Home / ஈழம் / தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்

தமிழர் சங்கமம் ! – இலங்கைத் தமிழ்ச்சங்க விழா – 2015 – மறத்தமிழன்

அமெரிக்காவில் உள்ள நியூசெர்சி மாநிலத்தின் ‘மோன்றோ’ நகரில், 38 வது ஆண்டு இலங்கைத் தமிழ்ச்சங்க விழா, நவம்பர் 7, 2015 ஆம் நாள் நடைபெற்றது. தமிழர் சங்கமம் என்று வழங்கப்படும் இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் திங்களில் நடைபெறுவது வழக்கம். ஈழத்தமிழர்களும் தமிழ்நாட்டு உணர்வாளர்களும் சங்கமிக்கும் இவ்விழாவானது, மொழி கலை இலக்கியம் அரசியல் பண்பாடு என்று அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியது.

காலை எட்டு மணியளவில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழர் சங்கம விழா இனிதாகத் துவங்கியது. அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை  ஒருங்கிணைத்த அரசியல் சீரமைப்பும் அரசியலமைப்பு மாற்றமும்’ எனும் தலைப்பில் குழுவிவாதம் நடைபெற்றது. அதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் கார்டியன், அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை ஆகியவற்றின் பேராளர்கள் கலந்துகொண்டனர்.

ThamilThaiVaazhthu

உலகத் தமிழ் அமைப்பு ஒருங்கிணைத்தக் கூட்டத்தில் ‘தமிழீழப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’ குறித்தும், தமிழ்நாட்டில் நடைபெறும் ‘தூக்குத் தண்டனை ஒழிப்புப் போராட்டம்’ குறித்தும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராளர்கள் கருத்துரை வழங்கினர். திரு. செல்வராசு முருகையன் அவர்களின் உரையின் இறுதியில் மூவர் தூக்கின் பின்னணி குறித்தும், எழுவர் விடுதலை குறித்தும் அனைவரும் மிகவும் கனிவுடன் கேட்டறிந்தனர். உலகத் தமிழ் அமைப்பின் துணைத் தலைவர் திரு. இரவிக்குமார் அவர்கள் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், வருங்காலத் திட்டங்கள் குறித்தும் விவரித்தார். உலகத் தமிழ் அமைப்பு தொடங்கப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கடந்தகால வரலாற்றையும் தமிழ் மொழியுரிமை, தமிழர் விடுதலையில் அதன் பங்கு குறித்தும் அமைப்பின் நிறுவனர்களுள் ஒருவரான திரு. சங்கரபாண்டியன் அவர்கள் பகிர்ந்துகொண்டார். அமைப்பின் இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவுவிழா வாசிங்கடன் நகரில் மே 17 – 18 ஆம் நாட்களில் நடைபெறும் என்பதையும் அறிவித்தார்.

 

‘செனிவா தீர்மானமும் – சட்ட நடவடிக்கையும்’ எனும் தலைப்பில் சட்டத்துறை, அரசியல்துறைப் பேராசிரியர்களும் நுண்ணறிவாளர்களும் பங்குபெற்ற குழுவிவாதம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசினால் ஒருங்கிணைக்கப்பட்ட இக்குழுவிவாதத்தில், அதன் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். நாம் மிகவும் விரைவாக முன்னேறிச் செல்வதாகவும், மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை நம்பிக்கை அளிப்பதாகவும் உள்ளது என்றும், செனீவா தீர்மானம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றாலும் அது முறையாக செயல்படுத்தப்படுகின்றதா என்பதை கண்காணிக்க ஒரு சிறப்புக் குழு அமைக்கவுள்ளதாகவும் அறிவித்தார்.

USTPAC_Panel

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை விழா அடுத்த ஆண்டு சூலைத் திங்களில் நியூசெர்சி மாநிலத்தில் நடைபெற உள்ளதால் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்று அதன் தலைவர் திரு. நாஞ்சில் பீற்றர் அவர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

 

