Home / அரசியல் / கிரானைட் கொள்ளையன் பழனிசாமி விடுதலை ….. நீதி கிலோ எவ்வளவு ???

கிரானைட் கொள்ளையன் பழனிசாமி விடுதலை ….. நீதி கிலோ எவ்வளவு ???

கிரானைட் கொள்ளை

கிரானைட் கொள்ளை

2013 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த அன்சுல் மிசுரா அவர்கள் பி.ஆர்.பழனிசாமி குழுமம் விதிகளை மீறி கிரானைட் கற்கள் வெட்டியதையும், வெட்டிய கிரானைட் கற்களைப் பட்டா இல்லாத‌ இடத்தில் வைத்திருந்தையும் எதிர்த்துப் பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் இருந்து 25,000 ரூபாய் அபராதத்துடன் அவரை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள‌தை கேட்கும் பொழுது எனக்கு இந்திய நீதித்துறையினாலும், இந்தியா உலகின் மிகப்பெரிய சனநாயக நாடு என்று சொல்லப்படுபவர்களாலும் அடிக்கடி சொல்லப்படும் “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகின்றது…

ககன் தீப் தாது மணல் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய பொழுது...

ககன் தீப் தாது மணல் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய பொழுது…

இன்று பழனிசாமி விடுதலை செய்யப்பட்டது 2013 வழக்கில் தான் , சகாயம் குழு விசாரிக்கும் வழக்கில் இருந்து அல்ல, என்று கூறுபவர்களுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளை குறித்து இந்திய ஆட்சி துறை அதிகாரி ககன் தீப் என்பவர் விசாரித்து ஒரு விரிவான அறிக்கையை அரசுக்கு கொடுத்த‌தையும், அவ்வறிக்கை இன்று பரணில் எலி கடிக்கும் நிலையில் உள்ளதையும் நினைவு கூற வேண்டுகிறேன். தாதுமணல் கொள்ளையால் ஆறு இலட்சம் கோடி இழப்பு என்று சொல்லப்பட்டது, ஆனால் கிரானைட் கொள்ளையால் 16000 கோடி ரூபாய் தானாம், ஆறு இலட்சம் கோடிக்கே இது தான் கதி என்றால், 16000 கோடிக்கு என்ன நிலை ஏற்படும் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா?

CV7cS7oXAAAcrtO

சரி பழனிசாமி, வைகுண்டராஜன் என்ற ஒரு சிலரின் மீது நடவடிக்கை எடுக்காததை வைத்து நீங்கள் எப்படி ஒட்டுமொத்த நீதித்துறையையே குறை கூற முடியும் என நீங்கள் கேட்கலாம், என் நினைவில் இருந்து உங்களுக்காக மேலும் சில தகவல்கள் இதோ….. நடைபாதை ஓரத்தில் படுத்திருந்த மக்களைக் கொன்ற சல்மான் கானுக்கு விடுதலை…. அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருந்து மும்பை தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்ட பின்னர் முக்கால்வாசி காலத்தைப் பிணையில் வந்து படங்களில் நடித்துக் கழித்துப் பின்னர் நன்னடத்தை (?) விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டார் சஞ்சய் தத். சங்கரராமன் கொலைவழக்கில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஜெயேந்திரன் நீதிபதியுடன் நடத்திய பேரம் நாம் எல்லோரும் அறிந்ததே, இதோ இன்று அவனும் விடுதலையாகி சுதந்திரமாகத் திரிகின்றான்… டான்சி நிறுவன வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செயலலிதா மனசாட்சிப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூறி அவரை விடுவித்தது உச்ச‌நீதிமன்றம்……ஊழலே செய்யாமல் நேர்மையாக மட்டுமே கட்சி நடத்தும் பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லியுடன் சந்திப்பு நடந்தவுடன் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அவர் சொத்தே சேர்க்கவில்லை அது வெறும் கணக்கு குழறுபடி எனச் செயலலிதா விடுதலை செய்யப்பட்டார்.

