Home / அரசியல் / செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் ஆந்திர அரச பயங்கரவாதமும் – அருண் நெடுஞ்செழியன்
சென்ற ஆண்டு நடைபெற்ற போலி மோதலும், கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களும்..

செம்மரத் தொழிலாளர்கள் படுகொலைகளும் ஆந்திர அரச பயங்கரவாதமும் – அருண் நெடுஞ்செழியன்

ஆந்திர மாநிலம்,திருப்பதி சேசாசல வனப்பகுதியில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7, இதே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் போலி மோதலில் (Encounter) சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆந்திர அதிரடிப்படையினரின் இக்காட்டுமிராண்டிச் செயலுக்கு எதிராக தமிழகத்தின் அரசியல் கட்சிகள், இரு மாநில மனித உரிமை அமைப்புகள் திரண்டதை அடுத்து,விசாரணைக் குழுவொன்றை அமைக்க உத்தரவிட்டார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு .இதுவரை இவ்விசாரணைக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. போலி மோதல் வழக்குத் தொடர்பான குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை.போலி மோதலில் தொடர்புடைய சந்திரகிரி காவல்துறையினர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு,மீண்டும் பணியில் அமர்த்தப்பட்ட கண்துடைப்பு நடவடிக்கையும் இடையில் நடந்தன.

செம்மரக் கடத்தலுக்கு பின்னாலுள்ள பெரும் அரசியல் புள்ளிகளையும்,கடத்தல் கும்பல்களையும் ஒன்றும் செய்யாமல் அப்பாவிக் கூலித் தொழிலார்களை சுட்டுக் கொல்வது சந்திரபாபுவிற்கு ஒன்றும் புதிதல்ல.கடந்த 2013 ஆம் ஆண்டில் இதே போல ஏழு தொழிலாளர்களை ஆந்திர மாநில காவல்துறை சுட்டுக்கொன்றது.கொல்லப்பட்ட ஏழு தொழிலாளர்களும் முப்பது வயதுக்கு கீழள்ளவர்கள்.கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அவர்கள் கிராமங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு காட்டிற்குள் அழைத்துச் சென்று சுட்டுக்கொன்றது ஆந்திர காவல்துறை.செம்மரக் கடத்தலை தடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சியின் போது இவர்கள் கொல்லப்படுவதாக வெளி உலகிற்கு சொல்லப்படுகிறது.

இன்றுவரை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் முறைகேடாக செம்மரம் வெட்டுகிற வழக்கின் கீழ் ஆந்திர சிறையில் உள்ளனர்.

உண்மையில் சேசாச‌லம் வனப்பகுதியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? தொடர்ந்து கொத்து கொத்தாக தமிழகத் தொழிலாளர்கள் கொல்லப்படுவதற்கு அவர்கள் மட்டும்தான் பொறுப்பா? சற்று நெருங்கிப் பார்ப்போம்.

சித்தூர் மற்றும் கடப்பா மாவட்டத்தில் சுமார் 350 கி மீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கும் சேசாசலக் காட்டில் உள்ள செம்மரங்களை வெட்ட தமிழகத்தின் கிருஷ்ணகிரி,வேலூர்,தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் அழைத்துவரப்படுகிறார்கள்.இவ்வாறு இங்கு வெட்டப்படும் மரங்கள் சீனாவுக்கும் சப்பானுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நாடுகளில், செம்மரத்தினால் செய்யபட்ட பொம்மைகளை வைத்திருப்பது சமூக கௌரவத்துக்கான அலகாக கருதப்படுகிறது.

தமிழகத்தின் வனப்பகுதியில் குறிப்பாக கிழக்குத் தொடர்ச்சி மலை பகுதிககளை ஒட்டி வாழ்கின்ற மக்கள் வறிய நிலையில் வாழ்ந்துவருகின்றனர்.மரம் வெட்டுகிற தொழிலில் ஈடுபடுகிற இம்மக்கள் பெரும்பாலும் தலித் மக்கள் அல்லது பழங்குடி மக்களாக இருக்கின்றனர்.இவர்களின் வாழ்நிலையை மாற்றக் கூடிய எந்தவொரு திட்டங்களும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை.சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இவர்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டு வருகின்றனர்.அருகாமை நகரங்களில் கட்டுமானக் கூலி வேலைகளுக்கு சென்று உயிர்ப்பிழைத்து வருகின்றனர்.எல்லா நாளிலும் இவ்வேலை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை.

