Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / தமிழ் இந்துவின் நதிநீர் இணைப்பு கட்டுரைக்கான மறுப்புரை – அருண் நெடுஞ்செழியன்

தமிழ் இந்துவின் நதிநீர் இணைப்பு கட்டுரைக்கான மறுப்புரை – அருண் நெடுஞ்செழியன்

தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் மற்றும் தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டங்கள் மீதான ஆர்வமும் அழுத்தமும் இன்று தீவிரமடைந்து வருகின்றன.இத்திட்டங்களின் நன்மைகளாக சொல்லப்படுகிற

• நதிகளின் வெள்ள மற்றும் வறட்சி பாதிப்பிலிருந்து மக்களைக் காத்தல்

• நீர்ப் பாசனத்தை மேம்படுத்தல்

• நீர் மின் திட்டங்களை பெருக்குதல்

• நதிகளின் மிகை நீர் வீணாக கடலில் சென்று கலத்தலைத் தடுத்து பயன்பாட்டிற்கு திருப்பி விடல்

போன்ற ச‌னரஞ்சகமான வாதங்களால் இத்திட்ட முன்வைப்புகளில் ஆர்வம் செலுத்துவது இயல்பே.இந்நிலையில் இத்திட்டம் குறித்து அறிவியல் பூர்வ ஆய்வின் வழி நின்று பேசுவது இன்று அவசியத் தேவையாக உள்ளது.அவ்வகையில் இன்று நமது அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைககளிலும்,செயல்திட்டங்களிலும் அழுத்தம் பெறுகிற நதி நீர் இணைப்புத் திட்டமானது அடிப்படையில் அறிவியல் பூர்வமான திட்டம்தானா? இத்திட்டத்தின் சாதக பாதக அம்சங்கள் பற்றி அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதா போன்ற கேள்விகளுக்கான பின்புலத்தில்தான் நதி நீர் இணைப்பு பற்றின தோழர் காமராஜின் கருத்துக்களை விமர்சனப் பூர்வமாக அணுக வேண்டிய தேவை எழுந்துள்ளது.

நீர்வழிப் பாதை பற்றின விளக்கத்தில் தோழர் காமராஜ் கூறுகிறார்

“கடல் மட்டத்திலிருந்து கால்வாய் நெடுகிலும் சம உயரத்தில் இருக்கும். ஏற்ற, இறக்கங்கள் இல்லாத சம உயரத்தைக் கொண்டதாக அதன் நீர் மட்டம் அமைந்திருக்கும். ஆகவே, சமவெளிக் கால்வாயின் ஏதேனும் ஓரிடத்தில் தண்ணீரின் அளவு அதிகரித்தால், மட்டம் குறை வாக உள்ள மற்ற பகுதிக்கு தண் ணீரை மிக எளிதாக எடுத்துச் செல் லலாம். அதாவது கோதாவரியில் வெள்ளம் ஏற்பட்டால் சமவெளிக் கால்வாய் மூலம் காவிரிக்கு அந்த வெள்ள நீரைக் கொண்டு வரலாம். காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் கோதாவரிக்கும் கொண்டு செல்ல முடியும்.” என்கிறார் .

river

நதி நீரை குழாயில் போகிற நீரோடு ஒப்பிட்டுக் குழப்பிக்கொள்வதே இவ்வாதத்தின் அடிப்படைக் கோளாறாக உள்ளது.ஒவ்வொரு நதிகளுக்கும் அதற்கே உரிய பிரத்தியேக நீரியல் நிலவியல் பண்புக் கூறுகளும் சூழல் அமைவும் கொண்டவையாக உள்ளன.கோதவரியுடைய நீரியில் தன்மை வேறு காவிரியின் தன்மை வேறு.அதேபோல ஒவ்வொரு நதிகளும் வெவ்வேறு பண்புகள் கொண்டவை.இந்நதிகளை இணைக்கிற கால்வாய்களுக்கும், நதிகளுக்கும் நிறையே வேற்றுமை உண்டு.

மேலும் நதிகளின் வெள்ளமும் வறட்சியும் பருவ நிலைகளில் ஏற்படுகிற மாற்றங்களைப் பொறுத்ததும்,காலங்காலமான இயல்பான நிகழ்வுப் போக்காகவே உள்ளன.இவையே இயற்கையின் இயல்பு.அன்றி மிகை நீர் என்றும் வறட்சி நீர் என்றும் கூறுகிற வாதமே அடிப்படையிலேயே தவறானதாகும்.

