Home / அரசியல் / நேற்று ஆப்பிரிக்கா – இன்று பீகார் – நாளை தமிழ்நாடு!

நேற்று ஆப்பிரிக்கா – இன்று பீகார் – நாளை தமிழ்நாடு!

ஆப்பிரிக்காவின் நிலைக்கும், மோடியின் பீகாருக்கான 3.5 இலட்சம் கோடி நிதி ஒதுகீட்டுக்கும், தமிழ்நாட்டின் கட்டாயத் தலைக்கவசத்திற்கும் என்ன தொடர்பு?

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் இந்த உலகில், இந்த முடிச்சையும் படித்துப் பாருங்களேன்.

மேற்கு ஆப்ரிக்காவின் திம்பக்கு நகரம், 14 ஆம் நூற்றாண்டில் உலகின் செழுமையான, செல்வம்மிக்க நகரங்களில் ஒன்று. இவ்விடத்தில் செல்வம் என்பது காசு, உடல் நலம், கல்வி அறிவு, சமத்துவம் அனைத்தையும் குறிக்கும். அன்றைய இலண்டன் மாநகரை விட 5 மடங்கு பெரியதாகவும், அன்றைய உலக உப்பு, பொன் தேவையின் ஐம்பது விழுக்காட்டை நிறைவுசெய்யும் அளவிற்கு அங்கு ஆட்சி புரிந்த மாலி அரசிடம் இருந்தது.

பல ஆப்பிரிக்கக் குடும்பங்கள் தங்களுக்கெனத் தனி நூலகம் வைத்திருந்தார்கள். திம்பக்கு நூலகம் மட்டும் சட்டம், மருத்துவம், கணிதம், வரலாறு, அரசியல், கவிதை, வானியல் என 7,00,000-த்திற்கும் மேற்பட்ட நூல்களுடன் கலைக்கள‌ஞ்சியமாகவும், அறிவில் சிறப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது. அந்த நகரத்தில் மட்டும் 25,000 பல்கலைகழக மாணவர்கள் பயின்றனர்.

இவையாவும், திம்பக்கு என்னும் ஓர் அகண்ட தூய்மையான, துப்புரவான, அன்றைய நாளின் புதுமையான நகரத்தில் மட்டும். இதைப் போன்று 400 சிறு, பெரு நகரங்கள் ஆப்பிரிக்கா எங்கும் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்நகரை இடைக்கால பாரிசு (Paris) என்கிறது நேசனல் சியோகிராபி (national geography) இதழ். ஆனால் இன்று, திம்பக்கு இலண்டன் மாநகரைக் காட்டிலும் 236 மடங்கு சிறியதாகவும், தெருக்களில் பிச்சைக்காரர்களும், கழிவுகளும் சூழ்ந்து, 5 நூற்றாண்டுகளுக்கு முன்னால் இருந்த மக்கள் தொகையில் பாதியுடன் நொடிந்துக் கிடக்கின்றது.

இது எவ்வாறு நடந்தது, அதற்கும் மோடியின் பீகார் கரிசனத்துக்கும், தமிழகத்தின் கட்டாயத் தலைக்கவசத்திற்கும் என்ன தொடர்பு? முடிச்சுப் போடலாம் வாங்க.

ஆப்பிரிக்கா எவ்வாறு நொடிந்தது?

14 ஆம் நூற்றாண்டில், போர்ச்சுக்கல் நாட்டில் இருந்து மாலுமிகள் குனியா கடற்கரையை அடைந்தனர். அங்கு ஒரு 30 வயதான‌த் தாய், கைக்குழந்தை, 2 வயதான‌ மகன், 14 வயதான‌ மகளைக் கண்டார்கள். அதில் தாயை மட்டும் இழுத்தார்கள், 30 வயதுப் பெண்ணின் நம்பவியலாத உடல் வலிமை, மாலுமிகளுக்கு வியப்பை அளித்தது. உடனே மாலுமிகளில் ஒருவன் தாயின் குழந்தையை கப்பலுக்கு எடுத்துச் சென்றான். குழந்தையை வைத்துத் தாயை அடிமையாக்கினார்கள். அதுவே உலகின் முதல் அடிமைக் காப்புரிமைக்கு வழிவகுத்தது. ஆப்ரிக்காவின் அழிவும் தொடங்கியது.

