Home / அரசியல் / கன்னையா குமாரின் பிணை – சங் பரிவாரத்தின் வெற்றி : எஸ்.வி.ராஜதுரை

கன்னையா குமாரின் பிணை – சங் பரிவாரத்தின் வெற்றி : எஸ்.வி.ராஜதுரை

எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்ற வளாகத்துக்குளேயே காவல் துறையினரின் மேற்பார்வையின் கீழ் சங் பரிவார வழக்குரைஞர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட ஜே.என்யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையகுமார் டெல்லி நீதிமன்றத்தால் பிணை வழங்ப்பட்டு வெளியே வந்துள்ளது, மனிதநேயமும் நீதியுணர்வும் கொண்ட எல்லோரையும் போலவே நமக்கும்  ஒருபுறம் மகிழ்ச்ச்சியையும் மறுபுறம் ஏமாற்றத்தையும் தந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற இலக்கியங்களிலிருந்தோ, பெரும் தத்துவ அறிஞர்களின் படைப்புகளிலிருந்தோ, நீதித் துறைத் தீர்ப்புகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்களிலிருந்தோ நீதிபதிகள் தாங்கள் எழுதும் தீர்ப்புகளில் மேற்கோள்கள் காட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். ‘தேசபக்தி’ என்றால் என்ன என்பதை வரையறை செய்வதற்காகவும்,  பிணை வழங்கப்பட்ட கன்னையகுமார் அந்த வரையறையின்படியே ஒழுக வேண்டும் என்று கறாராகக் கூறுவதற்காகவும் இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்ற ஆயமொன்று,  மூன்றாந்தர ஹிந்தித் திரைப்படப் பாடலொன்றை மேற்கோளாகக் காட்டியுள்ளது நமக்குத் தெரிந்தவரை இதுதான் முதல் முறை. 2016ஆம் ஆண்டு வசந்த காலத்தில் ‘அமைதி என்னும் வண்ணம்’ சீர்குலைக்கப்படுவதற்கு ஜே.என்.யு. மாணவர்கள் மட்டுமல்லாது அவர்களது  போராட்டத்தை ஆதரித்த அந்தப் பல்கலைக் கழக ஆசிரியர்களையும் குற்றம் கூறிய அந்த நீதிமன்றம் கீழ்க்காணும் நிபந்தனைகளை கன்னையகுமாருக்கு விதித்துள்ளது:

1.பல்கலைக் கழக வளாகத்தில், தேச-விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி வைக்க அவர் தமது அதிகாரத்துக்குட்பட்ட அனைத்தையும் செய்ய வேண்டும். அவர் நீதிமன்றத்தில் ஆஜராவது தொடர்பாக மட்டுமின்றி, அவரது சிந்தையும் செயலும் ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தப்பட வேண்டும் என்பதையும்  உறுதி செய்து ஒரு பல்கலைக் கழக ஆசிரியரோ, கன்னையகுமாரின் உறவினரொருவரோ பிணைப் பத்திரத்தில் உத்திரவாதம் செய்ய வெண்டும்.

2.பிணையில் வருவதற்கு பத்தாயிரம் ரூபாய் செலுத்துவதுடன், எந்த தேசவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்ற உறுதி மொழியையும் எழுதித்தர வேண்டும்.

இந்த  நிபந்தனைகளின் கீழ், ஆறு மாதகாலத்துக்கு இடைக்கால பிணை வழங்கியுள்ளது நீதிபதி பிரதிபா ராணி அவர்களின் தலைமையில் அமைந்த டெல்லி உயர்நீதிமன்ற ஆயம்.

