Home / கலை / ரோகித் வெமுலா

ரோகித் வெமுலா

நான் அறிந்திருக்கிறேன்

கொலையோ தற்கொலையோ

தீர்வாகாதென்று

தூக்குக் கயிற்றைவிடவும்

ஆயிரம் ஆண்டு

சனாதன முடிச்சுகளால்

முறுக்கேற்றி

சாதியமென்னும்

ஒற்றை வரியில்

பின்னப்பட்ட பூணூல்

வலிமையானதென்று

எனக்கு நன்றாகவே

தெரியும்.

 

எனது மரணத்தை

கோழைத்தனம் என்பீர்கள்

மயிலிறகை விடவும்

இலகுவானது என்பீர்கள்

பாறையை விடவும்

இறுக்கமானது என்

மரணம் மட்டுமல்ல

மௌனமும் கூட

நீங்கள் புனிதமென்று

வணங்கச் சொன்ன

மூவண்ண கொடி

நால்வருணம் போதிக்கும்

கழுமரங்களை விடவும்

கொடூரமானவை என்பது

என் ஆன்மாவுக்கு

மட்டுமே தெரியும்.

நான் அறிந்திருக்கிறேன்

கொலையோ தற்கொலையோ

தீர்வல்ல என்பதை !

 

– பாரதிதாசன்

இளந்தமிழகம் இயக்கம்

About பாரதிதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*