Home / அரசியல் / ஒரு பிணவறையின் அழுகை – மு.ஆனந்தன்
சங்கர் - கௌசல்யா

ஒரு பிணவறையின் அழுகை – மு.ஆனந்தன்

அந்தப் பிணவறையின் மெளனம், கசிந்து நகரில் பரவத் துவங்கியதும் ஒன்று இரண்டு என வளர்ந்து கோவை அரசு மருத்துவமனை முழுவதும் செஞ்சட்டைகளும், நீலச்சட்டைகளும், கருஞ்சட்டைகளுமாய் திரண்டது. பிணவறை வாயில்களையும், வராண்டாக்களையும் ஆக்கிரமித்து குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை சங்கரின் உடலை வாங்க மாட்டோம் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தின அச்சட்டைகள். அவர்களின் வளையத்திற்குள் வந்தது பிணவறை. காக்கிச் சட்டையோ திகிலடைந்து திரிந்தது.

தனது நூற்றம்பது வயது வாழ்க்கையில் இதுவரை உறவுகளின் கதறலையும் குமறலையும் உடலை சீக்கிரம் கொடுங்கள் என்ற இரைஞ்சலையுமே கேட்டுக் கேட்டு மரத்துப் போயிருந்த அந்த பிணவறையின் செவிகள் துடிக்க துவங்கின. உடனே மேடையில் கிடத்தப்பட்டிருந்த சங்கரின் உடலிடம் ஓடிச்சென்று உரையாடத் துவங்கியது.

சங்கர் ! உன்னை யார் கொன்றார்கள்? எதற்காக வெட்டிச்சாய்த்தார்கள்? ஆகம விதிகளின் படித்தான் கொன்றார்களா ? நீ இந்துதானே ? பின் ஏன் உன்னை இந்துக்களே வெட்டினார்கள் ? நீ தமிழன் தானே ? பின் ஏன் தமிழர்களே உன்
உயிரைப் பறித்தார்கள் ? உன் உடலில் ஓடியதும் இந்து இரத்தம் தானே ! தமிழ் இரத்தம் தானே ! பிறகு எதற்கு உன் இந்து, தமிழ் இரத்தத்தை உடுமலை தெருக்களில் ஓடவிட்டார்கள் ? மாற்றம் முன்னேற்றம் என்று கூவித்திரிகிறார்களே .! அந்த மாற்றம் முன்னேற்றம் உனக்கில்லையா? சொல்லு சங்கர் ? இதை எச்ச ராஜாக்களிடமோ சீமான்களிடமோ அய்யாக்களிடமோ கேட்க முடியாது ? நீதான் பதில் சொல்ல வேண்டும். சங்கரின் உடலை உலுக்கிக் கேட்டது அந்த பிணவறையின் அந்தராத்மா.

மெல்லிய புன்முறுவலையே பதிலாக உரைத்தது சங்கரின் ஆத்மா !

அப்போது அறைக்கு வெளியே முழக்க‌ங்களும் கூச்சலும் அதிராட ச‌ன்னலைத் திறந்து பார்த்தது பிணவறை. சாதிக் கொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் கோரி, சாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு கோரி சாலை மறியலில் களமாடிக் கொண்டிருந்தன இடதுசாரி கட்சிகளும், ச‌னநாயக இயக்கங்களும்..

உடனே ச‌ன்னலை விசுக்கென மூடிய பிணவறை, சங்கரின் உடலிடம் கேட்டது. அதான் சட்ட மன்றத்திலேயே மேதமை பொருந்திய முதலமைச்சரே சொல்லி விட்டாரே “ தமிழகத்தில் சாதிக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று” அதன் பிறகும் தனி சட்டம் கோருவதும் பாதுகாப்பு கோருவதும் நியாயமா ?

சங்கர் பூதஉடலின் புன்முறுவல் சற்று நக்கலாய் நீண்டது.

