Home / அரசியல் / பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம்; மண்டியிட்டது மோடி அரசு…….

பெங்களூர் தொழிலாளர்கள் போராட்டம்; மண்டியிட்டது மோடி அரசு…….

பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக என்ன நடக்கிறது என ஊடகங்களை மட்டுமே சார்ந்திருப்பவர்களுக்குப் பின்வரும் செய்திகள் மட்டுமே கிடைத்துள்ளது….. தொழிலாளர்கள் சாலை மறியல்; போக்குவரத்து நெரிசல்: பொது மக்கள் அவதி. தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்கள், அதனால் காவல்துறை அவர்களின் மீது தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். ஆனால் உண்மையில் இங்குப் பெங்களூரில் நடப்பது என்ன? ஏன் தொழிலாளர்கள் போராடுகின்றார்கள்?, தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றார்களா? என்ற கேள்விகளுக்கான பதிலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

தொழிலாளர்கள் ஏன் போராடுகின்றார்கள்?

 

 பெங்களூர்  என்றாலே எல்லோருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் அதிகம் நினைவுக்கு வரும்,  ஆனால் இங்கு அது மட்டுமின்றிப் பெல் (BHEL)  போன்ற மத்திய அரசின் நிறுவனங்களும் , அதிக ஆயத்த ஆடை நிறுவனங்களும் (Ready Made Garment Factory)  உள்ளன.  இந்த ஆயத்த ஆடை நிறுவனங்களில் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள்.  ஏப்ரல் 18 அன்று பெங்களூர் – ஒசூர் நெடுஞ்சாலையில் உள்ள பொம்மனஹள்ளியில் அமைந்துள்ள‌ ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அவர்களுடைய‌ தொழிற் சங்கங்களின் முன்னெடுப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த நிதி நிலை அறிக்கையில் (budget) தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் (Provident Fund) மத்திய அரசு மேற்கொண்ட‌ திருத்தங்களை எதிர்த்தே இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. முதலில் தங்களது நிறுவனங்களின் முன் போராடிய தொழிலாளர்க‌ள், போராட்டம் வீரியமடைய நெடுஞ்சாலையை மறித்தனர்.

493bbd2e2-1
 

வ‌ழமை போல வந்த காவல்துறை எடுத்த எடுப்பிலேயே போராடியத் தொழிலாளர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கத்துவங்கினர். இதனால் போராடிய பலர் படுகாயமடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இன்று (ஏப்ரல் 19) அன்று பெங்களூரின் பல பகுதிகளில் அமைந்திருக்கும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும், பல தொழிற்சங்களும் இந்தப் போராட்டத்தில் இணைந்தனர். போராட்டம் விரிவடைவதை பொறுக்க முடியாத கர்நாடக அரசு, குண்டர்களைச் சில பகுதிகள் இறக்கி பேருந்துகளைத் தாக்கியதை அங்கிருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் கண்டித்தனர். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு காவல்துறை போராடும் தொழிலாளர்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசியும்,  காட்டுமிராண்டித்தனமாகத் தடியடியையும் நடத்தி வருகின்றது… தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஆனால் அரசு தரப்பில் இருந்து தொழிலாளர்க‌ளைச் சந்தித்து அவர்களது வேண்டுகோள் என்ன என்பது கூட இது வரை கேட்கப்படவில்லை, ஆனால் இதே கர்நாடக அரசு ஒவ்வொரு முறையும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கேட்காமலேயே தொழிலாளர் சட்டத்திலிருந்து அந்நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து வருகின்றது. தொழிலாளர்கள் என்றால் காவல்துறையை ஏவும் அரசு, முதலாளிகள் என்றால் பட்டுச் சாமரம் வீசுகின்றது.

வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் அப்படி என்ன திருத்தத்தை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு:

     

வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு திருத்தங்கள் செய்தது மோடி தலைமையிலான மத்திய அரசு. அதற்கு முன்னர் இந்த வருங்கால வைப்பு நிதி முறை எப்படிச் செயல்படுகின்றது எனப் பார்த்து விட்டுத் திருத்தங்களுக்குச் செல்வோம்.  தொழிலாளியின் சம்பளத்தில் (அடிப்படை –  Basic) 12 % பிடித்தம் செய்யப்படும், இதே 12 % தொகையை அந்தத் தொழிலாளி பணிபுரியும் நிறுவனமும் செலுத்த வேண்டும், இந்தத் தொகைக்கு அரசு 8.8% வட்டி வழங்கும். செய்யப்பட்டுள்ள‌ திருத்தங்களாவன;

