Home / அரசியல் / அரசு விடுதிகளா? மாட்டுத் தொழுவங்களா?

அரசு விடுதிகளா? மாட்டுத் தொழுவங்களா?

சிமெண்ட்டு பெயர்ந்த கட்டிடங்கள்!

சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ இல்லாத திறந்தவெளி குளியலறைகள்!

துருப்பிடித்த கம்பிகள்!

அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்!

நீரில்லா நீர்த்தொட்டிகள்!

பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத வறண்ட‌ குடிநீர்க் குழாய்கள்!

மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்!

இது தான் நாளைய சமூகத்தின் தூண்களாக கருதப்படும் மாணவர்கள் தங்கி இருக்கும் அரசு விடுதிகளின் நிலை. அரசு மாணவர் விடுதிகள் என்ன மாட்டுத்தொழுவமா?? இனி எத்தனை போராட்டங்களை நாங்கள் முன்னெடுப்பது? போராட்டம் என்ன நாங்கள் விரும்பி எடுக்கும் ஆயுதமா? எத்தனை கடிதங்கள், எத்தனை பேச்சுவார்த்தைகள், எத்தனை குழுக்களின் மேற்பார்வை? இது முடிவுறா முடிவிலியாகவே தொடர்கிறது. எனவேதான் நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கட்டும் என்கிற தோழர் மாவோவின் எழுத்துக்கள் எங்கள் எண்ண ஓட்டத்தில் வந்து போகிறது.

பல ஆயிரம் மாணவர்கள் தன் குடும்பத்திலேயே தாம் தான் முதல் தலைமுறை பட்டதாரி என்கிற கனவோடு தலைநகரை நோக்கி பயணிக்கின்றனர். அவர்களுடைய சொந்த மண்ணிலேயே கல்லூரி இருந்தால் இடம் பெயர்ந்து படிக்கும் அவலம் அவர்களுக்கு ஏன் ஏற்படப் போகிறது. அது அரசின் தவறான கல்விக் கொள்கையின் அவலத்தையே காட்டுகிறது, இது ஒரு புறம்.

மற்றொருபுறம், தன் பிள்ளை சென்னையில் படிக்கப்போகிறான் என‌ ஆசையோடு வழிய‌னுப்பி அழகு பார்க்கும் பெற்றோர்கள். சென்னை விடுதிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவருடைய புறச்சூழல் முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை அவலங்களும் மாணவர்கள் கண் முன்னே நிற்கின்றன.. இளம்பருவம் எத்தனை நாள் பொறுத்துக்கொள்ளும் கண் முன்னே நடக்கும் இத்தனை அநீதிகளை.

கல்லூரியில் பயிலும் ஒரு மாணவருக்கு அரசு வழங்குகின்ற மாதப் படியானது 950 ரூபாய். இதில் 5% கூட விடுதி காப்பாளர் செலவு செய்வது கிடையாது. பல முறை கழுவிய பின்னரும் மஞ்சள் நிறத்தில் அரிசி சோறு அப்படியே இருக்கும். அதனுடைய வாசனையை நுகர்ந்துவிட்டால் அதை சாப்பிடும் எண்ணமே போய்விடும். சிவப்பும், மஞ்சளும் கலந்த நிறத்தில் குழம்பு என்ற பெயரில் சூடான  தண்ணீர் இருக்கும். கலக்காமல் ஊற்றினால் அது ரசம், கலக்கி ஊற்றினால் அது சாம்பார். சாம்பாரில் உள்ள காய்கள் அன்றைக்கு என்ன மலிவு விலையோ அது தான் மாணவர்களின் உணவு.

