Home / அரசியல் / தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி!
Tippler-Nadu

தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்கு மாற்றாக கூட்டணி ஆட்சி!

2016 சட்டமன்றத் தேர்தலை நெருங்கிக் கொண்டிருக்கிறது தமிழகம். இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாகிய பின்பு, தமிழ் மண்ணில் நடைபெறும் 14-வது சட்டமன்றத் தேர்தல். தமிழக வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு “கூட்டணி ஆட்சி” எனும் முழக்கம் கேட்கத் தொடங்கியிருக்கிறது. கூட்டணி ஆட்சி முழக்கத்திற்கான முழுமுதற் காரணி, 1989-ல் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என இரண்டு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததும், முறை வைத்து ஆட்சி செய்த இந்தக் கட்சிகளினால் தமிழகம் அடைந்த சாதக, பாதகங்களும்தான்.

இருகட்சி ஆட்சி முறை :

உலகில் உள்ள பல்வேறு நாடுகள், தங்களுடைய அரசியலமைப்பில் இரண்டே கட்சிகள் பங்குபெறும் அரசியல் முறையைக் கொண்டுள்ளன. இருகட்சி ஆட்சி முறை என்று சொல்லும் போது நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மாறி மாறி ஆட்சியை நடத்தும் சனநாயக் கட்சியும், குடியரசுக் கட்சியும்தான்.

அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் குடியரசுக் கட்சியின் ஜார்ஜ் புஷ் மாறி சனநாயகக் கட்சியின் ஒபாமா பதவிக்கு வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகளில் எந்தச் சிறு மாற்றமும் இருப்பதில்லை. ஏகாதிபத்திய போக்கும், சுரண்டல் எண்ணமும் தான் அமெரிக்கா அரசின் முகமாக இருந்து வருகிறது.

மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய இரண்டு கட்சிகளும், மறைமுக உடன்பாட்டுக்கு வந்து மக்களை ஏமாற்ற இருக்கும் வாய்ப்பே இருகட்சி ஆட்சி முறையின் மிகப்பெரிய பலவீனம். பல்வேறு கட்சிகள் பங்குபெறும் தேர்தல் சனநாயகத்தைக் கொண்டுள்ள தமிழகத்தில், இருகட்சி ஆட்சி முறையின் பலவீனத்தைப் பயன்படுத்தி தி.மு.க -வும், அ.தி.மு.க -வும் எப்படி மக்களை ஏய்த்தன என்பதைப் பார்ப்போம்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்:

தமிழகத்தில் சாதி ஒழிப்பிற்கும், சமூக நீதிக்காகவும் போராடிய பெரியார் இயக்கத்தின் வளர்ச்சியைத் தேர்தல் அரசியலில் அறுவடை செய்த திராவிட முன்னேற்ற கழகம், கட்சியின் தொடக்கக் காலத்தில் சமூக நீதி சார்ந்த குரலாக ஒலித்தாலும் 1980-களுக்குப் பிறகு தன்னுடைய அரசியல் இலக்கை மறந்து எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நிலைக்குச் சென்றது.

1970-களின் பிற்பகுதியில், தி,மு.க -வில் இருந்து பிரிந்து சென்று எம்.ஜி.ஆர் தலைமையில் புதிய கட்சியாக உருவாகியது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அப்போதிருந்த இந்திரா காங்கிரசுடன் இணைந்து 1977 சட்டமன்றத் தேர்தலை சந்தித்து வெற்றிப் பெற்றது எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க. தமிழகத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த எம்.ஜி.ஆர், தில்லியிடம் சண்டை போடாத, சுமூகமான ” Never Fight With Delhi ” உறவை கடைப்பிடித்தார்.

இந்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறுவதற்கும், மத்திய அரசு தலையிட்டு ஆட்சியைக் கலைக்காமல் பார்த்துக் கொள்ளவும் தில்லியிடம் சரணாகதி அடைந்தார்.

