Home / கலை / போதாது ஒரு “விசாரணை” – திரை விமர்சனம் – மு.ஆனந்தன்

போதாது ஒரு “விசாரணை” – திரை விமர்சனம் – மு.ஆனந்தன்

db16224c-cfbb-4e77-b60c-f7322035b7bc
அரசுகளின் அடக்குமுறைக் கருவியான ஒட்டுமொத்த காவல் துறையின் ஒரு எடுத்துக்காட்டாக‌ திகழ்கிற அந்த குண்டூர் காவல்நிலையத்தில் மனிதத்தின் மீது விழுகிற ஒவ்வொரு கொடூர அடியும் உதையும் தாக்குதலும் செதில் பிடித்த இந்த அதிகார அமைப்புகளின் மீது எழுகிற விசாரணையே. பூட்சுகளும், லத்திகளும், உருட்டுக்கட்டைகளும் பனை மட்டைகளும் இன்னும் படத்தில் காட்டப்படாத நகங்களை பிடுங்குவது, எலட்ரிக் ஷாக் கொடுப்பது, ஆசன வாயில் ஐஸ்குச்சியை சொருகுவது எனக் கேட்டாலே ஈரல் குலையை பிழிகிற டிரீட்மெண்டுகள்தான் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்க காவல்துறை கடைபிடிக்கிற அறம், நெறி, முறைமை எல்லாமுமே.

அந்த நாடோடி கூலித் தொழிலாளிகளின் தோலிலும் சதையிலும் எலும்பிலும் நரம்பிலும் குருதியிலுமாக விழுகிற அடிகளின் வலியை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்கிறார்கள். இந்த உருவமற்ற வலியும் குரலற்ற விசும்பலும்
அரங்கத்தில் அலைபாய்ந்து ஒன்றுக்கொன்றாய் முட்டி மோதி திசையெல்லாம் சிதறி கருத்த மெளனமாய் காட்சியளித்தது. அரங்கத்தின் மனது இடைவிடாமல் அதிர்ந்து கொண்டிருந்தது என்பதற்கு இறுதிவரை ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்த இந்த கருத்த மெளனமே சாட்சி. இறுதிக் கட்டத்தில் பாண்டியும் முருகனும் காவல்துறையிடமிருந்து தப்பியோடும் ஒரே ஒரு காட்சியில் மட்டும் தீடிரென கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது போல் கைதட்டலும் விசிலும் வெடித்ததுச் சிதறியது. பிறகு மீண்டும் மூன்று தோட்டாக்கள் வெடிக்கும் சப்தமும் நீண்ட மணியும் ஒலிக்க, வெளிறிய முகங்கள் பம்பிப் பம்பி வெளியேறின. ஒன்றை ஒன்று பார்க்க திரணியில்லாமல் தொங்கிய தலைகள் ஊர்ந்து சென்றன. இதை விட இயக்குனர் வெற்றிமாறனுக்கு வேறு என்ன வெற்றி வேண்டும்.

கோவையில் ஆட்டோ ஒட்டுனராகவும் படைப்பாளியாகவும் பரிணமித்துள்ள ஆட்டோ சந்திரன் என்கிற மு.சந்திரகுமார் தன் இளவயதில் பிழைப்பிற்காக ஆந்திர மாநிலம் குண்டூர் செல்கிறார். அங்கு அதே தளத்தில் மற்ற சில இளைஞர்கள். குண்டூர் தெருக்களின் குண்டு குழிகளில் உருகி வழிந்தோடுகிறது அவர்களது வாழ்க்கை. செய்யாத திருட்டுக் குற்றத்திற்காக அவர்களை கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள லாக்கப்பில் கொடூரமாக சித்திரவதை செய்கிறது காவல்துறை. அவர்கள் மறுக்கிறார்கள். நீதிமன்றத்தில் நிறுத்த‌ப்படுகிறார்கள். அங்கும் குற்றத்தை மறுக்கிறார்கள். விசாரணைக் கைதிகளாய் சிறையில் இளமை கழிகிறது. வாய்தா மேல் வாய்தா போட்டு சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இறுதியில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்தால் இதற்குள் தண்டனைக் காலமே முடிந்திருக்குமே என்று அறிவுரை சொல்லி நீதியை நிலைநாட்டுகிறார் நீதிபதி. அதை ஏற்று குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுதலையாகிறார்கள்.