இயற்கை நீதி என்ற கண்ணோட்டத்தை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, வெறும் சட்டரீதியாக மட்டுமே இந்தத் தீர்ப்பை அணுகினாலும் கீழ்க்கண்ட உண்மைகளை நம்மால் காணாமல் இருக்க முடியாது:

 கன்னையாகுமாரின் பிணை மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்னும் தொடக்கநிலையிலேயே உள்ளது’ என்று கூறுகிறது. ஆனால், அதே ஆயம்தான், இந்தப் புலன்விசாரணையின் இறுதி அறிக்கைத் தனக்குக் கிடைப்பதற்கு முன்பேயே, “அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் கலந்துகொண்ட ஜே.என்.யு. மாணவர்கள் எழுப்பிய முழக்கத்தில் பிரதிபலிக்கும் சிந்தனைகளை பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்குமான அடிப்படை உரிமை எனப் பாதுகாக்கப்பட வேண்டும் என உரிமை கொண்டாட முடியாது. இது இத்தகைய மாணவர்களைப் பாதித்துள்ள நோய். தொற்று நோய் போலப் பரவுவதற்கு முன்பே, இதைக் குணப்படுத்துவோ, கட்டுப்படுத்தவோ வேண்டும்” என்ற முடிவுக்கும் வருகிறது. மாணவர்களைப் பாதித்துள்ள  நோய் என்று அது கூறுவது,  ‘தேசவிரோத நடவடிக்கைகள்’ என்று ஏபிவிபி-பாஜக கூறுவதைப் போன்றதுதானே என்ற சந்தேகம் நமக்கு எழுகின்றது.

 “எந்த தேசவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன்” என்று கன்னையாகுமாரிடம் உறுதிமொழி எழுதி வாங்கிக் கொண்டதன் மூலம், கன்னையாகுமார் ஒரு ‘தேச விரோதிதான்’ என்று – பருண்மையான சாட்சியங்களோ, சான்றுகளோ ஏதுமில்லாமல் – மறைமுகமாகக் கூறியுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

டெல்லி காவல் துறையின் அத்துமீறல்களில் குறைந்தது ஒன்றாவது டெல்லி உயர் நீதிமன்றத்துக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது: அதாவது  பாட்டியாலா நீதிமன்றம் என்று சொல்லப்படும் குற்றவியல் நடுவர் மன்றத்துக்குள் குற்றம் சாட்டப்படுபவர்களைக் கொண்டு செல்வதெற்கென தனி வாயில் உள்ளது. அந்த வாயில் வழியாகத்தான் கொண்டு வர வேண்டும் என்பது நீதித் துறையின் ஆணை. ஆனால், பாஜக வழக்குரைஞர்கள் சிலரும் காடையர்கள் சிலரும் கன்னையகுமாரை அடித்துத் துவைப்பதற்குத் தோதாக வேறொரு வாயில் வழியாக அவரை நீதிமன்றத்துக்குள் கொண்டு சென்றனர்.

ஜே.என்.யு. மாணவர்கள் நடத்திய கூட்டம் தொடர்பாக சில தொலைக்காட்சி சானல்கள் ஓளிபரப்பிய வீடியோக்களில் மூன்று போலியாகத் தயாரிக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டிருந்தன என்பதை  ஹைதராபாத்திலுள்ள ஓர் அறிவியல் நிறுவனத்திடமிருந்து டெல்லி முதலமைச்சர் உறுதி செய்திருக்கும் நிலையில் ஜே.என்.யு. மாணவர்கள் மூவரைக் கைது செய்ய அந்த வீடியோக்களைப் பயன்படுத்திய காவல் துறை மீதும் தொலைக்காட்சி ஊடகங்கள் மீதும் கிரிமினல் வழக்குகள் தொடுப்பதன் அவசியத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏனோ கருத்தில் கொள்லவில்லை.

