Home / அரசியல் / தி.மு.க – தமிழக மக்களுக்கு மாற்றா? ஏமாற்றா?

தி.மு.க – தமிழக மக்களுக்கு மாற்றா? ஏமாற்றா?

தி.மு.க தான் தமிழக மக்களுக்கு ஒரே மாற்று என்று உடன்பிறப்புகளால் தொடர் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உண்மையிலேயே திமுக-தான் மாற்றா என்பதை, அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்தும், கடந்த ஐந்து ஆண்டுகளாக‌ அவர்களது செயல்பாட்டை வைத்தும் பார்க்கும் ஒரு பருந்து பார்வையிலான கட்டுரையே இது.

பூரண மதுவிலக்கு :

மதுவிற்கு எதிரான மக்கள் போராட்டத்தின் விளைவாக எல்லா கட்சிகளும், மதுவிலக்கு தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க‌ நிர்பந்திக்கப்பட்டுள்ளன. இதில் திமுகவின் தேர்தல் அறிக்கையில்- பூரண மதுவிலக்கு , அதே நேரம் இதனால் வேலையிழக்கும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வேலை, அரசுக்கு ஏற்படும் இழப்பிற்கு மாற்றுத்திட்டங்கள் என முதல் திட்டமே தாய்மார்களின் வயிற்றில் பால் வார்ப்பது போல இருந்தாலும் இதன் யதார்த்தத்தைப் பார்த்துவிடுவோம். தமிழகத்தில் உள்ள சாராயத் தொழிற்சாலைகளில் பாதித் திமுகவினருக்குச் சொந்தம், மீதி அ.தி.முக-வினருக்கு . ஏன் இந்தத் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கே சொந்தமாகச் சாராய ஆலைகள் இருக்கின்றன. ஒரு பக்கம் சாராய ஆலையை நடத்திக்கொண்டே மறுபக்கம் மதுவிலக்கு என்று சொல்கின்றது திமுக, இதைத் தான் நம்மூரில் “பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்” எனச் சொல்வார்கள். அப்படி உண்மையிலேயே திமுக பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தால் அதைத் தங்களது கட்சிக்காரர்கள் நடத்தும் சாராய ஆலையை மூடுவதன் மூலம் இன்றே தொடங்கலாம், தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை. அதைவிடுத்து பூரண மதுவிலக்கு என்று தேர்தல் அறிக்கையில் மட்டும் சொல்வது காற்றில் கத்தி வீசுவது போல, நல்லா பிரமாதமா வீசலாம்.

Tippler-Nadu

விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் , 150 நாள் வேலைத் திட்டம்:

இதுவரை தமிழக அரசியலில் காகித அளவில் பா.ம.க எழுதி வந்த விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் என்பதைத் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சேர்த்து தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் போடுவோம் எனக் கூறியுள்ளது. இதை விரிவாகப் பார்ப்பதற்கு முன் இந்திய அரசின் கொள்கை என்ன என்பதைச் சற்றுப் பார்த்து விடுவோம்… “விவசாயிகள் விவசாயம் தான் செய்வேன் என்று சொல்லக்கூடாது, வேறு தொழிலையும் செய்ய முயல வேண்டும்” – முன்னாள் பிரதம‌ர்-மன்மோகன் சொன்னவை. இதை அவர் சொன்ன பொழுது தி.மு.கவின் துணையுடன் காங்கிரசு இந்தியாவை ஆண்டது. இதற்கு என்ன பொருள் என்றால் இந்திய அரசு விவசாயக் கொள்கைகளிலிருந்து முற்றும் முழுதாகத் தொழிற்சாலை அல்லது சேவை சார் கொள்கைகளுக்குள் நகரப்போகின்றது. இந்தியாவில் இன்றும் பெருமளவு மக்கள் பணியாற்றுவது விவசாயமே , இம்மக்கள் விவசாயத்தை விட்டு, ஏதாவது கூலி வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்திய அரசு சொல்லும் செய்தி.