முதல் காப்புரிமை:

போர்ச்சுக்கல் மாலுமிகள் உழைக்கும் அடிமைகளைத் தேடி, ஆப்பிரிக்காவுக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள். இதை மற்ற ஐரோப்பிய மாலுமிகளும் செய்யத் தொடங்கினார்கள். அதனால், அடிமைகளை நாங்கள் மட்டுமே வணிகம் செய்ய வேண்டும், இல்லையெனில் மற்ற நாடுகள் எங்களுக்குக் கப்பம் கட்டிவிட்டு அடிமைகள் வணிகம் செய்யலாம் என்று போர்ச்சுக்கல் மன்னர் போப்பிடம் கூறினார். ஏனெனில், எங்கள் மாலுமிகள் அடிமைகளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க அரும்பாடுபட்டனர் என்றார். அதைத் தொடர்ந்து 1452 ஆம் ஆண்டு போர்ச்சுக்கல் நாட்டினரே ஐரோப்பாவின் அதிகாரப்பூர்வ அடிமைகள் வியாபாரி என்று போப் காப்புரிமை வழங்கினார்.

ஆனால் மாலியின் மாலுமிகள், 1311 ஆம் ஆண்டே அமெரிக்காவை அடைந்தனர். அது கொலம்பசு செல்வதற்கு 181 ஆண்டுகள் முன்னர் நடந்தது.

15 ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவின் படையெடுப்பு என்பது, ஆப்பிரிக்காவில் அடிமைகளைப் பிடிப்பதாக மட்டும் இல்லை, அவர்களின் வளங்களைத் திருடுவதாக மட்டும் இல்லை, அம்மை போன்ற நோய்களை கொடுப்பதாக மட்டும் இல்லை, அவர்களின் நூலகங்களைச் சூறையாடுவதாக மட்டும் இல்லை, அவர்களின் அறிவை வேரோடுப் பிடுங்குவதாக இருந்தது. படிக்கவும் எழுதவும் தெரிந்த அனைவரையும் அவர்கள் கொன்றுகுவித்தார்கள். அனைத்து நூலகங்களையும் தீயிட்டனர். சிந்தனையாளர்களையும், மக்களை வழிநடத்துபவர்களையும் கொன்றனர்.

அறிஞர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள், நூலகங்கள் என மக்களை வழிநடத்தும் அனைத்துக் கருவிகளும் அமைப்புகளும் இல்லா சமூகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவனது கண் திடீரெனப் பிடுங்கப்பட்டால் என்ன ஆகும்? நம் நாட்டில் படிப்பறிவும், எழுத்தறிவும் இல்லாமல், சிந்தனையாளர்கள் வழிநடத்தாமல் ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு இருகின்றார்கள்? அவ்வாறே கிட்டத்தட்ட மொத்த ஆப்பிரிக்காவும் இரண்டு நூற்றாண்டில் ஆக்கப்பட்டது.

இன்று உலகத்தின் முன் தன்னம்பிக்கை இழந்து, தன்மானம் சிதைந்து, தாழ்வு உணர்ச்சியுடன், மொழியைத் தொலைத்து, உலக நாடுகளின் உதவி நாடி காத்திருக்கும் ஆப்பிரிக்க கண்டம் (ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி), ஒருகாலத்தில் வளர்ந்த கண்டம். அனைத்து நாடும், மக்களும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம். அவை ஒவ்வொன்றும் எவ்வாறு சரிந்தது என்பதன் ஆய்வு கட்டாயம் தேவை.

ஆப்பிரிக்கர்களின் (ஆப்பிரிக்காவின் குறிப்பிடத்தக்கவர்களின்) தன்னம்பிக்கையின்மை, தன்மானமின்மை, தாழ்வு உணர்ச்சி போன்றவற்றைக் கட்டிக்காப்பதில் முதன்மையான பங்கு, “நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்” என்று உலக நாடுகள் அவர்களிடத்தில் தொடர்ந்து கூறுவதே. மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்த உதவி (ஆனால் இன்றோ நீரைவிட்டு வைப்பதே பெரிது என்பது வேறு).

ஆப்பிரிக்கர்களிடத்தில் சூறையாடப்போகும் வளங்களில் சிறு பங்கை முன்கூட்டியே கொடுப்பது போல அல்லது ஏற்கனவே சூறையாடியதில் சிறுபங்கை உலக நாடுகள் கொடுப்பது போல, மோடியின் பீகாருக்கான 3.5 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவியும் “நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்” என்பதற்கு ஒப்பாகும்.

ஏன்?