உன் நக்கலின் அர்த்தம் புரிகிறது சங்கர். முருகேசன்-கண்ணகி துவங்கி, இளவரசன், , கோகுல்ராஜ், வைதேகி என்ற வரிசையில் நீ தமிழகத்தின் 81 ஆவது சாதி ஆணவப் பலியாமே. அதனாலென்ன இத்த பலிபீடக் கதைகளை அரசு பீடம்
ஒத்துக்கொள்ள வேண்டுமா ? உனது உடலைக் கொண்டுபோய் முதலமைச்சரின் அலுவலகத்தில் போட்டாலும் கூட நமது அரசு மீண்டும் சொல்லும் “ தமிழகத்தில் சாதிக் கொலைகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று”

Divya-Ilavarasan

சரி சரி எனக்கு உத்திரவு வந்துவிட்டது. உன்னுடலை குத்தியறுத்து கூராய்வு செய்யவேண்டும். ஆகம விதிகளின் படி செய்ய வேண்டுமா அல்லது அறிவியல் விதிகளின் படி செய்ய வேண்டுமா ? உன் காயங்களைக் காட்டு என்றது. வலது கழுத்தில் துவங்கி பின் மண்டை வரை வெட்டுண்டு சதையும் மண்டையும் அகலமும் ஆழமுமாய் வாய் பிளந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தது. வெட்டருவாள் எத்துனை வெறியுடன் பாய்ந்திருக்க வேண்டும். அப்படி என்ன வெறி
அவர்களுக்கு! சொல்லு சங்கர் ?

அது சாதி வெறி ! சாதி கெளரவம் ! என்றது சங்கரின் நிசப்தம்.

தனது சாதிக்காரன் நிலத்தில் கொக்கோ கோலா, பெப்ஸிகள் தண்ணீரை உறிஞ்சித் தீர்த்த போது திணவெடுத்தாடாத சாதி ; தனது சாதிக்காரன் நிலத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது பொங்கி எழுந்தாடாத சமூக கெளரவம் ; தனது சாதிக்காரன் ஊரில் மீத்தேன், ஷேல் கேஸ், அணு உலை அபாயங்கள் வரும் போது களங்கப் படாத ஊர் கெளரவம்; தனது சாதிக்காரன் சாராயம் குடித்துவிட்டு நடுரோட்டில் அம்மணமாய் உருண்டு கிடக்கும் போது அவிழ்ந்து விழாத சுயசாதி கெளரவம் ; தனது சாதிப்பெண் தன் சாதிக்கார மாப்பிள்ளையால் கொடுமைப் படுத்தப்படும் போதோ, வாழாவெட்டியாகும் போதோ, தற்கொலை செய்யும் போதோ, கொலையாகும் போதோ தலைகுனியாத குடும்ப கெளரவம்; தனது சாதிக்காரன் வேலை கிடைக்காமல் முறுக்கு விற்க கிளம்பிய போது பறிபோகாத பரம்பரை கெளரவம் ; தனது சாதிக்காரன் கல்லூரியில் தன் சாதிக்கார மகனை சேர்ப்பதற்க்கு இலட்சங்கள் டொனேசன் கேட்ட போது துடித்தாடாத சாதிவெறி, சாதிமாறி திருமணம் செய்தால் மட்டும் வெறிநாயாக கொலையாட்டம் புரிகிறதே ? எதனால் சங்கர் ? சீறியது பிணவறை.

சங்கரின் சலனமற்ற உடலில் ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தது உப்பிப் பெருத்த அமைதி !

மீண்டும் ச‌ன்னலின் எட்டிப்பார்த்தது பிணவறை. வெளியே அழுகையும், தேமலும், கேவலும், முழக்க‌ங்களும், சலசலப்பும் எழுந்தெழுந்து அலைபாய்ந்து கொண்டிருந்தது.

சங்கர் - கௌசல்யா

சங்கர் – கௌசல்யா

“கேம்பஸ் இண்டர்வியுவ்ல வேலை கிடைச்சிருச்சு.. எக்ஸாம் முடிஞ்சதும் சென்னை போய் வேலைக்கு சேர்ந்திட்டா பாதுகாப்பா இருந்துக்குவான்னு நினைச்சோம், அதுக்குள்ள கொன்னு போட்டுட்டாங்களே” ன்னு விக்கித்து அழுது
கொண்டிருந்தார்கள் சங்கரின் நண்பர்கள்.

“ என் பொண்டாட்டி ஏற்கனவே செத்துப் போயிட்டா ! அவ சுய உதவிக் குழுவில் வாங்குன கடன் , பேங்குல வாங்குன கல்விக் கடன்னு கடன் வாங்கிப் படிக்க வச்சேனே என் பையனை.. இப்படி கொன்னுட்டாங்களே !. என் பையனுக்கு வந்த கதி யாருக்கும் வரக்கூடாதுன்னு டி.வி. க்காரர்களிடம் கதறிக் கொண்டிருந்தார் சங்கரின் அப்பா.