1)வருங்கால வைப்பு நிதியின் ஒரு பகுதியின் மேல் வரி விதிக்கப்படும்

2) ஒருவர் வேலையில்லாமல் இரண்டு மாதங்களிருந்தால் அவர் அதுவரை சேமித்து வைத்திருக்கும் வைப்பு நிதியை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது அவர் தனது 54ஆவது வயதில் மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளலாம். இந்த விதியை ஒருவர் வேலையில்லாமல் இரண்டு மாதங்களிருந்தால் அவர் சேமித்து வைத்திருக்கும் பணத்தை மொத்தமாக எடுக்க முடியாது, அவர் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் தொகையை மட்டுமே எடுக்க முடியும். நிறுவனம் செலுத்தும் தொகையும், அரசு அளிக்கும் வட்டித்தொகையும் அவரது 58ஆவது வயதில் தான் எடுக்க முடியும்.

காவல்துறை மக்களைக் காக்க அல்ல, அரசை காக்க...

காவல்துறை மக்களைக் காக்க அல்ல, அரசை காக்க…

இதில் முதல் திருத்தம் பற்றிப் பரவலாக ஊடகங்களால் விவாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்ததால் அந்தத் திருத்தம் இந்திய அரசினால் திரும்பப்பெறப்பட்டது. இரண்டாவது திருத்தம் பற்றி ஊடகங்கள் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இந்தத் திருத்தம் பற்றி எல்லா நிறுவனங்களும் அவர்கள் ஊழியர்களுக்குச் சுற்றறிக்கை மூலமாகவோ(Circular) அறிவிப்புப் பலகையில் ஒர் அறிவிப்பாக வெளியிட்டோ( Notice Board) அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இது வரை நான் பணிபுரியும் நிறுவனம் உட்படப் பல நிறுவனங்கள் இதைத் தங்கள் ஊழியர்களுக்கு அறிவிக்கவில்லை, இதில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் உண்டு.  இது விதி மீறல், ஆனால் அரசுக்கு சாதகமான விதிமீறல் என்பதால் அரசும் கண்டும், காணாமல் விட்டுவிட்டது. இந்த அறிவிப்பு இந்த வாரம் தான் சில ஆயத்த ஆடை நிறுவனங்களில் அறிவிக்கப்பட்டது , இதனை எதிர்க்கும் தொழிலாளர்களின் போராட்டங்களும் உடனே தொடங்கியுள்ள‌ன.

   

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டத்தில் திருத்தங்கள் என்ற பெயரில் மிக நூதனமான முறையில் கைவைத்திருக்கின்றது மோடி தலைமையிலான இந்திய அரசு. அது தான் மேலே சொன்ன இரண்டாவது திருத்தம்,   இதன் மூலம் இன்று வேலைக்குச் சேர்ந்துள்ள 20வயது தொழிலாளி முதல் ஏற்கனவே பணிபுரிந்து வரும் 40 வயது தொழிலாளர்கள் வரை அவர்களது வைப்பு நிதியில் 60விழுக்காட்டை அரசு எடுத்துப் பயன்படுத்த முடியும். இதை இன்னும் 18 ஆண்டுக் கழித்து 58 வயதில் அவர்கள் கேட்டால் மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதுமானது.

 

  இந்த திருத்தம் மிகவும் அபாயகரமான ஒன்று… இன்று ஒவ்வொரு துறையிலும் தொழிலாளர்கள் வேலை இழப்பு பரவலாக நடந்து வருகின்றது, நாளை வேலை இருக்குமா என்பதே உறுதியாக இல்லாத சூழ்நிலை தான் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லா நிறுவனங்களிலும் யதார்த்தமாக உள்ளது.  உதாரணத்திற்கு சென்னை நோக்கியாவில் பணிபுரிந்து வந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இன்று வேலையின்றி நடுத்தெருவில்.  ஆனால் இவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட வைப்புத் தொகை முழுவதையும் 58 வயதிற்கு பின்தான் அவர்களால் எடுத்து பயன்படுத்த‌ முடியும். இது எப்படி என்றால்  சோற்று வழியில்லாமல் தவிக்கும் ஒருவனை வேண்டுமென்றே பட்டினி போட்டு விட்டு, 58 வயதிற்கு பிறகு உனக்கு பிரியாணி நிச்சயம் என்பது போல உள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் சராசரி வாழும் வயது 66 என்று சொன்னாலும், மோசமாகி வரும் சுற்றுச்சூழல், வேலைச் சூழல் காரணமாக இன்று வாழும் தலைமுறையில் எல்லோரும் 58 வயது வரைக்கும் உயிரோடு இருப்பார்களா, அப்படி அவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு இந்த வருங்கால வைப்பு நிதி பற்றியெல்லாம் நினைவுக்கு இருக்குமா என்பது கேள்விக்குறியே? இதுமட்டுமின்றி செயல்படாமல் இருக்கும் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் இருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயையும் மத்திய அரசு எடுத்து செலவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

