Home / அரசியல் / பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – ஒரு சிறப்புப் பார்வை

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் – ஒரு சிறப்புப் பார்வை

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வின் மதவாதக் கூட்டணி பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. சமூகநீதியின் மீதும், ஜனநாயகத்திலும் பன்முகத்தன்மையிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் மக்கள், ஒரு போதும் மதவாத சக்திகளை ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு பீகார் தேர்தல் முடிவு ஒரு தக்க உதாரணமாகத் திகழ்கிறது. நிதிஷ் லாலு காங்கிரசு கூட்டணி 173  இடங்களில் வென்றுள்ள‌து. கடந்த 2010 ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு இடங்களை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்த காங்கிரசு, தற்போது 27 இடங்களில் வென்று பீகாரில் மீண்டும் மறுபிறவி எடுத்திருக்கிறது.

ஐந்து கட்டங்களாக நடைபெற்ற 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகியவை “மகாகத்பந்தன் கூட்டணி” அமைத்து போட்டியிட்டன. ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் தலா 101 தொகுதிகளிலும் காங்கிரஸ் 41 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா, ஜிதன் ராம் மஞ்சியின் இந்துஸ்தான் மோர்ச்சா ஆகியவை இணைந்துள்ளன. இதில் பா.ஜ.க. 160, லோக் ஜனசக்தி 40, ராஷ்டிய லோக் சமதா 23, மோர்ச்சா 20 இடங்களில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகளுக்கு முந்தைய கள நிலவரம் எப்படியிருந்தது என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

மதவாத பா.ஜ.க கூட்டணியை வீழ்த்த, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தன் முன்னாள் அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவ்வுடன் கூட்டணி அமைத்தது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் ஜிதன் ராம் மஞ்சியோடு இணைந்த பா.ஜ.க, தமது கூட்டணி யாதவர் அல்லாத தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கூட்டணி என்று அறிவித்து கொண்டதன் மூலம், தலித்துகளின் வாக்கு வங்கியை கைப்பற்றலாம் என கனவு காணத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டு டிசம்பரில் லக்ஷ்மண்பூர் பாத்தே என்கிற பகுதியில், ர‌ன்வீர் சேனா என்கிற ஆதிக்க சாதியினர் 58 தலித்துகளைக் கொன்ற சம்பவத்தை வைத்து, லாலுவை தாக்கிப் பரப்புரை செய்யத் தொடங்கியது. இதன் மூலம் தலித்துகளின் காவலனாக தன்னை முன்னிறுத்திக் கொள்ள பா.ஜ.க முயன்று கொண்டிருந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ் சின் தலைவர் மோகன் பகவத்தின் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பேச்சு, பா.ஜ.கவின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தனது மதவாத முகத்தை மறைத்து, வளர்ச்சி முகமூடி அணிந்து ஆட்சியைக் கைப்பற்றியது பா.ஜ.க. முந்தைய‌ காங்கிரசு அரசின் ஊழல் குற்றச்சாட்டுகளையும் மோடி என்கிற “ராக்ஸ்டார்” பாணி பிம்பப் பெருக்கமும், வளர்ச்சி மந்திரமும் அவர்களுக்கு இலகுவாக கை கொடுத்தன. அவ்வாறு ஊதிப்பெருக்கப்பட்ட மோடியின் பிம்பம் இன்று சுக்கு நூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது. வளர்ச்சியை எதிர்பார்த்து மோடிக்கு வாக்களித்த 30% இந்திய மக்கள் கூட, அத்தகைய வளர்ச்சியைக் காண முடியாமல் வருந்துகின்றனர். மாறாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம், ஊழல் என சாமான்ய மக்களை அனுதினமும் புரட்டிப் போடும் மோடி கும்பலுக்கு பீகாரில் தக்க பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. மோடி ஒரு போதும் மக்களுக்கான தலைவர் அல்ல. அதானி அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும் வெறியாட்டங்களை அரங்கேற்றும் மதவெறியர்களுக்குமே உரித்தானவர் என்கிற கசப்பான உண்மையை மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