பீகார் மக்களும் மற்றவர்களைப் போல சமம்தான், அவர்களுக்கும் செழிப்பான வரலாறு உண்டு, ஆனால் இந்தியாவில் வறுமை மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டது. (யாரும் யாரை விடவும் பெரியவர்கள் என்று பொருளாகாது) ஆனால் தற்காலச் சிக்கலில் இருக்கும் ஒரு இனத்தை, உதவி என்ற பெயரில் தொடர்ந்து தன்னம்பிக்கையை சிதைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

bihar gdp share

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% விழுக்காடு, மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 9%, கால்நடையின் தொகை ஏறக்குறைய 7% முதல் 8%. நிலப்பரப்பில் 13வது, மக்கள் தொகையில் 3வது. இத்தகைய அமைப்பைக் கொண்ட ஒரு மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் தொழிற்சாலைகளின் பங்களிப்பு வெறும் 5 விழுக்காட்டிற்கும் குறைவு. ஒரு மக்கள் தொகை மிகுந்த இடத்தில் தொழிற்சாலைகளை நிறுவாமல், சேவை மட்டுமே முதன்மையாகக் கொண்டு, பெரும் மக்கள் தொகையை நாடோடிகளாகத் தொடர்ந்து மாற்றிக்கொண்டு இருகின்றார்கள்.

உண்மையில் என்ன உதவி வேண்டும் என்று சிந்திக்கக்கூட முடியாதவாறு அவர்களின் அறிவைத் தொடர்ந்து சிதைத்துக் கொண்டிருகின்றார்கள்.

உண்மையில் பீகாரிகளின் பதிலானது, ஒரு வினாவாகத்தான் இருக்க வேண்டும். நீ என்ன எனக்குக் கொடுப்பது ? என்னிடம் உனக்கு என்னென்ன வேண்டும்? என்று கேட்க வேண்டும்.

இன்று பாஜக வின் பீகார் தேர்தல் அறிக்கையே சான்று, மக்கள் நலத்திட்டங்களுக்கும் இலவசங்களுக்கும் வேறுபாடு தெரியாமல் (அல்லது தெரிந்தே) ஒரு அடிமைப்படுத்தும் அறிக்கையை தயார் செய்திருக்கின்றது பாஜக. மக்கள் விரோத திட்டங்கள் ஒருபக்கம், இலவசங்கள் ஒருபக்கம். அதில் ஒரு உச்சம் என்னவென்றால் 10ஆம் வகுப்பு (15 வயது நிரம்பியவர்களுக்கு) படிப்பவர்களுக்கு இரு சக்கர வாகனமாம்.

இலவசக் கல்வி இல்லை, இலவச மருத்துவம் இல்லை, சிந்தித்து முன்னேற அனுமதி இல்லை, ஆனால் இலவச வாகன‌ம், மலிவு விலை சாராயம், இலவச தொலைக்காட்சி என்று அனைத்தும் இலவசம் என்ற பெயரில் நம்மை அடிமைப்படுத்திகொண்டுள்ளன‌. இலவசங்களை வாங்கிக்கொண்டு வாக்களி, வினா எழுப்பாதே, உன்னால் சிந்திக்க முடியாது செயல்படவும் முடியாது என்பதை மறைமுகமாக சொல்லிக்கொண்டே இருக்கும் நம் அரசியல் தலைமைகளுக்கு வறுமைக்கோட்டுக்குக் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதில்  மாற்றுக்கருத்து இருப்பதில்லை.

உண்மையில் யாருக்கு எது வேண்டுமோ, அதை வாங்க வகை செய்வதே ஒரு அரசின் கடமை.  இந்தக் கூற்றை கண்டு சிந்திக்காமல், கைதட்டும் அவலம் கண்டு நெஞ்சம் குமுறுகிறது.

bihar factory growth

வேண்டுமென்றே இயற்கை வளங்களைச் சூறையாடும் தொழில்களைத் தவிர, பெரிதாக வேலைவாய்ப்பை உருவாக்காமல் (இருப்ப‌தைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றார்கள்) ஊர்விட்டு ஊர் சென்று பிழைத்தாக வேண்டிய நிலையை, ஒன்றிய – மாநில அரசுகள் பீகாரிகளுக்கு உருவாக்குகின்றார்கள். பெரும்பாலான இந்தியாவுக்கும் இதே நிலைதான். அந்தந்த ஊர் அமைப்புக்கு ஏற்றாற்போல் கொள்கைகளை வகுக்கவும் இல்லை, வகுக்க விடுவதும் இல்லை.

2000 ஆம் ஆண்டு சார்கண்டு மாநிலம் பீகாரை விட்டுப் பிரியும் போதுகூட தொழிற்துறையில் முன்னேறிய மாநிலமாக பீகார் இருந்தது இல்லை. கனிம வளங்களையே பெரிதும் சார்ந்ததாக இருந்தது.