இந்த உண்மைக் கதையின் இரத்தம் கன்றிய இரணங்களையும் வலிகளையும் ஒரு சாமானிய மனிதனின் சிறைக்குறிப்புகள் என்ற தளும்புடன் தனது இலாக்கப் நாவலில் பதிவு செய்கிறார் சந்திரகுமார். இந்த நாவலின் குண்டூர் காவல் நிலைய பகுதி உண்மைக் கதையையும் அங்கிருந்து அவர்கள் விடுதலையாகி சென்னை காவல் நிலையத்தில் நகர்வதான ஒரு புனைவுக்கதையையும் இணைத்து வெற்றிமாறன் இந்த திரைப்படத்தைஉருவாக்கியுள்ளார். வெனீஸ் உலக திரைவிழாவில் மனித உரிமைப் பிரிவில் விருது பெற்றுள்ளது.

இலாக்கப் நாவலில் நீதிமன்றத்தில் நிறுத்த‌ப்பட்டவர்கள் வழக்கம்போல் சிறையில் அடைக்கப்ப‌டுகிறார்கள். அவர்களை நுகரும் சிறைக் கொட்டடியின் இரும்புக் கதவுகளையும் அவர்கள் நியாயத்தை அரித்துத் தின்று வாய்தாக்களை விழுங்கும் செல்லரித்துப் போன நீதிமன்ற நடைமுறைகளையும் பேசுகிறது நாவல். ஆனால் திரைப்படத்தில் உண்மையை உணர்ந்த நீதிபதி அவர்களை சிறையில் அடைப்ப‌தற்கு பதிலாக விடுதலை செய்கிறார். இது அரிதிலும் அரிதானது. இருந்தாலும் இதன் மூலமே கதையை பிற்பகுதி தளத்திற்கு எடுத்துச் செல்கிறார் இயக்குனர்.

visaranai

நாவல் முழுவதும் படமாக்குவதில் திரைப்படத்திற்கான விஷுவல் டிரீட் இருக்காது எனக்கருதி பிற்பகுதி புனைவுக் கதையை புகுத்தியுள்ளதாகவே நினைக்கிறேன். பிற்பகுதியும் மிக முக்கிய தளமாடலே. முற்பகுதி கீழ்மட்ட காவல்துறையையும் விளிம்புநிலை மக்களின் பாடுகளை பேசுகிறது. பிற்பகுதி மேல்மட்ட அரசியல்வாதிகள், அரசு நிர்வாகம், மற்றும் அதிகாரிகளின் அரசியல், அதிகார விளையாட்டுகளில் கசியும் வஞ்சனைகள், ஊழல், ரகசியங்கள் அதனால் ஒரு மேல்தட்டு குற்றவாளி சிறை கொட்டடியின் சித்திரவதையில் மரணிப்பது இறுதியில் அதே அப்பாவி இளைஞர்களும், சக காவல்துறை அதிகாரியும் காவு கொடுக்கப்படுவதுமென காக்கிச் சட்டையின் பல்வேறு கோர முகங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை பிளந்து காட்டுகிறது.

“இது தாண்டா போலீஸ்” என்ற டைட்டிலுக்கு இப்படம்தான் 12 பொறுத்தங்களுடன் பொருந்திப் போகிறது. திருப்பதி பிரசாதம் கொடுக்கிற இன்ஸ்பெக்டரை நல்லவர் என நினைத்து அவரிடம் போலீஸ் அடித்து விட்டதாக கூறும் முருகனை டிரஸை கழட்டி ஜட்டியுடன் அடிப்பது, உண்ணாவிரதம் இருப்பவர்களை சாப்பிட வைக்க உங்களை விடுதலை செய்துவிட்டோம் பக்கத்து ஓட்டலில் பணம் வாங்கிக் கொண்டு போங்கள் என சூழ்ச்சி செய்து ஓட்டலில் சாப்பிடவைப்பது, சாப்பிட்டு திரும்பும் அவர்களை சீவிய பனைமட்டைகளில் அடிப்பது என காவல்துறைக்குள் புதைந்திருக்கும் ஒவ்வொரு குரூரமும் படம் முழுக்க நுரைத்துத் தள்ளுகிறது.