1977, 1980, 1984 எனத் தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் இருந்த எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1989 ஆட்சிக்கு வந்த தி.மு.க-வின் அரசு கலைக்கப்பட்டு, 1991-ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. அன்று முதல் இன்று வரை, தி.மு.க-வும், அ.தி.மு.க -வும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. கருணாநிதிக்கு மாற்றாக ஜெயலலிதா; ஜெயலலிதாவுக்கு மாற்றாகக் கருணாநிதி எனத் தமிழக அரசியல் தடம் புரண்டது.

ஊழல் குற்றம், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றச்சாட்டு என ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பலையில் ஆட்சியைப் பறி கொடுத்தார் ஜெயலலிதா. 1996 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க, இந்திய அரசுடன் மோதல் போக்கைக் கைகொள்ளக் கூடாது எனும் எம்.ஜி.ஆரின் பாதையில் நடைபோட்டது. இன்று வரை அது தொடர்கிறது. இன்னும் சொல்லப் போனால், அதற்குப் பிறகு அமைந்த இந்திய அரசுகளின் அமைச்சரவைகளில் பங்கேற்று, மாநில சுயாட்சி முழக்கத்தைக் குழி தோண்டி புதைத்தது தி.மு.க. ஈழப்போர் உச்சகட்டத்தில் இருந்த நேரத்திலும் கூட, மத்திய அமைச்சரவையில் பதவிகள் கேட்டு கருணாநிதி தில்லி சென்றதை உலகமே பார்த்தது.

ஆனால், இன்றும் எந்தவித கூச்சமும் இன்றி 2016 சட்டமன்றத் தேர்தலிலும், ஈழப் பிரச்சனை, 2ஜி வழக்கு என அனைத்தையும் மறந்து காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளார் கருணாநிதி. தி.மு.க எனும் முதலாளித்துவக் கட்சியின் இயல்பான கூட்டணி என்பது இந்திய பொருளாதாரத்தைத் தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்த காங்கிரசு கட்சிதான் என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது.

முதல்முறையாக 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மீது டான்சி நிலபேர ஊழல் வழக்கு, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கு என ஏகப்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அண்மையில் கர்நாடகாவில் ஜெயலலிதா சிறை வைக்கப்பட்டிருந்தது, வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில்தான். தமிழக அரசியலில் ஊழலை நிறுவனமயப்படுத்தி, மையத்துவப்படுத்திய பெருமை அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையே சேரும்.

அரசு இயந்திரத்தின் சகல முடிவுகளும் ஜெயலலிதாவின் கண்ணசைவில் தான் நடக்கிறது எனப் பெருமை பேசும் சூழலும் தமிழ்நாட்டில் உள்ளது. அப்படி ஜெயலலிதாவைப் புகழ்பவர்கள்தான், அவருக்கு “ஒரு சிறந்த நிர்வாகி” எனும் வேடத்தைத் தரித்துவிடுகின்றனர். இந்த வேடம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காகவே யாரும் எளிதில் அணுக முடியாதவராக இருக்கிறார் ஜெயலலிதா. ஆனால், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறனை அண்மையில் சென்னை, கடலூர் பகுதிகளில் ஏற்பட்ட மழையும், பெருவெள்ளமும் கலைத்து போட்டுவிட்டுச் சென்றது.

bala cartoons jayalalitha karunanithi photo

2001-ல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அனுப்பித் தான் ஒரு சர்வாதிகாரி என்பதை மக்களுக்கு உணர்த்தினார். அது மட்டுமின்றி, பார்ப்பனீயத் திட்டங்களான மதமாற்றத் தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடை எனச் சனாதன முறையில் செயல்பட்டார். அதனால்தான், இப்போதும் இந்துத்தவப் பாசிசக் கட்சியான பாரதீய சனதா தனக்கான முதல் கூட்டணி வாய்ப்பாக ஜெயலலிதாவைப் பார்க்கிறது.

