Home / அரசியல் / மழை நடத்தும் பாடம்

மழை நடத்தும் பாடம்

#வேளச்சேரி வெள்ளத்தில் மிதக்கிறது
#மடிப்பாக்கத்தில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
#சென்னை வெள்ளத்தில் தத்தளிப்பு
#ஒருமணிநேரம் பெய்த மழைக்கே சென்னையில் வெள்ளம்
#சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ளம்
#வடசென்னையில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் மக்கள் தவிப்பு

malai 2
#சென்னைக்கு ரயில் மூலம் குடி தண்ணீர் எடுத்துவர திட்டம்
#குடிதண்ணீர் கேட்டு மக்கள் குடத்துடன் போராட்டம்
#சென்னையின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க புதுத் திட்டங்கள்
#சென்னையில், கூடுதல் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம்

IMG_0331

இதுபோன்று இன்னும் பலப்பல தலைப்புகளில் செய்திகள் படித்திருப்பீர்கள். நம் எல்லோருக்கும் நினைவு தெரிந்த நாளில் இருந்து இது போன்ற செய்திகள் வாடிக்கையாகத்தான் இருந்து வந்திருக்கின்றன, இப்போதும் இருக்கின்றன. ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன ஆனால் மழை மற்றும் குடிநீர் செய்திகள் அப்படியே இருக்கின்றன.

IMG_0330
மீண்டும் இதோ, தமிழகம் முழுவதும் பெருமழை பெய்துகொண்டிருக்கின்றது. வழமையான செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வெள்ளம் பல மாவட்டங்களில் ஊர்களுக்குள் புகுந்து மக்களைத் தத்தளிக்க வைத்துக்கொண்டிருக்கின்றது. அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மீட்பு நடவடிக்கை, நிவாரணம், சீரமைப்பு என்று சிலநாட்கள் தொடர்ச்சியாக வேலைசெய்துவிட்டு ஓய்ந்துவிடுகிறார்கள். அடுத்த மழையோ, குடிநீர் தட்டுப்பாடோ ஏற்படும்போதுதான் இந்த சீரமைப்புப் பணிகளின் தரம் தெரியவருகிறது.

malai4

16-நவ-2015, இளந்தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் மழை நீரில் மிதக்கும் தாம்பரம், குரோம்பேட்டை, கீழ்க்கட்டளை, மேடவாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளை நேரில் கண்டுவந்தார்கள். வேளச்சேரி, ஆதம்பாக்கம், விஜயநகர், தரமணி, பெருங்குடி, பகுதிகளில் பல்வேறு இடங்களில் முக்கியச் சாலைகளின் அருகிலேயே கூட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. நடுத்தர மக்கள் தங்களது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுவிடுகிறார்கள். உள்ளூர் மக்களும், அடித்தட்டு மக்களும் தங்கள் இடங்களை விட்டுச் செல்ல முடியாமல் அங்கேயே தங்கிவிடுகிறார்கள். இதுபோன்று மழை நீடிக்கும் எனில், நிலைமை இன்னும் மோசமாகும்.

16-நவ-2015, திங்கள் கிழமை:

வேளச்சேரி ரயில் நிலையம் அருகில் மீட்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். காவல் துறையினரும் பணியில் இருந்தனர். தண்ணீர் புகுந்த வீடுகளில் மாட்டிக்கொண்டவர்களை படகில் மீட்டுக் கொண்டுவந்து வேளச்சேரி பிரதான சாலையில் விட்டுவிடுவதோடு அவர்கள் பணி முடிந்துவிட்டது. பாதிக்கப்பட்டவர்களை தங்கவைக்க எந்த இடமும் ஏற்பாடு செய்யப்படவில்லை. அவர்களுக்கான வாகன வசதிகளும் செய்துதரப்படவில்லை. இந்தப் பகுதிகளில் குடியிருந்தவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர். இவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர். இருந்த ஒரே ஆறுதல் மாநகரப் பேருந்துகள். பேருந்துகள் இயக்கப்பட்டதால் மட்டுமே மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல முடிந்தது. ஆட்டோ மற்ற வாகனங்கள் தண்ணீர் நிரம்பிய பல சாலைகளில் செல்ல முடியாத நிலை.

malai 4

எந்தெந்தப் பகுதிகளில் எத்தனை பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள்?
எங்கே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்?
எவ்வளவு பேருக்கு உணவு மற்றும் குடிநீர் தேவை?
எவ்வளவு பேருக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது?
இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பது யார்?
அடுத்தநாள் திட்டம் என்ன?
குறிப்பாக, ஒவ்வெரு பகுதிக்கும் பொறுப்பான அரசு அதிகாரி யார்?
யாரைத் தொடர்பு கொண்டால், பாதிப்பு குறித்த விவரம் அல்லது தேவைப்படும் உதவிகள் குறித்து தெரிந்துகொள்ள முடியும்?
உதவி மையங்கள் ஏதேனும் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா?
எத்தனை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்?

