Home / அரசியல் / தேநீர் நம்மை உற்சாகப்படுத்துகிறது உற்சாகமாய்!!!

தேநீர் நம்மை உற்சாகப்படுத்துகிறது உற்சாகமாய்!!!

இந்த படத்தை உற்றுப் பாருங்கள், இது என்ன? பார்த்தவுடன் சிலர், இதை ஒரு செடியென்று  சொல்வார்கள். உற்று நோக்கிப் பார்த்து சிலர் இதை ஒரு தேயிலை செடியென்று சொல்வார்கள்.

tea tree

உண்மையில் இது தேயிலை மரம். இதன் வயது  என்ன தெரியுமா? நூற்றுக்கும் மேல். நம்ப முடியவில்லையா? அதெப்படி சாத்தியம்? 100 வயதான மரம் நெட்டநெடுவென்று வளர்ந்திருக்க வேண்டுமே? வளர்ச்சியே அவ்வளவு தானா? தேயிலை செடியிடமே கேட்டுப் பார்ப்போமே.

இந்த தேயிலை மரத்தின் தாவிரவியல் பெயர் காமேலியா தேயா(Camellia thea). இதை வளர விடாமல் தடுப்பது உங்களுக்காகவும் எனக்காகவும் தான். உலக அரங்கில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தையும், சீனா முதல் இடத்தையும் வகிக்கிறது. கலைகளஞ்சியம்(விக்கிப்பீடியா) சொல்வது: ஒவ்வொரு இந்தியரும் ஒரு வருடத்தில் 750கிராம் தேயிலை உட்கொள்கிறோம். ஆக, நமது தேவைக்கும், ஏற்றுமதி செய்து அன்னியச் செலவாணி கூட்டுவதற்கும் தேயிலை செடிகளை வளரவிடாமல், உயர வளர்ந்து விட்டால் கொழுந்தை ஏறி பறிப்பது மிக கடினம் ஆகையால் அதன் கைகளும் கால்களையும் வெட்டி வெட்டி ஆயுளுக்கும்  குட்டை மனிதனாக வைத்திருக்கிறோம். சரி, அதனாலென்ன மனிதர்களின் தேவைக்கு மனிதர்களையே காவு கொடுக்கும் நாகரீகமற்ற காலத்தில் தானே வாழ்கிறோம் என்று வழக்கம் போல் நகர்ந்து விடாதீர்கள்.

தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை:

தேயிலை பறிக்கும் தொழிலில்  மிகவும் நலிவடைந்த, பள்ளிப்படிப்பு கிடைக்கப் பெறாத, பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட  சாதியினரே ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை சிங்கள பேரினவாத அரசால் வஞ்சிக்கப்பட்டு நாடு கடத்தப் பட்ட மலையகத் தமிழர்கள்.

பெரும்பாலும் வேலையின்போது, காட்டு விலங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் அபாயம் அதிகம், ஆகையால் மரம் ஏறவும், வேகமாக ஒடவும் தெரிய வேண்டும். புயலடித்தாலும் மழைபெய்தாலும் தளிர் பறித்தாக வேண்டும். அட்டை இரத்தத்தை உறிஞ்சினாலும் காட்டெருமை விரட்டினாலும் கரடி தாக்கினாலும் அமராது வேலை செய்கிறார்கள்.

சமீபத்தில், தேயிலை தோட்டத்தில் ஓரு தம்பதியினரை கரடி அடித்துக் கொன்றதை மறக்கவும் முடியாமல், நினைக்கவும் முடியாமல்  திணறிக் கொண்டே வேலை செய்ய வேண்டிய கட்டாயம்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை விட அவர்களின் நாட்டார் சாமியின்  சித்திரை திருவிழாவை விரும்பி கொண்டாடுகிறார்கள். அடுத்த தலைமுறை இந்த தொழிலுக்கு வந்துவிடக் கூடாதென்று  உயிரை பணையம் வைத்து கிடைக்கும் சம்பளத்தின் பெரும்பகுதியை கல்விக்கு செலவு செய்கிறார்கள். இருப்பினும், இந்த பணத்தை வைத்து தொழில்நுட்பக் கல்வி பயில முடியாததால் நகர்ப்புறம் நோக்கி நகர முடியாமல் மீண்டும் இதே தொழிலைச் செய்ய வேண்டிய சுழற்சிக்குள் சிக்கியிருக்கிறார்கள்.

tea estate workers issues

சமவெளிப்பகுதி வீடுகளில் இயற்கையை ஏந்திய நிழற்படம் வைத்திருப்பார்கள், மலையக இல்லங்களில் சன்னலைத் திறந்தால் இயற்கை இறைந்து கிடக்கிறது. இயற்கையோடு கலந்து இயற்கையை காத்து வாழும் இந்த எளிய மக்கள் புலங்கும் பொதுவழியை மரித்தோ, வனவிலங்குகளை பாதுகாப்பதாக சொல்லியோ முதலாளிகளின் சார்பாக இயங்கும் அரசுகளால் மக்கள் துறத்தப்படுவது நகைமுரண்.

பொருளாதார நிலை:

தினமும் பறிக்கப்படும் தேயிலையின் எடையே தினக்கூலியை நிர்ணயிக்கின்றது, நிர்ணயிக்கப்பட்ட கட்டாய எடை 30 கிலோ. இந்த 30 கிலோ தளிர் பறிக்க நிர்ணயிக்கப்பட்ட கூலித்தொகையை யூகிங்களேன்! எனது நண்பர்கள் ஊகித்த கூலி 500, 600 மற்றும் 850 ரூபாய்.  உண்மையான கூலியைக் கேட்டால் உங்கள் தலையே சுற்றும். ஆமாம், நிர்ணயிக்கப்பட்ட கூலி  150  ரூபாய் மட்டுமே. தளிர்களின் எடை 30 கிலோவைத் தாண்டும் பட்சத்தில் ஒரு கிலோவிற்கு 2  ரூபாய் தரப்படும்.  சரியான பருவகாலத்தில் மட்டுமே 30 கிலோவைத் தாண்ட முடியும்.ஆண்டுக்கு ஒரு முறை ஊக்கத் தொகை 2000 ரூபாய் வழங்கப்படும்.

