Home / அரசியல் / காஜா பாய்க்கும் கச்சா எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

காஜா பாய்க்கும் கச்சா எண்ணெய்க்கும் என்ன தொடர்பு ?

ஹாஜி மூசா மர இழைப்பகத்தின் அருகில் அமைந்திருக்கும் காஜா பாய் கசாப்புக் கடையின் ஒரு ஓரமாக, சைக்கிளை நிப்பாட்டினார் ஆரோக்கியசாமி.   “காக்கிலோ நெஞ்செலும்பு” என்று ஆணையிட்ட மறுகணம்,  வளாகத் திண்டில் குத்த வைத்தார்.  வாயில் பீடி புகை கசியத் தொடங்கியது.

“என்ன மச்சான் நெஞ்செலும்போட நிறுத்தீட்டீக….கறி கிறி வாங்கல்லியா”….?  வெண்மயிர் மறைத்த வாயில் சிரித்தார் மூக்கையா.

“அட போய்யா….ஆட்டுக்கறி விக்கிற வெலயில அதெல்லாம் நெனச்சி கூட பாக்க முடியாது. கோழி வாங்கலாம்னு பாத்தா சூடுங்கிறா எம்பொஞ்சாதி. அதுவும் பிராய்லர் கோழின்னாலே எதோ வெசம் கெமிக்கல்னு பீதிய கெளப்புறாய்ங்க…சரி வாரமானா கவுச்சி வாட இல்லாம சோறு இறங்க மாட்டேங்கிதுல…அதுக்குத் தா இந்த நெஞ்செலும்பு…..”

“சரி சரி…. ஆரோக்கியம்னாலே கருமின்றது தெரியாதா நமக்கு…சும்மா காரணம் சொல்லாதப்பா….”  தந்தி பேப்பரைப் பிரித்து படிக்கலானார் மூக்கு.

“ஆமா இவரு பெரிய துபாய் சேக்கு….. போய்யா மூக்கு.   ஆட்டுக்கறிக்கு கொடுக்குற காச,  வண்டிக்கு பெட்ரோலாச்சும் போட்டேன்னா இன்னும் நாலு ஊரு சேந்தாப்ல போய் யாவாரம் பாப்பேன்..நாம அர வயிறா கெடந்தாலும் பரவால்ல..பொழப்பு முக்கியம்ல ?”….  திண்டுச் சுவற்றோடு சாய்ந்தார் ஆரோக்கியம்.

“அட ஆமாப்பா…..நீ சொல்றதும் வாஸ்தவந்தான்…ஆனா பெட்ரோலும் கொள்ள வெலயா விக்குது…..என்னமோ கச்சா எண்ணெய்ங்கிறாய்ங்க..விலைச்சரிவு ங்கிறாய்ங்க.. கொறஞ்சிருச்சிங்கிறாய்ங்க…ஆனா இன்னும் 59 ரூவாய்ல தானே நிக்கிது….ஒரு ரூவா கூட கொறயலியே…!!” காஜா பாயைப் பார்த்தார் மூக்கையா.   யாரையும் சட்டை செய்யாமல் தொடைக்கறியைக் கிழித்து யாருக்கோ துண்டுகளை கொத்திக் கொண்டிருந்தார் காஜா பாய்.

“ஆமா…ஏதோ கச்சா எண்ணெய் முப்பது ரூவாய்க்கு வந்துருச்சாம்ல…?” மறுபடியும் பார்த்தார் மூக்கு .

காஜா பாயால் பொறுக்க முடியவில்லை.  “அது முப்பது ரூவா இல்லீங்க….முப்பது டாலர்……அமெரிக்கா ரேட்டு.  ஒரு பேரல் கச்சா எண்ணெயோட வெல இப்ப 30 டாலர் தான்.”

“ஒரு பேரல்னா என்னா கணக்கு”  பீடியை அணைத்தார் ஆரோக்கிய சாமி.

“ஒரு பேரல்னா 159 லிட்டர்….ஒரு டாலரோட ரேட்டு  இன்னைய தேதிக்கு 67 ரூவா… 30 டாலர்னா கணக்கு போடுங்க…159 லிட்டர் கச்சா எண்ணெயோட வெல நம்மூர் காசுக்கு 2010 ரூவா தான்…..”

“அடேயப்பா ….அவ்ளொ வெல கொறஞ்சிருச்சா….இதுக்கு முன்னாடி எம்புட்ருந்திச்சி”….மூக்கையா

“இதுக்கு முன்னாடி 2014 ல,  129 டாலரா இருந்துச்சு…அதாவது ஏழாயிரம் ரூவாய்க்கும் மேல .அப்ப பெட்ரோல் ரேட்டு இந்தியாவுல 70 ரூவா….இப்ப .100 டாலர் வெல கொறஞ்சிருச்சி….உலகம் ஃபூரா பெட்ரோல் வெலய கொறச்சிட்டான்….நம்மூர்ல தான் இந்த அநியாயம்…”   கையை நனைத்தார் காஜா பாய்.

