Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை…! -2 – ஜோசப் பிரபாகர்

நியூட்டன் முதல் ஈர்ப்பு அலைகள் கண்டுபிடிப்பு வரை…! -2 – ஜோசப் பிரபாகர்

கருந்துளைகளும் ஈர்ப்பு அலைகளும்:

நியுட்ரான் விண்மீன்களிலிருந்தும் (சூப்பர் நோவா வெடிப்புக்கு பின் சாதாரண விண்மீன் நியூட்ரான் விண்மீன் (Neutron star) என்றழைக்கப்படுகிறது), பல்சார் விண்மீன்களிலிருந்தும் (வேகமாக சுழலும் மிக அதிக காந்தப் புலம் கொண்ட  நியுட்ரான் விண்மீன்கள்), கருந்துளைகளில் (Black holes) இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் மிக அதிக வலிமையோடு வெளியிடப்படுகிறது.  ஒன்றோடு ஒன்று மிக வேகமாக  சுற்றி வந்த ஈர்மை கருந்துளைகள் (Binary black holes) ஒன்று சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறும்போது(Black hole merger) வெளி வந்ததுதான் தற்போது நாம் கண்டறிந்த ஈர்ப்பு அலைகள்.  இரண்டு கருந்துளைகளும் சுற்றிவரும்போது அதன் முடுக்கம் (acceleration) மிக அதிகமாகி ஈர்ப்பு அலைகள் குறிப்பிட்ட அதிர்வெண்ணில் (frequency) வெளி வர ஆரம்பிக்கும். இந்த ஈர்ப்பு அலைகள்(gravitational waves)  காலவெளியில் பரவும் போது காலவெளியின் வளைவை மாற்றியமைக்கும்(produces ripples on the space time fabric ). மிக எளிதாக விளங்கிக் கொள்ள நாம் குளத்தில் கல்லெறிந்தால் அந்த இடத்திலிருந்து  நீர் அலைகள் வெளிப்புறம் நோக்கி எல்லா திசைகளிலும் பரவுவது போல் இந்த ஈர்ப்பு அலைகளும் பிரபஞ்சத்தின் எல்லா திசைகளிலும் பரவுகிறது. எப்படி குளத்தின் நீரின் மேற்பரப்பு அலை அலையாய் அதிர்கிறதோ அதைப் போல இந்த ஈர்ப்பு அலைகள் பரவுவதால் காலவெளிபரப்பும் (space time fabric oscillates) அதிர்வடைகிறது.   இந்த ஈர்ப்பு அலைகள் ஆற்றலையும், உந்தத்தையும் (energy and momentum) தான் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்கிறது.  இதனால் அந்த இரு கருந்துளைகளின் ஆற்றல், உந்தம் குறைந்து இரண்டுக்கும் உள்ள தொலைவு குறைந்து இன்னும் வேகமாக சுழல ஆரம்பிக்கிறது. இரண்டுக்கும் உள்ள தூரம் குறையக் குறைய வெளிவரும் ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண்ணும்(frequency), அலைவீச்சும் (amplitude) அதிகரிக்க ஆரம்பிக்கும். அந்த இரு கருந்துளைகளும் ஒரே கருந்துளையாக (black hole merger) மாறும் வரை இந்த ஈர்ப்பு அலைகள் வெளிவந்து கொண்டிருக்கும். நாம் இப்போது கண்டறிந்த ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண் 35 ஹெர்ட்சிலிருந்து  250 ஹெர்ட்ஸ் வரைதான்(30Hz-350Hz). இதை கீழே உள்ள படத்தில் காணலாம்.