திருமதி. வைதேகி அவர்களின் முன்முயற்சியால் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் விரைவில் தமிழ்த்துறை தொடங்கப்படவுள்ளது. அதற்கு பெரும் பொருளுதவி தேவைப்படுகின்றது. அதில் ஒரு பகுதியை சிலர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இன்னும் நிறைய பொருளுதவி தேவைப்படுவதால் இயன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்று திரு. சங்கரபாண்டியன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (TNPF) சார்பாக திருமிகு. கோகிலவாணி அவர்கள் கலந்துகொண்டு தம் அமைப்பின் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் முன்னாள் போராளியாவார். தமது போர்க்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தற்கால அரசியல் செயற்பாடு குறித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். இவர் வன்னி தொழில் நுட்பக் கழகத்தில் படித்தவர் என்பதும், பெண்ணியச் செயற்பாட்டாளர் என்பதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முனைவர். எதிர்வீரசிங்கம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அனைத்துலகப்போட்டியில் களப்போட்டியொன்றில் இலங்கைக்கு முதன்முதலாக தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தவர். 1958 ஆம் ஆண்டு யப்பானில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், உயரப்பாய்தலில் புதிய ஆசிய சாதனையை நிறுவியதோடு, தங்கப்பதக்கத்தையும் பெற்றவர். இவர் ஈழத்தமிழர்களின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பங்காற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Diaspora_Leaders

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சிறார்களுக்கு கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு வெற்றிபெருவோர்க்கு விழா அரங்கில் பரிசுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு நடைபெற்றப்போட்டியில் ஏறக்குறைய நூறு குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு அதில் மூவர் பரிசுகளைப் பெற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக நடத்தப்படும் என்றும், மேலும் பலர் கலந்துகொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (TNA) சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. சிறீதரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். செனீவா தீர்மானம் குறித்தும், மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை குறித்தும் கூட்டமைப்பின் நிலையை விளக்கினார். மேலும் கூட்டமைப்பில் ஒருவருக்கொருவர் முரண்பாடாக செயல்படுவதாக வெளிவரும் செய்தியில் முழு உண்மையில்லை என்றும், தமக்கிடையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பேசி தீர்க்கக்கூடிய சிறுசிக்கல்தானே தவிர, வெளியில் பெரிதுபடுத்தப்படும் அளவுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும், மக்களாட்சி முறையில் கருத்து முரண்களில் வருத்தப்பட ஏதும் இல்லை என்றும், அவை தமது அரசியல் நடவடிக்கைகளுக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும் எந்தப் பின்னடவையும் ஏற்படுத்தாது என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

இறுதியாக, நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையமைச்சர் உயர்திரு. உருத்திரகுமாரன் அவர்கள் சிறப்புரையாற்றினார். தமிழீழ விடுதலை ஒன்றுதான் ஈழத்தமிழர்களுத் தீர்வாக அமைய முடியும் என்றும், அங்கு நடந்தது இனப்படுகொலைதான் என்றும், பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Urudrakumar

விழா அமைப்பாளர்கள் அரங்கம், உணவு முதலான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தனர். மூன்று வேலையும் உணவு பரிமாறப்பட்டது. விழாவில் கலை நிகழ்ச்சியும், இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. விசய் தொலைகாட்சியில் நடைபெற்ற பாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றதுடன், ஈழ விடுதலை உணர்வூட்டும் பாடலை இறுதிச்சுற்றில் பாடி தமிழர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்த கனடாவில் வாழும் செசிகா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டதோடு, பாடல்களையும் பாடியது அனைவருக்கும் மகிழ்வளித்தது. அவரைப் பாராட்டி இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

 

இலங்கைத் தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து உலகத் தமிழ் அமைப்பு (WTO), அமெரிக்கத் தமிழ் அரசியல் செயலவை (USTPAC), நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) ஆகிய அமைப்புகள் இவ்விழாவினை ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் நடத்துகின்றன. கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்தும், அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழர் அமைப்புகளைச் சார்ந்த பல இளைஞர்கள் ஆர்வத்துடனும், தமிழின உணர்வுடனும் பங்கேற்றனர்.

தமிழர் சங்கமத்தின் விழாவில் பல செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவென்பது பற்றியும் ஈழவிடுதலையை முன்னெடுக்கத் தேவையான உத்திகள் குறித்தும், ஈழத்தமிழரின் கல்வி, முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. உடல் மண்ணிற்கு உயிர் தமிழிற்குஅதை உரக்கச் சொல்வோம் உலகிற்கு எனும் தமிழர் சங்கமத்தின் முழக்கத்திற்கு இணங்க, எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் –  திண்ணியர் ஆகப் பெறின் எனும் திருவள்ளுவரின் வாக்கிற்கு இணங்க அனைத்துச் செயற்பாட்டாளர்களும் உள உறுதியுடன் விடைபெற்றனர்.

– மறத்தமிழன் கன்னியப்பன் – – இளந்தமிழகம் இயக்கம்

About மறத்தமிழன் கன்னியப்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*