Home / அரசியல் / நேரு பல்கலைகழகமும் – பார்பனீய சதி புரட்சியும்: “ஜெய் பீம்” எனும் இடி முழக்கம் கண்டு நடுங்கும் சங்க பரிவாரம்

நேரு பல்கலைகழகமும் – பார்பனீய சதி புரட்சியும்: “ஜெய் பீம்” எனும் இடி முழக்கம் கண்டு நடுங்கும் சங்க பரிவாரம்

உயர் கல்வி நிலையங்களில் ஜோதி பா புலே, சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர், பெரியார், பிர்சா முண்டா ஆகிய புரட்சியாளர்களின் கொள்கைகளை இடியாக முழக்கமிடும் மாணவர்கள் !

மகிசாசுர தியாகத் திருநாள், நரகாசுர திருநாள், இராவண திருநாள், மாட்டுக் கறி , பன்றி கறி உண்ணல் என மூல வேர்களையும், உணவுப் பண்பாட்டையும் நினைவு கூர்ந்து பெருமிதத்துடன் கொண்டாடி மகிழும் அறிவார்ந்த மாணவர்கள் !

நிறுவன கொலை என்று கூட வர்ணிக்கப்படும் ரோகித் வெமுலாவின் தற்கொலை, நமது உயர்கல்வி நிறுவன வளாகங்களில் ஏற்பட்டிருக்கும் வழக்கம் மீறிய நிகழ்ச்சிப் போக்குகளின் விளைவா ? ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு பா.ச.க ஆற்றிய எதிர்வினையைக் கூர்ந்து கவனித்தால் இந்த நிகழ்ச்சிப் போக்குகள் எத்தகைய வரலாற்றுப் பூர்வமானது, தனிச்சிறப்பு மிக்கது என்பது புலப்படும். பல்கலைக்கழக வளாகங்களில் மாட்டிறைச்சி திருவிழா, மகிசாசுர தியாகத் திருநாள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதைக் குறிப்பிட்டு, இந்தியாவை துண்டாடவும் சமூகத்தை பிளவு படுத்தவும் சில அமைப்புகள் களமிறங்கியுள்ளதாக பா.ச.க-வின் பொதுச் செயலாளர்
பேசியுள்ளார். ஆளும் இந்துத்துவா கட்சி இவ்வாறு அலறுவதற்கு என்ன காரணம்?

12743651_1236373029725424_2262453438776609258_n

அதிகாரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்துத்துவா அமைப்பு (R.S.S) பதற்ற நிலையில் உள்ளது. பல்கலைக்கழகங்களில் கொண்டாடப்படும் அசுரர் திருநாள், மாட்டிறைச்சி திருவிழாக்கள் குறித்து அதன் பத்திரிகைகள் தொடர்ந்து கூக்குரல் எழுப்பி வருகிறது

உற்சாகத்துடனான இந்துத்துவாவும் ! அதன் சதிப்புரட்சியும் . . !

இந்த நிகழ்வுப் போக்கை புரிந்து கொள்ள, நாம் அண்மைக்கால‌ வரலாற்றை ஆய்ந்தறிந்தல் வேண்டும். நரேந்திர மோடி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், இந்துத்துவா சக்திகள் கவலை ஏதுமின்றி உற்சாகத்துடன் இருந்தனர். மோடி அரசு பொறுப்பேற்று சரியாக 6 மாதங்களுக்குப் பிறகு 2014 நவம்பர் கடைசி வாரத்தில் உலக இந்து மாநாட்டை (World Hindu
Congress) புதுதில்லியில் நடத்தியதின் மூலம் இது தெளிவானது. உலகம் முழுவதிலும் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்ள வந்த இந்து மத கருத்தியலாளர்கள் மோடி தலைமையின் கீழ் ஒரு “முழுமையான இந்து அரசை” நிறுவுகிற கனவை அரங்கேற்றியதில் இரகசியம் எதுவும் இல்லை.