1

இந்த இடத்தில் நாம் ஒரு சுவாரசியமான தகவலை தெரிந்து கொள்வது அவசியம். மேலே குறிப்பிட்டது போல இரு கருந்துளைகள் இணையும்போது வெளிவரும்  ஈர்ப்பு அலைகளின் பண்புகளை 1970 ஆண்டே இந்தியர் ஒருவர் கோட்பாட்டு ரீதியாக கணக்கிட்டு அதை புகழ்பெற்ற அறிவியல் ஆராய்ச்சி இதழான “நேச்சரில் (Nature)” வெளியிட்டிருந்தார். அவரது பெயர் சி.வி.விஸ்வேஸ்வரா. எழுபத்தேழு வயதாகும் இவர் தற்போது பெங்களுருவில் உள்ள ஜவஹர்லால் நேரு வானவியல் கோளரங்கத்தில் (Jawaharlal Nehru Planetarium) ஒய்வு பெற்ற பேராசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்த கண்டுபிடிப்பை பற்றி அவரிடம் கேட்ட போது “ஒரு நாள் இது உண்மையாகும் என்று  தான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை” என்று வியந்தார்.

இப்போது நாம் கண்டுபிடித்த ஈர்ப்பு அலைகளை வெளியிட்ட ஈர்மை கருந்துளைகளில் ஒரு கருந்துளை 29 மடங்கு சூரியனின் நிறையும்(29 times of sun’s mass),  இன்னொரு கருந்துளை 36 மடங்கு சூரியனின் நிறையும் கொண்டது. இரண்டும் ஒன்று சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறியபின் அதன் நிறை 62 மடங்கு சூரியனின் நிறைதான். மீதமுள்ள மூன்று மடங்கு சூரியனின் நிறை முழுவதும் ஈர்ப்பு அலைகளாக மாறி பிரபஞ்சத்தில் பரவியது. ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்கின்றன (நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்). அப்படி இருந்தும் இந்த ஈர்ப்பு அலைகள் பூமியை வந்தடைய எடுத்துக்கொண்ட காலம் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் வருடங்கள்.  அப்படி என்றால் இந்த இரு கருந்துளைகளும் நம்மிடம் இருந்து எவ்வளவு தொலைவு என்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் கேட்கலாம் பூமியும், சூரியனும் ஈர்ப்பு அலைகள் வெளியிடுகிறதா என்று? ஆம். பூமியும் சூரியனும் கூட ஈர்ப்பு அலைகள் வெளியிடுகின்றன. பூமி வெளியிடும் ஈர்ப்பு அலைகளின் ஆற்றல் ஒரு நொடிக்கு தோரயமாக 200 ஜுல். ஆனால் பூமியின் மொத்த ஆற்றல் 1.14×1036 ஜுல்கள். இருநூறு ஜூல் என்பது இதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. இதே அளவுக்கு பூமி ஈர்ப்பு அலைகள் வெளியிட்டால் அதன் மொத்த ஆற்றல் தீர்வதற்கு பல கோடி வருடங்களாகும். அதே போல இந்த ஈர்ப்பு அலைகள் வெளியிடுவதால் பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட புரோட்டானின் விட்டம் அளவுக்கு(10-15 மீட்டர்) குறைகிறது. அதனால்தான் பூமியோ, சூரியனோ வெளியிடும் ஈர்ப்பு அலைகளின் விளைவுகளை நம்மால் உணர முடியவில்லை. ஆனால் கருந்துளைகளுக்கோ, நியூட்ரான் விண்மீங்களுக்கோ இது பொருந்தாது. இவைகளின் ஈர்ப்பு அலைகளின் வலிமை அதிகம்.