சில மாணவர்களுக்கு  ‘தேச-விரோத மனப்பான்மை’  என்னும் நோய் கண்டிருப்பதாகவும், அதை குணப்பபடுத்த ‘ஆண்டிபயாடிக்’ போதுமானதாக இல்லை என்றால் ‘ அடுத்தகட்ட சிகிச்சை’க்குச் செல்லலாம் என்றும், நோய் முற்றி ஆறாத புண் ஏற்பட்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து கையையோ காலையோ வெட்டி விடலாம் என்றும் உருவகமாகச் சொல்லப்படுவது எதைக் குறிக்கின்றது? அரசாங்கமோ, ஆளும் கட்சியோ, நீதித்துறையிலுள்ள சில குறிப்பிட்ட நீதிபதிகளோ ‘தேசவிரோதப் பேச்சு’, ‘தேசவிரோத’ நடவடிக்கை என்று கருதுகின்றவற்றை ஒடுக்குவதற்கு அரசு யந்திரம் எந்தவிதமான ஒடுக்குமுறையையும் பிரயோகிக்கலாம் என்பதையா? 124-ஏ, சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டம் போன்றவற்றை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்பதையா?  ‘என்கவுண்டரும்’ இதில் அடங்குமா?

நாட்டின் எல்லையைக் காக்கிற இராணுவத்தினராலும், புற இராணுவத்தினராலும் மட்டுமே நமது பேச்சுச் சுதந்திரமும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்றது என்று டெல்லி உயர்நீதிமன்ற ஆயம் கூறுகிறது. அதாவது,  நீதிபதிகள் உள்ளிட்ட நம் அனைவருக்கும் உணவளிக்கின்ற, உடைகள் தருகின்ற, வீடு கட்டித் தருகின்ற, கார்கள் ஒட்டுகின்ற, எல்லாவற்றுக்கும் மேலாக –    நீதிபதிகள் உள்ளிட்ட நாம் அனைவரும் தினமும் போடும் குப்பைகளையும்  கழிக்கும் மலத்தை அள்ளுகின்ற –  உழைக்கும் மக்களுக்கு நமது பேச்சுச் சுதந்திரத்தை உத்தரவாதமளிப்பதில் எந்தப் பங்கும் இல்லை என்றாகிறது

அரசாங்க அதிகாரிகளின் அத்துமீறல்களையோ காவல் துறையின் மனித உரிமை மீறல்களையோ நாளை யாரேனும் விமர்சித்தால், ‘நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறவர்கள் அவர்கள், நாட்டு விவகாரங்களை நிர்வகிப்பவர்கள் அவர்கள், எனவே அவர்களை விமர்சிப்பது தேச துரோகம்’ என்று நீதிமன்றம் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கன்னையாகுமாரின் கைது பற்றியும் ஜே.என்.யு.மாணவர்கள், ஆசிரியர்கள் மீது காவல் துறை நடத்திய தாக்குதல்கள் பற்றியும் நாடாளுமன்றத்தில் பாஜகவுடன் காரசாரமான விவாதங்கள் நடத்திய காங்கிரஸ் கட்சி முதல் இடதுசாரிக் கட்சிகள் வரை, எதுவுமே – காஷ்மிர் பிரச்சினையும் அஃப்சல் குரு பிரச்சினையும்  ஒருபுறமிருக்கட்டும் – மரண தண்டனை முறைக்கு எதிராகக்கூட ஒரு வார்த்தை பேசவில்லை. ஹைதராபாத்தைச் சேர்ந்த சங் பரிவார ஆள்களில் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேச துரோக வழக்கொன்றில் ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோரோடு சேர்த்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களிலொருவர்  இன்றைய சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.  அஃபஸல் குரு துக்கிலிடப்பட்டதை சிபி.ஐ., மட்டுமின்றி சிபிஐ (எம்-எல்) கட்சிகள் அனைத்தும் கண்டனம் செய்தன. அச்சமயம் சிபிஎம் போலிட்பீரோ உறுப்பினராக இருந்த யெச்சூரி, சட்டரீதியான நடைமுறைகளெல்லாம் பின்பற்றப்பட்ட பிறகே அந்தத் தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட்டதாகவும் 11 ஆண்டுக்காலம் தொங்கிக் கொண்டிருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறினார் (“I think the law of the land with all its provisions has finally been completed as far as the Afzal Guru case and the attack on the Indian Parliament is concerned. The issue which had been lingering for the past 11 years has finally completed its due course.” – The Telegraph, February 12, 2013).அவரது கருத்து பிற இடதுசாரிக் கட்சிகளுக்குள்ளிருந்து மட்டுமல்ல, அவரது கட்சிக்குள்ளிருந்துமே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. அதன் காரணமாக, அந்தக் கட்சியின் அதிகாரபூர்மான ஏடான ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ அஃப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டதை விமர்சித்துத் தலையங்கம் எழுதியது. மரண தண்டனை முறையே வேண்டாம் என்று சொல்லுமளவுக்குச் சென்றது. அஃஸல் குரு தூக்கிலிடப்பட்டதானது காஷ்மிரிலுள்ள பிரிவினைவாதிகளின் கரத்தை வலுப்படுத்தியுள்ளதாகக் கூறியது.

