Home / அரசியல் / தாத்ரியில் நடந்தது திட்டமிட்ட படுகொலை…
இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகமது அக்லக்

தாத்ரியில் நடந்தது திட்டமிட்ட படுகொலை…

உத்திர பிரதேச மாநிலம் தாத்ரி பகுதியில் உள்ள பிசாரா கிராமத்தில் வாழ்ந்து வந்த முகமது அக்லக் என்பவர் பக்ரித் அன்று பசுவை வெட்டி சாப்பிட்டார் என்ற வதந்தியின் பெயரால் உந்தப்பட்ட ஒரு கூட்டத்தினால் (800லிருந்து 2500 பேர் என சொல்லப்படுகின்றது) செப்டம்பர் 28 அன்று அடித்தே கொல்லப்பட்டார், இதில் அவரது மகன் தனீசும் கடுமையாக தாக்கப்பட்டார். இப்படி தான் அந்த செய்தி பெரும்பான்மையான ஊடகங்களில் இன்று வரை வெளியிடப்படுகின்றது. ஆனால் உண்மையில் நடந்ததோ திட்டமிட்ட படுகொலை.

முகமது அக்லக் மட்டுமல்ல அவரது முந்தைய வம்சாவளியினரும் தாத்ரியில் உள்ள பிசாரா கிராமத்தில் தான் கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அவரது குடும்பம் குழாய் அமைத்தல், பழுது பார்த்தல் தொழிலில் ஈடுபட்டுவந்த‌து. செப்டம்பர் 28 அன்று பிசாரி கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள ஒலிபெருக்கி மூலம் முகமது அக்லக் வீட்டில் பசுவை வெட்டி சாப்பிட்டதாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. இதன் பின்னர் அந்த கிராம இளைஞர்கள் அக்லக்கின் வீட்டிற்குச் சென்று அவரை அடித்தே கொன்றிருக்கின்றார்கள், இதில் அவரது மகனும் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகமது அக்லக்

இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முகமது அக்லக்

1) பசுவை வெட்டி கொன்று சாப்பிடுகிறார்கள் என்பது வதந்தி அல்ல, உள்ளூர் கோயிலிலிருந்து ஒலிப்பெருக்கி மூலம் பக்ரித் அன்று அக்லக் பசுவை வெட்டி சாப்பிட்டுள்ளார் என செப்டம்பர் 28 அன்று சொல்லப்படுகின்றது. பக்ரித் செப்டம்பர் 22, ஆனால் கோயில் இந்த செய்தியை சொன்ன நாள் செப்டம்பர் 28, ஆறு நாள் கழித்து அப்படி ஒரு செய்தியை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

2) அக்லக்கின் வீட்டைச் சுற்றி ஏராளமான இந்து வீடுகள் உள்ளன. இவர்கள் கூற்றுப்படியே அக்லக் பசுவை வெட்டினார் என்றால் அந்த பசுவை யாருக்கும் தெரியாமல் அழைத்து வந்து சத்தமில்லாமல் வெட்டி, யாருக்கும் தெரியாமல் சாப்பிட்டுவிட்டு, அதன் மீத பாகங்களை யாருக்கும் தெரியாமல் கொண்டு சென்று மறைப்பது என்பது கற்பனையில் கூட நடக்க இயலாத ஒன்று.

 அக்லக்கின் வீடு

அக்லக்கின் வீடு

​3) அதே போல அக்லகின் வீடு என்பது ஒரு சந்திற்குள் நடுவே இருக்கின்றது. இந்த சந்தின் அகலம் 4 அடி. இந்த சந்திற்குள் அதிகபட்சம் 25 பேர் மட்டுமே ஒரு நேரத்தில் செல்ல முடியும். செய்திகளில் கூறப்படுவது போல ஆத்திரவயப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் அங்கு செல்லவில்லை. அக்லக்கை கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டிய சிலரும், கோயிலில் இருந்து சொல்லப்பட்ட செய்தியின் மூலம் திரண்ட இளைஞர்கள் சிலருமே அங்கு சென்றுள்ளனர். அப்படி ஒரு வேளை ஆத்திரவயப்பட்ட மக்கள் கூட்டம் சென்றிருந்தால் அக்லக் வீட்டின் அருகில் இருக்கும், அவரது சகோதரர் வீடும் தாக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த நிகழ்வில் அக்லக்கின் வீடு மட்டுமே குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து தாக்குதல் நடத்தினார்கள் எனக் கூறுவதன் மூலம் ஆட்களை அடையாளம் காட்டுவதில் சிக்கலும், இந்த கொலையை ஒரு சட்ட. ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற முடியும் என்பதே அவர்களின் திட்டமாகும்.