செம்மரம்..

செம்மரம்..

காட்டு மரங்களை வெட்டுவதில் தேர்ந்தவர்களாக இருப்பதும்,அடர்ந்த காட்டிற்குள்ள வேகமாக நடந்து செல்வதும் காட்டுப் பாதைகளை மறவாமல் நினைவில் கொள்வதும் இவர்களின் இயல்பாக உள்ளது.

இக்காரணங்களால் செம்மரக் கடத்தல் கும்பல் தரகர்களின் முதல் இலக்காக இருக்கிறார்கள்.மிகப்பெரும் தொகையை முன்பணமாக தருவதோடு மாதத்திற்கு சுமார் 25,000 ருபாய் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.செம்மரக் கடத்தலில் ஈடுபடுகிற முக்கியப் புள்ளிகள் காடுகளுக்குள் நடமாடுவது இல்லை. கடற்கரையோரங்களில் சுற்றித் திரிவார்கள்.அங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்படும்.இவர்களின் செம்மரக் கடத்தலுக்கு வனத்துறை அதிகாரிகளும் தணிக்கை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுகின்றனர்.அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் நன்கொடை வழங்கப்படுகிறது.

செம்மரக் கடத்தலில் ஈடுப்பட்டு பெரியளவில் பணம் ஈட்டியப்பின் குற்றங்களில் இருந்து தப்புவதற்கும் கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கும் அரசியல் அரங்கினுள் நுழைந்து தங்களை தற்காத்துக் கொள்கின்றனர்.

செம்மரக் கடத்தலுக்குப் பின்னால்:

செம்மரக் கடத்தலை ஐந்து அடுக்காகப் பிரிக்கலாம்.மரம் வெட்டுவது,வெட்டிய மரத்தை தூக்கிச் செல்வது,வாகனங்களில் ஏற்றுவது,வாகனத்தில் கடத்துவது மற்றும் இறுதியாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வது.
செம்மரக் கடத்தில் ஈடுபடுகிற முக்கியப் புள்ளிகள்,செம்மர இடைத்தரகர்களை நியமித்து ஒட்டுமொத்த வேலைகளையும் மேலிருந்து கண்காணித்து உத்தரவிடுகின்றனர்.அரசியல்வாதிகள்,போலீஸ்,வழக்கறிஞர் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை பார்த்துக்கொள்வதும் செம்மரக் கடத்தல் தரகர்களின் பொறுப்பு.வழக்குகளில் சிக்காமல் தப்புவது இவர்களுக்கு கை வந்தக் கலை. காவல்துறை ஆவணங்களில் இவர்களின் பெயர்கள் ஒன்றுகூட ஏறாத அளவிற்கு செல்வாக்கு மிக்கவர்கள் செம்மர கடத்தல் தரகர்கள்.

இந்தியச் சந்தையில் ஒரு கிலோ செம்மரத்தின் சந்தை மதிப்பு சுமார் ஐந்தாயிரம் ருபாய் ஆகும்.மாறாக சீனாவில் ஒரு கிலோ செம்மரம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்படுகிறது.மருத்துவ தேவைக்கும்,மர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆபரணப் பயன்பாட்டிற்கும் செம்மரத்திற்கு சீனச் சந்தையில் நல்ல கிராக்கி உண்டு.அதேநேரம் சீனப் பண்பாட்டில் செம்மரம் முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் ஆட்சிக்கு வருகிற கட்சிகள் எதிர்க்கட்சிகளின் தலையீடுகளை கட்டுப்படுத்துவதற்கு செம்மரம் வெட்டுவோர்களை சுட்டுக்கொன்று இடைத் தரகர்களுக்கும் முக்கியத் தலைமைப் புள்ளிகளுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறது.அதாவது முந்தைய காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடத்தல் குழுவிற்கு தெலுங்கு தேசக் கட்சியின் கடத்தல் குழு விடுக்கின்ற எச்சரிக்கை! சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகரிடம் இத்தகவல் அனைத்தும் உறுதி செய்யப்பட்டது.அவனிடம் சுமார் ஐந்து கோடி ரூபாயும் இரண்டு கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செம்மரக்கடத்தலில் கைதாகும் தமிழக கூலித் தொழிலாளர்கள்...