இதற்காகக் காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டது தான் 100 நாள் வேலைத் திட்டம். விவசாயத்திலிருந்து வெளியேறும் தொழிலாளர்கள் எல்லோரும் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டால் இங்கு ஒரு பெரிய கலகம் ஏற்படும், அதைத் தடுக்க வேண்டும் , அதே நேரத்தில் விவசாயத்திலிருந்து பெருமளவு தொழிலாளர்களை வெளியேற்றி வேறு தொழிலுக்குப் பழக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரசின் மூளையில் உதித்ததே 100 நாள் வேலைத் திட்டம். ஒரு புறம் விவசாயிகளுக்குத் தனி பட்ஜெட் போட்டுக்கொண்டே விவசாயி தொழிலாளர்களை வெளியேற்றும் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் எனக்கூறுகின்றது தி.மு.க. அத்தோடு பயிர்காலங்களில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத்திற்கே பயன்படுத்தபடுவார்கள் எனவும் கூறுகின்றது. அதை அவர்கள் எப்படிச் செய்வார்கள்?

அதுமட்டுமின்றி இன்றைக்கு மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளது, மேலும் குறைக்கும், அப்படியானால் இதற்கு மத்திய அரசு நிதி வழங்காது, சரி மாநில அரசாவது நிதி வழங்கமுடியுமா என்றால் திட்ட கமிசனை கலைத்து “நிதி ஆயோக்” என்ற அமைப்பின் மூலம் மாநிலங்களுக்கு வழங்கும் நிதியிலும் மத்திய அரசு மொத்தமாகத் துண்டைப் போட்டுள்ளது. அடைந்தால் “திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு” என்று தொடங்கி … “மத்தியில் கூட்டாச்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்று வெறும் முழக்கங்களை மட்டுமே எழுப்பிய திமுகவின் தலைவர்.கருணாநிதி மோடியின் பட்ஜெட்டை, பாஸ் மார்க் வாங்கிவிட்டார் என்று புகழ்ந்தும், திட்ட கமிசன் போன்றவை கலைக்கப்படும் பொழுது ஒரு சிறு துரும்பைக் கூடக் கிள்ளிப்போடாமல் மௌனமாக இருந்ததும் இங்கே நினைவு கூறத்தக்கது. காசே இல்லாமல் எந்தத் திட்டமும் போட முடியாது என்பது ஒரு சாமானியனுக்கு கூடத் தெரியும் உண்மை, அப்படியென்றால் தி.மு.க யாரை ஏமாற்றுகின்றது ?

20140731-14

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான விளை நிலங்கள் இன்று ஃபிளாட் போட்டு விற்கப்படுகின்றன. இதை ரியல் எஸ்டேட் முதலாளிகள் வெகு வேகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.  திமுக கட்சிக்காரர்கள் பகுதி ரியர்ல் எஸ்டேட் வணிகத்தை நடத்திவருகின்றனர். கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து தான் திமுகவினர் வீறு கொண்டு எழுந்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினார்கள். இன்று விவசாயிகளை காக்க வந்த தேவ தூதர்கள் போல தங்களைக் காட்டிக்கொள்ளும் திமுகவின் உண்மை முகம் இது தான்.

நீர்நிலைகளை மேம்படுத்த 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற வரியை படிக்கும் பொழுது கருணாநிதியின் விராணம் திட்ட ஊழலும் (புரியாதவர்கள் – சர்காரியா கமிசன் அறிக்கையைப் படிக்கவும்) ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமித்துத் திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட‌ வள்ளுவர் கோட்டமும், அரசு அலுவலகங்களும் தான் நினைவுக்கு வருகின்றது. இப்படி நீர்நிலைகளையெல்லாம் ஆக்கிரமித்து விட்டு ஆற்றில் உள்ள மணலை எல்லாம் கரூர். கே.சி.பழனிசாமி (காவிரி ஆற்று மணல் கொள்ளையன்), போன்ற உங்கள் கட்சிகாரர்களே அள்ளி விற்று வருகின்ற இந்நிலையில் எந்த நீர் நிலையை மேம்படுத்த போகின்றீர்கள்? எதற்காக 2000 கோடி ரூபாய் செலவில் தடுப்பணைகள்? நீங்கள் விவசாயிகளுக்காகத் தனி பட்ஜெட் போடுவது என்பது, மோடி கிசான் டிவி என்ற பெயரில் விவசாயிகளுக்குத் தனித் தொலைகாட்சி தொடங்கியது போலத்தான், இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை…

லோக் ஆயுக்தா :

முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க “லோக் ஆயுக்தா” சட்ட அமைப்பு உருவாக்கப்படும் என்று தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. “லோக் ஆயுக்தா” ஏற்கனவே இருக்கும் மாநிலங்களில் எப்படிச் செயல்படுகின்றது ? கடந்த பாரதிய சனதா அரசும், ரெட்டி சகோதர்களும் இணைந்து நடத்திய ஊழலை “லோக் ஆயுக்தா” வெளிக்கொணர்ந்தது, அதன் பின்னர்ப் பல ஆண்டுகளாக “லோக் ஆயுக்தா” அமைப்பின் தலைமைக்கு யாரும் நியமிக்கப்படவில்லை, இப்பொழுது தான் யாரை நியமிப்பது என‌ பரிசீலித்து வருகின்றார்கள், இப்பொழுது பரிசீலிக்கப்பட்டு வரும் நீதிபதிகள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானர்வர்களே. இது தான் “லோக் ஆயுக்தா” செயல்பட்டுவரும் நிலை. 1970களிலேயே “அறிவியல் பூர்வமான முறையில் ஊழல் செய்தவர்” என்று சர்காரியா கமிசனால்(வீராணம் திட்ட ஊழல்) சொல்லப்பட்ட கருணாநிதியும், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஊழல் (2G) என்று நடக்கவேயில்லை என்று சொல்லும் உடன்பிறப்புகளும் (சரி சி.பி.ஐ சொல்வது போலப் பெரிய அளவில் ஊழல் நடக்கவில்லை என்று வைத்துக்கொண்டாலும் கூட கலைஞர் தொலைகாட்சிக்கு எப்படி பணம் வந்தது ???) “லோக் ஆயுக்தா” போன்ற ஒர் அமைப்பை கொண்டு வந்து அதை எப்படிச் செயல்படாமல் அல்லது எதிர்கட்சியினரின் ஊழல்களை மட்டும் வெளிக்கொணரும் வகையில் செயல்படுத்துவது எனத் தெரியதா? அது மட்டுமின்றி கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த வித மக்கள் பிரச்சனைக்கும் பெரிய அளவில் போராடியிராத தி.மு.க – சிறை செல்லும் போராட்டம் நடத்தியது எதற்காக ? மக்களின், அரசின் நிலங்களைத் திருடிய தி.மு.க-வினரின் மேல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து என்பதை இங்கே நண்பர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன், இன்றும் கூட ஜெயலலிதாவின் கொடுமை தாங்க முடியவில்லை என்றாலும் அவருக்கு எதிராகப் பெரிய எதிர்ப்பலை உருவாகாமல் இருப்பதற்கு காரணம் சென்ற முறை கருணாநிதி குடும்பமும், தி.மு.க-வின் குறு நில மன்னர்களும் நடத்திய காட்டாச்சியை மக்கள் இன்னும் மறக்காமல் இருப்பதே.

கச்சத்தீவை மீட்போம்:

தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் பொழுது இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவதால் கச்சத்தீவை மீட்பது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திமுக கூறியுள்ளது. கச்சத்தீவு எதற்காக இலங்கைக்கு கொடுக்கப்பட்டது? இலங்கையுடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள இந்திரா காந்தியால் கொடுக்கப்பட்டது. காங்கிரசு ஆட்சியில் இருந்த பொழுதும் சரி, இன்று பாரதிய சனதா கட்சி ஆட்சியில் இருக்கும் பொழுதும் சரி இலங்கை இந்தியாவுக்கு நட்பு நாடு தான். இலங்கையுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இப்படி இருக்கும் பொழுது எப்படி கச்சத்தீவை திமுக மீட்க முடியும் ? வழக்கு தொடர்ந்தா? காவிரி மேலாண்மை வாரியம் கொடுக்கும் தீர்ப்பை மாநில அரசே மதிக்காத நிலையில், திமுக வழக்கு தொடர்ந்து அதில் நீதிமன்றம் கச்சத்தீவை மீட்கவேண்டும் எனத்தீர்ப்பளித்தால் கூட அது பரணில் எலி கடிக்கும் ஒரு காகிதமாகவோ, அல்லது கருணாநிதி ஆட்சியில் இருக்கும் பொழுது மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டு மனம் வெதும்பி மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்கள் எறியப்பட்ட குப்பைத் தொட்டிக்கோ தான் அனுப்பப்படும்… உண்மையாகவே கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றால் அது தமிழக மக்களின் ஒன்று திரண்ட போராட்டத்தினால் தான் முடியுமேயன்றி மாநில அரசால் அது முடியாது.

