Home / அரசியல் / இந்திய/தமிழக‌ சனநாயக‌ அரசியலில் மன்னராட்சிக் கலாச்சாரம்
செயலலிதா செல்லும் உலங்கு வானூர்தியை(Helicopter) வணங்கும் அமைச்சர்கள்

இந்திய/தமிழக‌ சனநாயக‌ அரசியலில் மன்னராட்சிக் கலாச்சாரம்

”வரலாறு மன்னர்களை வளர்ச்சியின் எதிரிகளாக இனம் கண்டது. அந்த மன்னராட்சிமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்ட காலம், தேசியத்துடனே ஆரம்பமாகின்றது. மன்னராட்சியைக் குப்பைத் தொட்டிக்குள் வீசியதென்பது ஒரு மன்னரை மட்டும் வீசியது அல்ல;கூடவே அவரது கொடி,குடை, ஆலவட்டத்தையும் வீசியது மட்டுமல்ல; இவை அனைத்திற்கும் அப்பால் மன்னர் ஆட்சிக் கலாச்சாரத்தை, மன்னர் ஆட்சிச் சிந்தனைமுறையை, மன்னர் ஆட்சி விழுமியங்களை, மன்னர் ஆட்சித் தீர்மானம் எடுத்தல் முறைமையை, மன்னராட்சி சட்டங்களை, மன்னர் ஆட்சி பற்றிய கெளரவம், அந்தஸ்து போன்ற கற்பிதங்கள் என, அனைத்தையும் தேசியவாதம் தூக்கியெறிந்தது. “ — மு. திருநாவுக்கரசு எழுதிய தேசியமும் சனநாயகமும் என்ற நூலில் இருந்து , பக்கம் 15

ஆங்கிலேயர் இந்திய மண்ணில் அடியெடுத்துவைத்ததால் மன்னராட்சி எப்படியோ முடிவுக்கு வந்தது. ஆனால், அரசியலில் மன்னராட்சி கலாச்சாரம் இன்றும் முடிவுக்கு வரவில்லை. சனநாயகம் என்பது மன்னரின் அரண்மனையை அருங்காட்சியகமாக ஆக்குவது மட்டுமன்றி மன்னரின் கிரீடம், வாள், கொடி கூடவே மன்னர் கால அரசியல் கலாச்சாரத்தையும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதே ஆகும். இக்கருத்தை வலியுறுத்தி நேற்றைய தமிழ் இந்து நாளிதழில் அரவிந்தன் எழுதி இருக்கும் கட்டுரை வாசிக்க வேண்டியதாகும்.

இளந்தமிழகம் இயக்கமும் இக்கருத்தை வலியுறுத்துகிறது. தமிழ்ச் சமூக, அரசியல் குறித்தான தனது பார்வையை முன்வைக்கும்விடத்து தமிழக மக்களின் அரசியல் வளர்ச்சி நிலை என்பது மன்னர் கால விழுமியங்களைப் பெரிதும் கொண்டதாக இருக்கிறது என்று தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

செயலலிதா செல்லும் உலங்கு வானூர்தியை(Helicopter)  வணங்கும் அமைச்சர்கள்

“நிரந்தரப் பொதுச்செயலாளர்” செயலலிதா செல்லும் உலங்கு வானூர்தியை(Helicopter) வணங்கும் அமைச்சர்கள்

முடிசூடல், வாள் பரிசு, கிரீட அலங்காரம் என்பவை மன்னராட்சிக் கலாச்சாரத்தின் குறியீட்டுப் புலப்பாடுகள். இராஜ ராஜ சோழன் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் மன்னனாகப் பார்க்கப்படுகிறார். இன்னொருபுறம் இந்து மன்னராகவும் கொண்டாடப்படுகிறார். கஜினி முகம்மதுவின் படையெடுப்பை எண்ணி வேதனைப்படுகிறார்கள் இந்துத்துவ சக்திகள். இராஜராஜ சோழனைப் பாராட்டித் தள்ளும் ஒரு செந்தமிழ் தலைவர் திருமலை நாய்க்கர் என்ற தெலுங்கு மன்னருக்கு அடிமைப்பட்டுவிட்டோமே என்று கொந்தளிக்கிறார். சோழ மன்னனின் ஆட்சியின் கீழ் அன்றைய மக்கள் சுதந்திரர்களாக வாழ்ந்தார்கள் போலும். தஞ்சையில் கோயில் கட்ட கல் சுமந்த அடிமைக் கூலியின் ஆன்மா அவரை மன்னிக்கட்டும்..

85 இலட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கும் ஒரு நாட்டில் ஆண்ட மன்னர் ஒருவனை எண்ணிப் பெருமைக் கொள்ளும் ஒரு சாரரும் சிறுமைகொள்ளும் இன்னொரு சாராரும் இருந்துவருகின்றனர்.

