Home / சமூகம் / இந்துத்துவம் / குப்பனும் சுப்பனும்!

குப்பனும் சுப்பனும்!

” என்ன குப்பா? பாத்து ரொம்ப நாளாச்சு!..கடைசியா நம்ம அம்மன் கோயில கூழ் ஊத்தும்போது  பார்த்தோம்னு நினைக்கிற” என்றபடி டீக்கடைக்குள் வந்தான் சுப்பன்.

“அது ஒன்னும் இல்ல சுப்பு…வேலை அதிகமாயிடுச்சு…போன வாரம் முழுக்க நைட் ஷிப்டு…அதான் இந்தப் பக்கம் வரமுடியல”, என்றவாறே அருகிலிருந்த தினத்தந்தியை எடுத்துவிட்டு சுப்பன் உட்கார இடம்கொடுத்தான்.

” இன்னைக்கு என்ன ராத்திரி ஷிப்ட்டா…இல்லைனா நம்ம பாய் கடைக்கு போயி பிரியாணி சாப்பிட்டு படத்துக்குப் போவோம்” என்ற சுப்பனிடம், “யோவ், மாட்டுக்கறி வெச்சிருந்தார்-னு சந்தேகப்பட்டே ஒருத்தர கொன்னுப்புட்டங்கலாம், நீ என்னன்னா பீப் பிரியாணி சாப்பிட கூப்பிடற” எனப் பதறினான் குப்பன்.

ஓ!!! உத்திரப்பிரதேசத்துல ஒரு பாய கொன்னு போட்டானுகளே, அத சொல்றியா…ஆமா! பேப்பர பிரிச்சுக்கூட பாக்கமாட்டியே உனக்கு எப்படி இது தெரிஞ்சுது என்று எதிர் கேள்வி போட்டான் சுப்பன்.

” எனக்கெப்படி சுப்பு இதெல்லாம் தெரியும், நம்ம நாலாவது முக்கு பெருமாள் இல்ல, அவன்தான் சொன்னான், அவன்வேற இந்த காவிக் கட்சி-ல சேர்ந்துட்டானாமாப்பா..” என்று இழுத்தான் குப்பன்.

“அப்படியா சங்கதி ?!…ஆமா, ஏன் மாட்டுக்கறி திங்கக்கூடாது-னு நீ அவன்கிட்ட கேட்டியா ???” என்ற சுப்பனிடம், ” கேட்காம இருப்பேனா???” என்று பவுசுக் காட்டினான் குப்பன்.

” சரி..சரி..என்ன தான் சொன்னான்  அவன் ????”

” அட…மாடு நமக்கு பால் கொடுக்குது, அது நம்ம பெத்த அம்மா மாதிரி, அதத்தான் கோமாதா குலமாதா-னு” , நீட்டி முழக்குனானப்பா அவன்… அவன் பேசுனதக்கேட்டு எனக்கே ஒரு நிமிசம் கொலை பண்ணிட்டு இருக்கமோனு தோனுச்சுன பார்ரேன் என்று பதட்டம் விலகாமல் சொன்னான் குப்பன்.

ஆமா…இவ்ளோ சொன்னானே அவன்கிட்ட…ஆடு, எருமை எல்லாம் பால் கொடுக்கறது இல்லையா-னு கேட்டியா?? என்றான் குப்பன்.

“..அவன் கெடக்கறான்…நீ சொல்லு…இதப்பத்தி நீ என்ன நினைக்கற” என்று ஆர்வமானான் குப்பன்.

” குப்பா…இதப் பத்தி நெறைய இருக்கு சொல்ல..நான் எனக்கு தெரிஞ்சத சொல்றேன்.” என்று தொடங்கினான் சுப்பன்.

” முதல்ல மாட்டுக்கறி வெச்சிருந்தான்னு ஒரு மனுசன கொல்றது எவ்ளோ அயோக்கியத்தனம்????” என்றபடி குப்பனைப் பார்க்க, ” ஆமாப்பா, மாட்டக் காப்பத்தறேன்னு மனுசனக் கொல்லக்கூடாதுல்ல…” என்று அவனும்  ஆமோதித்தான்.

” அப்புறம் ஏன் ஒருத்தன அடிச்சே கொல்றாங்க, யாரு இதப் பண்ணா??” என்று கேட்ட சுப்பனையே உற்றுப் பார்த்தான் குப்பன். ” இந்த கொலை-ல நம்ம பெருமாள் சேந்துருக்கான்-ல..அந்தக் காவிக் கட்சித் தலைவர் ஒருத்தரோட மகனைத்தான் கைது பண்ணிருக்குது போலீஸ்”…

அவுங்க ஏன் சுப்பா கொலை பண்ணனும்? என்று சுப்பன் கேட்க, அவுங்க ஏன் ஒரு பாய கொலை பண்ணனும்-னு கேளு… என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான் சுப்பன்.