மாணவர்களுக்கு அரசு அறிவித்த பட்டியல் படி காலை உணவு டிபன் தான் வழங்க வேண்டும் ஆனால் தினமும் சோறு தான் காலை உணவு. வானத்தைப்போல திரைப்படத்தில் வருகிற வெங்காய தோசை (வெங்காயம் தனியே, தோசை தனியே), அங்கொன்றும் இங்கொன்றுமாய் தேங்காய்த்துருவல் தென்படும் தேங்காய் சாதம் போன்றவை தான் காலை உணவாக இருக்கும். இட்லிக்காக கொடுக்கப்பட்ட கிரைண்டர் சில நாட்கள் சமையல் அறையில் இருக்கும் பின்னர் யாரோ அதனை திருடிச் சென்றுவிடுவார்கள்.

அரசு பட்டியலின் படி, மதிய உணவில் சாம்பார், காரக் குழம்பு, ரசம், மோர், இரண்டு பொறியல் இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் வழங்குவது மேலே குறிப்பிட்ட சாம்பார் மட்டும் தான். மோர் என்றைக்காவது வெள்ளை நிறத்தில் இருக்கும் சோற்றின் வடிநீர் கலந்து. பொறியல் வழங்கப்படும் வரிசையில் நிற்கும் பாதி மாணவர்களுக்கே கிடைக்கும். மீதி நபர்களுக்கு மறுநாள் சீக்கிரமே வந்து நில் என்பார்கள். அதனைக் கேட்டுத் தலையாட்டியவாறே சென்றுவிடுவார்கள் புதிதாக முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்கள்.

அரசு அறிவிப்பின் படி மாதத்தில் 4 முறை அசைவ உணவு வழங்கப்பட வேண்டும்.  இரண்டு முறை கோழிக் கறி, இரண்டு முறை ஆட்டுக் கறி. ஆனால், ஆட்டுக் கறி மாணவர்கள் கண்களில் காட்டப்படுவதே இல்லை. கோழிக்கடையில் கழித்துக் கட்டப்படும் துண்டுகளே அதிகம் இருக்கும். அதுவும் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவில் இருக்காது. மாணவர்களுக்கு முட்டையும் சரிவர கொடுக்கப்படாது. மாலையில் கொடுக்கப்படும் சுண்டலும் ஓட்டைகளுடனே இருக்கும்..

தினமும் காலையில் மாணவர்களுக்கு டீ, காபி கொடுக்க வேண்டும் என்று பட்டியலில் உள்ளது ஆனால் இதுவரை கண்ணில் காட்டியதே இல்லை. மேலும், பொங்கல், தீபாவளி போன்ற விசேச நாட்களில் விருந்து (ஃபீஸ்ட்) என்று தனியே நிதி ஒதுக்கப்பட்டு அன்று மாணவர்களுக்கு அசைவ உணவு மற்றும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்னும் விதியும் உள்ளது. ஆனால், மாணவர்களுக்கு அதுவும் கானல் நீர் தான்.

மாணவர்களுக்கு தினப்படியாக, மாதம் ரூபாய் 110 அல்லது 90 வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒரு வருட்த்தில் ஆறு மாதங்கள் கொடுக்கப்படுவதில்லை. மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை உடனே வழங்கு என்று தமிழ்நாடு மாணவர் இயக்கத்தால் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட அடுத்த மாதமே சென்னைக்குட்பட்ட விடுதிகளில் ஆறு மாத நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்பட்டது. தலைநகரத்தில் இருக்கும் விடுதிகளுக்கே இந்த நிலை என்றால் மற்ற மாவட்டங்களில் இயங்கும் விடுதிகளின் நிலையை சிந்தித்துப் பாருங்கள்.இன்னும் மோசமாக,  ஒரு அரசு விடுதியின் காப்பாளர் அந்த பணத்தைக் கொடுக்காமலே சுருட்டிவிட்டார் என்பதால் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டாரே ஒழிய பணம் மணவர்களுக்கு திருப்பி கொடுக்கப்படவே இல்லை.