ஈர்ப்பு அலைகளின் விளைவுகள்

இந்த ஈர்ப்பு அலைகள் நம்மை கடக்கும் போது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? ஏற்கெனவே நாம் பார்த்தது மாதிரி நாம் இருக்கும் கால வெளியின் வளைவை மாற்றி அமைக்கிறது(modifies spacetime curvature). இந்த மாற்றம் ஈர்ப்பு அலைகளின் அதிர்வெண்ணுக்கும், அலை நீளத்துக்கும் ஏற்றாற்போல் இருக்கும்.  எடுத்துக்காட்டாக இரு துகள்கள் ஒரு மீட்டர்  தொலைவில்(distance) வைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போது ஈர்ப்பு அலைகள் அந்த இடத்தை கடக்கிறது என்றால் அதன் தொலைவு ஒரு மீட்டருக்கு குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும். ஆனால் மிக முக்கியமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஈர்ப்பு அலைகள் இரு துகள்களை நகர்த்த வில்லை. மாறாக அந்த இரு துகள்களும் இருந்த கால வெளியின் வளைவை (spacetime curvature) மாற்றியதால்தான் தொலைவு மாறியுள்ளது. அதைப்போல இந்த ஈர்ப்பு அலைகள் தான் செல்லும் திசைக்கு செங்குத்து திசைகளில் தான் இந்த நீள மாற்றங்களை ஏற்படுத்தும்.  எடுத்துக்காட்டாக ஈர்ப்பு அலைகள் தரையில் இருந்து மேல் நோக்கி செல்கிறது என்று வைத்துக்கொண்டால் நமது உயரம் மாறாது. ஆனால் நமது உடலின் பக்க வாட்டு அகலம்(breadth), முன்பக்க அகலம்(width) மாறும் (பயப்பட வேண்டாம். இந்த மாற்றங்களை நம்மால் உணரக்கூட முடியாது.). இந்த அடிப்படை உண்மையை வைத்துத்தான் லைகோ (LIGO) ஆய்வகம் அமெரிக்காவில் கட்டமைக்கப்பட்டது. இது லேசர் ஒளிக்குறுக்கீட்டு மானி ஈர்ப்பு அலை ஆய்வகம்(Laser Interferometry Gravitational wave Observatory-LIGO) என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆய்வகத்தை நிறுவியவர்கள் கிப் தோர்ன்(Kip Thorne), ரோனால்டு(Ronald) மற்றும் ரெயினர் வெய்ஸ்(Reiner Weiss) என்ற மூவர்.

2

லிகோ ஆய்வகம் என்பது கீழ்க்கண்ட முக்கியமான பாகங்களை கொண்டது.

 1. நான்கு கிலோ மீட்டர் நீளமுள்ள இரண்டு வெற்றிடக்குழாய்கள் ஒன்றுக்கொன்று செங்குத்து திசையில்(perpendicular directions) தரையில் கிடை மட்டமாக (horizontally) “L”  வடிவில் பொருத்தப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆய்வுக் கருவி. இதை நாம் கீழே உள்ள படத்தில் காணலாம்.
 2. இந்த இரண்டு குழாய்களும் ஒன்று சேரும் முனையில் லேசர் ஒளி பகுப்பான்(Laser beam splitter) பொருத்தப்பட்டிருக்கும்.
 3. இந்த லேசர் ஒளி பகுப்பானின் பின்புறம் மிக சக்தி வாய்ந்த நுண் உணர் கருவி (powerful detector) ஒன்றும் பொருத்தப் பட்டிருக்கும். இந்த குழாய்களின் அடுத்த முனையில் எதிரொளிக்கும் இரு கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதை பின்வரும் படத்தில் காணலாம்.

3

லேசர் ஒளியானது அதன் ஒளி மூலத்திலிருந்து(source) லேசர் பகுப்பானை நோக்கி செலுத்தப்படுகிறது. இந்த லேசர் பகுப்பான் லேசர் ஒளியை இரண்டாக பிரித்து இரண்டு குழாய்களுக்கும் அனுப்பும். இந்த இரண்டு லேசர் ஒளிக்கற்றைகளும் எதிரொளிக்கும் கண்ணாடியில் பட்டு பிரதிபலித்து திரும்பவும் லேசர் பகுப்பானை வந்தடைந்து ஒன்று சேர்ந்து நுண் உணர் கருவியை சென்று சேரும். ஆனால் இரண்டு குழாய்களும் ஒரே நீளத்தில் இருப்பதால் லேசர் பகுப்பானை வந்தடையும் இரு லேசர் ஒளிக்கற்றைகளும் அழிவு ஒளிக்குறுக்கீட்டு விளைவு(destructive interference effect) மூலம் ஒன்றை ஒன்று சமன் செய்து கொள்கிறது. இதனால் நுண் உணர் கருவியை லேசர் ஒளி சென்று சேர்வதில்லை. ஒருவேளை ஏதேனும் ஒரு குழாயின் நீளம் குறைந்தாலோ அல்லது கூடினாலோ இரு ஒளி கற்றைகளும் பயணம் செய்யும் நீளம் மாறிவிடும். இதனால் லேசர் பகுப்பானை வந்தடையும் வந்தடையும் இரு ஒளிக்கற்றைகளும்  ஆக்கக் குறுக்கீட்டு விளைவையும்(constructive interference) அழிவு குறுக்கீட்டு விளைவையும்(Destructive interference) ஏற்படுத்துகிறது. இதனால் நுண் உணர் கருவிக்கு செல்லும் ஒளியின் அளவு(intensity) மாறுகிறது. இந்த ஒளியின் அளவை கணக்கிடுவதன் மூலமாக நாம் இந்த குழாய்களின் நீளம் மாறியதா என்று அறிந்து கொள்ளலாம்.

