Home / பொருளாதாரம் / இயற்கை வளம் / தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும்  எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்

தமிழகத்தின் சூழலியல் பிரச்சனைகளும்  எடுபிடி முதலாளித்துவமும் – அருண் நெடுஞ்செழியன்

இந்திய அரசு பெரும் போர் ஒன்றை நடத்தி வருகிறது. இப்போர் பாகிஸ்தான் எல்லையிலோ சீன எல்லையிலோ நடக்கவில்லை.சொந்த நாட்டிற்குள்ளாகவும் சொந்த நாட்டு குடிகளுக்கு எதிராகவும் இப்போரை இந்திய அரசு நடத்துகிறது.

சட்டீஸ்கார் மாநிலம் பஸ்தரில் பழங்குடிகளுக்கு எதிராகவும் ஒட்டுமொத்த இந்திய வேளாண் குடிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு இப்போரை நடத்திவருகிறது.பஸ்தரில் நக்சல்களுக்கு எதிரான வேட்டை என்ற பேரில் கடந்த ஜனவரி முதல் வாரத்தின்  நான்கு நாட்களில் மட்டும் பதினைந்து பழங்குடி பெண்கள்,இந்திய போலீஸ் மற்றும் பாதுகாப்பு  படையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.பழங்குடி நலன்களுக்காக குரல் கொடுத்துவருகிற  சோனி சோரி போன்ற செயல்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு பஸ்தரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கார் மாநில மலைகளில் குவிந்துள்ள பாக்சைட்,இரும்புத்தாது போன்ற கனிம வளங்களை எசார், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கையளிப்பதற்கே இத்தகைய ஒடுக்குமுறைகளை இந்திய அரசு கட்டவிழ்த்துள்ளது. அவ்வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவதார் திரைப்படத்தில் பெரு நிறுவனமொன்று வேற்று கிரகத்தில் குவிந்துள்ள கனிம வளங்களை அபகரிக்க அங்கு வாழ்ந்துவருகிற பழங்குடிகள் மீது போர் தொடுக்கிற காட்சிகள்  போலவே,இங்கு பழங்குடிகள்  மீது இந்திய அரசு போர் தொடுத்து வருகிறது. உண்மையாகவே நடந்துவருகிற  இப்போர் குறித்து தேசிய ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன.

மறுபக்கம்,விவசாயிகளின் மீதான போர். இந்தியாவில், கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3,000  விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.குறிப்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 20,504 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.ஒட்டுமொத்தமாக வேளாண் தொழில் சார்ந்த தற்கொலைகளில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது (மகாராஷ்டிரம் – 4004,தெலுங்கானா-1347,மத்திய பிரதேசம் -1198,தமிழகம் -827)

விவசாயிகளின் பிரச்சனைகள் பொறுத்தவரை,தொழில்துறை முதலீடுகளை  ஊக்குவிப்பதிலேயே  இந்திய அரசு பெரும் ஆர்வம் காட்டுகிறது.விவசாயிகள் அனைவரும் வேளாண்மையை விட்டுவிட்டு தொழிற்சாலை பணிகளுக்கு வரவேண்டுமென கடந்த 2008 ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் கூறியதை இப்பின்புலத்தில் இருந்துதான் புரிந்துகொள்ளவேண்டும்.விவசாயிகளுக்கான மானிய வெட்டு,நீர் நிலை பராமரிப்பில் அக்கறையின்மை,உற்பத்தி பொருளுக்கு நல்ல விலையின்மை போன்ற காரணத்தால் இந்திய விவசாயிகள் இன்று கொத்து கொத்தாக தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தின் சூழலியல் நிலைமைகளும் சமூக நிலைமைகளும் இதற்குமுன் இல்லாத வகையில் தீவிரமானதொரு  நெருக்கடி நிலையை எதிர்கொண்டுவருகிறது.காவிரிப் படுகையில் மீத்தேன் எடுப்புத் திட்டம்,கெயில் குழாய்ப் பதிப்புத் திட்டம்,கூடங்குளம் அணுவுலை மற்றும் கல்பாக்கம் அணுவுலை விரிவாக்கம்  போன்ற பேரழிவுத் திட்டங்கள் ஒருபுறமும்,அரியலூரில் சுண்ணாம்புக்கல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் நடைபெறுகிற ஆற்றுமணல் கொள்ளை,தூத்துக்குடி,கன்னியாகுமாரி மாவட்டங்களில் நடைபெறுகிற தாது மணல் கொள்ளை என தமிழகத்தின் இயற்கை வளங்களையும் மண் நீரையும் மாசு படுத்துகிற பேரழிவுத் திட்டங்களும் இயற்கை வளக் கொள்ளையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைய உலகமயமாக்கல் சூழலில் எழுச்சி பெற்றுள்ளன.

