Home / அரசியல் / தமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு ஒரு கடிதம்

தமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு ஒரு கடிதம்

தமிழிசை சவுந்தரராசன் அவர்களுக்கு,

வணக்கம்.  தமிழகத்தில் தேர்தல் களம் சூடிபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணிகளுக்கான‌ பேச்சு வார்த்தைகள் அன்றாட செய்திகளில் இடம் பிடிக்கின்றன. இந்த பரபரப்பான சூழலில், ஒரு செய்தி அதிக முக்கியத்துவம் இல்லாமல் மழுங்கடிக்கப்பட்டு விட்டது. அது குறித்து சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.

இந்திய தேசியக் கொடியை எரித்த இளைஞர் திலீபன் மகேந்திரன், தற்போது கைது செய்யப்பட்டு விரல்கள், கை உடைக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் பெரியார் இயக்கத்தைச் சேர்ந்தவராக அறிகிறோம். திலீபன் சில நாட்களுக்கு முன் தேசியக் கொடியை எரிக்கும் புகைப்படத்தை இணைய தளங்களில் பதிவிட்டிருந்தார். இதைப் பார்த்த  “இந்திய தேச பக்தர்கள்” அனைவரும் கொதித்தெழுந்து திலீபனை வசை மாறி பொழிந்தனர். அப்படத்தை பதிவேற்றியதன் மூலம் திலீபன் ஒரே இரவில் தேசத் துரோகியானார். இந்த தேசபக்தி உணர்ச்சியின் ஒரு நீட்சியாக,  ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்  சேர்ந்த சிலர், கடந்த வாரம் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் திலீபன் மீது புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 1ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில், புளியந்தோப்பு காவலர்களால் திலீபன் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்புக் காவல் சரக உதவி ஆணையர் மயில் வாகனன் தலைமையிலான காவல் படை திலீபனைச் சித்திரவதை செய்து அவரின் கைகளையும் கை விரல்களையும் கொடுரமாக உடைத்து சிதைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி,  திலீபனின் கண்களைக் கட்டி மர்மமான ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று, எந்த கையை உடைக்க வேண்டும் என்று வேறு கேட்டு திலீபனை சித்திரவதை செய்திருக்கிறார்கள். உடைந்த கையோடு திலீபனை அழைத்துச் சென்று,  மருத்துவர்களிடம் “தேசியக் கொடியை எரித்தவன் இவன். உங்களால் இயன்றதைச் செய்யுங்கள்” என்று வேறு திலீபன் மீதான குற்றப்பார்வையை அதிகரித்துள்ளனர். வலியால் துடித்த திலீபனைப் பார்த்து மருத்துவரும் “கொடியை எரிக்கும் போது வலி குறித்து நீ யோசித்திருக்க வேண்டும்” என்று ஏசியுள்ளனர். உடைந்த கைகளுக்கு சிகிச்சையளிக்காமல், வெறும் கட்டு மட்டும் போடப்பட்டிருக்கிறது. பிறகு காவல்துறையே 30 ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை அழைத்து,  உடைந்த கையோடு நிற்கும் திலீபனை புகைப்படம் எடுக்க வைத்து அனுமதித்திருக்கிறது.  சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,  ஆர்.எஸ்.எஸ் புகார் கொடுத்தவுடன், உடனடியாக காவல்துறை செயல்பட்டு, துரித நடவடிக்கை எடுத்து, கைது செய்து தண்டனையும் வழங்கிவிட்டது.

இந்தியத் தேசியக் கொடியை எரித்ததில் நிச்சயம் உங்களுக்கு உடன்பாடு இருக்க முடியாது. அது தேச விரோதச் செயல் என்றும் கருதக்கூடும். (எங்களுக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டு) . எனவே அதை நீங்கள் கண்டிப்பீர்கள் என நம்புகிறோம். இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதும் நோக்கம், உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களால் அப்பட்டமான ஒரு சட்ட மீறல், மனித உரிமை மீறல் தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இது குறித்து நீங்கள் இன்னும் வாய் திறக்கவில்லை. தேசியக் கொடியை எரித்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் நீங்கள்,  எரித்த சிறுவனின் கையை உடைத்து அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை குறித்தும், அதற்கு முழு முதற்காரணமான உங்கள் ஆர்.எஸ்.எஸ். குறித்தும் குறைந்த பட்ச கண்டன அறிக்கை வெளியிடாதது ஏன் ?

புகாரின் பேரில் கைது செய்ய காவல் துறையினருக்கு உரிமை உண்டு. ஆனால் கைது செய்த மறுகணம், அவரை நீதிமன்றத்தில் அல்லவா ஒப்படைத்திருக்க வேண்டும்? அதை விடுத்து, சட்டத்தை மதிக்காமல் காவல் துறையினரே நீதிமன்றமாகி, அவர்களே தீர்ப்பளித்திருக்கின்றனர்.  தேசியக் கொடியை எரிப்பதன் மூலமாக எழும் பொது உளவியலை காவல் துறையினர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காவல் நிலையத்திலேயே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டு விட்டால்,  நீதித்துறை என்ற ஒரு அரசு எந்திரம் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.

தமிழ்நாட்டில் எப்பாடு பட்டேனும் காலூன்றத் துடிக்கும் பா.ஜ.கவுக்கும் அதன் தமிழக தலைவரான உங்களுக்கும் ஒரு சில விஷயங்களைச் சொல்லக் கடமை பட்டிருக்கிறேன்.