தலைவரின் காலில் விழுகிறார்கள். நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்கிறார்கள். தான் நிரந்தரமானவன் என்று மன்னன் எப்போதும் கருதிக் கொள்வான். பல மன்னர்கள் தம்மை வழிபடச் சொன்னதும் உண்டு. அண்மையில் வெங்கய்ய நாயுடு மோடியை கடவுளின் வரமென்றும் ஏழைகளின் தேவ தூதர் என்று சொன்னதும் கவனிக்கத்தக்கது. ஒரு பொதுவிடத்தில் ஒரு வேட்பாளரை அடிக்கிறார் ஒரு வருங்கால முதல்வர். மாற்றுக் கருத்துடையவரை ’லூசு’ என்று ஏசுகிறார் இன்னொரு வருங்கால முதல்வர். வாரிசுகளுக்கு பதவிகளை வாரி வழங்கும் போது கூச்சமின்றி செய்யமுடிவதற்கு காரணம் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற மன்னராட்சிக் கலாச்சாரம்தான்.

முற்போக்கு இயக்கங்கள் முன்கை எடுக்க வேண்டும்:

அரசியலில் செல்வாக்கு செலுத்திவரும் மன்னராட்சிக் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அரசியல் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயக கலாச்சாரத்திற்கான அறைகூவலே இன்றைய அவசியம். சனநாயகம் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் பங்குரிமை தொடர்பானது. எனவே, மக்களை அரசியலில் பங்காளிகளாக ஆக்குவதே அரசியல் சனநாயகமாகும். சனநாயக விழுமியங்கள் மீது பற்றுறுதி கொண்ட அமைப்புகள், இன்று மேலோங்கி இருக்கும் மன்னராட்சிக் கலாச்சாரத்தை விவாதப்படுத்த வேண்டும். முமுமையான சமூக மாற்றம் பற்றி அக்கறை கொண்டிருக்கும் சக்திகள் இதை செய்யத்தவறும் பட்சத்தில் அமைப்பு மறுப்பியலை (”அமைப்பே வேண்டாம், அமைப்புக்குள் இருக்கும் செயற்குழு, பொதுக்குழு, மாவட்டக் குழு போன்ற வடிவங்களே தேவையில்லை, அமைப்பு முறை , அமைப்புக் கட்டுபாடுகளைச் சனநாயக விரோதமாக கருதுதல் “) முன்வைக்கக் கூடிய தாராளவாத முதலாளித்துவ சக்திகள் சனநாயகமென்று சொல்லிக் கொண்டு அரசியல் அரங்கில் முன்னுக்கு வருவார்கள். தோற்றத்தில் இதுவரை இல்லாத ஒர் சனநாயக நடைமுறையாக அது காட்சியளிக்கும். எதற்கெடுத்தாலும் மக்களைக் கேட்கிறேன் என்பார்கள். ஆனால், அரசியல் அதிகாரத்திற்கு அருகில் போகப் போக இந்த தாராளவாதத்திற்குள் புதைந்திருக்கும் சர்வாதிகாரம் புலப்பட தொடங்கும்.

வாக்குகளை கேட்கப்போகும் தேர்தலில் வாளுக்கென்ன வேலை ?

வாக்குகளை கேட்கப்போகும் தேர்தலில் வாளுக்கென்ன வேலை ?

ஏனெனில் அமைப்பு மறுப்பியலின் மறுபக்கம் என்பது சர்வாதிகாரம்தான். இதன் அண்மைய உதாரணம் பிரசாந்த பூசனையும், யோகேந்திர யாதவ்வையும் வெளியேற்றிய அரவிந்த் கேஜிரிவாலின் ஆம் ஆத்மி கட்சியாகும். எனவே அமைப்பு மறுப்பியலின் மூலமாக சனநாயகத்தை நடைமுறைப்படுத்த முடியாது. அமைப்பு கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம்தான் இதற்கு தீர்வு காண முடியும்.

நூறாண்டுக்கு முன்பு பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் வகுத்தளித்த சனநாயக மத்தியத்துவ கோட்பாட்டைக் கடைபிடிப்பதன் மூலம் போராடும் ஆற்றல்கள் இன்றைக்கெல்லாம் அக்கோட்பாட்டை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை கைக்கொள்ளவே தயங்கும் நிலைதான் இன்றும் இருந்துவருகிறது. இந்திய சமூக வளர்ச்சி நிலை என்பது பிறப்பின் அடிப்படையிலேயே சனநாயகத்தை மறுக்கக் கூடிய சாதி சமூகமாகும். எனவே, முற்போக்கு அமைப்புகளுக்கு உள்ளேயும் சரி அவ்வமைப்புகளுக்கு வெளியேயும் சரி சனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடிப்பது வேப்பங்காயைத் தின்ன சொல்வதாக இருக்கிறது. அமைப்புக்குள் சனநாயக மத்தியத்துவத்தைக் கைக்கொள்ளும் திடசித்தம் இன்றைய தவிர்க்க முடியாத தேவையாகும். சனநாயக மத்தியத்துவத்தைக் கைகொள்வது கடினம் தான். ஆனால் , முதுநெல்லிக் காய் போல் முன்னே கசந்து அது பின்னே இனிக்கும்..

போருக்குப் புறப்படும் நிதின் கட்காரி ???

போருக்குப் புறப்படும் நிதின் கட்காரி ???

