா வழக்கையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும், எஸ்.பி. செந்தில்குமாரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. கிட்டதட்ட அனைத்துக் கட்சிகள், அமைப்புகளும் சி.பி.ஐ. க்கு வழக்கை மாற்ற வேண்டுமென்று கோரிய போதும் தமிழக அரசு இக்கோரிக்கையைப் புறந்தள்ளியுள்ளது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைப் போதுமென்றும் சி.பி.ஐ. விசாரணை மட்டும் உருப்படியாக நடந்துவிடுமா?என்று இறுமாப்புடன் பேசியுள்ளார் முதல்வர். காவல் துறை அமைச்சரும அவர்தானே. நியாயமாக விஷ்ணுப்பிரியாவின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர் முதல்வரே. இவ்வழக்கில் புதைந்துகிடக்கும் உண்மைகளை மூடி மறைப்பதே தமிழக அரசின் நோக்கமாகும்.

சி.பி.சி.ஐ.டி. விசாரணை நாம் எதிர்பார்த்தபடியே நடந்து கொண்டிருக்கிறது. விஷ்ணுப்பிரியா காதல் விவகாரத்தில்தான் தற்கொலை செய்து கொண்டார் என்று சோடிக்கும் முயற்சியில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மாளவியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நாமக்கல்லில் உள்ள சில அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, கூடுதல் டி.எஸ்.பி. பெஸ்கின் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடையில் யுவராஜ் வேறு விஷ்ணுப்பிரியாவின் சாவுக்கு காரணம் உயரதிகாரிகளின் அழுத்தமென்று சொல்லி வருகிறார். இந்த விசாரணையின் போக்கில், விஷ்ணுப்பிரியாவைக் காவல் துறை பணிக்கு தகுதியற்றவர், பலவீனமானவர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் உருவாக்கிக் கொண்டிருக்கும் தவறான மதிப்பீட்டைப் பயன்படுத்தப் பார்க்கிறது தமிழக அரசு. சி.பி.சி.ஐ.டி.யின் விசாரணை எப்படியும் உண்மைகளை மூடி மறைப்பதில் வெற்றியடைந்து விஷ்ணுப்பிரியாவை சிறுமைப்படுத்தி அவரது மரணத்தை இழிவுப்படுத்தும்.

காவல் துறைக்குள் சாதி, பாலினரீதியான ஒடுக்குமுறைகள் நிலவி வருகிறது என்று ஆணி அடித்தாற் போன்று சொல்லியுள்ளார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி திலகவதி. பொதுவில் காவல்துறைக்குள் நிலவும் அதிகாரத்துவம் என்பதைவிட சாதிரீதியான, பாலியல் ரீதியான ஒடுக்குமுறைதான் விஷ்ணுப்பிரியாவின் உயிரைக் குடித்துள்ளது. காவல்துறைக்குள் ஏராளமான விஷ்ணுப்பிரியாக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். 2012 இல் மட்டும் காவல் துறையில் சந்தேகத்திற்குரிய வகையில் 58 பெண் காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர். உண்மையில் காவல் துறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறியப்பட்ட அனைத்துப் பெண் காவலர்களின் வழக்கையும் விசாரிக்க வேண்டும்.

சாதிய சமூகத்தில் அங்கிங்கெனாதபடி எல்லாவிடங்களிலும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் நிரம்பிக் கிடக்கின்றன. காவல் துறையா? சாதித் துறையா?  என்ற கேள்வியே மனதில் எழுகின்றது. இன்றளவில்  எந்தத் துறையும் சாதிய சிக்கலுக்கு விதிவிலக்கில்லை. சட்டம் ஒழுங்கென்று இந்த அரசு பாதுகாத்துவருவதும் சாதி ஒழுங்கைதான். அரசின் பங்கை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. சாதி ஒடுக்குமுறைகளுக்கெதிரானப் போராட்டத்தின் பிரிக்க முடியாதப் பகுதி சமூகத்தை சனநாயகப்படுத்தும் மாபெரும் இயக்கமாகும். ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் சமதையானவன். ஒவ்வொரு மனிதனின் சுயமரியாதையும், மான உணர்ச்சியும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியதுஎன்பதை பண்பாட்டு விழுமியாக இம்மண்ணில் வளர்த்தெடுக்க வேண்டும். கடினமானப் பணிதான். ஆனால், அதைத் தவிர வேறு வழியில்லை. சுயமரியாதையையும், சனநாயகத்தையும் உயர்த்திப் பிடித்து நடைமுறைப்படுத்தும் திடசித்தத்துடன் முன்னேறிச் செல்வதே விஷ்ணுப்பிரியாக்கள் தலைநிமிர்வுடன் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளுடன் நடைபோட உதவும்.

– செஞ்சுடர்

10/10/2015

நன்றி: மக்கள் விடுதலை இதழ்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*