திலீபன் ஏன் இந்திய தேசியக் கொடியை எரிக்க வேண்டும்?. ( சுய விளம்பரத்திற்காக எரித்தேன் என்று வலுக்கட்டாயமாக சித்திரவதை செய்து எழுதி வாங்கியதை நாங்கள் நம்பத் தயாராக இல்லை)

தமிழக நலன்களில் எப்பொழுதேனும் இந்திய நடுவண் அரசு, அக்கறை காட்டியதுண்டா ? காவிரி நதி நீர் பங்கீடு தொடங்கி, முல்லைப் பெரியாறு பிரச்சினை, ஈழம், கச்சத்தீவு, தமிழக மீனவர்கள் கொல்லப்படுதல், தமிழகத்தின் இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல், அணு உலை, மீத்தேன், தற்போது கெயில் வரை,  முன்னாள் காங்கிரசு அரசும் இந்நாள் பா.ஜ.க அரசும் நடந்து கொள்ளும் முறை தமிழர்கள் நன்கு அறிவார்கள்.  தேசப்பற்று குறித்து பேசும் நீங்கள்,  இந்திய தேசத்துக்கு எங்கள் மீது எந்தப் பற்று இல்லை என்பதை எப்போது உணரப் போகிறீர்கள் ?

காங்கிரசு கூடங்குளம் அணு உலையைத் தொடங்கியது. தற்போது, அடுத்த ஆறு உலைகளை அமைத்து அணு உலை பூங்கா அமைப்பதற்கு பா.ஜ.க அரசு  அச்சாரம் போடுகிறது. காங்கிரசு காலத்தில் உருவெடுத்த கெயில் பிரச்சினை, பா.ஜ.க காலத்தில் இன்னும் பூதாகரமாகியிருக்கிறது. தற்போது விவசாய விளை நிலங்களின் வழியாக குழாய்கள் செல்ல எந்த தடையும் இல்லை இதே பா.ஜ.க அரசு காலத்தில் அபாயகரமான ஒரு  தீர்ப்பு வருகிறது.  கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கடல் தாமரை மாநாடு போட்டு மீனவர்களைக் காப்போம் என உறுதியளித்த பா.ஜ.க,  தேர்தலில் வெற்றி பெற்ற பின் தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டது.  இலங்கை வரை சென்று திரும்பிய சுஷ்மா சுவராஜூக்கு,  ஒரு தமிழரைக் கூட சென்று சந்திக்க நேரமில்லை.   மரண தண்டனைக்காக காத்திருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலையிலும், தமிழக பொது மனநிலைக்கு எதிராகத் தான் இந்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  எதைப் பார்த்து இந்திய அரசின் மீது நாங்கள் பாசம் வைக்க ?   தமிழக சட்டசபையில் போடப்படும் தீர்மானங்களை, ஒரு முனிசிபாலிட்டி கூட்டத்தில் போடப்படும் தீர்மானமாகக் கூட மதிக்காமல், குப்பைத் தொட்டிக்குள் வீசும் இந்திய அரசின் மீது தமிழர்கள் நாங்கள் எங்கனம் காதல் கொள்வது ?தமிழர்கள் என்கிற ஒற்றை தேசிய இனத்தின் மீது மட்டுமல்ல.  கஷ்மீர், நாகாலாந்து, பஞ்சாப் மற்றும் பல வடகிழக்கு மாநிலங்களின் தேசிய இன உரிமைகள் குறித்தும் எவ்வித கவலையுமின்றி, மாநில உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய அரசை நாங்கள் எப்படி நண்பனாக ஏற்றுக் கொள்ள முடியும் ?

இந்திய அரசு ஒட்டு மொத்தமாக தமிழக நலன்களுக்கு எதிராகத் தானிருக்கிறது.  தொட்டுணரும் விதமாக, அதை இந்திய அரசு அனுதினமும் நிரூபித்து வருகிறது.  ஆகவே இந்திய தேசியக் கொடியை எரித்ததன் மூலம்,  ஒரு மிகப்பெரிய தேச விரோதச் செயலைச் செய்ததாக சித்தரிக்கப்படும் திலீபனை குற்றம் சாட்டுமுன்,  தமிழகத்திற்கு இந்திய அரசு செய்யும் துரோகங்களையும் விரோதங்களையும் எண்ணிப் பார்க்குமாறு தங்களை தாழ்வன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

எது எப்படியிருப்பினும், இந்திய தேசியக் கொடியை எரிப்பது தேச விரோதம், தேசத் துரோகம் என்கிற உங்கள் வாதங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. மேற்சொன்ன கருத்துகளை முன் வைத்து, திலீபன் செய்தது நியாயம் தான் என்பதை உணர்த்த எழுதப்பட்ட கடிதமல்ல இது. ஆனால் அதே நேரம், சட்டத்தை மதிக்காமல், உங்களவர்களின் ஆணைக்கு அடிபணிந்து, ஒரு ரவுடிக் கும்பலைப் போல திலீபனைத் தூக்கிச் சென்று, கையை உடைப்பதை நீங்கள் எந்தப் புள்ளியிலிருந்து ஏற்றுக் கொள்வீர்கள்?

இப்படியொரு நிலைமை ஆர்.எஸ்.எஸ்/பா.ஜ.க உறுப்பினர்களுக்கு நேர்ந்தாலும், ஜனநாயக சக்திகளான நாங்கள் அதையும் கண்டிப்போம். மனித உரிமைகள் மீறப்படுவதை,சட்டங்கள் தூக்கியெறிக்கப்பட்டு, காவல்துறை வரம்பு மீறுவதை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்புவோம். நடந்த அப்பட்டமான ஒரு மனித உரிமை மீறலை எதிர்த்து, குரல் எழுப்ப உங்களுக்கு மனம் வரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே இக்கடிதத்தை, தமிழக பா.ஜ.க.வின் தலைவராக மீண்டும் பதவியேற்றிருக்கும் உங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 இப்படிக்கு,

அ.மு.செய்யது

இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*