ஒருவாதத்திற்கு இக்கூற்றை ஏற்றுக் கொண்டாலும்,காவிரி வெள்ள நீரை கோதாவரிக்கு கொண்டு செல்கிற தோழரின் வாதம், அறிவியல் பூர்வமானதுதானே என்று அவரையே கேட்டுக்கொள்ளவேண்டும்,மேலும் கோதாவரிக்கும் காவிரிக்கும் இடையிலாக வெட்டப்படுகிற கால்வாய்களால் என்ன விதமாக சமூக பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படும் என்ற அவரால் விளக்க முடியமா அல்லது சுதந்திரமான‌ வகையில் இது பற்றியான சூழல் தாக்க அறிக்கையை ஆய்வு செய்து வழங்குகிற ஆய்வு நிறுவனம் தான் இந்தியாவில் உள்ளதா?

முன்னதாக,மத்தியப் பிரதேச மாநிலத்தின் கென் நதியையும் உத்திர பிரதேச மாநிலதின் பெட்வா நதியையும் கால்வாய் மூலமாக இணைக்கிற கென் பெட்வா நதி நீர் இணைப்புத் திட்டத்தை பா.ச.க முன்னெடுத்தது.இத்திட்டத்திற்கான உத்தேச செலவு 11,000 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.இத்திட்டத்தை மேற்கொண்டால் கென் ஆற்றின் அருகே அமைந்துள்ள பன்னா புலிகள் சரணாலயம் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும் எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என “இந்தியாவின் மூத்த காட்டுயிர் காப்பாளர் பன்வார்”, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.இத்திட்டத்தால் புலிகளின் வாழிடப் பகுதிகள் மூழ்கும்,வேட்டைப் பரப்பு குறையும் புலிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் என அக்கடிதத்தில் அவர் எழதுகிறார்.

10678749_10152394019487337_6275228640653301157_n

மேலும், இத்திட்டத்திற்கான சூழல் தாக்க அறிக்கையானது “மிகவும் தவறானதாகவும், போதாமையாகவும், தொடர்ச்சியற்றதாகவும்” உள்ளதாக குறிப்பிடுகிற அவர் “கென் பெட்வா திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் வழங்கிய தவறான சூழல் மற்றும் காட்டுயிர் அனுமதியும் அதில் கூறப்பட்டுள்ள தவறான தகவல்களும் அரை குறை உண்மைகளுமே என்னை இக் கடிதத்தை எழுத நிர்பந்தித்தன”என்கிறார்.

அரசின் சூழல் தாக்க அறிக்கையை கடுமையாக விமர்சிக்கிற அவர் ”கென் நதியின் முப்பது கிலோ மீட்டர் நீளத்திலான மலையிடுக்குப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட “பாறு கழுகுகள்” கூடுகள் கட்டி வசிக்கின்றன,இத்திட்டத்தால் இப்பகுதி முழுமையாக மூழ்கி “பாறு கழுகின்” வாழிடத்தின் அழிவுக்கு வித்திடும் ”என்கிறார்.

“புலிகள் காப்பு” திட்டத்தின் முன்னால் இயக்குனரும் மூத்த காட்டுயிர் காப்பாளுருமான பன்வாரின் கடிதத்தை மத்திய அரசு சட்டை செய்த‌தாகத் தெரியவில்லை, கென் கெட்வா திட்டத்தை அடுத்த சில மாதங்களில் முடித்து வைக்க மத்திய மாநில அரசுகள் உக்கிரமாக முனைப்பு காட்டுவது தனிக்கதை.!

அடுத்த ஒரு கேள்விக்கு காம்ராஜ் அவர்கள் இவ்வாறாக பதிலுரைக்கிறார் .
“கோதாவரி ஆற்றிலிருந்து மட்டுமே ஆண்டுக்கு 3 ஆயிரம் டிஎம்சி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. கோதாவரி வெள்ள நீரை மட்டுமே முறையாகப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் ஆந்திரம், தெலங் கானா, தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங் களின் நீர்த் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.”என்கிறார்.

முன்னதாக மத்திய பிரதேசத்தில் கோதாவரி படுகையில் அமைந்துள்ள மரத்வாட பகுதியானது வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது.அதிகளவிலான விவசாயிகளின் தற்கொலைகள் கோதாவரிப் படுகையான விதார்பா மாவட்டத்திலேயே வருகிறது.இச்சூழலில் கோதாவரி நீரை ஆந்திர மாநிலத்திற்கு கொண்டு செல்கிற தோழரின் யோசனை அறிவுக்குகந்த வாதமாக இருக்க முடியுமா?