அக்லக்கின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி காவல்துறையினால் ஆய்வு செய்யப்பட்ட பொழுது அது ஆட்டிறைச்சி என்பதும் தெரியவந்துள்ளது. அப்படி அவர் மாட்டிறைச்சியே சாப்பிடிருந்தாலும் அவரை கொலை செய்யும் உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்? மாட்டை விட மனிதனின் உயிர் மலினமானதா? அதுமட்டுமின்றி அக்லகின் குடும்பம் இழந்தது அக்லக்கை மட்டுமல்ல, 200 ஆண்டுகளாக அக்லக் குடும்பம் சக இந்துக்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் சேர்த்து தான்.

பிசாரா கிராமம் பதினைந்து ஆயிரத்திலிருந்து பதினெட்டாயிரம் வரை மக்கள் வாழும் ஒரு பெரிய கிராமம், இதில் 300லிருந்து 500 வரை எண்ணிக்கையிலான இசுலாமியர் அங்கு உள்ளனர். எப்படி முசாபர் நகரில் இசுலாமியர்கள் மீது திட்டமிட்ட வன்முறையை உருவாக்கி இந்துக்களை ஓரணியில் திரட்டி உத்திர பிரதேசத்தில் பெரும்பான்மையான தொகுதிகளைச் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றியதோ, அதே போல பிகாரில் அக்லக்கை கொன்று இசுலாமியர்கள் பசுக்களை கொன்று சாப்பிடுகின்றார்கள் எனக்கூறி பீகாரில் இந்துக்களை ஓரணியில் திரட்டி வாக்குகளை வெல்லலாம் என்பது பாரதிய சனதா கட்சியின் திட்டம். அக்லக் கொலையில் கைதானவரில் இருவர் அந்த ஊர் பா.ச.க-வின் உள்ளூர் தலைவரான சஞ்சய் ரானாவின் மகன்களே. இந்த சஞ்சய் ரானா மோடி அரசில் அமைச்சராக உள்ள மகேஷ் சர்மாவின் மிகவும் நம்பத்தகுந்த நபர்.

அதுமட்டுமின்றி மோடி அரசு பதவியேற்று ஓராண்டுக்கும் மேல் ஆகிவிட்டது, இன்று வரை அவர் உறுதியளித்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை, வளர்ச்சி என்றார், கருப்பு பணத்தை மீட்போம் என்றார், நல்ல காலம் வரும் என்றார்….. ஆனால் இவற்றில் எதுவுமே இன்று வரை நடக்கவில்லை, ஆனால் பா.ச.க கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள வியாபம் ஊழலும், மகாராஷ்ட்ராவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பா.ச.க அரசின் கடலை மிட்டாய் ஊழலும், ஊழல் குற்றவாளி இலலித் மோடியுடனான – சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே அவர்களின் கள்ளக்கூட்டும் தான் அன்றாட செய்திகளாகியுள்ளன. அதே போல வெங்காய விலையேற்றம், பருப்பு விலையேற்றம் என அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளும் அதிகரித்து வருகின்றது. இவற்றிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பி அக்லக்கின் கொலை மூலம் இன்று தேசமெங்கும் சரி, பீகார் தேர்தலிலும் சரி முதன்மை பெற்றிருப்பது மாட்டிறைச்சி, இந்து – இசுலாமியர் போன்றவையே. தாத்ரியில் உள்ள பிசாரா கிராமத்தில் அக்லக் கொல்லப்பட்டது வதந்தியால் தூண்டப்பட்ட மக்கள் கூட்டத்தினால் அல்ல, காவி வெறியர்களின் மிகத் தெளிவான திட்டத்தினால் தான். தாத்ரியில் நடந்தது பச்சைப் படுகொலை, வன்முறையோ கலவரமோ அல்ல.

– நற்றமிழன்.ப‌

 இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. மறத்தமிழன்

    சிறப்பானப் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள் நற்றமிழன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*