இலங்கைத் தமிழர்களுக்காக:

மேற்கூறிய இரு வரி வாக்கியமே தி.மு.க இன்று இருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கிக்கூறுகின்றது. ஈழத்தமிழர்களுக்காக அல்ல, இலங்கைத் தமிழர்களுக்காக. சரி இரண்டிற்கும் என்ன வேறுபாடு. ஈழத்தமிழர்கள் என்றால் அம்மக்களது சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுகின்றது, இலங்கைத் தமிழர்கள் என்றால் இலங்கையின் அரசியலமைப்பிற்குள் , அந்த அரசு போடும் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் எனப்பொருள். ஈழத்தமிழர்கள் என்று கூட கூறாத திமுக தான் கச்சத்தீவை மீட்போம் எனக்கூறுவது “கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற பழமொழியை நினைவூட்டுகின்றது.

ஈழத்தில் நடந்த போரை நிறுத்தக்கோரி கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகம்

ஈழத்தில் நடந்த போரை நிறுத்தக்கோரி கருணாநிதி நடத்திய உண்ணாவிரத நாடகம்

சாலையோர வியாபாரிகளுக்கு கடன்:

கந்து வட்டிக் கொடுமையிலிருந்து ஏழை எளியோரைக் காப்பாற்ற சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் 2000 ரூபாய் வரை வட்டியில்லா கடன்… பார்ப்பதற்கு ஏழை, எளியோருக்கான திட்டம் என்பது போலத் தெரிந்தாலும், இன்று கந்துவட்டிக்காரர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களே இதில் தி.முக, அ.தி.மு.க என்று கட்சி பேதமில்லை. உண்மை நிலை இப்படி இருக்கும் பொழுது தங்கள் கட்சிக்காரர்கள் வருமானத்திலேயே கைவைக்குமா தி.மு.க என்ற கேள்விக்கான பதிலை வாசகர்களாகிய உங்களிடமே விட்டுவிடுகின்றேன்.

பட்டதாரிகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் கடன்:

மோடியின் “Standup India – Startup India “ திட்டத்தைப் போலவே – சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு ரூ.1 இலட்சம் வரை கடன் மானியம் என்ற திட்டம் திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மின்சாரம், பல வரிகள் இரத்து என மானியங்களுக்கு மேல் மானியம் வழங்கப்படும் பெரு முதலாளிகள் மட்டுமே இங்குத் தொழில் நடத்த முடியும். ஏற்கனவே இங்குச் செயல்பட்டுவரும் சிறு, குறு தொழிற்சாலைகள் மின்வெட்டு உள்ளிட்ட பல பிரச்சனைகளால் நட்டத்தில் தான் இயங்குகின்றன. ஒட்டுமொத்த இந்திய அரசின் கொள்கையே பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக மாறியுள்ளது, இதே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பின்வரும் திட்டமும் உள்ளது “தொழில் தொடங்க 100 நாட்களில் அனுமதி” அது யாருக்கு? நடுத்தர‌ மக்களுக்கு ஒரு இலட்சம் பணம், ஆனால் பணக்கார முதலாளிகளுக்கோ அவர்கள் சொல்வதை மட்டுமல்ல, அதற்கும் மேலே செய்யும் தி.மு.க அரசு. இதைத் தான் கடந்த திமுக ஆட்சியின் பொழுது நோக்கியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மானியத்தில் பார்த்தோம். இவ்வளவு மானியங்கள் கொடுத்து இவர்களது ஆட்சியில் கொண்டு வந்த நோக்கியா நிறுவனம் தமிழகத்தை விட்டு ஓடிபோனப் பொழுது திமுக பெரிய போராட்டமெல்லாம் நடத்தவில்லை, இன்று தேர்தலுக்காக ஆளும் கட்சியை கிண்டல் செய்து ஒரு மின்பதாகையை (e-poster) மட்டுமே வெளியிட்டுள்ள‌து திமுக. 10,000 பேர் நடுத்தெருவுக்கு வந்தது, சென்னை, கடலூர் மக்களைச் சொல்லொண்ணா துயருக்கு ஆளாக்கிய மழை, வெள்ளம் எல்லாம் தி.மு.க-விற்கு ஆளும் அரசை கிண்டல் செய்யும் கருத்துகளேயன்றி அதற்காக அவர்கள் எந்தப் போராட்டத்தையும் செய்ய மாட்டார்கள், அதுவே அவர்கள் கட்சிக்காரர்கள் மேல் நில அபகரிப்புப் புகார் வீசப்பட்டால் சிறையை நிறைக்கவும் தயங்க மாட்டார்கள் என்றால் தி.மு.க யாரின் நலனுக்காகச் செயல்படுகின்றது ???