தொலைக்காட்சிகளில் வெளியான நேர்காணலுக்காக அண்மையில் அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் நாஞ்சில் சம்பத். ஆனால், நாஞ்சில் சம்பத்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அ.தி.மு.க -வில் ஒருவரால் பதில் சொல்ல முடியுமென்றால் அவர் ஜெயலலிதாதான், ஜெயலலிதா மட்டும்தான். அவரின் இந்தச் சர்வாதிகாரப் போக்குதான் பா.ச.க-வோடு கொண்டிருக்கும் நட்பை, தேர்தல் கூட்டணியாக வளர்க்காமல் போகச் செய்கிறது.

தன்மீது உள்ள வழக்குகளுக்காகவும், தன்னுடைய அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தற்போது ஆட்சியில் இருக்கும் மோடி அரசு கொண்டு வரும் சகல மக்கள் விரோத சட்டங்களுக்கும் ஆதரவு தந்து வருகிறது தமிழகத்தை ஆளும் ஜெயலலிதாவின் அரசு. பெரியார் வழியில் நடைபோடுவதாக சொல்லும் தி.மு.க-வும் தற்போதிருக்கும் மோடி அரசின் காவிமயப்படுத்தும் ஆட்சியை மெளனமாக வரவேற்று கொண்டுதான் இருக்கிறது.

ஈழத்தில் போர் உச்சகட்டத்தில் இருந்த போது, “போர் நடந்தால் உயிர்கள் பலியாவது இயல்புதான்” என்று கூறிய ஜெயலலிதாவின் இறுமாப்பும், “மழைவிட்டும் தூவானம் விடவில்லை” என்ற கருணாநிதியின் ஜோடனையும்தான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உலகறியச் செய்தது.

சமகால சாட்சி – டாஸ்மாக்:

இன்றைய சூழலில், தமிழகத்தின் முதன்மைப் பிரச்சினையாக வளர்ந்து நிற்கிறது டாஸ்மாக். மதுவிலக்கு கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கைக் கொண்டு வருவோம் என உறுதி அளித்து வருகின்றன. ஆனால், ஆளும் அ.தி.மு.க அரசோ குழந்தைகள், பெண்கள் என மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது தேசதுரோக வழக்குப் போட்டு வருகிறது.

டாஸ்மாக்கை ஊக்குவித்துத் தமிழகமெங்கும் சாராயத்தை ஓடவிட்டதில் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கூட்டுக் களவாணிகள். இதற்கு முக்கியக் காரணம், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்யும் மதுபான ஆலைகளின் அதிபர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இருவரின் ஆசி பெற்றவர்களாகவும், கட்சியைச் சார்ந்தவர்களாகவும் இருப்பதுதான்.

Tippler-Nadu

ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் போதெல்லாம், அவரின் உடன் பிறவா சகோதரி சசிகலாவிற்கும், இளவரசிக்கும் அதிகப் பங்குகள் இருக்கும் மதுபான ஆலைகளின் வருமானம் வானளாவிய அளவில் அதிகரிக்கும்.

அதுவே, தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது தி.மு.க.-வின் ஜகத்ரட்சகன், டி.ஆர். பாலு ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக இருக்கும் மதுபான ஆலைகள் பெரும் பணத்தில் கொழிக்கும்.

அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க தரப்புச் சாராயச் சக்ரவர்த்திகளின் வருமானம் குறைகிறதே தவிர, முடக்கப்படுவதில்லை. அதே போலத்தான், தி.மு.க ஆட்சிக்கு வந்தால் சசிகலாவின் நிறுவனம் மதுபானங்களைத் தொடர்ந்து டாஸ்மாக்கிற்கு விற்று வருகிறது.

இவ்வாறு, தமிழக மக்களை குடிக்கு அடிமையாக்கும் டாஸ்மாக்கின் விற்பனையில், வளம் கொழிப்பது கோபாலபுரமும், போயஸ் தோட்டமும்தான்.

2016 – சட்டமன்றத் தேர்தல் காட்சிகள்:

தேர்தல் நெருக்கத்தில் அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகள் அதிகமாக நடைபெறாது. வேட்பாளர் தேர்வில் ஏற்படும் முரண்பாடுகளால் சில பிரிவுகள் உண்டு ஆனால் கட்சிகளை பிளப்பது என்பது இந்தத் தேர்தலில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.