 2001இல் நாடாளுமன்றத்தின் மீது ‘பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்’ பற்றி  மிக உயர்மட்ட நீதி விசாரணையோ, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவின் விசாரணையையோகூட வலியுறுத்துவதைத் தவறவிட்டுவிட்டவர்கள் நாடாளுமன்ற இடதுசாரிகள். அந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளவர்களாகக் கருதப்பட்ட அஃப்ஸல் குரு, ஏ.ஆர்.ஜீலானி முதலியோர் கைது செய்யப்பட்ட முறை, தடா நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட முறை, ‘தேசத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திப்படுத்துவதற்காக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை விமர்சனம் செய்ய ஒருவர் காஷ்மீரின் ஆஸாதியாக இருக்க வேண்டியதில்லை. மனித உரிமைகளையும் இயற்கை நீதியையும் மதிக்கத் தெரிந்தவர்களாக இருந்தாலே போதும். அதனால்தான் இங்கிலாந்திலுள்ள ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனலி’லிருந்து அமெரிக்காவிலுள்ள ‘ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச்’ வரை, டெல்லியிலுள்ள பியுடிஆர், பியுசிஎல் அமைப்புகளிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் வரை  –  ஏன் ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’ உள்ளிட்ட  இந்திய ஏடுகள் பலவும்கூட –  மேற்சொன்ன விசாரணை முறைகளையும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் விமர்சனம் செய்தன. அஃசல் குரு தூக்கிலிடப்பட்டதையும் அதை ஆதரித்த முக்கிய அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து அருந்ததி ராய் எழுதிய ‘A Perfect Day for Democracy’  என்னும் கட்டுரை ‘தி ஹிந்து ‘ஆங்கில நாளேட்டில் 11.03.2013 அன்று வெளியிடப்பட்டது. இனி, இந்த விமர்சனங்களும்கூட, முன்தேதியிடப்பட்ட தேசவிரோத நடவடிக்கைகளாகக் கருதப்படக்கூடும்.

பிணையில் வெளியே வந்துள்ள கன்னையாகுமாரைப் போலவே சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் காஷ்மிரின் ஆஸாதி (விடுதலை) பற்றிப் பேச வேண்டாம்; ஆனால், காஷ்மிர் பள்ளத்தாக்கிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய இராணுவமும் புற இராணுவப் படைகளும் காவல் துறையும் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களைப் பற்றியோ, குறைந்தபட்சம் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்வது பற்றியோ பேசலாமல்லவா?. இவற்றைப் பற்றிப் பேசாமல்,  பாலஸ்தீனம், எகிப்து, சிரியா முதலியவற்றில் ஏகாதிபத்தியமும் காலனியாதிக்கவாதிகளும் நடத்தும் ஆக்கிரமிப்புகளையும் ஒடுக்குமுறையையும் பற்றி பேசுவது எப்படி இடதுசாரிக் கண்ணோட்டம் ஆகும்? காஷ்மிர், வடகிழக்கு, ஈழத்தமிழ் மக்கள் ஆகியோரைப் பொருத்தவரை காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும்  என்ன  வித்தியாசம் இருக்கிறது? பிணையில் வெளியே வந்த பிறகு ஜே.என்.யு.மாணவர்களிடையே ஆற்றிய உரையில் கன்னையகுமார், ‘எனது இலட்சிய மனிதர் அஃப்சல் குரு அல்ல; ரோஹித் வெமுலாதான்‘ என்று கூறியுள்ளார். நல்லது தோழர் கன்னையாகுமார்! ஆனால், தங்களுக்காகப் பேசுவதற்கு இந்த நாட்டில் யாருமில்லை என்று மனம் வெதும்புகின்ற முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்தவர் ரோஹித். அவர் உயிரோடு இருந்திருந்தால் ஏ.ஆர்.ஜிலானியை இப்படி அனாதையாக விட்டிருக்க மாட்டார். அதனால்தான் சங் பரிவாரத்தால் அவர் ‘தேச்துரோகிகளின்’ பட்டியலில் சேர்க்கப்பட்டார். நான் பேசும் ‘ஆஸாதி’ என்பது இந்திய உழைக்கும் மக்களின் ‘ஆஸாதி’ என்கிறார் கன்னையாகுமார்.  நல்லது தோழரே! இந்த ‘ஆஸாதி’யை மறுப்பதில் இந்திய அரசு’க்குப் பங்கில்லையா? அந்த அரசின் துணையோடுதானே நாட்டின் இயற்கை வளங்கள் வெளிநாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகளால் கொள்ளையடிக்கப்படுகின்றன?