சங்கர் உன் அப்பாவை டி வி க்கரங்க பேட்டி எடுத்திட்டு இருக்காங்க. நீயும் கேளு சங்கர். ஒன்னு தெரியுமா ? உன்னோட கொலையைப் பற்றி அய்யா ராமதாஸிடம் டி.வி. க்காரங்க கேட்ட போது பதிலே சொல்லாம திமிறா எந்திருச்சு
போயிட்டாறாமே? தர்மபுரியில, மரக்காணத்தில, சேஷசமுத்திரத்தில சாதி வெறியாட்டம் ஆடிய ஆதிக்கக் கூட்டம் எப்படி பதில் சொல்லும். அவுங்கள விடுங்க பாஸ். தமிழகத்தை ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் இதுவரைக்கும்
வாய் திறக்க வில்லையாமே.

சங்கரின் உடலில் ஆட்சி புரிந்து கொண்டிருந்த அடர் மெளனம் சிரிக்கத் துவங்கியது.

உன் சிரிப்பின் அர்த்தம் புரிகிறது சங்கர். சாதிய அடக்கு முறைக்கு எதிராக ஆர்த்தெழுந்த தந்தை பெரியாரின் வழி வந்த கலைஞர் இன்று கூட்டணிக்கு ஆள் கிடைக்காமல் சின்னச் சின்ன சாதிக்கட்சிகளுக்கு தூது அனுப்பிக் கொண்டிருக்கிறாரே ! ஆட்சியை பிடிக்க கோவில்களின் நடை திறக்கும் முன்னே பயபக்தியோடு காத்துக்கிடக்கிறாரே தளபதி ஸ்டாலின். நமக்கு நாமேன்னு கோவில் பூசாரிகளின் கூட்டத்தில் மங்களகரமாக பேசுறாறே. கோமாத பூசை,
புனஸ்காரம், கும்பாபிஷேகம்.. யாகம் எல்லாம் இவர்களின் அன்றாட வழிபாடுகளாகிவிட்டதே. பெரியாரை அவதூறாக பேசிய எச்ச ராஜாவை இன்றளவும் கண்டிக்க மனமில்லாமல் கள்ள மெளனம் காப்பவர்கள்தானே இவர்கள். உண்மையில் தமிழகத்தை ஆள்வது இந்த இரண்டு கட்சிகள் கிடையாது. ஆதிக்க சாதிகள்தானே.

பதவி சுகத்திற்காக சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பெரியாரையும் காவு கொடுத்துவிட்டு சாதி மத வெறியர்களை தங்கள் தோள்கள் மீது சுமந்து திரிந்தவர்கள்தானே இவர்கள். ஓட்டரசியலுக்காக சாதியின் கொடுவாள்களை கூர்தீட்டியவர்களோடு கூட்டணி அமைத்தவர்கள்தானே இந்த இரண்டு கட்சிகளும். பிறகு எப்படி இவர்கள் கண்டனம் செய்வார்கள்.

என் வேலை முடிந்துவிட்டது சங்கர். உன் அப்பா உன்னுடலை வாங்கிச் செல்வதாக கையெழுத்திட்ட கடிதத்தை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். என்ன பார்க்கிறாய். உடலை வாங்க மாட்டேன் என்று தோழர்களோடு சேர்ந்து போராடிய உன் அப்பா எப்படி கையெழுத்து போட்டார் என்றா ? உங்கள் ஊர் பஞ்சாய்த்து தலைவர் வந்தார் தெரியுமா ? அப்போது ஆளும் கட்சியினரும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் உன் அப்பாவை மிரட்டியும் நயவஞ்சகமாக
பேசியும் கையொப்பம் வாங்கிவிட்டார்கள். சலித்துக் கொண்டது பிணவறை.

ஆம்புலன்ஸில் ஏற்ற தயாராகிக் கொண்டிருந்தது சங்கரின் உடல்.

சங்கர் கடைசியாய் உன்னிடம் ஒரு கேள்வி. சற்று நிதானித்து கேட்டது பிணவறை.

” உன்னை கொலை செய்து விட்டு எந்த பதற்றமும் இல்லாமல் சாவகாசமாய் பைக்கில் போனார்களாமே !. இந்த தைரியம் எப்படி வந்தது அவர்களுக்கு. சொல்லு சங்கர். வெள்ளாடை பொதிந்த சங்கர் உடலின் வெள்ளந்தி மனம் பேசியது இறுதியாக.