செம்மரக்கடத்தலில் கைதாகும் தமிழக கூலித் தொழிலாளர்கள்…

செம்மரக் கடத்தலில் லாபம் பெறுகிற,அரசியல் கட்சிகளுக்கு இடையிலான போட்டியே தொழிலாளர்களை சுட்டுக்கொல்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது.ஆட்சிக்கு வருகிற கட்சிகளின் உத்தரவின் பேரில் எதிர்கட்சிகளின் இடைத்தரக கும்பல்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க ஏவப்படுகிறது.எதிர்க்கட்சிகளின் ஆளுமையை தடுத்து நிறுத்துவதற்கு,இது குறித்து ஏதும் அறியாத கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.
2011 ஆம் ஆண்டில் வாரதியும் 2012 ஆம் ஆண்டில் முருகன்,சுப்பிரமணி என்ற கூலித் தொழிலாளர்கள்,இதன் காரணமாக போலீசால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது உயிருக்கு கங்கி ரெட்டியால் ஆபத்து நேரும் என ஆளுநருக்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு கடிதம் எழுதினார்.முன்னதாக 2003 ஆம் ஆண்டில் திருப்பதி அலிப்பிரியில் சந்திரபாபுவை கொல்வதற்கு மாவோயிசுடுகள் முயற்சி செய்ததாக கூறப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக பின்னர் கங்கி ரெட்டி கைதுசெய்யப்பட்டான்.ஆனால் கங்கி ரெட்டி மீதான இக்குற்றச்சாட்டிற்கு எந்தவித ஆதாரத்தையும் முதல்வர் சந்திரபாபுவால் அளிக்க இயலவில்லை.சித்தூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு வலது கரமாக இருந்து செம்மரக் கடத்தலில் ஈடுபடுவதும்,எதிர்க்கட்சியில் முக்கிய அரசியல் தலைமையகாவும் கங்கி ரெட்டி வளர்ச்சிப் பெறுவதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான யுக்திதான் சந்திரபாபு அரசின் போலி மோதல் கொலைகள். சொல்லப்போனால்,எதிர்க்கட்சி முகாமில் இருந்து பிரிந்து வந்து தனது கட்சியில் சேர்வதற்கு சந்திரபாபு விடுத்த மறைமுக அழைப்புதான் இந்த‌ ஆட்சியில் தொடர்கின்ற போலி மோதலும் அப்பாவிக் கூலித் தொழிளார்களின் உயிர்ப்பலிகளும்!

வன அதிகாரிகளின் துணையில்லாமல் வனத்தில் இருந்து ஒரு செம்மரம் கூட வெட்டி எடுத்துப் போக முடியாது.செம்மர கடத்தலுக்கு துணை போவதாக இருபதிற்கும் மேற்பட்ட போலீசார்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.செம்மரங்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு உடந்தையாக செயல்பட்டது தொடர்பாக,தணிக்கை அதிகாரிகள் மீது சில வழக்குகளும் உள்ளது.

சென்ற ஆண்டு நடைபெற்ற போலி மோதலும், கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களும்..

சென்ற ஆண்டு நடைபெற்ற போலி மோதலும், கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களும்..