மெக்காலே, மார்க்சியம், கிறித்துவ மிச‌னரி, மேற்கத்திய நுகர்வு கலாச்சாரம், இசுலாமியத் தீவிரவாதம் ஆகிய “5 எம்” கள் குறித்த எச்சரிக்கைகள் அடங்கிய ஆங்கிலத் துண்டறிக்கைகள் மாநாட்டுப் பிரதிநிதிகளிடம் விநியோகிக்கப்
பட்டன. “லவ் ஜிஹாத்” குறித்த கூப்பாடுகளும், தாத்ரியில் நடைபெற்ற மனிதப் படுகொலையும் இந்த உற்சாகங்களின் வெளிப்பாடேயாகும். மத்திய அமைச்சர்களின் அதீத பேச்சுகளிலும் பல்கலைக்கழக கல்வியை காவிப்படுத்தும் முயற்சியிகளிலும் இது பிரதிபலித்தது. சுதந்திர இந்தியாவில் இந்துத்துவா வெறியர்கள் இவ்வளவு தீவிரமாக இதற்கு முன்னர் எப்போதும் செயல்பட்டதில்லை.

இந்திய குடியரசு தினமாகிய ஜனவரி 26, இந்துத்துவவாதிகளால் கருப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டது. மற்ற இடங்களில் காந்தியின் கொலை கொண்டாடப்பட்டது. இட ஒதுக்கீட்டின் தேவை குறித்து மீளாய்வு தேவை என்றும் விடுபட்ட சமூகங்களை ஒரே நேர்கோட்டில் அமர்த்த சட்டமியற்ற வேண்டுமெனவும் சிலர் வெளிப்படையாக பேசினர். இந்துத்துவாவின் கசப்பான விமர்சகர், எதிர்ப்பாளர் – அம்பேத்கரை உள்வாங்கும் முயற்சிகள் நடைபெற்றன. இதற்கிடையில், பல்கலைகழக‌ வளாகங்களில், “தேசியவாதி” களான A.B.V..P அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் வினையாற்றிவருகிறார்கள். சங்கின் (R.S.S) உத்தரவின் பேரில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் கல்வித்திட்டத்தை காவிமயமாக்க முயற்சி செய்துவருகிறது.

1924035_1261190253910368_4725582897040008481_n

இதை சதிப்புரட்சியென அரசியல் கோட்பாட்டாளர்கள் வர்ணிக்கக் கூடும். “அரசின் மறைமுக, நேரடி ஆதரவுடன் ஆதிக்க சக்திகள் நாட்டை பின்னுக்குத் தள்ள முயற்சிக்கிறார்கள். அவர்கள் பண்பாடு, பொருளாதார, அரசியல் தளங்களிலும், அதிகார மையங்களிலும் பின்தங்கிய மக்களுக்கு அதிக பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதுமாக உள்ள அரசியலமைப்பை, ச‌னநாயக நடைமுறையை வெறுக்கிறார்கள். சமத்துவத்தை முன்னிறுத்துகிற ஜோதி பா புலே,
சாவித்ரிபாய் புலே, அம்பேத்கர், பெரியார், பிர்சா முண்டா போன்றோரின் கொள்கைகளின் தாக்கம் வளர்ந்து வருவதை அவர்களால் சீரணிக்க இயலாது.

முதல் முறை அல்ல ;

சதிப்புரட்சி குழுக்க‌ள் எழுச்சியடைவது இந்திய வரலாற்றில் இது முதல் முறை அல்ல. கி.பி. 1ஆம் நூற்றாண்டு வாக்கில், புஷ்யமித்ர சங்கா வின் ஆட்சிக்காலத்தில் பௌத்தர்களின் செல்வாக்கை அழிப்பதற்கான தீவிர முயற்சி
மேற்கொள்ளப்பட்டது. சாதி, வர்ணம், பாலியல் பாகுபாடுகளுக்கு சட்ட ரீதியான, மத ரீதியான புனிதத்தன்மையை வழங்குகிற மநுஸ்மிருதி நூல்கள் இந்த காலகட்டத்தில்தான் எழுதப்பட்டன. அரசரின் ஆதரவுக் குழுக்களால் பௌத்தர்கள் படுகொலை நடந்தேறிய இக்காலத்தை இரத்தக்கறை தோய்ந்த சகாப்தமென சில வரலாற்றாளர்கள் சொல்வதுண்டு.