இந்தப் பிளவுகளில் அனைவருக்கும் புலப்படும் வண்ணம் ஒரு மெல்லிய இழை ஓடிக் கொண்டிருக்கிறது. ம.தி.மு.க, ச.ம.க, மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க, த.மா.கா என அனைத்துக் கட்சிகளில் நடந்த பிளவுகளும் புதிய இயக்கங்களாக உருவெடுக்கவில்லை. மாறாக, தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டும் கட்சிகளின் அதிகார நலன்களுக்காக மட்டுமே உடைக்கப்பட்டு உள்ளன.

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம், மக்களின் நலன்களைத் புறந்தள்ளி ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே தமிழகத்தின் நலன்கள் அடகு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆதிக்க சக்திகள் ஆதிக்க சாதியாக, பணம் படைத்தவர்களாக, பெருமுதலாளிகளின் ஏவலாளாக, இரண்டு கட்சிகளிலும் இருக்கின்றனர். அத்தோடு, இவர்களின் பிரதிநிதிகள் பல சிறிய கட்சிகளிலும் இருந்து கொண்டு, யார் யாருடன் கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்க வைக்கின்றனர். அவர்களின் எண்ணங்கள் நிறைவேறாத போது, இரு பெரிய கட்சிகளின் விருப்பத்தை நடத்துவதில் இவர்களுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளின் கூட்டு என்பது கள்ளத்தனமானது. ஆனால், இந்த கட்சிகளின் மாவட்டத் தலைமைகளில் இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள்?, அ.தி.மு.க-வின் செந்தில் பாலாஜிக்கு எதிராக போட்டியிட தி.மு.க-வின் கே.சி.பழனிச்சாமிக்கு கசக்கிறது. திண்டுக்கல் ஐ.பெரியசாமிக்கு எதிராக போட்டியிட அ.தி.மு.க.-வின் நத்தம் விசுவநாதனுக்கு கண்கள் வியர்க்கிறது. கோபியில் செங்கோட்டையனை வெற்றி பெற வைக்க தி.மு.க-வின் கூட்டணியில் உள்ள காங்கிரசு தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் துடிக்கிறார்.

இவ்வாறு, தி.மு.க, அ.தி.மு.க என கட்சிகள் வேறாக இருந்தாலும், இந்த கட்சிகளின் ஆட்சியால் பலன் அடைபவர்கள் வெகு சிலராகவும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் வலை பின்னலும் பேராபத்தை விளைவிக்கக் கூடியது.

523086_3737874531763_310369682_n

மக்கள் விரோதம் = தி.மு.க = அ.தி.மு.க

தமிழகத்தின் உயிர் நாடிப் பிரச்சினைகளான மது ஒழிப்பு, கூடங்குளம் அணு உலை சிக்கல், கெயில் எரிவாயுக் குழாய் பிரச்சினை, ஈழத் தமிழர் பிரச்சினை, மீத்தேன் வாயு எடுத்தல் என அனைத்து வாழ்வாதாரச் சிக்கல்களிலும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மக்கள் விரோத நிலைப்பாட்டைத்தான் கொண்டு இருக்கின்றன.

தமிழ் ஆட்சி மொழி, தமிழ்வழிக் கல்வி, தமிழக மக்களின் பண்பாடு, ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு உரிமைகள், கச்சத் தீவு, தமிழக மீனவர்கள் பிரச்சினை, முல்லைப் பெரியாறு, காவிரி நதிநீர் பங்கீடு என தமிழகத்தின் உரிமைகளை இந்திய அரசின் காலடியில் சமர்ப்பித்துதான் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தங்களுடைய பதவிகளைக் காத்து கொள்கின்றன.

உலகத் தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு என நடத்தி தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் ஆட்சியில் இருக்கும் போது அதற்கான செயல்களைச் செய்வதே இல்லை. இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், தற்போது ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதா அரசு பள்ளிகளில் ஆங்கில வழியைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.