ஆந்திர அரசின் போலி மோதல் கொலைக‌கள்:

செம்மரக் கடத்தல் தொடர்பான,இதுவரையிலான ஒன்பது போலி மோதலும் ஜோடிக்கப்பட்டவை என நாம் உறுதியாக கூற முடியும்.சுட்டுகொல்லப்பட்ட தொழிலார்கள், பெரும்பாலும் முதுகுப்புறத்திலிருந்து சுடப்பட்டதற்கான குண்டுக் காயங்கள் உள்ளன.பிடி படுகிற தொழிலார்கள் முதலில் கொடூரமாகத் தாக்கப்பட்டும் பல முறை துன்புறுத்தப்பட்டும் இறுதியாக நிக்க வைத்து பின்னால் இருந்து சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

பெரும்பாலான போலி மோதல்கள் இரவுப் பொழுதிலேயே நடத்தப்படுகிறது.செம்மரம் வெட்டுகிற தொழிலார்கள் தங்களை கற்களைக் கொண்டும் வில் அம்பைக் கொண்டும் தாக்குவதாக கூறுகிற போலீசார்களில் இதுவரை ஒரு காவல்துறை அதிகாரிக்கு கூட மோதல்களில் பெரிய காயங்கள் ஏதும் ஏற்படாமல் போனதுதான் ஆச்சரியம்!
பலியாகிற தொழிலாளிகள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாக,கரும்புத் தோட்டத்திலோ நெல் வயல்களிலோ வேலை செய்கிற விளிம்புநிலை மக்கள்.

இதுவரை செம்மரக் கடத்தல் தொடர்பாக எதிரக்கட்சியில் இருந்து ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.செம்மரக் கடத்தலில் ஈடுபடுகிற அரசியல் தலைவர்கள் தங்களின் பண பலம் மற்றும் அதிகார பலம் மூலமாக தப்பித்து வருகின்றனர்.ஒட்டுமொத்த சித்தூர் மாவட்ட அரசு இயந்திரத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் இவர்கள் வைத்துள்ளார்கள்.

செம்மரப்பாதுகாப்பு என்ற பேரில் தொடர்கிற தொழிலாள‌ர் படுகொலைகள், ஆந்திர அரசின் தலைமையில் நடைபெறுகிற அரச பயங்கரவாதம் ஆகும்.கடந்த இருண்டு ஆண்டிற்கும் மேலாக 2,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இதில் நான்கு பேர் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதின் பேரில் போடப்படுகிற தடுப்புக் காவல் சட்டத்தை தவறான வழிகளின் ஆந்திர அரசு இதற்குப் பயன்படுத்துகிறது.முதலில் மூன்று மாதத்திற்கு தடுப்புக் காவலின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபின் மூன்று மூன்று மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் நீட்டிக்கப்பட்டு இச்சட்டம் மிகவும் தவறான வழியில் காவல்துறையால் பயன்படுத்தப்படுகிறது. பிணையில் சொற்பமான தொழிலாளர்கள் எப்போதேனும் விடுவிக்கப்பட்டால்,வெட்கமே இல்லாமல் இரு திராவிடக் கட்சிகளும் இதற்கு உரிமை கொண்டாடுவதுதான் கேவலத்திலும் கேவலும்!

சேசாசல வனப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான செம்மரங்கள் உள்ளன.முப்பது கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பல்வேறு இடங்களில் இருந்து வனத்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் செம்மரங்களுக்கு நல்ல விலை கிடப்பதால் கள்ளத்தனமான ஏற்றுமதிகள் அதிகரிகின்றன.தற்போது ஆட்சியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் அரசு,மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக செம்மரங்களை விற்கப் போவதாக அறிவித்துள்ளது.இதில் வருகிற பணத்தைக் கொண்டு விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யப்போவதாகவும் கூறுகிறது.

