Home / சமூகம் / பழிவாங்கல் என்பது நீதி அல்ல!
juvenile justice act2015 pic2

பழிவாங்கல் என்பது நீதி அல்ல!

அண்மையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் சிறார் நீதிச்சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுச் சட்டமாகியுள்ளது. இந்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துப் படிக்கும் போது, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த “வழக்கு எண் 18/9″ என்கிற திரைப்படம் என்னுடைய எண்ணங்களில் திரும்பத் திரும்ப வந்து செல்கிறது. அதே ஆண்டு டிசம்பர் மாதம்தான், டில்லியில் நிர்பயா எனும் பெண் ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்தச் சம்பவத்தை ஒட்டி பெண்களின் பாதுகாப்பை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. குற்றம் புரிந்த ஆறு பேரில் ஒருவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொள்ள, ஏனைய ஐந்து பெரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களில் 17 வயது (குற்றம் புரிந்த போது சிறுவனின் வயது) சிறுவனும் அடக்கம்.

சிறார் சீர்த்திருத்த பள்ளியில் தன்னுடைய தண்டனைக் காலம் முடிந்து வெளிவந்த அந்த இளைஞனுக்கு எதிரான பழிவாங்கும் குரல்களின் ஒட்டு மொத்த வடிவமாகவே இந்தச் சிறார் நீதிச்சட்டத்தைப் பார்க்க முடிகிறது.

நம்முடைய சமகாலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தச் சட்டத்தைப் பற்றிப் படிக்கும் போது “வழக்கு எண் 18/9″ என்கிற திரைப்படத்தின் நினைவுகள் வருவதன் காரணம் பற்றி அறிவதற்கு முன்னர், இந்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிந்து கொள்வோம்.

சட்டத்தில் செய்யப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள்:

  • கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயதிற்கும் 18 வயதிற்கும் இடைப்பட்ட சிறார்கள் வயது வந்தோராகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
  • கொடிய குற்றங்களுக்கு அடுத்த நிலையில் தீவிர குற்றங்களைப் புரியும் 16 -18 வயதிற்குட்பட்டோர், 21 வயதுக்குப் பிறகு தண்டனை பெற்றால் அவர்களும் வயது வந்தோராகக் கருதப்பட்டுத் தண்டிக்கப்படுவர்.
  • ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board), குழந்தைகள் நல குழுமங்கள் (Child Welfare Committee) அமைக்கப்படும். சிறார்கள் செய்யும் குற்றங்களின் தன்மையை அறிவதற்கான முதற்கட்ட விசாரணையைச் சிறார் நீதி வாரியம் செய்து சிறார்களை வயது வந்தோராகக் கருதுவதா எனக் கண்டறியும்.
  • குழந்தைகள் மீதான வன்முறைகள், குழந்தைகளுக்குப் போதை மருந்துகளை ஊட்டுவது, குழந்தைகள் கடத்தி விற்பது போன்ற குற்றங்களுக்கான தண்டனைகளும் இந்தச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தண்டனைகள் கடுமையானால் குற்றங்கள் குறையும் என்கிற நடுத்தர வர்க்க எண்ணத்தையும், அச்சமூட்டுவதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் குறைத்துவிட முடியும் எனும் வாதத்தையும் என்னுடைய நண்பர்கள் பலரிடம் இருந்து கேட்க முடிந்தது. இந்த எண்ணங்களின் எதிரடிப்புகளாகவே நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தச் சட்டம் உள்ளது.

சிறார்களாகக் கருத வேண்டியவர்களின் வயது வரம்பைக் குறைப்பதன் மூலம் குற்றங்களைக் குறைக்க முடியும் என்பது நடப்புக் காரணிகளைப் புறந்தள்ளுவதாகவே இருக்கிறது. அமெரிக்காவில் 13 வயதுக்கும் மேற்பட்ட சிறார்கள் அந்த நாட்டு சட்டப்படி, வயது வந்தோராகவே கருதப்படுகின்றனர். ஆனால், அமெரிக்காவில்தான் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை உலகிலேயே அதிகமாக உள்ளது.