இவ்வனைத்துப் பிரச்சினைகளுக்குமான மையக் காரணம் என்ன? இப்பிரச்சனைகளை ஒட்டுமொத்தமாக எவ்வாறு புரிந்துகொள்வது?

பிரச்சனைக்கான வேர் நிலவுகிற அரசியல் பொருளாதார கட்டமைப்பில் உள்ளது.அதாவது பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிற முதலாளித்துவ சமூகத்திற்கும் அதற்கு சேவை செய்கிற அரசுக்குமான எடுபிடி உறவே பிரச்சனைக்கு அடிப்படைக் காரணமாக உள்ளது.சுருங்கச் சொல்வதென்றால் குரோனி காபிடலிசம் (crony capitalism) எனக் கூறலாம்.தமிழில் சூறையாடும் முதலாளித்துவம் அல்லது எடுபிடி முதலாளித்துவம் எனக் கூறலாம்.

எடுபிடி முதலாளித்துவம் என்றால் என்ன?

அரசியல்வாதிகளுக்கும் முதலாளிகளுக்குமான திருமண பந்த உறவை, கள்ளக் கூட்டணியை, எடுபிடி உறவை நாம் எடுபிடி முதலாளித்துவம்  என்றழைக்கலாம். இதை சில உதாரணங்களை முன்வைத்துப் பேசுவோம்.

அண்மையில் உச்ச நீதிமன்றமானது மத்திய ரிசர்வ் வங்கிக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.காரணம் ரிசர்வ் வங்கி மற்றும் இதர வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த மறுத்த நிறுவனங்களை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியம் காப்பதாக தொடுக்கப்பட்ட  வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் வங்கிகளைக் கடுமையாகத் தாக்கியது.

ஒரு லட்சம் இரண்டு லட்சம் அல்ல சுமார் ஐந்து லட்சம் கோடி ருபாய் அளவிற்கு ரிசர்வ் வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் வாங்கிய கடனை பெரு நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தவில்லை. இதை எந்த அரசும் கண்டு கொள்வதில்லை.எந்தளவிற்கு அரசு, தனியார் நிறுவனங்களுக்கு சலுகை வழங்குகிறது, எடுபிடியாக சேவகம் செய்கிறது  என்பதைப் புரிந்துகொள்வதற்கு இவ்வுதாரணம்  ஒன்றே போதும் என நினைக்கின்றேன்.

இதே வங்கிகள் ஒரத்தநாட்டில் சுமார் மூன்று லட்சத்திற்கு டிராக்டர் வாங்குவதற்கு வாங்கிய கடனை, இறுதித் தவணைகளை செலுத்த இயலாத விவசாயியை  அடித்து உதைத்து சித்தரவதைப் படுத்தியது.மாறாக கிங் பிஷர் அதிபர் விஜய் மல்லையாவோ சுமார் 9,000 கோடி ரூபாயை வங்கிகளில் வாங்கிவிட்டு இந்திய அரசின் துணையோடு வெளிநாடு சென்றுவிட்டார். கடந்த காலத்தில் அவரது கடனை அடைக்க மத்திய அரசே முன்வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்றுள்ளது.அதாவது விஜய் மல்லையா வெறும் தொழில் அதிபராக மட்டும் இருக்கவில்லை. ராஜ்ய சபா உறுப்பினாராகவும் இருக்கிறார். வானூர்தி தொடர்பான பாராளுமன்ற குழுவில் அவரது அழுத்தம் அதிகம்.இவை எல்லாம் எதார்த்தமாக நடந்தவைகள் அல்ல.

எப்போது குரோனி காபிடலிசம்  துவங்கியது?

சுமார் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்பாக, நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங் கூட்டணியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. நேருவின் பொதுத் துறை கொள்கைகளுக்கு வேகமாக மூடுவிழா நடத்தப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு உள்ளூர் சந்தை திறக்கப்பட்டது. விளைவு தொழிலாளார் சட்டம், சூழல் பாதுகாப்பு சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.வரிகள் நீக்கப்பட்டன.குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மிகப்பெரிய அளவில் ஊக்கப்படுத்தப்பட்டன.பெரு நகரங்கள் மற்றும் துணை நகரங்களை மையப்படுத்திய தொழில்துறை ஊக்குவிக்கப்பட்டன.இந்திய அளவிலும் அதன் அங்கமாக உள்ள தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளைக்கும்,பேரழிவுத் திட்டங்களுக்கும்,இது அடிகோலியது.