இத்தனை பிரச்சனைகளும் விடுதிகளை நிர்வகிக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்களுக்குத் தெரியாதா என்ன? கண்டிப்பாகத் தெரியும். இது ஓர் வலைப்பின்னல். கீழிருந்து மேல் வரை ஊழல். உதாரணமாக, விடுதிக்கு வராத மாணவர்களுக்கும் சேர்த்தே எப்போதும் கணக்கு காட்டப்படுகிறது. 300 மாணவர்கள் கொண்ட விடுதியில், 50 பேர் வீட்டிற்கு சென்று விட்டாலோ, விடுமுறை எடுத்தாலோ பதிவேட்டில் முறையாகக் குறிப்பிடப்படுவது இல்லை. பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் கூட முறையாகப் பின்பற்றுவது கிடையாது. தேர்வு முடிந்து விடுமுறையிலிருக்கும் மாணவர்களுக்கும் உணவு போட்டதாக பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

அமைச்சர் முதல் வாட்ச்மேன் வரை கையாடல் செய்யப்படும் இடம் எதுவென்றால் அவை மாணவர் விடுதிகள்தான். நீ எனக்கு கொஞ்சம் தரவில்லை என்றால் உனது ஊழலுக்கு நான் இணங்கிப் போகமாட்டேன் என்று வெளிப்படையாக சொல்கின்ற துறையாக இத்துறை ஊழலில் மூழ்கிக் கிடக்கிறது . இதனை மாணவர்கள் தட்டிக் கேட்காமல் வேறு யார் தட்டிக் கேட்பார்கள்?

கடந்த ஆண்டும் சென்னை இராயபுரம் பெண்கள் அரசு விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த நிகழ்விற்குப் பிறகும் எந்த கவனமும் காட்டாமல் இருக்கிறது ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு.

இதை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் வேலையில் தான் சென்னை காயிதே மில்லத் அரசுக் கல்லூரி விடுதி மாணவிகள் 50 பேர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கெட்டுப்போன பழைய உணவையே சூடுபடுத்தி கொடுத்த விடுதி நிர்வாகத்தால் மாணவிகளுக்கு இந்த நிலை. இதனை வெளியில் சொல்லக்கூடாது சொன்னால் விடுதியில் இருந்து வெளியேற்றிவிடுவோம் என்று மிரட்டலும் விடுகிறது நிர்வாகம்.

இருக்கின்ற சொற்ப எண்ணிக்கை கொண்ட விடுதிகளும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கிடக்கின்றன. இன்னும் எண்ணற்ற மாணவ மாணவிகள் தங்க இட வசதி இன்றி தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கி பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த போக்குகள் கலைய களம் காண வேண்டிய நேரமிது.

தனியார் கல்லூரிகள், விடுதிகளை ஊக்குவிக்கவே அரசு மாணவர் விடுதிகளைப் பராமரிக்காமல், நடக்கும் ஊழல் நிர்வாகத்தைக் கண்டும் காணாமலும் உள்ளது.

விடுதிகளின் அடிப்படை வசதிகளுக்காகவும், ஊழல்மய நிர்வாகத்தை எதிர்த்திடவும், அனைத்து மாணவர்கள் தங்கிப் படித்திட மேலும் பல புதிய விடுதிகளை அரசு கட்டி கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டக்களத்தில் இறங்குவோம்.

மாணவர்களது உரிமைகளை வென்றெடுக்க மாணவர் அமைப்பாய் அணிதிரண்டு போராடினால்,  கோரிக்கைகளை வென்றெடுக்கும் நாள் மிக தொலையில் அல்ல.

– இளையராஜா சே,

(தலைவர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்)
15-10-2015
சென்னையில் உள்ள ஒரு அரசினர் மாணவர் விடுதியில் இன்று எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே:
IMG-20151015-WA0010[1]
IMG-20151015-WA0012[1]  IMG-20151015-WA0008[1]  IMG-20151015-WA0009[1]  IMG-20151015-WA0011[1]  IMG-20151015-WA0013[1] IMG-20151015-WA0007[1]

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*