கி.பி 9 ம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியார் தலைமையில் மீண்டும் இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றன. கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவுவதற்காக கொடூர வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. பார்ப்பனியத்திற்குள் பெளத்தத்தை
அடக்கிட, புத்தர் விஷ்ணுவின் அவதாரமென அறிவிக்கப் பட்டார். இந்த அவதாரக் கற்பிதங்களை பிரபலப்படுத்த, 12ஆம் நூற்றாண்டில், கீத் கோவிந்த் போன்ற இலக்கியப் படைப்புகள் நயமாக பயன்படுத்தப்பட்டன.

அரசின் முழு ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்துத்துவ பரிவாரங்கள் நம்புகின்றன. இவர்களுக்கு தங்களின் நேரடி, மறைமுக ஆதரவு இருக்கிறது என்பதனை இன்றைய ஆட்சியாளர்கள் சூசகமாக

வெளிப்படுத்தி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற அரசியல் சக்திகளில் பெரும்பாலனவை, ஒன்று அதிகார மையங்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இணைந்துள்ளன அல்லது கள்ள மெளனம் காக்கின்றனர். வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட “தீவிர இந்துத்துவா” மீண்டும் இந்தியாவில் உள்நுழைகின்றதா? மற்றொரு சதிப்புரட்சிக்கான களத்தை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கின்றார்களா?

1801202_1235628739799853_1258882207256601881_o

சதிப்புரட்சிக்கு சவால் :

சதிப்புரட்சிக்கான களத்தை அவர்கள் அமைக்கவிடாமல் அதற்கு எதிர்தாக்குதலும் நடக்கின்றது. பல்கலைக்கழக‌ வளாக நிகழ்வுகளின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சதிப்புரட்சிக் குழுக்களின் தீவிர வெளிப்பாடுகளின் மூலமும் இது உறுதி செய்யப்படுகிறது. பல்கலைக்கழகங்களை முழுமையாக தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வராமல், சதிப் புரட்சியாளர்கள் தங்கள் இலக்குகளை அடைய இயலாது. அதே நேரத்தில், சமூக நீதியை ஆதரிக்கிற ஒடுக்கப்பட்ட சமூக மாணவர் குழுக்கள் இந்த சதிப்புரட்சிக் குழுக்க‌ளை எதிர்ப்பது மட்டுமல்லாமல் தங்களின் மரபுகளுக்கு பெருமிதங்கள் ஏற்படுத்தவும் முயல்கிறார்கள். இத்தகைய மோதலில் உருவான பதட்டங்களின் விளைவே, நிறுவன படுகொலையான ரோகித் வெமுலாவின் தற்கொலை.

உயர் கல்வி நிறுவனங்களில் தலித், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில‌ ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது. இட ஒதுக்கீட்டுக் கொள்கையின் அமலாக்கமும், கூடுதலான மக்கள் கல்வி பயில்வதும் இதற்கு காரணம். இந்த மாணவர்கள் அறிவு உற்பத்தி, பரப்புதலின் பாரம்பரிய அமைப்பை எதிர்ப்பதோடு தங்களின் மூல வேர்களை மீளக்கண்டறிகின்றனர். இந்த மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், பூலே, பிர்சா முண்டா ஆகியோர்களின் பெயர்களில் குழுக்களாக இணைகிறார்கள். தங்கள் உணவு சுதந்திரத்தின் பொழிப்புரையாக மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி திருவிழாக்களை நிகழ்த்துகிறார்கள். 2009 ல் ச‌வகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் துவங்கிய மகிசாசுர தியாகத் திருநாள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருகிறது. ஹைதராபாத்தில் ஆங்கில, வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தில் அசுரர் வாரமும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நரகாசுரன் திருநாளும் கொண்டாடப்பட்டது. இந்த பாரம்பரியம் விரிந்து பல சமூகங்களுக்கு பரவியது. மகிசாசுரனை வதம் செய்த தேவியை வணங்குகிற வங்கத்தில் கூட சில குழுக்கள் துர்கா பூஜைக்கு பதிலாக மகிசாசுர வீர மரணத்திருநாளை கொண்டாடத் துவங்கியுள்ளனர். மகிசாசுர தியாக தினப் போக்குகளுக்கு ஊக்கம் அளித்த புதுதில்லியில் உள்ள இருமொழி இதழுக்கு எதிராக சங்க‌ பரிவாரத்தின் குழு ஒன்று வழக்கு தாக்கல் செய்தது. இதிலிருந்தே அவர்களின் பதற்றம் பிரதிபலிக்கிறது.