தமிழகத்தை பொறுத்தவரை முதலாளிகளுக்கும் அரசுக்குமான திருமண பந்தம் இந்த காலகட்டத்தில் உறுதியாகியது.தாது மணல் கொள்ளையில் வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜன் கொடி கட்டி பறந்தான். இக்கனிம வளங்களை கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஒட்டுமொத்தமாக  சுரண்டிக் கொழுத்து வருகிறான். ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் வி.வி. மினரல்ஸ் நிறுவனம் ஜெயலலிதாவின் பினாமி நிறுவனமாக குறிப்பிடப்பட்டுள்ளதை கவனத்தில் இறுத்திப் பார்க்கையில் வைகுண்டரஜானின் பண பலமும் அதிகார பலமும் நமக்கு புலனாகிறது.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவனது சாம்ராஜ்யத்தை அசைக்க இயலவில்லை. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமாரி ஆகிய மூன்று மாவட்டத்தில் மட்டும் சுமார் 150 கி.மீ. பரப்பளவில் டன் கணக்கில் தாதுமணல் கொள்ளையடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமது செய்யப்பட்டது. கடற்கரையில், தாது மணலை  அள்ளுவதற்கு  2 முதல் 3 மீட்டர் ஆழம் வரையிலும் ஊர்ப் பகுதியில் 1.00 மீட்டர்  ஆழம் வரையிலும்  மண்வெட்டி கொண்டு வெட்டி எடுப்பதற்கு அனுமதியுண்டு. ஆனால் விதிகளுக்குப் புறம்பாக இராட்ச இயந்திரங்களைக் கொண்டு 10 மீ முதல் 50 மீ. வரை தாது மணல் அள்ளப்படுகிறது.

தாதுமணல் நிறுவனங்களுக்கு 100 ஏக்கர் நிலத்தை வெறும் 16 ரூபாய்க்கும் 50 ஏக்கர் நிலத்தை  9 ரூபாய்க்கும் 30 ஆண்டு காலத்திற்கு தமிழக அரசு குத்தகைக்கு விட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தோரியம் தாது மணல்  இந்திய கடலோரப் பகுதிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக  இந்திய  நாடாளுமன்றத்தில் மத்திய அணுசக்தித் துறை தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஆற்று மணல் கொள்ளையன் ஆறுமுகச்சாமி மட்டுமே தமிழகத்தின் ஆற்று மணல் வளத்தை பெருமளவிற்கு கொள்ளையடித்து வருகிறான். இதற்கு கழக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர்.ஆற்று மணல் எடுப்பு பெயரளவில் அரசின் வசம் இருந்தாலும் லிப்டிங் அண்ட் சோர்சிங் என்ற போர்வையில் தனியார் குவாரி கான்ட்ராக்டர்களே முழுவதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

கடந்த 2012- ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சியொன்று மேற்கொண்ட ஆய்வின்படி  தமிழகத்தில் ஆண்டுக்கு  சுமார் இரண்டு லட்சம் டன் ஆற்றுமணல் திருட்டுத்தனமாக கொள்ளையடிக்கப்படுகிறது என சுட்டிக்காட்டுகிறது.

அடுத்து, பிஆர் பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை. 91- 96 காலத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தொழில்துறை அமைச்சர் கரூர் சின்னசாமி மேல் கிரானைட் குவாரி உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு வழக்கு பதிவு செய்தது. அதன் பின்னர் சற்று ஆறியிருந்த இக்கொள்ளை, 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்கு முக்கியக் காரணம் அப்போது மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம். மதுரை மாவட்டத்தில் மட்டும் கிரானைட் குவாரி முறைகேடுகளால் அரசுக்கு  16000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என  தமிழக அரசுக்கு அறிக்கை அளித்து அதிர்ச்சிப் புயலை ஏற்படுத்தினார்.

அதேபோல அரியலூர் மாவட்டத்தின் சுண்ணாம்பு வளத்தை ராம்கோ, டால்மியா போன்ற நிறுவனங்களே முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இதுபோன்று தமிழகத்தின்  கனிம வளக் கொள்ளைகள் நிலவுகிற எடுபிடி முதலாளியத்தால் மோசமாக கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

பேரழிவுத் திட்டங்களான மீத்தேன் திட்டம் இவ்வாறு கழக ஆட்சியாளர்களின் துணையோடு உள்ளே வந்தன. கெயில் திட்டமும் அவ்வாறு வந்தது.எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனமே கோலோச்சுகிறது. இவர்கள்தான் எண்ணெய் எரிவாயு அமைச்சரையே தீர்மானிக்கிற சக்தியாக உருபெற்றுள்ளனர். அதே வேளையில் அம்பானி நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

வேளாண் சீரழிவை நகரமயமாக்கலுடன் இணைத்து பார்ப்பது அவசியமாகிறது. நகரங்களின் வேகமாக குவிக்கப்படும் தொழில்துறை மூலதனங்கள்  கிராமங்களில் இருந்து வேகமாக நகரங்களை நோக்கிய மக்கள் இடப்பெயர்வை அதிகமாக்கியது.

