Home / அரசியல் / அதிமுக- வை ஏன் மக்கள் வீழ்த்த வேண்டும்?

அதிமுக- வை ஏன் மக்கள் வீழ்த்த வேண்டும்?

2011 மே மாதம் நான்காம் முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்தாம் முறையாகவும் பதவியேற்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 2014, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டு சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றதும், முதல்வர் பொறுப்பிலிருந்து பதவியிறக்கம் செய்யப்பட்டதுமாக, ஒரு எட்டு மாதங்களை கழித்து விட்டால், ( ஓ. பன்னீர் செல்வம் ஆட்சிக்காலங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை) ஜெயலலிதா முதல்வராக ஆட்சி செய்தது நான்கு ஆண்டுகள் நான்கு மாதங்கள். 1991 – 96, 2002 – 2006 ஆகிய இரு ஐந்தாண்டு அதிமுக ஆட்சியும் தமிழகத்தின் இருண்ட காலங்களாகத் தான் இருந்தன. 2007 முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆண்ட திமுக அரசின் மீதான‌ அதிருப்தி அலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, ஜெயலலிதா கொடநாட்டிலிருந்து நேரடியாக தேர்தல் பரப்புரைக்காக மட்டும் மக்கள் முன் வந்து நின்றார். வெற்றியும் பெற்றார்.

“ஜெயலலிதா கொஞ்சம் திருந்தியிருப்பார்” என்று கணக்குப் போட்ட மக்களை முதல் சுற்றிலேயே கட்டையால் அடித்தார். பால் விலை உயர்வு, பேருந்து கட்டணம் உயர்வு என்று அடுத்தடுத்து ஓட்டுப் போட்ட மக்களுக்கு இடி விழுந்தது. சென்னை போக்குவரத்தின் பல நாள் கனவான, மெட்ரோ இரயிலை கிடப்பில் போட, மோனோ இரயில் கொண்டு வரப்படும் என்று அறிவித்த மறுகணமே கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து பின் வாங்கினார். ஆனால் வழக்கம் போல அவர் ஆட்சிக்கு வந்ததும், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் கை விடப்பட்டன. மோனோ இரயில் பற்றி இன்று வரை பேச்சு இல்லை.

13015419_10206350347383879_3243892238116446600_n

பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான திமுக அரசால் நிர்மாணிக்கப்பட்ட கோட்டூர்புர அண்ணா நூலகத்துக்கும் வேட்டு வைத்தார். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இலாபம் சம்பாதிக்க, சமச்சீர் கல்வியை முடக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்து, நீதி மன்றங்களிடம் தோல்வியடைந்தார். அதாவது தான் ஆட்சிக்கு வந்த முதல் ஓராண்டு, கடந்த‌ திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்குவது, மாற்றுவது, கைவிடுவது என்று செலவழித்தார். அல்லது அமைச்சர்களை பந்தாடுவது, அதிகாரிகளை பந்தாடுவது என வழக்கமான தனது விளையாட்டை தொடர்ந்தார்.

மக்கள் பிரச்சினைகள்

ஏழரை மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களிடம் “உங்களில் ஒருத்தி”யாக இருப்பேன் என பாசமழை பொழிந்த ஜெயலலிதா, 2012 சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே, 11போராட்டக்காரர்களை கைது செய்து, தேசத் துரோக வழக்குகளைப் போட்டு, தனது உண்மை முகத்தை காட்டினார். கூடங்குளம் மட்டுமல்ல, மீத்தேன், கெயில் திட்டம், பெப்சி, கொக்கோகோலா ஆலை எதிர்ப்பு என விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட தமிழக மக்களின் எல்லா வாழ்வாதாரப் போராட்டங்களையும் செயலலிதா தலைமையிலான அதிமுக அரசு ஆதரித்ததில்லை. மாறாக காவல் துறையைக் கொண்டு அப்போராட்டங்களை கடுமையாக ஒடுக்கியது, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றதுமே ஜெயலலிதா அதிமுக அரசின் வரலாறாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களின் அடிப்படை சனநாயக கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் எதிலும் அதிமுக தொண்டர்களோ, தலைமையோ பங்கேற்றதில்லை என்பதே வரலாறு. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த போது மட்டும் போராட்டம் என்கிற பெயரில், வரம்பில்லா வன்முறைகள் மாநிலம் முழுதும் அரங்கேறின. காவல் துறை நின்று வேடிக்கை பார்த்தது.