காஷ்மிரின் ஆஸாதி பற்றி பேசுகிறவர்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவர்கள் என்றால், இந்த அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மிருக்குத் தரப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுவிட்ட காங்கிரஸ், பாஜக அரசாங்கங்களையும், அதை அடியோடு இரத்து செய்ய வேண்டுமென்று கூறுகிற சங் பரிவாரத்தினரையும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவர்கள், ஆகவே தேச விரோதிகள் என்று கூறலாமல்லவா? காஷ்மிர் பள்ளத்தாக்கை இந்தியாவோடு வைத்திருப்பதற்காகக் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுவதற்குப் பதிலாக அதை காஷ்மிர் பள்ளத்தாக்கு முஸ்லிம்களுக்கே கொடுத்துவிடுவது  நடைமுறைச்சாத்தியத் (pragmatic)  தீர்வு என்று கூறிய அண்ணல் அம்பேத்கரும்கூட தேசவிரோதியா? நாட்டில் எந்த இடத்திலும் இரத்தக் களரியோ, மனித பலிகளோ (இதில் இராணுவத்தினர், புற இராணுவத்தினர், காவல் துறையினர் ஆகியோரும் அடங்குவர்) வேண்டாம்; பிரச்சினைகளை சமாதான, கண்னியமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறுபவர்களும்கூட தேசவிரோதிகளா?

அஃப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டதை மட்டுமல்ல,  சட்டப்படி வழங்கப்படும் எல்லா மரண தண்டனைகளுமே நீதித்துறை சார்ந்த கொலைதான் (Judicial Murder)  என்று  மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.  எதிரெதிர் கருத்துநிலைகளைக் கொண்டிருந்த காந்தியாரும் அண்ணல் அம்பேத்கரும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தைக் கொண்டிருந்தனர். அவர்களும் தேச விரோதிகளா? ராஜிவ் காந்தி கொலை வழக்கில் அநியாயமாகச் சேர்க்கப்பட்டு, கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்பவர்களும்கூட தேசவிரோதிகளா?

 மனித உரிமைகள் பற்றிப் பேசுவதைக்கூட ‘தேச விரோத’ செயலாக்கிவிட்டதில் இன்று ஆட்சியிலுள்ள பாஜகவைப் போலவே, முன்பு ஆட்சியிலிருந்த  காங்கிரஸும் சாதனை புரிந்திருக்கிறது. அந்தக் காங்கிரஸை ஆதரித்து மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் செய்யப் போகிறீர்களா தோழர் கன்னையாகுமார்? இதை உங்களது ஆதர்ச மனிதரான ரோஹித்தின் ஆவி, நட்சத்திர மண்டலத்திலிருந்து பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்குமா?

-தோழர் எஸ்.வி.இராஜதுரை

(நிழற்படத்திற்கு நன்றி:  பிடிஐ)

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*