முற்பகுதியில் ஆந்திர‌ காவல்துறையையும் பிற்பகுதியில் தமிழக காவல்துறையையும் களமாடுகிற படம் மிக முக்கிய செய்தியைப் பேசுகிறது. குண்டூர் பொய் வழக்கிலிருந்து விடுதலையாக‌ சென்னை இன்ஸ்பெக்டர் செய்த மிகச்சிறிய உதவிக்காக சென்னை காவல்நிலையத்தின் கூலியில்லாத கொத்தடிமைகளாய் துப்புறவு வேலை

பார்க்கும் முருகனும் பாண்டியும் பேசிக்கொள்கிறார்கள் “ நம்மூர் போலீஸ் நம்மூர் போலீஸ்தாண்டா. எல்லோரும் எவ்வளவு பாசமா பேசறாங்க “. ஆனால் அதே நம்மூர் போலீஸ்தான் எதற்குமே தொடர்பில்லாத அதே நம்மூர் முருகனையும், பாண்டியையும், அப்சலையும் கொஞ்சம் நஞ்ச மனசாட்சியோடு பணியாற்றுகிற சக போலீஸ் இன்ஸ்பெக்டரையும் போலி என்கவுண்டரில் சுட்டுத் தள்ளுகிறது.

Visaranai-Movie-still (1)
அப்பாவி மனித உயிர்களின் பலி இன்னும் நமது மனங்களில் துடித்தடங்கவில்லை. அனைத்து மொழியிலும், அனைத்து மாநிலங்களிலும் அனைத்து நாடுகளிலும் போலீஸ் என்ற அதிகார மையத்திற்கு இருப்பது ஒரே குணம் ஒரே மனம் தான். அது சட்ட ரீதியான குண்டாயிஸம். இதில் உள்ளூர் வெளியூர், சாதி, மதம், இனம், மொழி, போன்ற எதுவும் கிடையாது. ஏன் அது சில நேரங்களில் சக ஊழியனையும், நண்பனையும், சொந்த தாய், மனைவி, மக்களைக்கூட காவு வாங்கும்.

காவல் நிலையங்களில் பெறப்படுகிற குற்றஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றம் ஏற்பதில்லை. ஆனால் அதே சமயம் அதே குற்றஒப்புதல் வாக்குமூலத்தின் தொடர்ச்சியாக குற்றம் தொடர்பான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை கைபற்றப்பட்டால் அதனை நீதிமன்றம் சாட்சியமாக ஏற்கும். இப்படத்தில் நிரபராதிகளை காவல்துறை எப்படி குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கிறது என்பது மட்டுமல்ல கொள்ளை நிகழ்ந்த வீட்டிற்கு கொண்டுபோய் உண்மையிலேயே அவர்கள் செய்ததைப் போல் நடித்துக் காட்ட வைத்து அதை வீடியோ எடுத்து சாட்சிகளை தயார் செய்யும் காவல்துறையின் ஜோடிப்பு மேதா விலாசத்தை தத்ரூபமாக வடித்துள்ளது. ஒரு இலாக்கப் கொலை எப்படி தற்கொலையாக சித்தரிக்கப்படுகிறது, ஒரு போலி என்கவுண்டர் எப்படி அரங்கேற்றப்படுகிறது என்பது மிக அற்புதமாக காட்சிப்படுத்தப் படுகிறது. இதுபோன்ற என்கவுண்டர் ஸ்பெலிஸ்டுகள்தான் இன்றைய சினிமாவின் ஹீரோக்கள்.

இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதிகளாக முத்திரை குத்துகிற பொதுப்புத்தியை அதனால் அவர்கள் அனுபவிக்கிற சமூக, சட்ட, அரசியல் நெருக்கடிகளை போகிற போக்கில் மிக ஆழமாக பேசுகிறது படம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு பிற மாநிலங்களில் தமிழர்களை விடுதலைப்புலிகளாகப் பார்க்கிற பார்வையையும் பதிவு செய்கிறது. பாண்டி வகையறாக்களை காவல்துறை கைது செய்து துவைத்தெடுப்பதற்கான சரடு அப்சலின் வார்த்தைகளில் விரிகிறது. செகண்ட் ஷோ பார்த்துவிட்டு தனியாக திரும்பும் அப்சலை மறித்து விசாரிக்கிறது போலீஸ்.