நாம் ஏற்கனேவே பார்த்தது போல ஈர்ப்பு அலைகள் இந்த குழாய்களை கடக்கும் போது கால வெளி வளைவு மாற்றத்தின் மூலமாக குழாய்களின் நீளம் கூடவும் குறையவும் செய்யும். ஒரு குழாயின் நீளம் கூடும்போது அதற்கு செங்குத்து திசையில் உள்ள இன்னொரு குழாயின் நீளம் குறையும். ஒரே நேரத்தில் இரண்டு குழாய்களின் நீளம் கூடாது. அதைப்போல ஒரே நேரத்தில் இரண்டின் நீளமும் குறையாது. எளிதாக சொல்லவெண்டுமென்றால் சதுர வடிவில் உள்ள ரப்பர் துண்டை நீங்கள் அதன் இரு எதிர் பக்கங்களை எதிர் நோக்கி இழுத்தால் நீங்கள் இழுக்கும் இரு எதிர் திசையில் நீளம் கூடி அதற்கு செங்குத்து திசையில் உள்ள எதிர்பக்கங்களின் நீளம் குறைந்து சதுர வடிவ ரப்பர் உங்களுக்கு செவ்வக வடிவில்(Rectangular shape) தோன்றும். அதைப் போலத் தான் இந்த ஈர்ப்பு அலைகளும் தன் ஒரு அலையின் முதல் பாதியில்(First half of wave)  முதல் குழாயின் நீளத்தை கூட்டி இரண்டாவது குழாயின் நீளத்தை குறைக்கும். அலையின் இரண்டாவது பாதியில்(Second half of wave) இரண்டாவது குழாயின் நீளத்தை கூட்டி முதல் குழாயின் நீளத்தை குறைக்கும். இது திரும்பத்திரும்ப நடக்கும். இந்த நீள மாற்றங்களை நுண் உணர் கருவியில் ஏற்படும் ஒளி அலைகள்(intensity) மாற்றத்தின் மூலமாக கண்டறியலாம். சரி இந்த குழாய்களின் நீளம் எவ்வளவுதான் மாறுகிறது என்று பார்த்தால் அங்குதான் நமக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஈர்ப்பு அலைகள் இந்த குழாய்களை கடக்கும் போது 4 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குழாய்களின் நீளம் வெறுமனே 0.0000000000000000001 மீட்டர் (10-18 மீட்டர்) அளவுக்குத்தான் கூடவோ குறையவோ செய்கிறது.  நம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறிய அளவு இது. அதனால்தான் இந்த ஆய்வு மிகக் கடினமானதாக இருந்தது.