நிர்பயா வழக்கை எடுத்துக் கொண்டோமானால் கூட, குற்றம் புரிந்த ஆறு பேரில் ஒருவர் தான் சிறார் சட்டப்படி தண்டிக்கப்பட்டவர். மற்ற ஐவரும் வயது வந்த ஆண்கள்தான். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க ஒரு சட்டம் மட்டுமே போதும் என்றால் நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்ட இந்த நால்வரும், சிறையில் தற்கொலை செய்துகொண்ட ராமன் சிங்கும் தற்போதிருக்கும் சட்டத்திற்கு அஞ்சி குற்றம் புரிந்திருக்கவே கூடாது

ஆனால், நடப்பு எதார்த்தம் அவ்வாறு இல்லை; சமூக, பொருளாதாரத் தளங்களில் ஏற்படும் மாற்றங்கள், வாழ்வியல் முறைகள், பெண்ணை உடைமையாகப் பார்க்கும் சமூகத்தின் பார்வை எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு சட்டமியற்றி குற்றங்களைக் குறைத்து விட முடியும் என்கிற பொதுமைச் சமூகத்தின் சிந்தனை, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் நிகழ்வுகளில் இருந்தும் பொறுப்பு விலக்கம் செய்து கொள்ளத் துடிக்கும் உயர், நடுத்தர வர்க்க சிந்தனையாகவே உள்ளது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு சில பரிந்துரைகளைச் செய்தது. ஆனால், அந்தப் பரிந்துரைகளைக் கருத்தில் கொள்ளாமல் தான் தற்போதைய சட்டம் நிறைவேறியுள்ளது.

அவற்றில் முக்கியமானவை பின்வருமாறு;

  • சிறார் நீதிச்சட்டம் பல்வேறு இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவுகளைப் மீறுவதாக உள்ளது.
  • 16-18 வயதிற்குட்பட்ட சிறார்கள் ஈடுபடும் குற்றங்கள் பெருகி வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) கொடுத்துள்ள தரவுகள் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையிலேயே உள்ளதே தவிரத் தண்டனை பெற்றவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அல்ல. இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முக்கிய வாதமாக முன்வைக்கப்படும் தரவுகள் தவறாக வழிகாட்டுகின்றன.
  • சிறார் நீதிச் சட்டம்-2000 சரியாக அமலாக்கப்படாததே குற்றங்கள் பெருகுவதற்கான காரணமாக உள்ளது. சட்டத்தைப் பின்பற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும், அனைத்து நிலைகளிலும் எடுக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தது.

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், இயற்றப்படும் சட்டங்கள் சமூக நிலைமைகளைக் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும்.

juvenile justice act2015 pic1

நான் மேற்குறிப்பிட்ட, “வழக்கு எண் 18/9″ திரைப்படத்தில் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மாணவன் ஒருவன் ஒரு பெண்ணின் மீது அமிலம் வீசி தாக்கிவிடுவான். அந்த வழக்கை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் இளைஞனை வழக்கில் சிக்க வைத்து, தண்டனையும் வாங்கித் தந்துவிடுவார். லஞ்சத்தை வாங்கிக் கொண்டு காதலனை சிக்க வைத்த காவல்துறை அதிகாரியை பாதிக்கப்பட்ட பெண்ணும், தண்டனையை அனுபவித்து வெளியில் வரும் காதலனும் பழி வாங்குவதோடு படம் நிறைவடையும்.

இதில் குறிப்பாக நாம் நோக்க வேண்டியது என்னவென்றால், பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய முகத்தில் அமிலம் வீசிய மாணவனை விட்டுவிட்டு, அவனைத் தண்டனையில் இருந்து தப்புவித்ததோடு, ஏழைக் காதலனை வழக்கில் சிக்க வைத்த காவல் துறை அதிகாரியைத்தான் பழி வாங்குவாள். அந்தக் காட்சியில் காவல் துறை அதிகாரிதான், லஞ்சம் அரித்து, செயலிழந்து கிடக்கும் இந்த அரசு இயந்திரத்தின் பிரதிநிதி. நாம் மேற்கூறியுள்ள நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளில் மூன்றாவதை மீண்டும் படிக்கவும்.

மாற்றம் வேண்டி நிற்கும் நம்முடைய பொதுமைச் சமூகம், மாற்றியமைக்கப் போராட வேண்டியது சட்டங்களை அல்லாமல் சமூக விழுமியங்களைக் கட்டமைக்கும் நம் வாழ்வியல் நடைமுறைகளைத்தான்.

ஆம்! தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமானது சமூக எதார்த்தை உள்வாங்காத, சரியாக அமல்படுத்த வேண்டிய சட்டத்தைப் பற்றிய பார்வையில்லாத ஒரு குறிப்பிட்ட சாரரின் பழிவாங்கும் குரலாகவே உள்ளதே தவிர நீதியை காப்பதாக அல்ல.

- கதிரவன்

இளந்தமிழகம் இயக்கம்

நிழற்படங்களுக்கு நன்றி: www.kractivist.org ; www.erewise.com

Print Friendly, PDF & Email

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>