“…எப்படி பாத்தாலும் இன்னிக்கு ரேட்டுக்கு லிட்டர் பெட்ரோல் 25 , 30 ரூவாயைத் தாண்டாது. கொள்ளக்கார கவர்ன்மெண்ட்டு பயலுக,  டபுள் மடங்கு ரேட்டு போட்டு நம்மள கொல்றாய்ங்க..60 ரூவா அநியாயமா கொடுத்துக்கிட்டு இருக்கோம்….”ஆரோக்கிய சாமி உக்கிரமடைந்தார்.

“அட என்னப்பா சொல்ற….அம்புட்டு காசும் அனாமத்தா போகுதா….ஏம்பா மோடி வெலய கொறைக்க மட்டாரா…?”  மூக்கு மூக்கைச் சொறிந்தார்.

“அவர் எப்படி கொறப்பாரு….பெட்ரோல் வெல கொறஞ்சாலும் சுங்க வரி, அந்த வரி இந்த வரின்னு போட்டு அறுபது ஓவாய்க்கு கொண்டு வந்து நிறுத்திருவாருல்ல… ”   ஆரோக்கியம்.

“அது மட்டுமா….பெட்ரோல் வெலய கவர்மெண்ட் வெக்கிறது இல்ல. பெட்ரொல் கம்பெனிக்காரய்ங்க தான் வெலயச் சொல்லுவாய்ங்க…அவய்ங்க கேக்கிற காசத் தான் நாம கொடுக்கணும்”….என்றார் காஜா பாய்.

“அடக்கொடுமையே !  இந்தக் காச எல்லாம் கொண்டு போய் யார்கிட்ட கொடுக்கப் போறாரு மோடி…அவருக்குத் தான் குடும்பம் குட்டி இல்லயே”..   மூக்கையா..

“அவருக்கு இல்லன்னு யாரு சொன்னது…அம்பானி..அதானின்னு நெறய சொந்தக்காரங்க மோடிக்கு இருக்காங்க…அவங்க லாபமடையனும்னு தான் நம்ம வயித்துல அடிக்கிறாரு மோடி…பாருங்க..  என் வண்டி எவ்ளோ தூரம் ஓடுதுன்றத பொறுத்து தான் என்னோட யாவாரம்….வருமானம் எல்லாம் இருக்கு….பெட்ரோல் ரேட்டு இம்புட்டு வித்தா ஒரு நாளைக்கு 200 ரூவாய்க்கு மேல என்னால போட முடியுமா”….? ஆரோக்கிய சாமி.

“சரி தான் ஆரோக்கியம்..ஒங்கவல ஒனக்கு…” பெருமூச்சு விட்டார் மூக்கு.

“அதுமட்டுமில்ல மூக்கையா மாமா…. பெட்ரோல் ரேட்டு கொறஞ்சா விலைவாசி கொறையும்…நம்ம வாங்குற அரிசி பருப்பு எண்ணெய் எல்லா ஜாமாய்ங்களோட ரேட்டும் கொறைஞ்சிரும்…..கம்பெனிங்கள்ல ப்ரொடக்சன் கூடும்….வேலை வாய்ப்புகள் பெருகும்…நாட்டையே மாத்திரலாம்…எல்லாம் பெட்ரோல் டீசல் விலையில தான இருக்கு…..”…..காஜா பாய்.

“அட இம்புட்டு வெசயம் பெட்ரோல்ல இருக்கா…..கிலோ பருப்பு என்னா ரேட்டு விக்கிது….இந்த கவர்ன்மெட்டு காரய்ங்கல எல்லாம் நிக்க வெச்சி கேள்வி கேக்கணும்யா….என்னா மசிருக்கு யா உங்களுக்கு நாங்க ஓட்டப் போட்டோம்னு…..” ??  மூக்கையா பொறும ஆரம்பித்தார்.

“விடுய்யா மூக்கு…..நேத்து அம்பானியோட சம்பாத்தியம் 7200 கோடின்னு ஒரு கணக்கு சொல்லுது….நாம‌ எம்புட்டு மூச்சடக்கி,  கத்தி கதறுனாலும் 400 ரூவாய்க்கு மேல லாபம் நிக்க மாட்டேங்கிது….என்னத்த சொல்ல….?”

“அட ஆமாப்பா… என் வெவசாயமும் மண்ணாப் போச்சு…எம்புள்ளய காஜா பாய் மாதிரி, ஒரு அஞ்சாறு வருசம் சவுதிக்கு அனிப்பிரலாம்னு பாக்கிறேன்…..”

“ஆமா கொஞ்ச காசத் தேத்திட்டு, எனக்கு போட்டியா எதிக்கவே கசாப்பு கட போடப் போறியளா மாமா…..”   என சிரித்துக் கொண்டே நெஞ்செலும்பு பையை ஆரோக்கிய சாமியிடம் நீட்டினார் காஜா பாய்.

– அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*