ஆனாலும் லைகோ(LIGO) ஆய்வக அறிஞர்கள் விடாமுயற்சியோடு தொடர்ந்து நுண் உணர் கருவியின் உணர் திறனை(sensitivity) செழுமைப்படுத்திகொண்டே வந்தனர். இந்த நுண் உணர்கருவியின் திறன் என்பது சூரியனுக்கும் ஆல்பா செஞ்சுரி நட்சத்திரத்துக்கும் இடையில் உள்ள தொலைவு ஒரு மயிரிழை அளவு மாறினால் கூட உணரும் அளவுக்கு இருந்தது.  கடைசியாக, கடந்த வருடம்(2015) செப்டம்பர் 14 ஆம் தேதி (14-09-2015) மாலை 3.20 மணிக்கு ஈர்ப்பு அலைகள் தனது பதிவை இந்த நுண் உணர் கருவியில் விட்டுச்சென்றது. அதாவது இந்த உணர்கருவி ஈர்ப்பு அலைகள் ஏற்படுத்திய நீள மாற்றத்தை பதிவு செய்தது. அதனால்தான் இந்த ஈர்ப்பு அலைகளை “GW150914” என்று அழைக்கிறார்கள்.  இதன் விரிவாக்கம்  “GW150914(Gravitational Wave 2015, 14th September).

நீங்கள் கேட்கலாம் நுண் உணர்கருவியில் பதிந்த ஒளிஅலை மாற்றம் வேறு ஏதேனும் மிக சிறிய நில நடுக்கத்தினால்(seismic wave disturbance) கூட வந்திருக்கலாம் அல்லவா என்று. அதனால்தான் இந்த லைகோ ஆய்வகம் இரண்டு இடங்களில் தனித்தனியாக பொருத்தப்பட்டிருந்தது. அமெரிக்காவில் லூசியானா மாகாணத்தில் உள்ள லிவிங்ஸ்டன் என்ற இடத்தில் ஒரு லிகோ ஆய்வகமும், வாஷிங்டன் நகரத்தில் உள்ள ஹென்போர்டு என்ற இடத்தில் இன்னொரு லிகோ ஆய்வகமும் நிறுவப்பட்டிருந்தது. இந்த இரண்டு இடங்களும் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவு உள்ளவை. ஆனால் இந்த இரண்டு இடங்களிலும் உள்ள உணர்கருவியில் பதிவான  ஒளி அலைகளை ஆராய்ந்த போது இரண்டுமே ஒரே மாதிரி இருந்தது. இதை பின்வரும் படத்தில் காணலாம்.

4

இதன் மூலம் இந்த ஒளி அலை மாற்றம் நில நடுக்கத்தால் ஏற்படவில்லை என்று முடிவுக்கு வந்தார்கள். ஏனென்றால் இரண்டு இடங்களிலும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அப்படி ஒரு இடத்தில் ஏற்பட்டிருந்தால் இரண்டு ஒளி அலை வடிவமும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்பில்லை. இன்னும் குறிப்பாக லிவிங்ஸ்டன் லைகோ ஆய்வக நுண் உணர் கருவி ஹென்போர்டு லைகோ ஆய்வக நுண் உணர்கருவியைவிட  ஏழு மில்லி வினாடிகள் முன்னதாகவே இந்த ஈர்ப்பு அலைகளை பதிவு செய்திருந்தது. இந்த கால இடைவெளிக்கு காரணம் ஈர்ப்பு அலைகள் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தாலும் இந்த தொலைவை கடக்க இந்த ஏழு மில்லி வினாடிகள் எடுத்துக் கொண்டதுதான். எந்த ஒரு நிலநடுக்கமும் இவ்வளவு வேகமாக பரவமுடியாது.

ஆனால் லைகோ ஆய்வக அறிஞர்கள் உடனே இதை உலகுக்கு அறிவிக்கவில்லை. இந்த ஈர்ப்பு அலைகளின் பதிவை உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆய்வகங்களில் உள்ள இயற்பியல் அறிஞர்களுக்கு சரிபார்க்க அனுப்பினார்கள். இந்தியாவிலிருந்தும் கூட ஐந்துக்கும் மேற்பட்ட இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்(TIFR, IISERs,) இந்த ஆய்வுகளில் பங்கேற்றன.  இவ்வளவு பேரின் சரிபார்த்தலுக்கு பின்தான் கடைசியாக இந்த வருடம் (2016) பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உலகுக்கு அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றிய இயற்பியல் அறிஞர்கள் கிப் தோர்ன்(Kip Thorne), டேவிட் ரெய்ஸ்( David Reitze), Abbot (அப்போட்), Reiner Weiss(ரெய்னர் வெய்ஸ்), பிரான்ஸ் கொர்டோவோ(France Cordova), கப்ரியேலா  கொன்சாலெஸ்(Gabriela Gonzalez). ஆகியோரின் படங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

5

இந்த கண்டுபிடிப்பின் மூலம் இரண்டு முக்கியமான விஷயத்தை இயற்பியல் உலகம் சாதித்திருக்கிறது.

