Home / அரசியல் / சென்னை உயர் நீதிமன்றம்: வழக்கறிஞர் போராட்டமும் தமிழ்மொழி உரிமையும் 

சென்னை உயர் நீதிமன்றம்: வழக்கறிஞர் போராட்டமும் தமிழ்மொழி உரிமையும் 

இந்திய நீதித்துறை வரலாற்றிலும் வழக்கறிஞர்களின் சனநாயக உரிமைக்கான போரட்ட மரபிலும் தமிழகத்திற்கென்று பெருமைமிக்க வரலாறு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலந்தொட்டு பார்ப்பனரல்லாத பிரிவினர்களைக் அதிகம் நீதிபதிகளாகக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தனித்துவமான இடமுண்டு. புகழ்பெற்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கியதிலும் சமூக நீதிக்கான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியதிலும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உண்மையிலேயே பெருமை உண்டு. ஆனால் அண்மை காலமாக சமூகத்தில் படிப்படியாக மேலோங்கி வரும் பார்ப்பனியப் பின்புலத்திலான இந்துத்துவத்திற்கும் அதன் இன்னொரு கூறான சாதியத்திற்கும் சென்னை உயர் நீதிமன்றம் சோதனைக் களமாக மாற்றப்பட்டு வருகிறது.

உயர் நீதிமன்றமும் , சனநாயக உரிமைக்கான வழக்கறிஞர்களின் போரட்டமும்

இட ஒதுக்கீடு, தொழிற்சங்க உரிமை, சட்ட மாணவர்களின் உரிமைக்கான போராட்டம் , ஈழத்தமிழர்களின் விடுதலைக்கானப் போராட்டம் , தூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம் என சமூகத்தின் எல்லாவிதமான போராட்டங்ளும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் காத்திரமான அளவில் எதிரொலித்ததை அனைவரும் அறிவோம். குறிப்பாக 2009 – 2010 ல் ஈழத் தமிழர்களுக்கெதிரான இன அழிப்புப் போருக்கு எதிரான போர்க்கள மையமாக உயர்நீதிமன்றம் திகழ்ந்தது. தமிழீழ மக்களின் எதிரியாக வலம் வரும் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆயிரக்கணக்கான அதிரடிப்படையினரை ஏவி நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் கொடூரமாக தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தாக்கியது.

madras hc lawyers protest tamil

நீதீபதி தேர்வில் இப்போதுள்ள இரகசிய தன்மையிலான கொலிஜியம் முறையை நீக்கி வெளிப்படைத்தன்மையுடன் தேர்வுமுறை அமைய வேண்டுமென்று தீவிரமானப் போராட்டத்தை இன்றுவரை முன்னெடுத்து வருகின்றனர். போரட்டத்தின் நிர்பந்தம் காரணமாக கொலிஜியம் முறையை மாற்றி புதிய வடிவிலான சட்ட முன்வரைவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த சூழலில்தான்  கொலிஜியம் முறையில் நீதிபதிகளுக்கான 12 பேர் கொண்ட பட்டியல் அரசு தரப்பில் தயாரிக்கப்பட்டது. இந்த 12 பேர் மட்டுமில்லாமல் இதற்கு முன்பு நியமிக்கப்பட்ட நீதிபதிகளிலும் பார்ப்பனர் மற்றும் பார்ப்பனரல்லாத உயர் சாதியினரே அதிகமாக உள்ளனர். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மத சிறுபான்மையினர், பெண்கள்  போன்ற சமூகப் பிரிவினருக்கு உரியப் பிரதிநிதித்துவம் இல்லை. மேலும் தொழில் நிபுணத்துவமும் சட்ட அறிவும் இல்லாத, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள நபர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர் என்று போராடினார்கள். இப்போராட்டம் மென்மேலும் தீவிரமடைந்து மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் மத்தியிலும் சமூக நீதிக்கான போராட்டமாக விரிவடைந்தது. அரசு தரப்பும் வேறு வழியின்றி நீதிபதிகள் 12 பேருக்கான பட்டியலைத் திரும்பப் பெற்றது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் ஒட்டுமொத்த பட்டியலும் திரும்பப் பெறப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