10730983_10152394019472337_8674580751949373435_n

அவர் மேலும் கூறுகிறார்,
“கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 4,500 கி.மீ. நீளத்துக்கு இமயமலை நீர்வழிச் சாலையை உருவாக்க முடியும். இது கடல் மட்டத்தில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் அமையும்.
தெற்கு கங்கை, மகாநதி, நர்மதை, தபதி மற்றும் அவற்றின் கிளை நதிகளை பிணைத்து 5,750 கி.மீ. தொலைவுக்கு மத்திய நீர்வழிச் சாலை அமைக்கலாம். இது கடல் மட்டத்திலிருந்து 250 மீட்டர் உயரத்தில் சமச்சீர் கால்வாயாக இருக்கும்.
அதேபோல கோதாவரி, கிருஷ்ணா, காவிரி உள்ளிட்ட தென்னக நதிகளை இணைத்து தெற்கு நீர்வழிச்சாலையை 4,650 கி.மீ. தொலைவுக்கு உருவாக்கலாம். இது கடல் மட்டத்தில் இருந்து 250 மீட்டர் உயரத்தில் அமையும்”என்கிறார்.

மேற்கூறிய பல நதி நீர் இணைப்புகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிற தோழர்,இத்திட்டங்களை நடைமுறைப் படுத்தினால் இமையமலைப் பகுதியில் ஏற்படப்போகிற சூழல் தாக்கங்கள் பற்றி ஏன் கள்ள மௌனம் சாதிக்கிறார்?இத்திட்டங்களால் எவ்வளவு நிலப்பரப்பு மூழ்க இருக்கின்றன ?எவ்வளவு காடுகள் மூழ்கும்?எவ்வளவு மக்கள் புலம் பெயர வேண்டும்?சூழல் மண்டலங்களுக்கு இதனால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும்?இந்நதிகளை கடல்களில் கலக்காமல் திருப்பிவிட்டால் கடல்களில் நதிநீரால் சேர்க்கப்படுகிற வண்டல் மன்வளங்கள்,அதை நம்பியுள்ள கழிமுக உயிரினங்கள் என்ன வகையான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்? நதிகளை இணைப்பதால் தற்பொழுது பொழியும் மழையில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது அளவு மாற்றங்கள் குறித்து ஏதேனும் பதில் உண்டா? உத்ரகண்ட் வெள்ளம் ஏற்பட்டதற்கு நதியின் வழித்தடத்தை மாற்றியதும் ஒரு காரணம் என்று அரசின் அறிக்கைகள் கூட சொன்னதே, அதிலிருந்து நாம் என்ன படிப்பினையை கற்றுக்கொண்டோம்? போன்ற கேள்விகளுக்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் ஏதேனும் பதில் அரசிடம் உள்ளதா என்று கேட்டால்,அரசிடமோ இத்திட்டத்தை கொண்டாடுகிற நமது அறிஞர்களிடமோ பதில் இல்லை என்பதே எதார்த்த உண்மை நிலையாக உள்ளது.

அடுத்து எழுதுகிறார்,
“நீர்வழிப் பாதையால் வெள்ள சேதங்கள் குறையும். அனைத்து மக்களுக்கும் ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும். நாடு முழுவதும் 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதியை பெறும்.”

இதற்கு ஏதேனும் நிரூபனம் உள்ளதா? அல்லது எந்த ஆய்வின் மூலம் 15 கோடி ஏக்கர் பாசன வசதி மேம்படுத்த முடியும் என தோழர் விளக்கினால் நலம். முன்னதாக,இந்தியாவின் முதல் நதி நீர் இணைப்புத் திட்டமாக கார்பரேட் மீடியாக்களால் கொண்டாடப்பட கிருஷ்ணா – கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டம் என சொல்லப்படுவது,நதி நீர் இணைப்பே அல்ல,அது கோதாவரி நீரை பம்புகளின் துணைக்கொண்டு கால்வாய்க்கு மாற்றுகிற நீர் மாற்றுத் திட்டம் எனவும்,அரசால் சொல்லப்படுகிற பயன்கள் எதற்கும் ஆதாரங்கள் இல்லை எனவும்,முறையான சூழல் தாக்க ஆய்வுகள் செய்யப்படவில்லை எனவும் அணைகள்,நதிகள்,மக்களுக்கான தேசிய அமைப்பு தனது கட்டுரையொன்றில் ஆதாரப்பூர்வமாக நதி நீர் இணைப்பு நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.தோழர் இதற்கு பதில் உரைப்பாரா?

