Home / அரசியல் / எது தேச‌த்துரோகம்? எது பிரிவினைவாதம் ?

எது தேச‌த்துரோகம்? எது பிரிவினைவாதம் ?

சுதந்திர இந்திய வரலாற்றிலேயே ஒரு காவல்துறை அலுவலகத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகளும், ஆயிரத்திற்கும் அதிகமான தேசத்துரோக வழக்குகளும் கூடங்குளத்தில் தான் பதிவானது. இதே போல மக்களுக்காக போராடிய பல நக்சல்பாரித் தோழர்களின் மீதும், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்ட தலைவர்கள் மீதும் ஏராளமான‌ தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள‌ன. சென்ற வெள்ளியன்று (அக்டோபர் 30) மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் குழு தோழர் . கோவன் மீது ஒரு தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசத் துரோகம் என்றால் என்ன? எதற்காக தேசத்துரோக வழக்குகள் இவர்கள் மீது பதியப்பட்டுள்ளன என்பதை விரிவாக பார்ப்பதற்கு முன்பு, தேசபக்தி என்றால் என்ன என பார்த்துவிடுவோம்.

தேசபக்தி என்பது நாட்டை நேசிப்பது என்ற பொருளிலேயே புரிந்துகொள்ளப்படுகின்றது. இங்கு நாடு என்பது வெறும் வரைபடமோ அல்லது அரசோ மட்டுமல்ல, அதில் வாழும் மக்களும் சேர்த்தே. ஆனால் பெரும்பாலும் இங்கு தேசபக்தி எனப்படுவது அரசை, அரசு செய்யும் செயல்களை கண்மூடித்தனமாக ஆதரிப்பதாகவும், வரைபடத்தை பூசிப்பதாகவுமே உள்ளது. அப்படியானால் அந்த நாட்டில் வாழும் மக்களை நேசிப்பதற்கும் , அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் கொடுக்கப்படும் பெயர் என்ன? தேசத்துரோகம்…

koodankulam-march-16

இடிந்தகரை மக்கள் எங்கள் மண்ணில் அணு உலை வேண்டாம், எங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும், எங்கள் தலைமுறை புற்றுநோயால் சீரழிய வேண்டாம் எனப் போராடினார்கள். அப்பொழுது அரசும், அணு உலை ஆதரவாளர்களும் அவர்களுக்கு வழங்கிய பெயர் அன்னிய கைக்கூலிகள், வளர்ச்சியைத் தடுப்பவர்கள், தேசத்துரோகிகள். 14,000 கோடி ரூபாய் செலவு செய்தாயிற்று இப்பொழுது போராடுகின்றார்களே என அம்மக்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். இன்று அந்த கூடங்குளம் அணு உலையின் நிலை என்ன? இன்னும் செயல்படாமல் தான் இருக்கின்றது, அடுத்த மாதம் தொடங்கி விடுவோம் என ஒவ்வொரு மாதமும் கூறிவருகின்றது கூடங்குளம் நிர்வாகம். ஏன் இன்னமும் அணு உலை செயல்படவில்லை, என்ன பிரச்சனை ? என இன்று வரை அரசோ, கூடங்குள அணு  உலை நிர்வாகமோ தெளிவாக கூற மறுக்கின்றது. அன்று தேச பக்தியின் பெயரால் அணு உலைக்கு ஆதரவாக பேசியவர்களோ இன்று கள்ள மௌனம் காக்கின்றார்கள்.

ஈழ விடுதலைக்கு ஆதரவாகப் பேசியத் தலைவர்களின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், இந்திய, பன்னாட்டு பெரு முதலாளிகளின் நிறுவனங்களை எதிர்த்தும் போராடிய பல தோழர்களின் மீதும் இதே போல தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. தன் சொந்த குடிகளான தமிழக மீனவர்களை கொல்லும் இலங்கையுடனான உறவை துண்டிக்க வேண்டும் என கேட்டால் அது தேசதுரோகம், பிரிவினைவாதம். அதே நேரம் இங்கு உங்களுக்கு இருக்கப் பிடிக்கவில்லை என்றால் பாகிசுதான் செல்லுங்கள் என இங்கு வாழும் இசுலாமியர்களைப் பார்த்துக் கூறுவதும், அப்படி தான் இந்திய, பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பார்கள் எனக் கூறுவதும் இங்கு தேசபக்தியாக உள்ளது.

12193702_10208104241992772_6053142966065932296_n

இந்த வரிசையில் தான் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி இரண்டு பாடல்களை பாடியதற்காக தோழர்.கோவன் சென்ற வெள்ளிகிழமை தேசத் துரோகப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படியென்றால் “மச்சி ஓபன் த பாட்டில்”… “சொர்க்கம் மதுவிலே” போன்ற பாடல்கள் தான் இங்கு தேசபக்தி பாடல்களா? குடிகாரர்கள் தான் உண்மையான தேச பக்தர்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் கடந்த காலங்களில் தேசத்துரோக வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்கள் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை. அவர்களுடைய வழக்குகள் அனைத்தும் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. அதாவது இப்படியான கைது செய்பவர்களின் தண்டனை குறித்து அரசுக்கு கவலையில்லை. கைது செய்வது, விசாரணைக்குள்ளாக்குவது, உறவினர்களையும், நண்பர்களையும் அச்சுறுத்துவது உள்ளிட்ட‌ விசாரணைக் கால மன உளைச்சல்களுக்கு உள்ளாக்குவதும், இதன் மூலம் அரசுக்கு எதிராகப் போராடும் பொதுமக்களை அச்சுறுத்தி வைப்பதுமே அரசின் நோக்கம்.

ஆளும் அரசை கண்மூடித்தனமாக ஆதரிப்பதல்ல தேசபக்தி, நாட்டிலுள்ள மக்களுக்காக பேசுவதும், போராடுவதும் தான் உண்மையான தேசபக்தி, ஆனால் இங்கு மக்களை நேசிப்பதும், அவர்களுக்காக பேசுவதும், போராடுவதும் தேசத்துரோகமாகப் பார்க்கப்படுகின்றது. இங்கு அரசின் ஊதுகுழல்களாக செயல்படுவதற்கு மட்டுமே சுதந்திரம் இருக்கிறது, இதை வைத்துக் கொண்டு நாடு சுதந்திரமாகவும், கருத்துரிமை வெளியோடு இருக்கின்றது எனக் கூறுகின்றார்கள். அதே நேரம் அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்து பேசுவதற்கோ, போராடுவதற்கோ சுதந்திரமில்லை, அவ்வாறு செயல்படுபவ‌ர்கள் மேல் தேசத்துரோக முத்திரை குத்தப்பட்டு, கடுமையாக ஒடுக்கப்படுகின்றார்கள்.

மக்களுக்காக‌ போராடுபவர்களே உண்மையான தேசபக்தர்கள்….

– நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. மறத்தமிழன்

    சுருக்கமான, மிகவும் தெளிவானப் பதிவு. வாழ்த்துகள் நற்றமிழன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*