Home / சமூகம் / இந்துத்துவம் / ஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்? – இயக்குநர்.ஆனந்த் பட்வர்தன்

ஏன் என்னுடைய‌ தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன்? – இயக்குநர்.ஆனந்த் பட்வர்தன்

நான் எப்பொழுதுமே தேசிய விருதுகளை பெரிய கௌரவமாகக் கருதியுள்ளேன். சர்வதேச விருதுகளை விட,  தனியார் பல்கலைக்கழக விருதுகளை விட  தேசிய விருதுகள் மிகவும் மதிப்பிற்குரியவை. இந்திய அரசு மதச்சார்பற்ற‌, சோசலிச‌, சனநாயக அரசியலமைப்பை நிலைநிறுத்துவதில் உத்வேகம் கொண்டிருக்கின்றது என்று உணர்த்திய அரிதான தருணங்கள் அவைதான்.

இன்று அந்த  உத்வேகம் காற்றோடு கரைந்து வருகின்றது.  இன்று நமது தேசம் இரு வேறு பாதைகளுக்கு நடுவில் நிற்கின்றது. நமது விடுதலை வீரர்கள் போராடிப் பெற்ற மதச்சார்பற்ற பாதை ஒரு புறமும், (மதப்) பெரும்பான்மைவாத பாசிசத்தை நோக்கிச் செல்லும் இன்றைய  பா.ச.க   அரசின் பாதை மற்றொரு புறமுமாக‌ உள்ளது. நாம் ஒரு பாசிச அரசின் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என நான் கூற‌வில்லை. ஆனால் தற்பொழுது இருக்கும் பா.ச‌.க அரசு அந்த பாதையில் செல்வதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரிகின்றன, அதை நாம் தவறவிட்டுவிடக்கூடாது எனக் கூறுகின்றேன்.

காலம் கடப்பதற்கு முன் இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் இதைப் பற்றி பேசியாக வேண்டும்.  திரைப்பட இயக்குநர்களும் இந்த நாட்டின்  குடிமக்களே, அவர்கள் இந்த தருணத்தில் பேசாமல் இருக்கக்கூடாது.  “இந்திய திரைப்படம், தொலைக்காட்சி கழகத்தினுள்” (Film and Television Institute of India – FTII) தகுதியற்ற இந்துத்துவ (காவி) நிர்வாகத்தை ஏற்படுத்த பா.ச.க தலைமையிலான அரசு முனைந்த பொழுது  அக்கல்லூரி மாணவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் நான்கு மாத காலம் நீடித்தது.  தாங்கள் உணர்ந்திருந்த இந்தியா மிக மோசமான புதிய பாதையில் செல்கின்றது என்ற தவிர்க்கவியலாத யதார்த்தத்தை பல்வேறு துறைகளில் பணிபுரிந்துவரும் மக்கள் இந்த போராட்ட காலத்தில் தான் உணரத் தொடங்கினர்.

பகுத்தறிவாளர்கள் கொல்லப்படுகின்றனர், உண்மையை வெளிக்கொணரும் தீஸ்தா செதல்வாட், சஞ்ஜீவ் பட் போன்றவர்கள் ஓட, ஒட விரட்டப்படுகின்றார்கள், மத, சாதி ரீதியிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகின்றது, மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள மத-மொழி வெறியர்கள் பலம் பெற்று வருகின்றார்கள், மதத்தின் பெயரால் மக்களை கொல்பவர்களும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும் எந்த தண்டனையுமின்றி சுதந்திரமாக உலவுகின்றார்கள், அதே நேரம் நாட்டின் வரலாறு பிளவுகளை உருவாக்கும் வகையில் மாற்றி எழுதப்படுகின்றது, அறிவியல்பூர்வமான கேள்விகள் தடுக்கப்பட்டு  மூடத்தனமான ஒரு சமூகம் உருவாக்கப்படுகின்றது, இந்த சமூகம் அறிவைத் தேடுவதற்கு பதிலாக  சக மனிதனை எதிரியாகப் பார்க்கின்றது.

இதனால் நான் கனத்த இதயத்தோடு “பாம்பே எங்கள் நகரம்”(Bombay Our City) என்ற படத்திற்கு அரசு வழங்கிய தேசிய விருதை திருப்பியளிக்கின்றேன். 1985ல் இந்த படத்திற்கு தேசிய விருது அளிக்கப்பட்ட போது கூட இந்த படத்திற்காக நான் படம் பிடித்த அந்த நகரத்து மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. அதனால் நான் அந்த விருதை வாங்கச் செல்லவில்லை. பந்தரா பகுதியில் வீடிடிக்கப்பட்ட விமல் தின்கர் என்பவரையே தில்லிக்கு அனுப்பி விருதை வாங்கவும், வீடு இழந்தவர்களின் சார்பாக நாங்கள் எழுதிய‌ துண்டறிக்கையை அங்கு விநியோகிக்கவும் செய்தேன். இந்த விருதின் மூலம் கிடைத்த பணம் வீடு இழந்தவர்களின் இயக்கத்திற்கு கொடுக்கப்பட்டது. இன்று நான் அந்த பதக்கத்தை திருப்பியளிக்கின்றேன்.

நாங்கள் இந்த அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றோம்? பெரிதாக ஒன்றுமில்லை, அரசு பதவி விலகவேண்டும் என்கின்றோம். இது வரும் காலத்தில் நடக்குமா? அப்படியொரு வாய்ப்பில்லை. இந்திய மக்களிடம் இருந்து நாங்கள் என்ன எதிர்பார்க்கின்றோம். பெரிதாக ஒன்றுமில்லை. அகத்தில் விழித்திருங்கள் !

– ஆனந்த் பட்வர்தன்

மொழியாக்கம்:

நற்றமிழன் – இளந்தமிழகம் இயக்கம்.

நிழற்படம்: நன்றி அமுதன்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. மறத்தமிழன்

    தேவையான மொழிபெயர்ப்பு, சிறப்பாகச் செய்துள்ளீர்கள். வாழ்த்துகள் நற்றமிழன்!

Leave a Reply to மறத்தமிழன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*