பேராசிரியர்.சாய்பாபா

பேராசிரியர்.சாய்பாபா

கொலை, கொள்கை, தீவிரவாத செயல்கள் எது ஒன்றிலும் ஈடுபட்டிராத ஆயிரக்கணக்கான பட்டியல், பழங்குடி இன மக்களும், இசுலாமிய மக்களும் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்யப்படாமலும், பிணை கூடக் கிடைக்காமலும் பல்லாண்டு காலம் சிறையில்… தவறே செய்யவில்லை எனினும் கூட்டு மனசாட்சிக்காக அப்சல் குருவையும், டைகர் மேனனின் தம்பி என்பதற்காக‌ யாகுப் மேனனையும் கொல்லும் நீதித் துறை… ஒரு பொய் தீவிரவாத வழக்கில் இருந்து பல காலம் போராடி விடுதலை அடையும் அன்றே அடுத்தப் பொய் வழக்கினால் கைது செய்யப்பட்டும், தனது மருத்துவச் சிகிச்சைக்கும் கூடப் பிணை கொடுக்கப்படாமல் சிறையிலேயே வாழும் அப்துல் நாசர் மதானி…. அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்ததால் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரும், இடுப்புக்கு கீழே உடல் செயல்படாமல் இருக்கும் சாய் பாபாவிற்கு மருத்துவத்திற்குப் பிணை கூடக் கொடுக்காமல் இருட்டு சிறையில் அடைக்கும் இந்த அரசு தான் , மனிதாபிமான அடிப்படையில் ஐ.பி.எல் கொள்ளைக்காரன் இலலித் மோடிக்கு உதவுகின்றது… மது ஒழிப்புப் பாடல்களை இயற்றியதற்காக ம.க.இ.க தோழர்.கோவன் மீது தேசத்துரோக வழக்கு, அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்த சவகர்லால் நேரு பல்கலைகழகக் கல்லூரி மாணவர்களுக்குத் தேசதுரோக வழக்கு…….. ஆனால் இந்த நாட்டைத் துண்டாடி, வன்முறையை உருவாக்கிய கொலைகாரன் பால் தாக்கரேக்கு இந்திய கொடி போர்த்திக் குண்டுகள் முழங்க அரசு மரியாதை ??? பாபர் மசூதியை இடிக்கத் தூண்டிய முக்கிய குற்றவாளிகளாக‌ லிப்ரான் கமிசனால் சொல்லப்பட்ட வாஜ்பாயிக்கு பாரத ரத்னாவும்… இரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கு பத்ம விபூசனும் கொடுத்து கௌரவித்துள்ளது இந்த அரசு…

கூடங்குளத்தில் அணு உலை வேண்டாம் என எதிர்த்து போராடிய மக்களின் மேல் இந்திய வரலாற்றிலேயே இலட்சத்திற்கும் அதிகமான‌ வழக்குகள் ஒரு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன, அதில் பாதித் தேசத்துரோக வழக்குகள், இவற்றை எல்லாம் பல நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்யச்சொல்லியும், வழக்குகள் அப்படியே தான் உள்ளன, இந்த அரசு மீதெல்லாம் நீதி மன்ற அவமதிப்பு பாயாது……. இன்று கூடங்குளத்தின் நிலை என்ன? ஆண்டின் பெரும்பகுதி செயல்படாமல் ஏதாவது ஒரு பிரச்சனையால் நிறுத்தி தான் வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தான் கெயில் எரிவாயு குழாய் பதிப்பிலும், நெடுஞ்சாலை வழியாகவெல்லாம் எடுத்துச்செல்ல முடியாது, வேண்டுமென்றே விவசாயிகளின் நிலத்தின் வழியாகத் தான் எடுத்துச் செல்வோம் என்று சொல்கின்றது நிறுவனம், ஆமாம் அப்படித் தான் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம், நாளை அதை எதிர்த்தால் நம் மீது பாயும் தேசத்துரோகம்……

indian-justice
ஆயிரம் குற்றவாளிகள் விடுவிக்கப்படலாம் , ஆனால் ஒரு குற்றவாளி தண்டிக்கப்படக்கூடாது எனக் காகிதத்திலும், ஆயிரம் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதும், குற்றவாளிகள் தொடர்ந்து விடுவிக்கப்படுவதை யதார்த்திலும் கடைபிடிக்கின்றது நீதித்துறை…… சட்டத்தின் முன் அனைவரும் சமம், அரசு எல்லோருக்கும் பொதுவானது என்ற சொற்களெல்லாம் பெரும்பான்மை மக்களை ஏமாற்றுவதற்காகத் தொன்று தொட்டு சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று…. இங்குச் சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல…. கொலை, கொள்ளை செய்யும் பணக்காரர்களுக்கு விடுதலை/அரசு மரியாதை, ஏதுவுமே செய்யாத ஏழைகளுக்குத் தண்டனை அது தான் இங்கு நிலவிவரும் யதார்த்தம்…

பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள்
சட்டம் ஏழைகளை ஆளுகின்றது

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்…

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. //பணக்காரர்கள் சட்டத்தை ஆள்கின்றார்கள்
    சட்டம் ஏழைகளை ஆளுகின்றது//

    well said

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*