சமூக நீதியை முன்னிறுத்தி வளர்ந்த பெரியார் இயக்கத்தின் வளர்ச்சியைத் தேர்தல் வெற்றியாக மாற்றிய தி.மு.க-வும், சமூக நீதி காத்த வீராங்கனையின் அ.தி.மு.க-வும் உடுமலைபேட்டையில் சமூக விரோதிகளால் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கருக்கு ஆதரவாகத் தங்கள் குரலை உயர்த்தவே இல்லை என்பது தான் சமகால நிதர்சனம்.

இவ்வாறு, உள்ளூர் தமிழனையே பாதுகாக்க எண்ணாத இவர்கள்தான், உலகத் தமிழர்களின் தலைவர்களாகத் தங்களை முன்னிறுத்திக் கொள்கிறார்கள். ஒற்றை அலைவரிசையில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் தேர்தல் சனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்து இரு கட்சி ஆட்சியை முறைமையாக்கி வருகின்றனர்.

தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி என்பது தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின், அதன் தலைமைகளின் வீழ்ச்சியில்தான் தொடங்கும் என்பது திண்ணம்.

கூட்டணி ஆட்சியை நோக்கி!

தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் மாறி மாறி நடத்திய மக்கள் விரோத ஆட்சிகளில் இருந்து அவர்களை வீழ்த்தவும், கடைக் கோடி தமிழனுக்கும் அதிகாரம் சென்றடையவும் கூட்டணி ஆட்சியை நோக்கி நாம் நகர வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளது.

இதைத்தான், புரட்சியாளர் அம்பேத்கர் அன்றே சொன்னார்,

“ பெரும்பான்மையான அளவில், அரசு அதிகாரத்தை ஆதிக்கக் கட்சிகள் ஆக்கிரமிப்பு செய்துகொள்கின்றன. இந்த மோசமான சூழல் தடுக்கப்பட வேண்டும். இதற்கு தெளிவான வகையில் சட்டமியற்ற பட வேண்டும்.

இந்த சட்டமானது வலிமையான சமூகம் மட்டுமே, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதையும், அத்தகைய ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையிலும் – அரசியல் சாசனம் இருக்க வேண்டும்.

இதற்கு கூட்டணி ஆட்சி ஒன்று மட்டுமே தீர்வு. இவ்வகையினால் மட்டுமே – இதுவரை அதிகாரம் நுகராத சமூகம் – அரசியல் சாசனம் மூலமாக அதிகாரம் பெற வாய்ப்பு ஏற்பட வழி தோன்றும்.

இந்த சட்ட அமைப்பு – ஒவ்வொறு மாநிலத்திற்கும் உறுதி செய்யப்பட வேண்டும். இந்த சட்ட அமைப்பு மைய அரசு அளவிலும் உறுதி செய்யப்பட வேண்டும். கூட்டணி ஆட்சி அனைத்து மாநிலங்களிலும், மத்திய அரசிலும் – உறுதி செய்யப்பட வேண்டும்.

இது ஒன்றே ஏழை – எளிய மக்கள், தங்களுக்கான உரிமையை அடைய – வழிகோலும் ”. – புரட்சியாளர் அம்பேத்கர்.

26/01/1947 :: ஜெய் பீம் பத்திரிகை பேட்டியில், மெட்ராஸ் பதிப்பு.

இன்றிருக்கும் இந்திய ஆளும் வர்க்க ஏற்பாட்டுக்குள் சில அதிகாரப் பகிர்வினைகளைத்தான் பெற முடியும் என்றாலும் தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க; அ.தி.மு.க-வுக்கு மாற்று தி.மு.க என்கிற நிலை களையப்பட வேண்டும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி மலர வேண்டும்.

-  கதிரவன், இளந்தமிழகம்

–கேலிச்சித்திரம் நன்றி – கார்ட்டூனிஸ்ட் பாலா…

Print Friendly, PDF & Email

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>