உடல்நிலை சரியில்லையென்று ஒருநாள் விடுப்பெடுத்தால் கூட சம்பளம் கிடையாது.பெண்களின் நிலைமை பரிதாபம், மாதவிடாயின் போதும், கருவுற்றிருக்கும் போதும், பிரசவத்தின் போதும் மற்றும் குழந்தையைப் பெற்றெடுத்த கையோடும் தளிர் பறிப்பதை தவிர வேறுவழியில்லை. அன்றாட வாழ்க்கையை ஓட்ட , ஒரு நாளும் விடாமல், வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம். இருப்பினும், தங்களது வீட்டு சடங்குகளுக்கு கடன்பெற்று செலவு செய்யும் நிலையில் தான் நிற்கிறார்கள். வனவிலங்குகள் தாக்குதலுக்குள்ளானால் அரசும், முதலாளியும் எந்த விதமான உதவியும் செய்வதில்லை, யாராவது உயிரிழந்தால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு சொற்பமான உதவத்தொகை அரசு மட்டும் கொடுக்கிறது, அப்ப முதலாளிங்க!!!

இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன, மலையக தொழிலாளர்களுக்கு எல்லாமே ஒன்றுதான்.

பொறுப்பு யார்?

தளிர் பறிக்கும் போது, அட்டை போன்ற பூச்சிக்கடிகளிருந்து தப்புவதற்கு தகுந்த காலணிகள் (shoes)அடிப்படை தேவை, முதலாளிகளை இந்த பூச்சிகள் பதம் பார்க்காததால் முதலாளிகளுக்கு இந்த காலணிகளின் அவசியம் புரிவதில்லை, ஆகையால் தொழிலாளர்கள் தனக்கானதை வாங்கிக் கொள்ளவேண்டும். என்ன கொடுமை இது!

பறிக்கப்பட்ட தளிர்கள் தினமும் தரம் பிரிக்கப்படுகின்றன, உயர்தரம்(இளந்தளிர்கள்) இல்லாத தளிர்கள் எடைக்கு எடுக்கப்படுவதில்லை. நிராகரிக்கப்பட்ட (எடையில் வராத) தளிர்களையும் கங்காணிகள் தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு  எடுத்துச்செல்கிறார்கள், என்ன செய்யப்படுமென்று நம்மால் யூகிக்கமுடியும்.

திட்டமிட்டு விடப்படும் வன விலங்குகளினால் வேலை நேரத்தில் ஏற்படும் பாதுகாப்பற்ற சூழலை பற்றி முதலாளிகளிடம் முறையிடும் போது கிடைக்கும் ஒரே பதில் “நீங்கள் விலங்குகளை தொந்தரவு செய்யாதீர்கள், விலங்குகளும் உங்களை தொந்தரவு செய்யாது.  என்னா ஒரு இளக்காரம். அச்ச உணர்வினால் மாலை 6 மணிக்குள் வீட்டுக்குள் அடைந்து விட வேண்டும். ஒன்றாக கூடி பேசவோ எதைப்பற்றியும் சிந்திக்கவோ கூட முடியாது.

tea estate workers strike
தொழிலாளர்கள் பறித்த தளிர்களின் மூலம் தயாரிக்கப்பட்ட  தேயிலைத் தூளை தூரமாக்கி விட்டார்கள். தேநீர் அருந்த தேயிலைத் தூளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை.

இத்தனை போராட்டங்களைத் தாண்டி தொழிலாளர்களின் உழைப்பினால் பறிக்கப்பட்ட தேயிலையிலிருந்து உருவாக்கப்பட்டது  தான் இந்த தேநீர். தேநீர் நம்மை உற்சாகப்படுத்துகிறது உற்சாகமாய், தொழிலாளர்களை??

வெற்றி நமது தொழிலாளர்களுக்கே!

தொழிலாளர்களின் வாழ்க்கையில் முன்னேற்றமில்லை, தொழிலாளர்களின் கோரிக்கைகளை எல்லா மாநில, மத்திய அரசுகளும் நசுக்கவே செய்திருக்கின்றன. குறைந்தபட்ச தொழிலாளர் நல சட்டங்கள் கூட தேயிலைத் தோட்டங்களின் பக்கம் திரும்பியதே இல்லை.

தினக்கூலியை ரூபாய் 500 ஆக உயர்த்த வேண்டும், வருடாந்திர ஊக்கத் தொகை 20% அதிகரிக்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை முன்னிருத்தி தற்போது மூணாரில் நடைபெற்று வரும் தேயிலை தொழிலாளர்கள் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. பெண்கள் தலைமையேற்று, சுமார் 4000 பெண்கள் உட்பட பல ஆயிரம் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் உரிமைப் போர் வெற்றியை நோக்கி வீர நடைபோடுகிறது.

இந்தப் போராட்டம் வானுயர வளர்ந்து, நியாயமான நலன்களுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும் போராடும் இதர  தொழிலாளர்களுக்கு தூண்டுகோலாய் அமையட்டும்.

(ஊர்குருவிகள் – மாஞ்சோலை, கோத்தகிரி பயணத்தில் உள்வாங்கியது)

– வசுமதி

இளந்தமிழகம் இயக்கம்

About வசுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*