கல்வி கடன் தள்ளுபடி:

கல்வி கடனைத் தள்ளுபடி செய்வோம் எனத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. மக்கள் நல அரசு கல்வி, மருத்துவம் போன்றவற்றைத் தன் குடிமக்களுக்கு இலவசமாகத் தர வேண்டும். ஆனால் இந்தியாவில் கடன் வாங்கித் தான் கல்வி கற்க முடியும் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில் கல்வியை இலவசமாக அரசு அளிப்பதே முழுமையான தீர்வாக இருக்க முடியும். ஏன் தி.மு.க இலவச கல்வியை விடுத்து வெறும் கடன் தள்ளுபடியை மட்டும் கோருகின்றது, ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பொறியியல், மருத்துவ கல்லூரிகளில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளில் இருப்பவர்களாலேயே நடத்தப்படுகின்றது, திமுகவினரால் பகுதி அளவு கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. இலவச கல்வி என்றால் தங்கள் கட்சிகாரர்களின் பிழைப்பில் மண் விழுந்து விடும். மாணவர்கள் வங்கியில் கடன் வாங்கி அதை கட்சிகாரர்கள் நடத்தும் கல்லூரியில் கொடுக்க வேண்டும், பின்னர் அவை இரத்து செய்யப்படும், என்னே ஒரு மாந்தநேயம் பாருங்கள். மக்களின் கோரிக்கை இலவசக் கல்வியே.

அண்ணா உணவகம்:

மத்திய, மாநில அரசின் திட்டங்களினால் மக்கள் பொருளாதாரத்தில் கீழ்நிலையை நோக்கிச்செல்கின்ற‌னர், அவர்களின் கையில் உள்ள காசிற்கு ஒரு வேளை உணவையாவது கொடுத்து அவர்கள் அரசை எதிர்த்து போராடுபவர்களாக மாறுவதைத் தவிர்ப்பதற்காக ஜெயலலிதா என்ற முதலாளியின் (ஏனென்றால் மக்கள் அதற்கு காசு கொடுகின்றார்கள்) எண்ணத்தில் உதித்ததே அம்மா உணவகம்… இது தி.மு.கவிற்கும் ஏற்புடையது தான் அதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவை “அண்ணா உணவகம்” என்று அழைக்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் சொல்லாமல் விடப்பட்ட முக்கியப் பிரச்சனைகள்:

தொழிலாளர்களும் – புதிய‌ வேலைவாய்ப்புகளும் :

மத்தியில் உள்ள மோடி அரசு தொழிலாளர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச உரிமைகளையும் நீக்கும் “முதலாளிகளுக்கு ஆதரவான சட்டங்களை” உருவாக்கி வரும் இந்நிலையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கும் சட்டத்தை உருவாக்குவோம் எனத் தேர்தல் அறிக்கையில் கூட ஏன் திமுகவால் கூறமுடியவில்லை?

rtr1vvi6

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளும் , கலை , அறிவியல் பட்டதாரிகளும் படித்து வெளியே வருகின்றனர், இவர்களின் வேலை வாய்ப்பு தொடர்பாக ஏன் எந்தவொரு தெளிவான திட்டமும் தேர்தல் அறிக்கையில் இல்லை? ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்தாலும் சென்ற முறை அவர்க‌ள் கொண்டு வந்த நோக்கியா போன்ற நிறுவனங்களைத் தான் கொண்டுவரமுடியும், அவர்களும் மத்திய , மாநில அரசுகளுக்கு வரி பாக்கி வைத்துவிட்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களையும் நடுத்தெருவில் நிறுத்திவிட்டுச் செல்வார்கள். அதை எதிர்த்து திமுகவால் சுண்டுவிரலைக்கூட அசைக்க முடியாது. தேர்தல் அறிக்கைகளில் இருப்பதையே ஆட்சிக்கு வந்தால் செய்யாமல் இருக்கும் பொழுது தேர்தல் அறிக்கையிலேயே இல்லாத அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளைத் திமுக‌ உருவாக்குமா?