மாட்டுக்கறி திங்கரவங்களையோ, வெச்சிருந்தாவோ கொல்லனும்-னா உன்னையும், என்னையும் சேத்து ஏகப்பட்ட பேர்த்த அவுங்க கொன்னுருக்கணும்..நாமளும் மாட்டுக்கறி சாப்புடுறோம்.. வீட்ல சமைக்கறோம்..என்ன சரிதான??? என்றவனிடம் “நீ ஏதாவது புதுசு புதுசா கோர்த்துவிடாதப்பா…” என்று நம்புவதா வேண்டாமா என்று தொனியில் சொன்னான் குப்பன்.

” நீ நம்பி எனக்கு ஒண்ணும் ஆகப்போறதில்ல…இந்தக் காவிக் கட்சிகாரங்களுக்கு இந்துக்களை எல்லாம் சேர்த்து அவுங்க எல்லாரையும் காவிக் கட்சிக்கு ஓட்டுப்போட வெக்கத்தான்…இதை எல்லாம் பண்றானுக..”

அதுக்கு எதுக்குப்ப யாரையோ ஒரு பாய கொல்லனும் என்று கேட்டான் குப்பன்.

இந்தியாவுல மாடு திங்கற ஆளுங்க இந்துவா இருக்காங்களா இல்லையா ??? என்று குப்பனைக் கேட்டான் சுப்பன்.

” யோவ்…நம்ம எல்லாம் இந்து தான… நம்ம தான் மாட்டுக்கறிய ரெண்டு கையாளையும் சாப்பிடறமே” எனக் கூறிய குப்பனிடம், ” அதான்…விஷயமே…இங்க உன்னையோ…என்னையோ மாட்டுக்கறி சாப்பிடறோம்-னு கொன்னா, நம்மளை மாதிரி இந்து-னு சொல்றவங்க காவிக் கட்சிக்கு ஓட்டுப் போடுவாங்களா ???…” என்று சுப்பன் கேட்க, ” அதெப்படி போடுவாங்க ” என்றான் குப்பன்.

“அதனால நம்ம இசுலாமியர்கள நமக்கு எதிரி மாதிரி காமிக்கறதுக்கு ஒண்ணு வேணும்..அதோட ஒரு அடையாளத்த வெச்சு நம்மளை எல்லாம் ஒண்ணாக்கணும்”…” நம்மலன்னா இந்து-னு தங்களை நெனச்சுக்கற ஆளுகள ஒண்ணா சேர்த்து ஓட்டு வாங்கத்தான் இவ்வளவும்” என்று முடித்தான் சுப்பன்.

” இசுலாமியர்கள எதுக்கு எதிரியா காமிக்கணும்?? என்பது போல குப்பன் பார்க்க …காலி க்ரவுண்ட்ல தனியாவா சண்டை போட முடியும்..அவன் உன்ன முந்திடுவான்னு ஒருத்தன காட்டிட்டே இருந்தா என்ன பண்ணுவோம்??..நம்ம கூட போட்டிக்கு நிக்கிறவன முந்த நம்ம ஒண்ணு சேருவோம்-ல..அதேதான்..இங்க பொய்யா ஒரு பகைய இந்த காவிக் கட்சிக்காரங்க உருவாக்கறாங்க…” என்று சொல்லிவிட்டு  ஒரு பீடியைப் பற்ற வைத்தான் சுப்பன்.

கூர்மையாக கவனித்து வந்த குப்பன் ” ” அதானே…பாய் என்ன சாப்பிட்ட நமக்கு என்ன…நமக்குப் பிடிச்சத நம்ம சாப்பிடறோம்.. அவருக்கு பிடிச்சத அவரு சாப்பிடறாரு…காய்கறி சாப்பிடற யாரையும் நம்ம ஆடோ, மாடோ சாப்பிட சொல்லிக் கட்டாயப்படுத்த போறதில்ல…அதே மாதிரி நம்மள யாரும் சொல்லக்கூடதுல்ல.. ” என்று சொன்னான்.

” அதேதான்யா !” என சுப்பன் கூற இருவரும் பீப் பிரியாணி சாப்பிட பாய் கடைக்கு கிளம்பினார்கள்.

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*