பார்ப்பனிய – சாதியக் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கும் வகையில் மராட்டிய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்ததை எதிர்த்து மாட்டிறைச்சி உண்ணும் போராட்டம் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. இதற்கு எதிராக மராட்டிய அரசுக்கு ஆதரவான கருத்தும் நீதிபதிகள் மத்தியிலும் சில வழக்கறிஞர்கள் மத்தியிலும் வெளிப்படுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக தமிழ் மொழியில் வழக்காடும் உரிமை வேண்டும் என்று நீண்ட போராட்டம் நடத்தி இறுதியில் உயர் நீதிமன்ற நீதிபதிகளோடு பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு எட்டப்பட்டது. 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று மத்திய அரசுக்கு அனுப்பியது. மத்திய அரசு சனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் மூலமாக தமிழ் மொழியை வழக்காடும் மொழியாக நடைமுறைப்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் இந்தியை வழக்காடும் மொழியாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுதான், அரசியல் சட்டத்தின் வழிகாட்டுதலுமாகும். ஆனால், இதற்கு மாறாக தமிழ்மொழிக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காக்கி கிடப்பில் போட்டுள்ளது மத்திய அரசு.

இந்தப் பின்னணியில் தமிழில் வழக்காடும் உரிமைக்கானப் போராட்டம் உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மீண்டும் உக்கிரமடைந்த‌து. கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தினர். அது நீதித்துறை – நீதிபதிகளின் ஊழலுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியது. இந்நிலையில்தான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்பு 14-09-2015 அன்று வாயில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு தமிழ் மொழியில் வழக்காட உரிமை வேண்டி கோரிக்கை அட்டையுடன் அமைதி வழியில் போராடியதற்காக மதுரை வழக்கறிஞர்கள் 12 பேர் சிறையிலடைக்கப்பட்டனர்.  நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் எதிராகப் போராடியதாகவும், நீதிமன்ற அவமதிப்பு காரணத்தைக் காட்டியும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், அகில இந்திய பார் கவுன்சில் ஆகிய மூன்று தரப்பும் கூட்டு சேர்ந்தபடி போராடிய 12 வழக்கறிஞர்களை இடைக்கால தகுதி நீக்கம் செய்துள்ளனர்.

வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையும், நோக்கமும், நீதித் துறையின் சீரழிவும் :

வழக்கறிஞர்களின் சனநாயக உரிமை, சமூகநீதிக்கானப் போராட்டங்களைச் சர்வாதிகார மனப்பான்மையில் எதிர்ப்பதோடு, நீதிபதிகளுக்குப் பாதுகாப்பில்லை, வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையே மிரட்டுகின்றனர், உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில்பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றெல்லாம் தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.  மக்களுக்கான குடிமை நீதிமன்றங்களை இராணுவ நீதிமன்றங்களாக மாற்றும் முயற்சியே இது.

உண்மையில் நீதிமன்றமும் சமூகத்தின் ஓர் அங்கம்தான். இதை நீதிபதிகள் ஏற்க மறுக்கின்றனர். அதாவது ஆசிரியர்களும்,மாணவர்களும் தங்களது கோரிக்கைகளைப் பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள்தான் வெளிப்படுத்த முடியும். அரசு ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள்தான் தங்களது உரிமைகளுக்காகப் போராடுகின்றனர். உலகம் முழுக்க தொழிலாளர்கள் தொழிற்சாலை வளாகங்களில்தான் தங்களது போராட்டங்களை நடத்துகின்றனர். அவ்வாறு இருக்கும்போது வழக்கறிஞர்கள் தங்களின் தொழில் உரிமை சார்ந்தும் சமூக அக்கறையின் பாற்பட்டும் போராட்டங்களை, கோரிக்கைகளை வயல்வெளிகளிலும், கடற்கரையிலுமா நடத்த முடியும்? நிச்சயம் நீதிமன்ற வளாகத்திற்குள் தான் நடத்த முடியும். இன்று நீதிபதிகளாக இருப்பவர்கள் சுமார் 20 ஆண்டுகள் தங்களின் தொழில் உரிமைக்காகவும்,  அரசியல் உரிமைகளுக்காகவும் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தோ அல்லது ஆதரவு நிலைகளிலோ இருந்தவர்கள்தான். நீதிபதிகளானவுடன் புனிதர்களாகவும், கடவுளைவிட மேலானவர்களாகவும்,  அரசியல் சாசனத்தை வடிவமைத்தவர்கள் போலவும், அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட இடமாக நீதிமன்றத்தை மாற்றுகின்றனர். பெரும் இருமாப்போடு சராசரி சமூகத்திலிருந்து வெகு உயரத்தில் இருப்பதாக தங்களைப் எண்ணிக்கொள்கின்றனர். உண்மையில் இதற்கு அவர்கள் பொருத்தமானவர்கள்தானா?