சட்டம் ஒழுங்கு – சாதி ஆணவக் கொலைகள்:

ஆட்சிக்கு வந்தவுடன், சங்கிலித் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடி விட்டதாக பெருமை பேசிய ஜெயலலிதாவின் கடந்த நான்கரை ஆண்டுகளில் 9000 கொலைகளும் 88500 கொள்ளைச் சம்பவங்களும் ( நன்றி தகவல்: மருத்துவர் ராமதாஸ் ) நடந்திருக்கின்றன. சென்னையில் நடந்த வங்கிக் கொள்ளை ஒன்றின் நெருக்கடி தாள முடியாமல், நான்கு அப்பாவிகளை வேளச்சேரி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தமிழக காவல் துறை. இளவரசன், கோகுல் ராஜ், திருப்பூர் சங்கர், தருமபுரி என ஆணவக் கொலைகளும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான சாதிய வன்கொடுமைகளும் கடந்த அதிமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு நிலைமையை எடுத்துரைக்கின்றது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அறிக்கையை முத்துஇராமலிங்கம் நினைவு நாளில் வெளியிட்டு ஆதிக்க சாதி மீதான தனது பாசத்தை வெளிப்படுத்தினார். கோகுல் ராஜை கொலை செய்த சாதி வெறியன் யுவராஜ், சொல்லி வைத்து சரணடைந்த போது தமிழக ஸ்காட்லாந்து யார்டு, டவுடர் கழன்று நின்றது. இதில் நான் குறிப்பிடாத ஆணவக் கொலைகளும், பெண்களுக்கெதிரான பதிவு செய்யப்பட்ட/படாத பாலியல் வன்கொடூரங்களும் அதிகமாக நடந்திருக்கின்றன. அங்கெல்லாம் உருப்படியாக கடமையைச் செய்யாத‌ பொறுப்பற்ற காவல்துறை, ஆசிரியர் பணிகளுக்காக போராடிய மாற்றுத் திறனாளிகளை நடத்திய விதம் அனைவரும் அறிந்ததே.

10013924_10206106694292704_2952515588043769627_n

சாராய சாம்ராஜ்ஜியம்:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 47 ஆம் பிரிவு, அரசு தன் மக்களின் உடல்நலத்தையும் ஊட்டச்சத்தையும் உயர்த்துவதை முதன்மைக் கடமையாகக் கொள்ள வேண்டுமெனவும், மருத்துவ நோக்கிற்காக அன்றி உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய எவ்வித நச்சுப் பானங்களையும் தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. ஆனால் இங்கே ஊற்றிக் கொடுப்பதே தமிழக அரசு தான். மதுவுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த சசி பெருமாள், செல்போன் டவர் மீது ஏறி போராடிய போது, உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் பற்றி எரிந்தன. பூரண மது விலக்கை நோக்கிய மக்களின் கோரிக்கை முன்னுக்கு வந்தது. வழக்கம் போல ஜெயலலிதா காவல்துறையைக் கொண்டு போராட்டங்களை ஒடுக்கத் தொடங்கினார். மதுக்கடைகளை முற்றுகையிட்டு போராடிய கல்லூரி மாணவர்களை இரும்பு ராடுகளில் தாக்கி இடுப்பு எலும்பை ஒடித்தும், சிறையில் அடைத்தும் கடும் வதைகள் நடந்தன. “டாஸ்மாக்கை மூடு” என்று பாடல் பாடியதற்காக மக இகவின் பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு,தேசத் துரோக வழக்கு அவர் மீது தொடரப்பட்டது. இவ்வளவு ஏன் தற்போது மதுவுக்கு எதிராக முழக்கமிட்ட இரு சிறுமிகளின் மீது கூட தேசத் துரோக வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன என்றால் எப்பேற்பட்ட சாராய சாம்ராஜ்யத்தின் கீழ் நாம் வாழ்கிறோம் என்று புரிந்து கொள்ளலாம். “மிடாஸ்” என்கிற மது ஆலையை நடத்தும் சசிகலா, இளவரசி போன்ற உடன்பிறவா சகோதரிகளின் வருவாய்க்காக, இரவு பகல் பாராது,டாஸ்மாக் கடைகளை காவல் துறை காத்து நின்ற வெட்கக் கேடும் தமிழகத்தில் நடக்கின்றது. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக, “படிப்படியாக மது விலக்கு” என்று ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் நா கூசாமல் வாசிக்கிறார். தமிழகத்தில் டாஸ்மாக் குறித்த முழுமையான தகவல்களை வாசிக்க “டாஸ்மாக்கினால் யாருக்கு இலாபம் ?” கட்டுரையை வாசிக்கவும்.

