Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! – அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! – அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

இந்திய அரசே!

கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான் நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை  இரத்து செய்!

தமிழக அரசே! 

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் போராடிய மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு!

2016 சனவரி முதல் கூடங்குளத்தில் முதல் அணுஉலை தனது உற்பத்தியைத் தொடங்கும் என அணுசக்திக் கழகத் தலைவர் சேகர் பாசு செய்தியளித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் டிசம்பர் 24, 2015 அன்று திருவாளர் மோடி இரஷ்யாவுடன் 12 அணு உலைகளுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கூடங்குளத்தில் 5,6 அணுஉலைகளும்  ஏனைய ஆறு அணுஉலைகளுக்கு இடம் தேடுகிறார்கள் என்றும் சொல்கின்றனர். கூடங்குளம்  வளாகத்திலேயே அணுக்கழிவு மறுசுழற்சி ஆலையை நிறுவப் போகிறார்கள். கல்பாக்கத்தில் இரண்டு அதிவேக ஈணுலைகள், இரண்டு அணுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவவும் திட்டமிட்டுள்ளனர்.

1500 நாட்களுக்கு மேல் தமிழகத்தில், கூடங்குளம் – இடிந்தகரையில் போராடிவரும் மக்களின் உணர்வுகளைத் துச்சமெனத் தூக்கியெறிந்து இந்திய மோடி அரசு அணு உலைப் பூங்கா அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் போடுகிறது. தொடர்ந்து போராடும் மக்களைப் பார்த்து இந்திய அணுசக்திக் கழகத் தலைவர் சேகர் பாசு “ இந்தியாவின் அணு சக்தித் திட்டங்களைத் தடுக்க அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றன “ என அரசியல் அறிக்கை விடுகிறார். அமெரிக்கா, இரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான் என அனைத்து ஏகாதிபத்திய நாடுகளுடனும் அணு ஒப்பந்தம் போட்டு வரும்போது எந்த ‘அந்நிய சக்திகளை’ இவர் சொல்கிறார்?

கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு மின்சாரம் தேவை. மின்சாரத்திற்கு அணு உலை மட்டுமே வழி என்று சொல்லி வெளிநாட்டு நிறுவனங்களுக்காக உருவாக்கப்படும் அணுசந்தை, வல்லரசு கனவுக்கு தீனிபோடும் அணுகுண்டு தயாரிப்பு என்று அணு உலைகளுக்குப் பின்னால் இருக்கும் மக்கள் விரோத அரசியல் விரிகின்றது. இந்திய அரசின் அணுக் கொள்கைக்கு எதிரான மக்கள் போராட்த்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்திய அரசே! கூடங்குளத்தில் அணுஉலைப் பூங்கா அமைக்காதே! அமெரிக்கா, இரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் நாடுகளுடனான அணு ஒப்பந்தங்களை இரத்து செய்! என இந்திய அரசை நோக்கிக் குரல் எழுப்புவோம்!

போராடிய மக்கள் மற்றும் போராட்டக் குழுவினர் மீது கூடங்குளம் காவல்நிலையத்தில் 349 வழக்குகள் பதியப்பட்டன. மே 6, 2013 அன்று உச்சநீதிமன்றம் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற உத்தரவிட்டது. ஆனால்  தமிழக அரசு 248 வழக்குகளை மட்டுமே  திரும்பப் பெற்றது. ஆகஸ்ட் மாதம் இடிந்தகரை மக்களுக்கு வள்ளியூர் நீதிமன்றம் அழைப்பாணைகளை அள்ளி வழங்கி மிரட்டியது. ஆகஸ்ட் 18, 2015 அன்று வள்ளியூர் நீதிமன்றத்தில் இடிந்தகரைப் போராளிகள் ஆயிரமாக ஆஜராகினர். போராட்டத் தலைவர்களுக்கு அழைப்பாணை இல்லை. தேசத்துரோகம் (124-A), அரசுக்கு எதிரான யுத்தம் ( 121 ) உள்ளிட்ட 132 வழக்குகள் தமிழக அரசால் திரும்பப்பெறப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம் எனும் நிலை நிலவுகிறது.

அரசின் தவறான கொள்கைக்கு எதிராகப் போராடும் உரிமை அரசியல் அமைப்பு தந்ததாகும். வழக்குகளைத் திரும்பப் பெறாமல் வைத்திருப்பதன் மூலம் போராடிய மக்களைப் பழிவாங்குவதும் அரசின் தவறான அணுக் கொள்கைக்கு எதிராகப் போராட நினைப்பவர்களை வழக்குகளைக் காட்டி மிரட்டுவதுதான் தமிழக அரசின் நோக்கமாகும்.

தமிழக அரசு வழக்குகளைத் திரும்பப் பெறவில்லை என்பதை அம்பலப்படுத்தும் நோக்கில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த தோழர் முகிலன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.இது  உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் தமிழக அரசு காலங்கடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாகியுள்ளது. கூடங்குளம், கல்பாக்கம், தேனி, மதுரையில் எந்த விதமான புதிய அணுத் தீமைத் திட்டங்களையும் கொண்டுவரக் கூடாது, போராடும் மக்கள் மீது போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் பரப்புரையைத் தொடங்கியுள்ளது.

ஆளும் அரசுக்கு எதிரான மக்களின் கோபம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தன்னுடைய தவறைத் திருத்திக் கொண்டு கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மற்றும் போராடிய மக்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

கொளத்தூர் தா.செ.மணி,

ஒருங்கிணைப்பாளர்,

அணுசக்தி எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

10-சனவரி-2016

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*