நீதிபதிகளைவிட அதிக சட்ட நுண்ணறிவும்,  வழக்குகளைக் கையாண்ட திறமையும் கொண்ட மூத்த வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர். சமூக அக்கறையும், சனநாயக மாண்பும், நீதியின்பால் நடுநிலைமையும் கொண்ட வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக வருவதற்கே தயங்குகின்றனர். அதே வேளையில், பெரும்பாலான நீதிபதிகள் அரசின் உயர்மட்டத்தோடு தங்களுக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தியும், கோடிக்கணக்கான பணபேரத்தின் மூலமாகவும், பரம்பரை, உயர்சாதி வலைப்பின்னலோடும்தான் பதவிக்கு வருகின்றனர்; சில ஆண்டுகளிலேயே பெரும் பணக்காரர்களாகவும் ஆகிவிடுகிறார்கள்.  பதவிக் காலத்திற்குப்பின் அரசு அமைக்கும் ‘கமிஷன்’களில் பங்குபெறும் கனவுகளோடு ஆட்சியாளர்களுடன் ஒத்துப்போவதை எழுதாத சட்டமாக பெரும்பான்மை நீதிபதிகள் பாவிக்கின்றனர்.

மேட்டுக்குடியினரின் உல்லாச கேளிக்கை விடுதிகளில் கூடி கும்மாளமிடுவதும், எல்லாவிதமான சீரழிவுகளிலும் ஊறித்திளைப்பவர்களாகவும் பெரும்பான்மை நீதிபதிகள் வலம் வருகின்றன‌ர். இத்தனை சீரழிவுகளுக்கும் அடித்தளமாகவும், ஆலோசகர்களாகவும் வழக்கறிஞர்களிலேயே சில கருப்பு ஆடுகள் இருந்துவருகின்றனர். நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் சாதிய அடிப்படையிலும், ஊழலில் திளைப்பதிலும் இந்த அணி சேர்க்கை நடந்து வருகிறது. அதாவது, வழக்கறிஞர்கள் தங்கள் சாதியைச் சேர்ந்த  நீதிபதிகளுக்கு வேண்டியதை செய்துக் கொடுப்பது, அதுபோல் நீதிபதிகளும் தங்கள் சாதியைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்கு வேண்டியதைச் செய்வதும் என்பதாக நடைமுறையுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், மாநில அரசின் உளவுத் துறை அறிக்கையாகப் பெறப்பட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையாக வெளிப்படுத்தப்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதியின் வேதனையாக கீழ்க்கண்ட கருத்து வெளிப்படுகிறது, ” சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சாதி அடிப்படையில் குழுக்களாக செயல்படுகின்றனர். அவர்கள் நீதிமன்றத்துக்குள்ளேயே அரசியல் போராட்டம், ஊர்வலம் நடத்துகின்றனர். அம்பேத்கர் சிலை முன்பு அமர்ந்து மாட்டிறைச்சி உண்கின்றனர். நீதிமன்றத்திற்குள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். நீதிபதி அறைக்குள் குடும்பத்தோடு போராட்டம் நடத்துகின்றனர். கட்சிக்காரர்களிடம் மிரட்டி பணம் வாங்குகின்றனர்” என்றெல்லாம் சாத்தான் வேதம் ஓதிய கதையாக நீதிபோதனை செய்கின்றனர். அதாவது திருடன் திருடியதை மூட்டைக் கட்டி தோளில் போட்டுக் கொண்டு, ”திருடன் ஓடுகிறான், பிடியுங்கள்” என்று கத்திக் கொண்டே ஓடுவானாம். அதுபோல உள்ளது இவர்களின் கருத்து.

தமிழக மக்களின் உரிமையை மறுப்பது யார்?