வரலாற்றை மீண்டும் திருப்புகிற முயற்சிகளின் தோல்வி :

இங்கேதான் இந்து மத எழுச்சிக்கான சவால் உள்ளது. இந்து மத புனரமைப்புப் பாதையில் அறிவுத்தளத்தின் மீதான அவர்களின் இரும்புப்பிடி தளர்ந்து வருகிறது. புனரமைப்புச் சக்திகள் எப்போதும் தங்கள் இலக்குகளை அடைய
வன்முறை, மோசடி, உசுப்பேற்றல் போன்றவற்றையே பயன்படுத்தி வருகின்றனர் என்கிறார் மார்க்சிய சிந்தனையாளர். பேராசிரியர். செளத்திரம் . சுங்கா காலத்தில் பௌத்தர்கள் படுகொலை, 9 ஆம் நூற்றாண்டில் தெற்கில் சமணர், பனாரசில் பல்டுதாஸ், ராஜஸ்தானில் சாந்த் துக்காராம், மகாராஷ்டிராவில் மீராபாய் படுகொலைகளே இந்த குழுக்க‌ளின் இரத்தம் தோய்ந்த கடந்த காலத்திற்கான சான்றுகளாகும்.

ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்கள் ரோகித்திற்காகவும், JNU-விற்காகவும்,  உமர் காலித்திற்கு ஆதரவாக ...

ஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்கள் ரோகித்திற்காகவும், JNU-விற்காகவும்,உமர் காலித்திற்கு ஆதரவாக …

1) எதிர்ப்பு
2) தவறான பரப்புரை
3) ஆக்கிரமிப்பு

ஆகிய மூன்று படிநிலைகளில் இந்த சக்திகள் இயங்குகின்றன என்கிறார் செளத்திரம்.

கொப்பளிக்கும் உற்சாகத்துடன், இந்துத்துவாக் குழுக்க‌ள் ஒரே நேரத்தில் இந்த மூன்று உத்திகளையும் பயன்படுத்துகிறார்கள். கல்லூரி வளாகங்களில் சமத்துவத்தை போதிப்பவர்களை, தவறான தகவல் பரப்புரை மூலம்
எதிர்க்கின்றனர். அம்பேத்கர், அவரொத்த சிந்தனையாளர்களை உள்வாங்க‌ முயற்சிக்கிறார்கள். அவர்களது இந்த அபாய வழிமுறை, 21 ஆம் நூற்றாண்டில், ஜனநாயக அமைப்பில் வெற்றி பெறுமா? வன்முறையாலும் விஷ்ணுவின் அவதாரமாக புத்தரை பரப்புரைத்தும் பெளத்தத்தை அழித்த இந்தக் குழுக்க‌ள், ஜனநாயகம் உறுதியாக வேரூன்றிய, விழிப்புணர்வும் அறிவும் மேலோங்கிய, இன்றைய இந்தியாவில் அம்பேத்கருடன் அதனையே செய்ய முடியுமா? 1956ல் இந்து மதத்திலிருந்து விலகி, தனது சீடர்களை 22 சத்தியப் பிரமாணங்களுக்கு கட்டுப்படச் செய்தது போன்ற தரவுகளுடன், அம்பேத்கரை அவர்கள் உட்கிரகிப்பது அவ்வளவு எளிதானதா? “ கல்லூரி வளாகங்களில் சமத்துவ அடிப்படைத் தளங்கொண்ட வெகுமக்கள் (பகுஜன் ) சிந்தனைகளின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. “பூலே-அம்பேத்கர்-சாவித்ரி-பெரியார்-பிர்சா” ஆகியோரை போற்றுகிற முழக்கங்கள் தேசம் முழுவதுமுள்ள பல்கலைக்கழக வளாகங்களில் எதிரொலிக்கிறது “, என்கிறார் பார்வேட் இதழின் பதிப்பக ஆலோசகர் பிரமோத் ரஞ்சன்.