     

ஒருபுறம் ஏழை, நடுத்தர மக்கள், தொழிலாளர்களின் பணத்தை எடுத்துச் செலவு செய்யும் இதே மத்திய அரசு , பெரிய பணக்காரர்களுக்கான வரியை இந்த ஆண்டு வரவு-செலவு அறிக்கையில் (Budget)  குறைத்துள்ளது, அதே நேரம் ஏழை, நடுத்தர  மக்களிடம் இருந்து வசூலிக்கும் மறைமுக வரியை அதிகப்படுத்தியுள்ளது. மோடி கொண்டு வருவதாகச் சொல்லப்படும் வளர்ச்சி யாருக்கானது என்பதை இந்த இரு நிகழ்வுகளை வைத்தே நாம் முடிவு செய்து கொள்ள முடியும்.

eposter03

இதனால் தான் இன்று பெங்களூரில் ஆயத்த ஆடை ஊழியர்கள் வருங்கால வைப்புநிதிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள  திருத்தத்தை மாற்றச்சொல்லி போராடுகின்றார்கள். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழும், ஏன் மற்ற தொழிலாளர்கள் போராடவில்லை ? நான் முன்னரே சொன்னது போல இந்த வருங்கால வைப்புநிதிச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களைப் பற்றி எல்லாத் தொழிற்சாலைகளும் தங்களது தொழிலாளர்களுக்குச் சுற்ற‌றிக்கை கூட இன்னும் அனுப்பவில்லை. இப்பொழுது நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தைப் பற்றிச் செய்தி வெளியிடும் ஊடகங்கள் கூட இந்தப் புதிய ஓய்வூதியச் சட்டத்திருத்தைப் பற்றி விவாதிக்காமல், தொழிலாளர்கள் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுவது போலவும் , அவர்கள் வன்முறையாளர்கள் போலவும் ஒரு பக்க சார்பாக , அரசின் ஊதுகுழல்களாகச் செயல்படுகின்றன தங்களை “நடுநிலையாளர்களாக” தாங்களே சொல்லிக்கொள்ளும் ஊடகங்கள். இதைத் தமிழக மக்களுக்குச் சொல்ல வேண்டிய கடமையுள்ள தமிழக ஊடகங்களோ தேர்தல் தொடர்பான செய்தியகளில் மட்டுமே மூழ்கியுள்ளன.

   

நடந்த‌ தொழிலாளர்கள் போராட்டம் இந்தியாவில் பணிபுரியும் எல்லாத் தொழிலாள‌ர்களுக்குமானது, பெங்களூரில் தொடங்கிய ஆயத்த ஆடைத் தொழிலாளர்களின் போராட்டம் பிற துறை/பிற நகரங்களுக்கு பற்றிப் பரவாமல் தடுக்கவே மோடி அரசு வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திருத்ததைப் பின்வாங்கியுள்ளது.  ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடிய பெங்களூர் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்/ தொழிற்சங்கங்கள் இருக்கும் திசை நோக்கி கைகூப்புவதோடு,  இந்தப் போராட்டத்தினால் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருக்கும், காயம்பட்டத் தொழிலாளர்களுக்கும் உதவ வேண்டியது இந்தியத் தொழிலாளர்களின் தார்மீகக் கடமை.

மலரட்டும் தொழிலாளர் ஒற்றுமை … பற்றிப்பரவட்டும் உரிமைப் போராட்டங்கள்.

நற்றமிழன்.ப‌
இளந்தமிழகம் இயக்கம்.

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

One comment

  1. போராட்டத்தின் போது இணையத்தில் நிறைய பேர் விஷயம் என்னவென்று தெரியாமல் இவர்களை விமர்சித்தார்கள். இது அனைவருக்கும் தேவையான ஒன்று. போராடிய தோழர்களுக்கு நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*