தமிழ்நாட்டு மக்களின் அரசியல் வளர்ச்சி நிலை:

”இரசியா,பிரான்சு, செர்மனி, நேபாளம் ஆகிய நாடுகளைப் போன்று மன்னராட்சிக்கு எதிராகப் போராடி மன்னர்களைத் தூக்கியெறிந்து இங்கு மக்களாட்சி நிறுவப்படவில்லை. மாறாக இங்கு வரலாறு என்பதே மன்னர்களின் வரலாறாகவும், நாட்டின் பெருமை என்பது மன்னர்களின் பெருமையாகவும் இருக்கின்றது.

மன்னராட்சி காலத்தைப் போல், ‘நம்மால் என்ன செய்யமுடியும்; அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்றும் ‘இருக்கின்ற அரசியல் நிலைமைகளை மாற்ற முடியாது’ என்றும் ‘தற்போது நிலவும் அரைகுறை சனநாயகமே போதும்’ என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது. அனைத்து சிக்கல்களுக்கும் ஊழல் மலிந்த அரசாட்சியும், அரசியல் கட்சிகளும்தான் காரணம் என்றும் சிலர் கருதுகின்றனர். இதற்கு படைத்துறை (இராணுவ) ஆட்சி, கொடுங்கோலாட்சி (சர்வாதிகாரம்) போன்றவைதான் தீர்வு என்று மற்றொருசாரார் கருதுகின்றனர். காவியங்களில் வருவதைப் போல தங்களுக்காகப் போராட தலைவர்கள் வருவார்கள் என்றும் வேறு சிலர் கருதுகின்றனர்.

இங்கு செயற்படும் அரசியல் கட்சிகளில் கூட இம்மன்னராட்சி சிந்தனையும் அரைகுறை சனநாயகமும்தான் தொடர்கின்றது. கட்சித் தலைவர்களைத் புகழ்பாடுதலும், மரபுவழி (வாரிசு) அரசியல் நடைபெறுவதும் இதன் வெளிப்பாடே.

மகுடமும், வாளும் எனக்கே சொந்தம் "தளபதி"ஸ்டாலின்....

மகுடமும், வாளும் எனக்கே சொந்தம் “தளபதி”ஸ்டாலின்….

’மக்களுக்கே முழு அதிகாரம்’ என்ற முழக்கத்துடன் அரசியல் அதிகாரத்தை நோக்கி முழு வடிவிலானப் போராட்டம் இன்னும் நடந்தேறவில்லை. தமிழ்நாட்டில் ஆங்காங்கே, நிலவுடமையாளர்கள், சாதி ஆதிக்கவாதிகள், பெருமுதலாளிகள் ஆகியோரின் ஒடுக்குமுறைகளை எதிர்த்து மக்கள் தங்களுக்கானப் போராட்டங்களை நடத்தியிருந்தாலும், அது மிகப்பெரும் அரசியல் போராட்டமாக உருவெடுத்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நிலைக்கு வளரவில்லை. பிரித்தானியர்களுக்கு எதிரானப் போராட்டம் என்பதுகூட ‘வேதகாலப் பெருமை கொண்ட இந்தியாவை வெளிநாட்டார் ஆள்வதா?’ என்றே தொடங்கியது. அது எளிய மக்களிடம் அதிகாரத்தைக் கொண்டு சேர்க்கும் சனநாயகப் போராட்டம் என்ற கருத்தியல் அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை. எனவே பிரித்தானியர்கள் வெளியேறியது நடந்ததேவொழிய எளியமக்களிடம் அரசியல் அதிகாரம் முழுமையாகக் கைமாறவில்லை.

நாடாளுமன்றம், சட்டமன்றம், வாக்குச்சாவடி உள்ளிட்ட அனைத்தும் மேலிருந்து நிறுவப்பட்டது மட்டுமல்லாமல் அரசியல் அதிகாரத்தை மக்களுக்குப் பகிர்ந்தளிக்காத அமைப்புகளாக உருவாக்கப்பட்டன. ஆகவே, அவை மக்களாட்சியின் தோற்றப்பாடுகளாக மட்டுமே காட்சியளிக்கின்றன. அரசின் அத்தனை ஆட்சி அமைப்புகள் முன்பும் பெருந்திரளான மக்கள் சிறு துரும்பு போல அதிகாரமற்றவர்களாக வாழ்கின்றனர். உரிமைகள் அனைத்தும், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் சலுகைகளாகவும், போடப்படும் பிச்சைகளாகவும் காட்டப்படுகின்றன.

அண்மையில், மேற்கு ஆசியாவில் (எகிப்து, துனிசியா, துருக்கி) கொடுங்கோலாட்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள், எளிய மக்களின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் வெற்றிநடை போட்டு வருகின்றனர். தமிழகத்திலும் அரசியல் அதிகாரம் மக்களிடம் கைமாறுவதற்கான அரசியல் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.” – இளந்தமிழக இயக்கத்தின் கொள்கை அறிக்கையில் இருந்து (பக்கம் 19).

தி.செந்தில்குமார்
ஒருங்கிணைப்பாளர் – இளந்தமிழகம் இயக்கம்.

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*