 1. ஈர்ப்பு அலைகளின் இருப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது.
 2. இருமை கருந்துளைகளின்(Binary black holes) இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மின்காந்த அலைகளின் கண்டுபிடிப்பு நமக்கு பிரபஞ்ச ரகசியங்களை அறிய உதவியது போல இந்த ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பு இது வரை அறிய முடியாத பிரபஞ்சத்தின் பல மர்மங்களை விளக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஏனென்றால் மின்காந்த அலைகள் உட்புக முடியாத இடத்தில் கூட இந்த ஈர்ப்பு அலைகள் ஊடுருவும். மின்காந்த அலைகளால் கொண்டுவர முடியாத சேதிகளை இந்த ஈர்ப்பு அலைகள் நமக்கு வழங்கும். அதுமட்டுமில்லாமல் ஈர்ப்பு அலைகளின் கண்டுபிடிப்பால் இந்த பிரபஞ்சம் பெரு வெடிப்பின் போது இருந்த நிலை பற்றி மேலும் முக்கியமான தகவல்களை நாம் எதிர் காலத்தில் அறிந்து கொள்ளலாம்., கருந்துளைகளைப் பற்றிய நமது புரிதல்(understanding black hole structure) செழுமையுறும். ஈர்ப்பு அலை வானியல் துறை (Gravitational wave astronomy) மிக வேகமாக வளரும். எல்லாவற்றுக்கும் மேலாக 1916 ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையில் உதித்த கருதுகோள் இன்று பிரபஞ்சத்தின் அறிவியல் உண்மை(Scientific truth)என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதைச் சாத்தியப்படுத்திய பல்வேறு விஞ்ஞானிகளுக்கும், பேரறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றி பாராட்டி, அவர்களைக் கொண்டாடுவோம்..

அறிவியலின் கோட்பாட்டு ரீதியான கணிப்பை (Theoretical Prediction)  அறிவியல் உண்மையாக(Scientific truth) நிறுவுவதற்கு ஓர் ஆண்டோ, நூறு ஆண்டுகளோ ஏன் ஆயிரம் ஆண்டுகளோ கூட ஆகலாம். இதில் பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பு நேரடியாகவோ, மறைமுகமாகவோ செலுத்தப்படுகிறது. இந்த அறிவியல் கணிப்புக்கள் சில நேரங்களில் சரியாகவோ ஏன் சில நேரங்களில் தவறாகவோ கூட முடியலாம். ஆனால் இந்த தவறு கூட ஒரு அறிவியல் முடிவு(Even mistakes also a scientific result) என்று ஏற்று கொள்வதுதான் அறிவியலின் அழகே.

– ஜோசப் பிரபாகர்

இயற்பியல் உதவி பேராசிரியர்

இலயோலா கல்லூரி, சென்னை

உதவிய நூல்கள், கட்டுரைகள்:

 1. Gravity: An introduction to Einstein’s general relativity by James.B.Hartle
 2. LIGO educators guide
 3. http://www.nature.com/news/einstein-s-gravitational-waves-found-at-last-19361
 4. Observation of gravitational waves from a binary black hole merger, B.P.Abbot et al, Physical review letters(12 February)
 5. http://www.universetoday.com/127329/gravitational-wave-sources/
 6. https://www.ligo.caltech.edu/news/ligo20150918

இக்கட்டுரையின் முதல் பகுதி : http://www.visai.in/2016/03/18/newton-to-gravitational-waves/

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*