பேரென்ன ?

அப்சல் !

நீ என்ன அல் கொய்தாவா ? தாலிபானா ?

இல்ல சார் நான் தமிழ்நாடு.

அப்ப நீ என்ன எல்.டி.டி.ஈ யா ?

உடனே அப்சலை தூக்கி ஜீப்பில் எறிகிறது. அவனுடன் பஸ் ஸ்டாண்டில் இரவுகளைக் கழிக்கிற நண்பர்களையும் கவ்வுகிறது. இவர்கள் கைது செய்யப்படுவதற்கு அப்சல் என்ற பெயரைத்தவிர வேறென்ன காரணம். இப்படித்தான் இந்தியாவில் இஸ்லாமிய இளைஞர்கள் மீது இந்து மதவெறி கும்பலகள் மட்டுமல்ல அரசு இயந்திரங்களும் மறைமுக அடக்குமுறையை ஏவுகிறது. அவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது. இதனாலேயே பல இஸ்லாமிய இளைஞர்கள் பாதுகாப்புத் தேடி இஸ்லாமிய மதவாத இயக்க பாதையில் தள்ளப் படுகிறார்கள். இன்றைய மதவெறி பாசிச சூழலில் இப்படியாப்பட்ட நுட்பமான பிரச்சனையை பேசிய வெற்றிமாறனை ஆரத்தழுவி ஆயிரம் முத்தங்களை பரிசளிக்கிறேன்.

ஓரிரு காட்சிகள் மட்டுமே வந்தாலும் வீடுகளில் தங்கி வீட்டு வேலை பார்க்கிற இளம் பெண்களின் அவலமும் ஓரிரு காட்சிகளைத் தவிர வராத காதல் கதையும் படம் முழுக்க வாய்பேசாமல் நமது யூகங்களை பேச வைத்துக் கொண்டே
இருக்கிறது. இப்படியாக படத்தில் காட்டப்படாத காட்சிகளும் நமக்குள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

ஒரு காட்சியில் சமுத்திரக்கணியை அவரின் கீழதிகாரி ‘கோட்டாவில உள்ள வந்துட்டு சிஸ்டம் தெரியாம பேசாதிங்க’ என்பார். இது எல்லா மட்டங்களிலும் எல்லா துறைகளிலும் நடக்கிற சமூக புறக்கணிப்பு. இறுதிக் காட்சியில் அவரை
போலீஸே போட்டுத் தள்ளும்போது இந்த வசனம் மீண்டும் நமக்குள் உயிர்பெறுகிறது. நேர்மையான ஒருவர் காவு கொடுக்கத் தேர்ந்தெடுக்கப்படுகிற காரணம் அந்த நேர்மை மட்டுமல்ல அவரது கருப்புத் தோலும் கூடத்தான்.

ஒரு நபர் கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட வேண்டுமென்கிறது நமது அரசியல் அமைப்புச் சட்டமும் குற்றவியல் சட்டங்களும். ஆனால் போலீஸ் நாள் கணக்கில் வாரக்கணக்கில் கஸ்டடியில் வைத்து அடித்துத் துவைத்த பிறகுதான் ஆஜர் படுத்துகிறது. இது எப்படி சாத்தியமாகிறது. எத்தனை நாட்கள் கஸ்டடியில் வைத்திருந்தாலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தவரை போலீஸ் பார்ட்டியுடன் சுற்றி வளைத்து அரஸ்ட் செய்ததாக கைது அறிக்கையும், ரிமாண்ட் ரிப்போர்ட்டும் தயாராகும். இப்போது வெளியே தெரியாமலிருக்க லாட்ஜில் ரூம் போட்டும், கல்யாண‌ மண்டபங்களிலும் கைதிகள் அடைத்து வைத்து அடிக்கிறது போலீஸ். இந்த லட்சணத்தில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்த கைதின் போது போலீஸ் கடைபிடிக்க வேண்டிய 10 கட்டளைகளை காகித ராக்கெட்தான் செய்து விடவேண்டும்.