பெண்கள் :

இந்தச் சமூகத்தின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் நீண்டகாலக் கோரிக்கையான 33% இட‌ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கின்றோம் எனச் சொல்லும் திமுக ஏன் தேர்தலில் நிறுத்தும் வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு ஒதுக்கி தங்கள் நேர்மையைப் பறைசாற்றி ஒரு முன்னுதாரணமாகத் திகழக்கூடாது. காற்றில் கத்தி சுற்றுவது எளிது, களத்தில் சுத்துவது தான் கடினமான ஒன்று என்பது பழுத்த அரசியல்வாதியான கருணாநிதிக்கு தெரியாதா என்ன?

சாதி ஆணவக் கொலைகள்:

0

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 பேர் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளனர் . இப்படித் தமிழகம் சாதி வெறி போதையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தச் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் சட்டம் இயற்றுவோம் எனப் பெரியாரின் கொள்கைகளை இன்றளவும் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரே கட்சியான திமுக கட்சி ஏன் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை? சாதி வெறியர்களின் வாக்கு பறிபோய்விடும் என்ற அச்சத்தினாலா? ஏன் இன்னும் சாதி பார்த்தே வேட்பாளர்களை நிறுத்துகின்றது பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரே கட்சியான திமுக?

கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் போராட்டங்கள் தொடர்பாகத் தி.மு.க தேர்தல் அறிக்கையில் ஏதாவது இருக்கின்றதா ?

கூடங்குளம் அணு உலைக்கான ஒப்ப்ந்தம் போடப்பட்டதே திமுக ஆட்சியில் தான். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் போராடிய பொழுது அவர்கள் மேல் காவல்துறையை ஜெயலலிதா அரசு ஏவி ஒடுக்கிய‌ பொழுதும் கூட ஏதும் சொல்லாமல் அணு உலையை ஆதரித்தது திமுக. இன்று அவர்கள் மேல் போடப்பட்டுள்ள வழக்குகளை மட்டும் திரும்ப பெற வேண்டும் எனச்சொல்கின்றது, இதை ஏற்கனவே சென்னை உச்சநீதிமன்றம் பலமுறை சொன்ன ஒன்று தான். அணு உலையை ஆதரிக்கும் திமுகவினருக்கு சில கேள்விகள், கூடங்குளம் செயல்படத் தொடங்கிவிட்டதாகக் கூறப்பட்டுப் பல மாதங்கள் ஆகிய பின்னரும், தமிழகத்தின் மின்வெட்டு ஏன் குறையவில்லை? தமிழகம் ஏன் மின்மிகை மாநிலமாக மாறவில்லை? ஏன் பல மாதங்களாக ஏதாவது ஒரு பிரச்சனையினால் அணு உலை செயல்படாமலேயே உள்ளது ? அணு உலைகளை ஆதரிப்பதனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல உடன்பிறப்புகள் அனைவரும் கடமைப்பட்டவர்களே…

இப்பொழுதுள்ள நிலையில் கூடங்குளத்தில் மேலும் 3,4,5,6 என அணு உலைகள் என்பதை இரசிய அணு உலைகள் என முதல் இரண்டு அணு உலைகளை ஆதரித்த‌ இந்திய கம்யூனிசுட்டுக் கட்சிகளே எதிர்க்கும் நிலையில் திமுக அதை ஏன் ஆதரிக்கின்றது? சென்னை பெரு மழையையே பேரிடராக்கிய நிலைக்குத் தமிழக அரசு நிர்வாகமும் ஒரு வகையில் காரணமே, நிலைமை இப்படி இருக்க அணு உலை பேரிடர் ஏற்பட்டால் அதைத் திமுக அரசு மட்டும் எப்படிச் சரியாகக் கையாளும்? ஆழிப்பேரலை வந்த பொழுது ஸ்டாலின் சொன்னாரே முதல் முறையாக இதுபோன்ற ஒரு பேரலையைப் பார்க்கின்றோம் என, அது போல அணு உலை விபத்து நடந்தால் கூற மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்? முதலில் கல்பாக்கத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் சென்னை அதைச் சுற்றியுள்ள மக்களைக் காப்பாற்ற உங்களிடம் என்ன வழிமுறை இருக்கின்றது? அணு உலையை ஆதரிப்பதில் தேசிய கட்சிகளுக்குச் சளைத்ததல்ல திமுக. அணு உலை சந்தையின் மதிப்பு ஆறு இலட்சம் கோடி ரூபாய், அப்படியென்றால் அதில் எவ்வளவு ஊழல் செய்யலாம் என நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