ஒன்றாக இருந்தபோதும் தொழிற்துறை போதுமான அளவு இல்லை. இதுவே அனைத்திற்கும் சான்று.

நம் தலைக்கும் வரலாம்:

இந்தியாவிலேயே, நகர்மயம் ஆக்கப்பட்ட மாநிலங்களில், தமிழ்நாடு தான் முன்னோடி. மொத்த உற்பத்தியில், 65% சேவையும், 30% தொழிற்துறையும் உடையது தமிழ்நாடு.

tn gdp share

இப்படி மக்கள் தொகை குறைந்த (பீகாரைக் காட்டிலும்) ஒரு இடத்தில் மிகுதியான தொழிற்சாலைகளும், மிகுதியான தேவையுள்ள இடத்தில் (பீகாரை போன்ற) குறைவான தொழிற்சாலைகளும் உள்ளன. மக்களைப் பிரித்து ஆளும் ஆட்சியை மோடி அவர்கள் சிறப்பாகத் தொடர்வார் என்பதில் ஐயம் வேண்டாம்.

மன்னிக்கவும், தலை கவசம்:

ஆட்டு மந்தையைப் போல இயங்கும் மக்களாக தமிழ்நாட்டு மக்களை மாற்றியப் பின்னர், அதை உறுதி செய்யவே இந்தக் கட்டாயத் தலைக்கவசமாகப் பார்க்கின்றேன். ஏன் சாலை நன்றாக இல்லை, ஏன் பொதுப் போக்குவரத்தைப் பெருவாரியான மக்கள் தம் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் அளவுக்கு இல்லை என்று வினவாமல் (சட்டம் இல்லாமலேயே மக்கள் தலைக்கவசம் போட்டிருக்க வேண்டும் என்பது வேறு), உழைப்பைத் தாண்டி மக்கள் சிந்திக்காமல் இருக்கின்றார்கள் என்பதையே இச்சட்டம் மீண்டும் உறுதி செய்துவிட்டது. ஒரு தலை கவசம் அணியக்கூட கட்டளை தேவைப்படுகிறது

இலவச தொலைக்காட்சி பெட்டி வரும்போதோ, அரவை இயந்திரம் வழங்கும்போதோ, இவ்வளவு ஆண்டுகளில், உங்களது ஆட்சியும், அதனால் நாங்கள் அடைந்து விட்டதாக கூறிய வளர்ச்சியும் எங்களை இது போன்ற சாதனங்கள் வாங்கக்கூட வக்கற்று நிறுத்தியது ஏன்? என்று வினவாமல், இலவசம் இனாம், என்றவுடன் பணம் படைத்தவனும் வரிசைகட்டி நின்று வாங்கிய அவலம்,  நெஞ்சுரமற்றவன் மன்னன்னாயினும் அடிமையே!

அம்மா குடிநீர் வரும்போது ஏன் இயற்கை அளித்த நீருக்கு பணம் என்று கேட்க நாதியற்று மடிந்த தமிழகம் நாளை எதை நோக்கி நிற்கிறது?

குறிப்பு: தமிழ்நாட்டிலும் ஆப்ரிக்காவைப்போல, பீகாரைப்போல நெஞ்சுரத்தைப் பல காலமாக சிறிது சிறிதாகச் சிதைத்து, இன்று அதை முழுவதும் வீழ்த்தி முடித்து வெற்றியும் கண்டாகிவிட்டது. இன்று கடைசிக் கட்டத்திற்கு, முதலாவதாகத் தேர்வாகி இருக்கின்றது நம் தமிழ்நாடு.

– தினேஷ்

இளந்தமிழகம் இயக்கம்

விரைவில்… “தமிழகம் கடைசிக் கட்டத்தில் – முதல் இடம்”

—நாட்டுக்கு கட்டம் சரியில்ல சாமீ

மூலம்:

  1. http://www.siliconafrica.com/slavery-patent/
  2. http://www.siliconafrica.com/terra-nullius/
  3. Prasad Jagdish, “Bihar-Dynamics of Development”, Mittal Publication, pp. 33
  4. http://statisticstimes.com/economy/gdp-of-indian-states.php
  5. dahd.nic.in/dahd/WriteReadData/Livestock.pdf
  6. http://www.udyogmitrabihar.com/sectors/leather-industry

About விசை

One comment

  1. வசுமதி

    நெஞ்சுரமற்றவன் மன்னன்னாயினும் அடிமையே – Super Thozer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*