செம்மரங்களை வெட்டுவது வெளிப்பார்வைக்கு சூழலியல் பிரச்சனையாக தெரிந்தாலும் அடிப்படையில் இதுவொரு சமூக பொருளாதார அரசியல் பிரச்சனையாக உள்ளது.செம்மரங்கள் அழிந்துவருகிற தாவரப் பட்டியலில் இருந்தாலும்,செம்மரப் பாதுகாப்பு என்ற பேரில் அப்பாவி விளிம்புநிலை மக்களையே ஆளும் வர்க்கம் சுட்டுக் கொல்கிறது.செம்மரக் கடத்தலில் தொடர்புடைய அரசியல்வாதிகள்,மாஃபியா கும்பல்கள்,காவல்துறை அதிகாரிகள்,வன அதிகாரிகள் போன்ற அதிகார வர்க்கம் மீது தூசு கூடு விழுவதில்லை.மாறாக,மரம் வெட்டுகிற கூலித் தொழிலாளிகள் போலி மோதல்களில் பலிகிடாவாக ஆக்கப்படுகிறார்கள்.

சென்ற ஆண்டு நடைபெற்ற போலி மோதலும், கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களும்..

சென்ற ஆண்டு நடைபெற்ற போலி மோதலும், கொல்லப்பட்ட 20 கூலித் தொழிலாளர்களும்..

செம்மரத் தொழிலாளர்களின் வாழ்நிலை:

பெரும்பாலான தொழிலாளர்கள் மோசமான சமூகப் பொருளாதாரப் நிலையில் இருந்து வந்தவர்களாக உள்ளனர்.வறுமையான வாழ்க்கையில் உழல்பவர்கள்.அரசின் நலத் திட்டங்களினாலோ இட ஒதுக்கீட்டாலோ பெரிய நலன்கள் எதையும் பெறாதவர்கள்.ஒருவர் கூட உயர்நிலை பள்ளிப் படிப்போ அரசு வேலைகளுக்கோ செல்லாதவர்கள்.தங்கள் வாழிடத்தில் இருந்து குறைந்தது 15 கி மீ நடந்துதான் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் வாழ்பவர்கள்.வருமானத்தில் பத்து விழுக்காடு மட்டுமே இவர்களால் சேமிக்க முடிகிறது.பெண்களே அதைச் செய்கின்றனர். நல்லது கெட்டதிற்கு வட்டிக்கு கடன் வாங்கி மேலும் மேலும் சிக்கலுக்கு உள்ளாகின்றனர்.மோசமான பொருளாதார சூழ்நிலை,குடும்ப உறவுகளுடனான பாசம் ஏதாவொரு வழியில் வாழ்க்கையை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற நிர்பந்தத்தில் உந்தப்பட்டு,மரம் வெட்டுகிற தொழிலுக்கு வந்து சேருகின்றனர்.சாவிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பதற்கான உயிர்ப்பிழைப் போராட்டத்தில் அவர்களுக்கு வேறு போக்கிடமில்லை.

கல்வராயன் மலை,ஜவ்வாது மலை போன்ற மலைகளையொட்டிய கிராமங்களில் வசிக்கிற மக்களும்,விழுப்புரம் போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டச் சேர்ந்த மக்களும் ஆபத்தான இவ்வேலையை மோசமான வறுமை சூழ்நிலை காரணமாக தேர்ந்துகொள்கின்றனர்.

மோசமான வறுமை,வேலை வாய்ப்பின்மை,கல்வியறிவின்மை,சுகாதாரக் கேடுகள் இம்மக்களை வாட்டி வதக்குகிறது,இவர்களின் மோசமான இச்சூழ்நிலையை கவனத்தில் கொண்டு மூன்று ஏக்கர் நிலத்தை வழங்குவது, விவசாயத்திற்கு பாசன வசதியும் ஏற்படுத்திக் கொடுப்பது,நல்ல கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளை ஏற்படுத்தித் தருவது,சாலைகள் மற்றும் மின்சார வசதிகள் செய்து கொடுப்பது போன்ற மாற்று நலத் திட்டங்களை அரசு முன்னெடுத்தால் மட்டுமே இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு காண முடியும்.

– அருண் நெடுஞ்செழியன்
ஆதாரம்:
Red sandal labour killings in the name of protecting national resources – at: http://sanhati.com/excerpted/11241/#sthash.omm8Rbi3.dpuf

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*