கெயில் எரிவாயுகுழாய் எதிர்ப்பு போராட்டம்

கெயில் எரிவாயுகுழாய் எதிர்ப்பு போராட்டம்

காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதித்தது திமுக அரசு தான், அங்கு மீத்தேன் எரிவாயு எடுத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என எங்களுக்குத் தெரியாமல் அனுமதி கொடுத்துவிட்டோம் என அவர்கள் இன்று சொல்லும் பொய்யை தமிழக மக்கள் நம்பவில்லை. மீத்தேன் எரிவாயு எடுக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றியது தம் சாதனை என டி.ஆர்.பாலு அவரது இணையதளத்தில் பதிந்திருந்தது ஊர் அறிந்த இரகசியம். அதில் உங்களது கட்சியினருக்கு அந்த நிறுவனம் எவ்வளவு கொடுத்தது? மக்கள் போராட்டத்திற்குப் பின்னர் பின்வாங்கிய திமுக, இன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்க எந்த நிறுவனத்தையும் அனுமதிக்க மாட்டோம், அப்படி ஒரு நிலை நேர்ந்தால் பதவியையும் துச்சமாக கருதி விலகுவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கலாமே? ஏன் அப்படி அறிவிக்க முடியவில்லை “விவசாயிகள் நலன் காக்கும்” திமுக-வால் ?

அதே போல‌ கொங்கு மண்டல விவசாயிகளின் வாழ்கையையே நாசபடுத்தப் போகும் கெயில் எரிவாயுகுழாய் பதிப்பிற்கும் உச்ச நீதிமன்றம் இசைவு கொடுத்துள்ளது, அதுவும் எப்படி, இந்தத் திட்டத்தைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று கூறி தீர்ப்பு கொடுத்துள்ளது. “திராவிட நாடு.”, “மாநிலத்தில் சுயாட்சி” என்று பேசிய திமுகவும், உடன்பிறப்புகளும் தமிழர்களின் வாழ்வாதாரம் பறிபோகின்றதே, மாநிலத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றதே என எதைப் பற்றியும் கவலைப்படாமல் கடமை, கண்ணியம், கட்டுபாட்டுடன் வாழ்ந்து வருவதைத் தமிழக மக்களாகிய நாம் பார்த்து தான். இது தான் விவசாயிகள் நலன் காக்கும் திமுகவின் உண்மை முகம்.

தாது மணல் கொள்ளையால் தமிழகத்திற்கு பல இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்பட்டது என பல செய்திகள் வெளிவந்தன, இதனை விசாரிக்க ககன் தீப் என்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கை இன்றைய தமிழக அரசிடம் கையளிக்கப்பட்டது. தாது மணல் கொள்ளையில் ஈடுபடுவது வைகுண்டராசன் என்பதும், அவன் தான் ஜெயா தொலைகாட்சியின் அதிக பங்குகளை வைத்திருக்கின்றான் என்பதும் ஊரறிந்த இரகசியம். அதனால் தான் அந்த அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செயலலிதா பரணில் எலி கடிக்க விட்டிருக்கின்றார். அதிமுகவிற்கு ஒரே மாற்றான திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஏன் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாது மணல் கொள்ளை விசாரணை அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. ஏன் என்றால், வைகுண்டராசன் அதிமுக-விற்கு மட்டும் பணம் கொடுப்பவனல்ல, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்பவனே. (விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி படத்தில் வில்லன் கதாபாத்திரம் வைகுண்டராசனை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சும் உண்டு)

மதுரை மக்களின் வாழ்வாதாரத்தைச் சின்னாபின்னப்படுத்தி அங்கிருக்கும் மலையைக்கூட விடமால் திருடிய கிரானைட் கொள்ளையைப் பற்றி ஒரு வார்த்தை கூடத் தேர்தல் அறிக்கையில் இல்லையே, ஏன் அழகிரியின் மகன் நடத்தும் கிரானைட் ஆலைகள் நினைவுக்கு வந்துவிட்டதா? தேனிப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கவரும் நியூட்ரினோ திட்டத்தையும் திமுக எதிர்க்கவில்லை.

தமிழகத் தொழிலாளர்களின், விவசாயிகளின், பெண்களின், ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாப் பிரச்சனைகள் எதையும் கடந்த ஐந்து ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல் தங்களது கட்சிக்காரர்களின் மேல் நில அபகரிப்புப் புகார் ஏவப்பட்டதை மட்டும் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடத்திய திமுக, தமிழக மக்களுக்கு மாற்றல்ல, ஏமாற்றே.

நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*