Visaranai-Movie-Still

சர்வதேச மனித உரிமை பிரகடணம், இந்திய அரசியலமைப்புச் சட்டம், குற்றவியல் சட்டங்கள் வழிவகுத்துள்ள மனித உரிமைகளை கெக்கலித்து கேலித்து கேணப்பையனாக்குகிறது காவல் நிலையங்களில் நடைபெறுகிற இலாக்கப் மரணங்கள், பாலியல் வல்லுறவுகள், என்கவுன்டர்கள், துப்பாக்கி சூடு என நீளும் மனித உரிமை மீறல்கள். இதெல்லாம் தமிழ் சினிமாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓரிரு காட்சிகளில் மட்டுமே கசிந்திருக்கிறது. அழுகி சீழ் பிடித்து
புழுகள் பூத்து நாறிக்கிடக்கிற இந்த போலீஸ் சிஸ்டத்தை படம் முழுக்க திரையில் வழியவைத்த முதல் தமிழ் சினிமா விசாரணை. அந்த நாற்றத்தின் உக்கிர நெடியில் நமது மூக்குச் சவ்வுகளின் எரிச்சல் இன்னும் அணையவில்லை.

முகமற்றவர்களின் முகங்களாக வருகிற பாண்டி வகையாறாக்கள் தினேஷ், முருகதாஸ், சிலம்பரசன், பிரதீப் அகியோரின் முகங்கள் வலி, வேதனை, கதறல், துடிப்பு, ஏமாற்றம், பயம், ஆசுவாசம், உறுதி என அனைத்தையும் பேசுகிறது. உடல்மொழி நடிப்பின் முதல்தரம். கதாபாத்திரத்தை மட்டுமல்ல கதையின் செய்தியையும் உள்வாங்கி நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி. குண்டூர் நாமக்கட்டி இன்ஸ்பெக்டரிலிருந்து உதவுகிற பெண் போலீஸ், ஏட்டய்யாக்கள், கான்ஸ்டெபிள்கள், இறுதியில் என்கவுன்டர் ஸ்பெசலிஸ்ட்கள் என அனைவரும் நாம் அன்றாடம் சந்திக்கிற அச்சு அசல் யாதார்த்த போலீஸ்களாகவே உலவுகின்றனர். பாத்திரங்களுக் கேற்ற நடிகர்கள் தேர்வு.

நிஜ காவல்நிலையங்களையும் நீதிமன்றத்தையும் கட்டி எழுப்பியுள்ளார் கலை இயக்குனர். பல காட்சிகளில் பின்ண‌னி இசையை தவிர்த்து காட்சிகளின் அழுத்தத்தையே இசையாக கொடுத்துள்ள இசையமைப்பளரும் பாரட்டுக்குரியவர். மற்றவர்கள் கதைகளை சுட்டு படமெடுப்பவர்கள் மத்தியில் இலாக்கப் நாவலாசிரியர் சந்திரகுமாரை வெனிஸ் உலக திரைப்பட விழாவிற்கு அழைத்துச் சென்றும் அவரை பற்றிய குறிப்புகளையும் வெனிஸ் திரைவிழாவில் அவர் பேசுகிற காட்சிகளையும் திரைப்படத்தில் இணைத்தும் வெற்றிமாறன் திரையில் கதையாசிரியர்களுக்கு புதிய மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். இதை கோடம்பாக்கம் பின்பற்றுமா ????

குண்டடிபட்ட அப்சலின் தொண்டைக்குழியில் உயிர் துடிப்பதும், “சார் உயிர் இருக்குது சார், காப்பத்துங்க சார்” என பாண்டி துடிப்பதும் உலகின் மனசாட்சியை ஊடறுக்கக் கூடிய மானுடத்தரம் வாய்ந்த கலைப்படைப்பு. ஆனால் இதனால் பல சமூகங்களின் உயிர்மூச்சை புதைத்தடக்கி குழிமேட்டில் கைகுலுக்குகிற இந்த மேதமை பொருந்திய அதிகார மையங்களின் சொரணையை உறுத்தலுக்காவது உள்ளாகுமா ? அதில் சற்றேனும் சலனத்தை ஏற்படுத்த இந்த ஒரு விசாரணை போதாது. விசாரணைகள் தொடரவேண்டும்…..

– மு.ஆனந்தன் – anandhan.adv@gmail.com

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*