இது போன்ற வினாக்களை உள்ளூர் தீயணைப்புத் துறை, காவல்த் துறையினரிடம் எழுப்பினோம். ஆனால் யாருக்கும் விடை தெரியவில்லை.

அரசு இயந்திரங்களின் செயல்பாடுகளை நன்கு அறிந்து வைத்திருந்ததாலோ என்னவோ, தண்ணீர் புகுந்த வீடுகளில் இருந்து வெளியேறிய அனைத்து நடுத்தர வர்க்கத்தினரும், அரசின் எந்தவொரு உதவிக்கும் காத்திருக்காமல், அடுத்த பேருந்தில் ஏறி நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கும் சென்றுவிட்டனர்.

malai 3

அடித்தட்டு மக்கள் பெரும்பாலும் வேறு இடங்களுக்குச் செல்லாம்ல் தண்ணீர் சூழ்ந்த வீடுகளிலேயே இருந்தனர். பாதிக்கப்பட்ட பெருங்குடி, தரமணி உள்ளிட்ட இடங்களில், நேரடியாக அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சியினர் தனித்தனியே உணவு மற்றும் தண்ணீர் வழங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட உதவி என்று ஒன்று இல்லை. மோசமான இந்தச் சூழ்நிலையைக் கூட, எளிய ஒரு நிகழ்வாக இலகுவாகக் கையாள்கிறது இந்த தமிழக (அதிமுக) அரசு.

அரசு எந்திரத்தின் இந்த மோசமான செயல்பாடு மற்றும் அணுகுமுறையைக் குறிவைத்து விமர்சித்து வருகின்றன எதிர்க்கட்சிகள். வரும் தேர்தலை மனதில் வைத்து அவர்கள் காய்களை நகர்த்துவது நாம் அறிந்ததே. ஆனால், பொதுமக்களுக்கு ஆட்சியில் இருப்பது எந்தக் கட்சி? என்பதில் அல்ல குழப்பம். ‘அரசு இயந்திரம் என்றாலே இப்படித்தான் இருக்கும், அதை நம்ப வேண்டாம்’ என்பது, இந்த அரசுகளின் செயல்பாடுகள் மூலம் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளது.

வரி வாங்கும் அரசைக் கேள்விகேட்கும் எண்ணமே மக்கள் மனதில் இருந்து அடியோடு அகற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கம். ஆக்கிரமிப்பு என்ற வாதத்தின் கீழ் வராத, முக்கியச் சாலைகளின் அருகேயிருக்கும் குடியிருப்புகள் கூட, தண்ணீரில் தத்தளிக்கும்போது, அங்கிருக்கும் மக்களுக்கு இந்த கையாலாகாத அரசு இயந்திரத்தைக் கேள்வி கேட்கத் தோணுவதில்லை. இந்த நிலைமையை அரசுகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, ஒரு சில இடங்களில் உணவுப் பொட்டலங்கள், நிவாரண நிதி என்பவற்றோடு நிறுத்திக்கொள்கின்றன. நீண்டகால நோக்கில் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவதில்லை.

தொலைநோக்குப் பார்வையும், மழையில்லாக் காலங்களிலும் கூட மழைக்காலத்திற்கான தயாரிப்பும், தண்ணீர் இருக்கிற காலங்களில்கூட பற்றாக்குறை காலங்களுக்கான தயாரிப்புமே, தூக்கம் உணவின்றி, தண்ணீரில் தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் கவலைகளை முடிவுக்குக் கொண்டுவரும். தற்காலிக உதவிகளும் சீரமைப்புகளும் வெறும் கண்துடைப்புதான்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலுமே அரசு.

 

About ஊர்சுற்றி ஜோன்சன்

மென்பொருள் துறையில் பணிபுரிபவர். தற்போது வசிக்கும் ஊர்: சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*