நீர்நிலை பாதுகாப்பில் அக்கறையின்மை, சரியான விலை கிடைக்காமை, மோசமான நிலச் சீர்திருத்த சட்டங்கள், ரசாயன உரப் பயன்பட்டால் மோசமாகிய மண்வளம்  போன்ற காரணத்தால் விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு நகரத்தை நோக்கி புலம்பெயருகிறார்கள். மேலும் பெரு முதலாளிகளுக்கு வசதியான சாலைகள், துறைமுக விரிவாக்கங்களை  மற்றும் மேம்பாலங்கள் கட்டுகிற அரசு கிராமம் சார்ந்த உட்கட்டுமான திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.அவை தேவையற்ற செலவு என மானியத்தை வெட்டுகிறது. கிரமாத்தில் மருத்துவமனைகள், கல்விக் கூடங்கள், சாலை வசதிகள் இல்லாத காரணத்தால்  கிராமத்தை விட்டு நகரத்தை நோக்கி மக்கள் புலம் பெயருகின்றனர்.

இறுதியாக,

இத்தகைய இக்கட்டான சூழலில், கம்யூனிஸ்ட் கட்சி மாலெ (மக்கள் விடுதலை) இயற்கை வளக் கொள்ளை எதிர்ப்பு- தேச வளப் பாதுகாப்பு மாநாட்டை நடத்துவது  முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமையப்பெற்றுள்ளது. ஏனெனில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைப் பொறுத்தவரை விளைவுகளை மட்டுமே பேசியும், பிரச்சனைக்கான தோற்றுவாய் குறித்தும் பெரும்பாலும் ஆழமாக பேசப்படாமல் இருந்தது. சுற்றுச்சூழல் பிரச்சனைகளை அரசியல் நீக்கத்துடனேயே தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்புகளால் பேசப்பட்டு வந்தன. அதாவது அரசு அதற்கு பின்னாலுள்ள லாப நோக்கிலான உற்பத்தி முறை, எடுபிடி முதலாளியம் குறித்தெல்லாம் தன்னார்வ சூழல் அமைப்புகள் வாய் திறப்பதில்லை. அவர்களின் வரம்புகளும் அதுதான். இத்தகைய சூழலில், சுமார் இருபதாண்டு காலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிடியிலிருந்த சூழல் பிரச்சனையை இம்மாநாட்டின்  ஊடாக கம்யூனிஸ்ட் கட்சி மாலெ (மக்கள் விடுதலை) மீட்டுவிட்டது என்றே கூறலாம். சூழல் பிரச்சனைக்கு தனிபநர் ஒழுக்கவாதம், அரசியல் கட்சிகளுடன் நட்பாக இருப்பது, முதலாளிய ஜனநாயக அமைப்பின் சட்ட வரம்பிற்குபட்ட வகையில் பிரச்சனைகளை தீர்க்க முயல்கிற  சீர்திருத்தவாத தீர்வுகளையும் நாம் புறக்கணிக்கின்றோம் எதிர்க்கின்றோம்.

ஏனெனில் சூழல் பிரச்சனை என்பது அரசியல் நீக்கம் பெற்ற பிரச்சனை அல்ல. இயற்கை வளப் பாதுகாப்பு மற்றும் சமூக நலனுக்கான நமது போராட்டம் என்பது நிலவுகிற எடுபிடி முதலாளியத்திற்கு எதிரான ஓர் வர்க்கப் போராட்டம் ஆகும்.

– அருண் நெடுஞ்செழியன்

(கடந்த மார்ச்-23 அன்று கும்பகோணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மாலெ (மக்கள் விடுதலை) நடத்திய இயற்கை வளக் கொள்ளை எதிர்ப்பு-தேச வளப் பாதுகாப்பு மாநாட்டில் பேசியது)

CPML national resource conf1

About சிறப்பு கட்டுரையாளர்கள்

One comment

  1. விளைவுகளைப் பற்றி பேசியது ஒரு கட்டம். வேர்களைக் கண்ட ஆய்வுகள் இரண்டாம் கட்டம்.மூன்றாம் கட்டமாக போராடுவோம் என்பது போதாது. அமைப்பாக்குவதும்,தங்கள் பிரச்சினைகளுக்கு ஒன்றுபட்டு போராடும் வாழ்வினையும் முன்னெடுக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*