“ செல்லரித்துப்போன நமது சட்ட, நீதி முறைமைகளும், சாதி அரிப்படங்காத அரசும், அரசியல் தலைவா்களும் அளித்த தைரியம்தான் அது. இளவரசன், கோகுல்ராஜ் வழக்குகளை அரசும், காவல்துறையும் கையாண்ட முறையே இவர்களுக்கான ஊக்க மருந்து. கோகுல்ராஜ் கொலையாளி யுவராஜ் பெரும் கூட்டத்தோடு ஆரவாரித்து ஒரு ஹிரோவைப்போல கோர்ட்டில் சரண்டராக அனுமதித்ததே இந்த அரசும் காவல்துறையும்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர் பி.எ. புனியா அவர்கள், சென்ற 5 ஆண்டுகளில் பதிவான 6,074 வன்கொடுமை வழக்குகளில் 70% வழக்குகள் கைவிடப்பட்டு வெறும் 10 % மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது
என்கிறார். சாதி தலைவா்கள் மட்டுமல்ல, சாதி புரையோடிக்கிடக்கும் காவல் துறையும் நீதித்துறையும் சேர்ந்து எப்படியும் தங்களை காப்பாற்றி விடுவார்கள் என்ற அசாத்திய நம்பிக்கை அது” என்று சொல்லிவிட்டு
ஆப்புலன்ஸில் ஏறிக்கொண்டது சங்கரின் உடல்.

ஆம்புலன்ஸ் புறப்படும்போது முழக்கங்கள் வெடித்தன. வீர வணக்கம்! வீர வணக்கம் ! சாதி மறுப்பு போராளி சங்கருக்கு வீர வணக்கம்.

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிணவறை தனியாக பேசிக்கொண்டிருந்தது. சங்கர் உன்னிடம் ஒன்றை மட்டும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் உன்னுடல் துடித்திருக்கும். பக்கத்து வார்டில் படுகாயங்களோடு பரிதவித்துக்
கொண்டிருந்த உன் மனைவி கௌசல்யா,கடைசியாக உன் முகத்தை பார்க்க அனுமதி கொடுங்கள், இறுதி சடங்கில் பங்கேற்க அழைத்து செல்லுங்கள் என்று கதறினாள். ஆனால் அனுமதி மறுத்துவிட்டது ஈவு இறக்கமற்ற காவல்துறை.
திருமணமான ஏழே மாதத்தில் நடுரோட்டில் தன் கண் முன்னே கணவர் வெட்டிப்படுகொலை செய்ய பட்ட நிலையில் கடைசியாய் கணவரின் முகத்தை கூட பார்க்க அனுமதி மறுத்தது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று எனக்குத் தெரியும். ஆனால் இந்த அரசதிகார அராச‌கத்தையும் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதே ! இது உங்களுக்கான ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று முழங்கும் அம்மா அவர்களே ! கணவரை பறி கொடுத்த கௌசல்யாவின் கதறல் உங்கள் செவிகளுக்கு கேட்காமல் போனதன் மர்மம் என்ன? எனத் தேம்பித் தேம்பி
அழுது கொண்டிருந்தது அந்த பிணவறை. அதன் வெளிறிய முகத்தை எதிர்கொள்ள தெம்பில்லாமல் நடைபிணமாய் திரும்பினேன் நான்.

சங்கரின் உடலைப் பார்க்க கண்கள் இல்லை. கெளசல்யாவின் கண்ணீரை துடைக்க கைகள் இல்லை. உடைந்தழ வாயில்லை. நொருங்கிச் சிதற இதயமும் இல்லை. பிணவறைக்குள் வாழ்ந்து கொண்டிருந்தது மனிதம். வெளியே
இறந்துகிடந்தது சமூகம்.

மு.ஆனந்தன் – செல்; 94430 49987 -மின்னஞ்சல்; anandhan.adv @gmail.com

About சிறப்பு கட்டுரையாளர்கள்

2 comments

  1. கண்களில் கண்ணீர் வராமல் இதைப் படிப்பது கடினம்

  2. சாந்தலட்சுமி பெருமாள்

    ஆன்மாவை உலுக்கிய எழுத்து படிவம்.
    கண்களில் இல்லை என்றாலும்,
    எங்கோ கசியவே செய்கிறது ஈரம்.
    வாழ்த்துகள், தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*