Home / அரசியல் / டெல்லியில் தொடங்கியது…பீகாரில் தொடர்கிறது!

டெல்லியில் தொடங்கியது…பீகாரில் தொடர்கிறது!

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி நிதீஷ்குமார் தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது. எப்படியாவது பீகாரில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று சகல உத்திகளையும் பயன்படுத்திய பாரதீய சனதாவின் மோடியும், அமித் ஷாவும் தோல்வியில் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

  • ஐக்கிய மதச்சார்பற்ற சனதா தளத்தில் இருந்து மாஞ்சியைப் பிரித்துத் தங்கள் கூட்டணிக்கு இழுத்தது,
  • யாதவச் சமூக வாக்குகள் நிதீஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என்று மாட்டிறைச்சி அரசியலைக் கையில் எடுத்துத் தாத்ரியில் ஒரு முதியவரைத் திட்டமிட்டு கொலை செய்தது,
  • இறுதிகட்ட பரப்புரையின் போது மாட்டை அணைத்துக் கொண்டு இருக்கு பெண்ணின் சுவரொட்டியை வெளியிட்டது,
  • “பா.ச.க தோல்வியடைந்தால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிப்பார்” என்று அமித் ஷா பேசியது

எனப் பா.ச.க கொளுத்திய அனைத்து திரிகளும் நமத்துப் போனது.

பீகாரின் முதல்வர் நிதீசுக்கு எதிராக ஒட்டுமொத்த இந்தியாவின் பிரதமர் மோடியே களத்தில் நின்றும் வெற்றி எட்டா கனியாகிவிட்டது. காவிகளின் கனவு உடைந்து நொறுங்கிவிட்டது. நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய மதச்சார்பற்ற சனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய சனதா தளம், காங்கிரஸ் அமைத்த பிரம்மாண்ட கூட்டணி ஒரு புறமும், மோடி, அமித் ஷா இருவரின் காலாவதியான உத்திகள் மறுபுறமுமாகச் சேர்ந்து மதவாதக் கட்சியான பா.ச.க வீழ்த்தப்பட்டுள்ளது.

1990-ல் பா.ச.க -வின் முன்னோடி தலைவர் எல்.கே.அத்வானியால் நடத்தப்பட்ட மதவாதத்தைத் தூண்டும் ரத யாத்திரை இதே பீகாரில்தான் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தான் இப்போதும் மதவாத பா.ச.க-வின் தோல்வியை உறுதி செய்த கூட்டணியில் முக்கியப் பங்காற்றி ஊழல் வழக்குகளில் சிக்கி சிதைந்து இருந்த தன்னுடைய அரசியல் வாழ்க்கையை மீண்டும் புத்துருவாக்கம் செய்துள்ளார்.

2014 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலங்களின் அதிகாரங்களைக் குறி வைத்து பரப்புரைக்கு மோடி, தேர்தல் கள உத்திகளுக்கு அமித்ஷா என இரட்டை குதிரையில் சவாரி செய்து வந்த பா.ச.க-வின் தோல்வி என்பது டெல்லி சட்ட மன்றத் தேர்தலிலேயே தொடங்கிவிட்டது.

12191755_10206749156942062_3981865848001424674_n

இந்த ஆண்டுத் தொடக்கத்தில், நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியிடம் படுதோல்வி கண்டது பாரதீய சனதா கட்சி. இதற்கும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 32 தொகுதிகளை வென்று இருந்தது பாரதீய சனதா கட்சி. மோடியின் பரப்புரைகள், கெஜ்ரிவாலுக்கு எதிரான தொடர் அவதூறுகள், கடைசிக் கட்டத்தில் கிரண் பேடியை அழைத்து வந்து முதல்வர் வேட்பாளர் ஆக்கியது என எந்தத் திட்டமும் கைகொடுக்காமல் வெறும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது பா.ச.க.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் ஒரு உள்ளாட்சி அமைப்பைக் கூடக் கைப்பற்ற முடியாமல் பா.ச.க தோல்வியடைந்தது.

இவ்வளவு ஏன்?, கடந்த மாதம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே நிலைதான். மோடியின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் உள்ள 58 உள்ளாட்சி வார்டுகளில் வெறும் எட்டு வார்டுகளில் மட்டுமே பாரதீய சனதா கட்சியால் வெற்றி பெற முடிந்தது.

தற்போது கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் பாரதீய சனதா கட்சிக்குத் தோல்விதான் கிடைத்துள்ளது.

சட்ட மன்றத் தேர்தல்களில் மட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தல்களிலும் தோல்வியே மிஞ்சியது பாரதீய சனதா கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும்.

இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பீகார் தேர்தல் முடிவுகளும் இதன் தொடர்ச்சிதான். “வளர்ச்சி! வளர்ச்சி” என்று வகை தொகையில்லாமல் முழங்கி ஆட்சியைப் பிடித்த மோடி, அதன் பிறகு பாரதீய சனதா கட்சியின் தலைவராக வந்து மதவாதத்தைப் பரப்பி, சாதீய வாக்கு வங்கியைத் திட்டமிட்டு ஒருமுகப்படுத்தி வரும் அமித் ஷா ஆகியோரின் தோல்வியே இந்தத் தேர்தல் தோல்விகள்.

காங்கிரசு செய்த இமாலயத் தவறுகளினால் மட்டுமே மோடி ஆட்சியில் இருக்கிறார். ஆனால், மோடிக்கு இணையான மாற்று அரசியல் இருக்கும் இடங்களில் எல்லாம் பா.ச.க வெற்றி பெறவும் இல்லை; மோடியின் சரக்கு விலை போகவுமில்லை என்பதே வரலாறு.

modi1_2615003d

டெல்லி, பீகார் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பாக பஞ்சாப், தமிழ்நாடு உள்ளிட்ட வரப்போகும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ச.க பகீரத முயற்சிகளை செய்யும். குறிப்பாக, தமிழகத்தில் சாதீயக் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலைச் சந்திக்கும் என்பது வெட்டவெளிச்சம்.

சாதி வாக்குகளை தங்களுக்கு சாதகமாக திருப்பும் பா.ச.க வின் அரசியலை எதிர்த்து, பாரதீய சனதா கட்சியின் மதவாத அரசியலை தமிழகத்தில் முடிவுக்கு கொண்டு வரவேண்டிய பெருங்கடமை நம்முன் உள்ளது.

இன்று வரை, பாரதீய சனதா கட்சிக்கு எதிரான முற்போக்கு அரசியல் முகாம்களில் உள்ள நம்மைப் போன்ற இயக்கங்கள் எதிர்வினை அரசியலை மட்டுமே செய்து வருகிறோம். அதாவது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை காவிக் கும்பலின் செயல்பாடுகளே தீர்மானிக்கின்றது. இவ்வாறு எதிர்ப்பு அரசியல் பாதையோடு, திட்டமிட்ட திடமான உத்திகளைக் கை கொண்டு மதவாத, சாதியவாத அரசியலை முறியடிக்க வேண்டும். அத்தோடு பெருந்திரள் மக்களை சனநாயகப்படுத்தி மதவாத அரசியலுக்கு எதிராக நிறுத்துவது இன்றைய காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல; கடமையும் கூட.

கதிரவன்- இளந்தமிழகம் இயக்கம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*