10300631_10152444313627337_3481376811704955399_n

இந்திய சர்வதேச முதலாளிய சக்திகளின் தொழிற்துறை மூலதன குவிப்புக்கு இந்திய ஒன்றிய விவசாயப் பெருங்குடிகள் சேவை செய்ய வேண்டும் என்பதை இம்முதலாளிகளின் பிரதிநிதிகளான அரசுகள் கூறிவருகின்றன.உதாரணமாக விவசாயிகள் வேளாண் தொழிலை கைவிட்டுத் தொழிற்துறைக்கு திரும்ப வேண்டும் என்று கூறிய முன்னால் பிரதமர் மன்மோகனின் யோசனையை இப்பின்புலத்திலேயே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.தானாக முன்வந்து விவசாயத்தை கைவிடாத விவசாயிகளுக்கு உர மானியங்களை வெட்டுதல்,பயிர்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயத்தில் வயிற்றில் அடித்தல்,நீர் நீலைகளை தூர் வாருதல்,மராமத்து பணிகளை ஒதுக்குதல் என நீர் பாசன மேலாண்மையை முற்றாக புறக்கணித்து தனது அரசியல் பொருளாதார முடிவுகளை தொழிற்துறை முதலாளிகளின் நலன்களுக்காவே காவு கொடுக்கிற இவ்வரசுதான் இத்திட்டத்தால் 15 கோடி ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதியைப் பெற்றுத் தரப் போகிறதா?

மழை நீர்த் தேக்கங்களாகத் திகழ்கிற ஏரி குளங்களை தூர்வாரிப் பரமாரிப்பது,பரவலான வகையில் நீர்தேக்கங்களை நிறுவுவது,மழை நீர் சேமிப்புத் திட்டங்களை ஊக்குவிப்பது,சிறு தடுப்பணைகளை உருவாக்குவது போன்ற நீர் மேலாண்மைக் கொள்கைகளை முறையாக செய்தாலே நிலவுகிற வறட்சி நிலைமைகளை நாம் சுலபமாக எதிர்கொள்ளலாம்.மாறாக,நதி நீர் இணைப்புத் திட்டத்தால் மட்டுமே நாம் வறட்சியை சமாளிக்கவேண்டும் என்கிற மாயயை நமது ஆட்சியாளர்கள் சுலபமாக உருவாக்குகிறார்கள்.நிலவுகிற நீர் மேலாண்மை அமைப்பைத் திறம்பட நிர்வகிக்காமல் கடல் நீரை குடிநீராக மாற்றுவது,குடிநீருக்காக நதி நீர்களை இணைப்பது போன்ற வாதங்களை முன்வைப்பது என்பது,பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த முடிவுகளே அன்றி மக்கள் நலன்களுக்கானதாக அல்ல‌.

உண்மையில் நதி நீர் இணைப்புத்திட்டத்தில் புழங்கக் கூடிய பல கோடி ருபாய் மூலதனம் யாரின் நலனுக்காக செயல்படுத்தப்படுகிறது என்பதே நமக்கு முன் உள்ள பிரதான கேள்வியாகும். ஏனெனில் விவசாய மானியங்களை,ஒடுக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவ திட்டங்களுக்கு ஒதுக்கிற நிதிகளை வெட்டுகிற இவ்வரசுதான் பல கோடி ரூபாய் செலவு செய்து மக்களை காக்கப் போகிறதா என்ற கேள்வி நமக்கு வருவது இயல்புதானே?

-அருண் நெடுஞ்செழியன்

நிழற்ப்படங்கள் – அவனி அரவிந்தன்- இளந்தமிழகம் இயக்கம்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

3 comments

  1. நடராசன்

    தேசிய நதி நீர் இணைப்புத் திட்டம் மற்றும் தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டங்கள் கூவி விக்கிற அதி மேதாவிகள்..சிறிது.. பைக் எடுத்து கொண்டு திருபெருமந்தூர் ஏரியில் இருந்து திருநீர்மலை வரை சவுத்திரி கால்வாய், அடையாறு கரைகளில் பயண செய்யுங்கள்..சென்ற ஆண்டுதான் கோடிகள் செலவு செய்து இந்த கால்வாய்களில் சீர்மைத்ததாக கணக்கு காட்டினார்கள்..இன்று எத்தனை இடங்களில் உடைப்புகள் என்று இதற்கு என்ன காரணங்கள் என்று ஆய்வறிக்கை வெளியிடுங்கள்…

  2. Sir this is truth, pl explain Kamaraj sir.present tamilnadu state level environment assessment committee members are unqualified committee,example sand quari permission. High court also question ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*