இப்போது சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கமோ, தமிழ்நாடு,புதுச்சேரி பார் கவுன்சிலோ தீவிரமாகப் போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இல்லை.ஏனென்றால் வழக்கறிஞர் சங்கத்தின் பொறுப்பாளர்கள்தான் பல குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக உள்ளனர் என்றும், நீதிபதிகளுக்கு இவர்கள்தான் நெருக்கமாக செயல்படுகின்றனர் என்றும் நீதிமன்ற வளாகத்திற்குள் பரவலாக கருத்துகள் வருகின்றன. இந்தப் பின்னணியில் வழக்கறிஞர்களின் தமிழில் வழக்காடும் உரிமை, நீதிமன்றத்தின் பாரபட்சமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, அகில இந்திய பார் கவுன்சிலின் நடவடிக்கை, ஊழல் நீதிபதிகளுக்கெதிரான போராட்டம் போன்றவற்றில் தீவிரமான முடிவுகளை எடுக்க எதார்த்தத்தில் சாத்தியமில்லை என்பதைத்தான் அண்மை கால வரலாறு நமக்குக் காட்டுகின்றது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தை உடைத்து போட்டி சங்கத்தை உருவாக்கி நீதிபதிகளின் செல்வாக்கோடு புதிய சங்கத்திற்கு அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றது. இது பார்ப்பனிய, சாதிய பிரித்தாளும் சூழ்ச்சியன்றி வேறென்ன? தங்களின் தொழில் சார்ந்த நலன்களில் இருந்தும் தங்களின் வர்க்க குணாம்சத்தில் இருந்தும் வழக்கறிஞர்களிலேயே கனிசமானவர்கள் பார்ப்பனிய நரித்தனத்திற்கும், அரசியல் போராட்டங்களைச் சிதைக்கும் அரசின் உள்நோக்கத்திற்கும் பலிகடாவாகின்றனர்.

அதே போல, தமிழில் வழக்காடும் உரிமை என்பது தமிழ்த் தேசிய இன மக்கள், அவர்களின் அங்கமான வழக்கறிஞர்களின் சனநாயகப்பூர்வ அரசியல் உரிமையாகும். இது வழக்கறிஞர்களால் மட்டுமே போராடி பெற முடியாது. இது அடிப்படையில் மக்கள் கோரிக்கை இதை வழக்கறிஞர்கள் மட்டத்தோடு மட்டுமே சுருக்குவது வெற்றிக்கு வழிவகுக்காது. அடுத்து அந்தந்த மாநில மொழிகளில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துவதற்கும், நீதிமன்ற மொழியாக செயல்படுவதற்கும் மாநில அரசின் பரிந்துரையைத் தொடர்ந்து மத்திய அரசு, குடியரசு தலைவர், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றிட வேண்டும்.

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாத உயர்சாதிக் கும்பல் ஆங்கிலேயர் காலந்தொட்டு உயர்நீதி மன்றத்தில் ஆங்கில மொழியை ஆதிக்கத்திற்குப் பயன்படுத்தி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கோ கல்வியறியும் ஆங்கில மொழியறிவும் மறுக்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வழக்காடுவதென்பது எட்டாக் கனியாக இருந்தது. ஆக, தமிழில் வழக்காடுவது என்பது சாதாரண சமூகப் பிரிவினரின், மக்களின் கோரிக்கையாக முன்னிற்கிறது. உயர்நீதி மன்றத்தை தமது முற்றுரிமையாக இத்தனை காலமும் அனுபவித்து வருகின்ற சமூகப் பிரிவினர் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடுவது என்றக் கோரிக்கையை ஏதோ ஒரு வகையில் புறந்தள்ளுகின்றனர்.  இந்தச் சிக்கல் தமிழ்ச் சமூகத்திற்குள் நிலவும் பார்ப்பனிய, சாதிய மற்றும் வர்க்க கட்டமைப்போடு பின்னிப் பிணைந்துள்ளது.

எனவே, தமிழ்மொழி உரிமைக்கான போராட்டம் என்பது உண்மையில்  பார்ப்பனிய, சாதிய சமூக கட்டமைப்பிற்கும் வர்க்க ஏற்றத் தாழ்வுக்கும் தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராக  கூர்மைப்படுத்தப்பட வேண்டும் .

அப்போதுதான், வெகுமக்களின் போராட்டமாக வளர்த்தெடுப்பதன் மூலம்தான் மத்திய மாநில அரசுகள் பணிந்து வருவதற்கான நெருக்கடி ஏற்படும். அதற்கு மாறாக நீதிபதிகளுக்கு எதிராகப்  போராடுவதால் நீதிபதிக்கெதிரான போராட்டமாக திசைதிருப்பப்பட்டு அதன் அரசியல் முக்கியத்துவமே மழுங்கடிக்கப்படக் கூடும். நீதிபதிகளும் இவற்றைத் தங்களுக்கெதிரான போராட்டமாக குறுகிய கண்ணோட்டத்தில் சுருக்கிப் பார்த்துவிட வாய்ப்புண்டு.

போனது போகட்டும்! கடந்த கால அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்று தமிழில் வழக்காடும் உரிமைக்கான போராட்டத்தைத் தமிழ்த் தேசிய மக்களின் உரிமைக்கானப் போராட்டமாக வளர்த்தெடுப்போம்.

– தோழர் விநாயகம் ,

சிபிஎம்எல் (மக்கள் விடுதலை)

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*