NITISH-LALU_2614086g
சிறுபான்மையினருக்கு எதிரான வன்கலவரங்கள், தாத்ரி முதியவர் படுகொலை, காவித் தலைவர்களின் வெறுப்பூட்டும் பேச்சு, மாட்டிறைச்சி அரசியல் என நாட்டில் ஒரு அசாதாரண மான‌ சூழலை ஏற்படுத்தியது மட்டும் தான் கடந்த ஒன்றரை ஆண்டுகளின் பா.ஜ.க அரசு செய்த சாதனையாக இருக்கிறது. அதைத் தவிர, அவர்கள் மக்கள் முன் வாக்குறுதியளிக்க ஒன்றுமே இருக்கவில்லை. மோடி பிம்பமும் கை வசம் இல்லாததால், தங்களது வழமையான பாகிஸ்தான் எதிர்ப்பு பேச்சுகளை நம்பி களமிறங்கும் நிலைமைக்கு உள்ளானது பா.ஜ.க.
பீகாரில் பா.ஜ.க தோல்வியடைந்தால், பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்கள் என்கிற‌ உளுத்துப் போன பழைய மிளகாய் வெடியைக் கொளுத்தினார் அமித் ஷா. தோல்வியின் விளிம்பில் ஈனஸ்வரத்தில் முனகிய அவர் குரல் பரிதாபகரமானதாக இருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய பஞ்சாலைகள், வணிக நிறுவனங்கள், சிமெண்ட் உற்பத்தி, ஆனந்த் பால்பண்ணை, ஜாம் நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், பவா நகர் கப்பல் உடைக்கும் தளம்,கனிம வளங்கள் என பொருளாதாரத்தில் என்றுமே குறைந்திராத குஜராத்தின் வளர்ச்சியை, தன்னுடைய சாதனையாக மோடி பறை சாற்றிக் கொண்டார். அதன் மூலம் “குஜராத் முன்மாதிரி” என்கிற முழக்கத்தையும் பா.ஜ.க‍-வால் முன் வைக்க முடிந்தது. இவ்வளவு வளர்ச்சி பெற்ற குஜராத்தில் தனி நபர் வருமானம் மிகக்குறைவாக இருந்தது. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் குஜராத்தில் அதிகமாக இருக்கின்றனர். வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கையும் குஜராத்தில் தான் அதிகம். தனி நபர் செலவீனம், (Per Capita expenditure) மருத்துவம், சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் குஜராத் பின் தங்கியே இருந்தது. 12 ஆண்டு கால மோடி ஆட்சி உருப்படியாக எதையும் சாதிக்கவில்லை என்பது தான் எதார்த்தம். வெறும் அந்நிய மூலதனத்தைக் காரணம் காட்டியே மோடியின் “வளர்ச்சி நாயகன்” பிம்பம் கட்டமைக்கப்பட்டது.

ஆனால் நிதிஷ் குமாரின் ஆட்சி அப்படிப்பட்டதல்ல. குஜராத்தைப் போல பெரிய வளர்ச்சியடையாத பின் தங்கிய மாநிலமான பீகாரை, பூஜ்ஜியத்திலிருந்து மேலே கொண்டு வர வேண்டிய மிகப்பெரிய‌ சவால் அவர் முன் இருந்தது. நிதிஷ் அச்சவாலை ஏற்று திறம்பட ஆட்சி நடத்தினார். பீகாரில் தனி நபர் வருமானம் 18 விழுக்காடு கூடியிருக்கிறது என்பதே ஒரு சாதனை தான். பல கிராமங்களில் சாலை வசதிகளை உருவாக்கியதும், நகரங்களில் பல மேம்பாலங்களைக் கட்டியதும், மக்களிடையே நிதிஷூக்கு இருந்த ஆதரவைப் பெருக்கியது. பொதுநல மருத்துவ நிலையங்கள் (Public Health Centre) இல்லாத சிற்றூர்களே இல்லை என்னுமளவில், மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறார் நிதிஷ். ஆசிரியர்களே இல்லாத பீகார் மாநிலத்தில், 2005 – 2010 கால கட்டத்தில் மட்டும், ஒரு லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் தான் திரும்ப ஆட்சிக்கு வந்தால் 35 விழுக்காடு பெண்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மொத்த பீகார் வாக்காளர்களில் 46 விழுக்காடு பெண் வாக்காளர்கள். எனவே பெண்களின் வாக்குகள் நிதிஷூக்கு தான் சாதகமாக விழப் போகிறது என்பதும் முன்பே கணிக்கப்பட்டது.

பா.ஜ.க அரசோடு பல்லாண்டு காலம் கூட்டணியில் இருந்தாலும், அடிப்படையில் மோடியைப் போல மதவாத கொள்கைகளைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் வழி வந்தவர் அல்லர் நிதிஷ் குமார். சமூக நீதி கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ராம் மனோகர் லோகியாவின் சீடர் அவர். அத்தகைய சமூக நீதி வரலாற்றின் வழி வந்த நிதிஷ் குமார், மதவாத பா.ஜ.க அரசை பீகாரை விட்டு துடைத்தெறிந்திருக்கிறார். தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை, நிதிஷின் மகா கூட்டணி ஏற்படுத்தியிருக்கிறது. மக்களைப் புறக்கணித்து விட்டு, சிறுபான்மையினரைக் கொன்று, மாட்டரசியல் செய்து விட்டால் மக்களின் செல்வாக்கை வென்று விடலாம் என்கிற மதவெறி பா.ஜ.க வின் காவிப்பானையை முச்சந்தியில் வைத்து உடைத்திருக்கிறார்கள் பீகார் மக்கள். மதவெறியையும் சாதி வெறியையும் பயன்படுத்தி ஒரு போதும் அதிகாரத்தை கைப்பற்றி விட முடியாது என்கிற படிப்பினையை உணரும் இம்மகத்தான‌ வேளையில், தமிழகத்திலும் கூட பா.ஜ.கவோடு கூட்டணி வைக்கலாம் என்று இங்குள்ள பிராந்திய கட்சிகள் நினைத்தால், அவர்கள் ஒரு அரசியல் தற்கொலைக்கு தயாராகிறார்கள் என்று பொருள்.

அ.மு.செய்யது
இளந்தமிழகம் இயக்கம்.

About அ.மு.செய்யது

One comment

  1. மீ.த.பாண்டியன்

    இடதுசாரிகளின் கூட்டடணி போட்டியிட்டதும் இ.க.க (மா-லெ) லிபரேசன் மூன்று இடங்களில் வென்றுள்ளது குறித்து…தங்கள் கருத்து?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*