எழுச்சியடைந்து வரும் இந்துத்துவாவிற்கு பூலே-அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகள் உறுதியான சவாலாக அமையுமென ஆசிரியர்களும் மாணவர்களும் நம்புகின்றனர். இந்துத்துவா குழுக்கள் தங்கள் நம்பிக்கைகளையும், ” 5 எம் “ களுக்கு எதிரான வெறுப்பையும் விட்டுவிட விரும்பவில்லை. ஒடுக்கப்பட்ட பிரிவினர் அசுரர் பாதையில் தங்கள் மூல வேர்களை மறு வாசிப்பு செய்து வருகிறார்கள். இம்முறை சதிப்புரட்சி எதிர்கொள்கிற சவால்கள் வன்மையாகவும் வரலாறாகவும் உள்ளது.

ச‌வஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைக்கு எதிரான காவல்துறை நடவடிகைகளும் பல்கலை மாணவர்கள், ஆசிரியர்கள் மீது வலதுசாரிகள் நடத்திய தாக்குதலும் தேசபக்தி முத்திரையின் இறுதி விளைவு என எவரும் ஊகிக்கலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளின் இறுதி நிகழ்ச்சி நிரலைத்தான் காவல்துறை புலனாய்வு பிரிவின் அறிக்கை தாங்கியுள்ளது. அங்கு மகிஷாசுர திருநாள் கடைபிடிக்கப் பட்டதை மாவோயிஸ்ட் அமைப்புக்களின் செயல்பாடாக விவரிக்கிறது அறிக்கை. இது நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த அனைத்து இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாணவர் கூட்டமைப்புக்குப் பதிலாக காவல்துறை தவறுதலாக DSU வை அதில் தொடர்புபடுத்தியதாக நம்பினால் அது முற்றிலும் பிழையானதாகும். அது வெகுவாக திட்டமிடப்பட்டது. தங்கள் கலாச்சார அடையாளத்தை உறுதிப்படுத்துகிற தலித் மக்களின் பிரச்சாரத்தை முறியடிப்பதற்கான
களத்தை உருவாக்குவதற்கான யுக்தியின் ஒரு பகுதியாகும்.

ச‌வகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் சமூக தளங்கள் வெகுவாக மாறிவிட்டது. அதன் தாக்கத்தை உணர முடியும். மாணவர்களுக்கு எதிராக தேவையற்ற காவல்துறை நடவடிக்கைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில், ‘ஜெய்
பீம்’ என்ற முழக்கங்களை எழுப்பினர். தீவிர நடவடிக்கைகளுக்குப் பிறகு அரசு, பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது. எனினும், சதிப்புரட்சிக் குழுக்களுக்கு அந்த மாணவர்கள் அளித்த கடுமையான எதிர்ப்பு வரலாற்றின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

– மொழியாக்கம்- மு.ஆனந்தன் – anandhan.adv@gamail.com – 94430 49987

India Resists online Platform என்ற இணையத்தில் சஞ்சீவ் சந்தன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இக்கட்டுரை. மூலப்பதிவு – http://www.indiaresists.com/jnu-hindutva-counter-revolution-attempts-turn-back-clock-social-justice/

About சிறப்பு கட்டுரையாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*