12745660_10205959355689331_4184516224775533204_n

மின் வெட்டும் கடன் சுமையும்:

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உச்சமடைந்த நேரத்திலும், கடுமையான மின்வெட்டு இருந்தது. அப்போதெல்லாம் மின்வெட்டுக்கு போராட்டக்காரர்கள் தான் காரணமென்று ஊடகங்கள் முழுதும் ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் மின் வெட்டுக்கு காரணம் தமிழக அரசின் கடும் மெத்தன போக்கே என்பதை மக்கள் சில நாட்களிலேயே புரிந்து கொண்டார்கள். வடசென்னையில் புதிதாக தொடங்கப்பட்ட இரண்டாவது அலகில் உள்ள இரண்டு யூனிட்டுகளும் பழுதானதால் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தடை பட்டது. மேட்டூர், வ‌ல்லூர் அன‌ல்மின் நிலைய‌ங்க‌ளில் ப‌ராம‌ரிப்பு கார‌ண‌ங்க‌ளுக்காக அடிக்கடி நிறுத்தப்பட்டன. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி பழுது, தீ விபத்து என இருந்த அனைத்து மின் நிலையங்களிலும் ப‌ழுது ஏற்ப‌டும் போதும், ப‌ராம‌ரிப்பு ப‌ணிக்காக‌ நிறுத்தி வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்றும் இன்னும் ஓரிரு நாளில் மின் உற்ப‌த்தி தொட‌ங்க‌ப் ப‌டும் என்றும் ஊட‌க‌ங்க‌ளில் செய்தி வெளியிடுவது வாடிக்கையாக இருந்தது. 2012 இல் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய உடன்குடி மின் உற்பத்தி நிலையம், இன்று வரை செயல்படாமல் இருக்கிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கிய கடும் மின் பிரச்சினையை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தமிழகத்தை மின் மிகை மாநிலமாக ஆக்குவதே எனது இலட்சியம் என்று சூளுரைத்தார்.ஆனால் அதிமுக அரசின் ஆட்சியில் 2013 ஆம் ஆண்டு வாக்கில், கடும் இருளில் தமிழகமே தவித்தது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் 10 மணி நேரமும், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 6 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 3 மணி நேரமும், நகர்ப்புறங்களில் அறிவிக்கப்படாத நிலையிலும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டதை மறக்க முடியுமா ? சிறுகுறு தொழில்கள், விவசாயம் அனைத்தும் மின்வெட்டால் முடங்கிப் போயின. 2013-14ம் ஆண்டில் வெளி மார்க்கெட்டில் மின்சாரம் வாங்க செலவழிக்கப்பட்ட தொகை 30,529 கோடி ரூபாய். இரண்டு ஆண்டுகள் இப்படி வெளிச்சந்தையில் வாங்கும் தொகையை மின் திட்டங்களில் முதலீடு செய்திருந்தாலே 8,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்திருக்கும் என ஒரு கணக்கு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யாமல், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் தத்தளிக்கிறது.

தனியார் மயமாகும் கல்வி:

ஸ்டேட் போர்டு, மெட்ரிகுலேஷன், ஓரியண்டல், ஆங்கிலோ இந்தியன் என கல்வியில் இத்தனை வேறுபாடுகள் இருந்தால், ஒரு சமூகத்தின் சமநிலை எப்படி சாத்தியமாகும் என்று கேள்வியெழுப்பி, கல்வியாளர் வசந்தி தேவி ஒரு கட்டுரை எழுதினார். இக்கருத்தை ஏற்றுக் கொண்ட திமுக, சமச்சீர் கல்வி குறித்தான முன்னெடுப்புகளை தனது ஆட்சிக் காலத்தில் செய்யத் தொடங்கியது. 2011 ஜெயலலிதா பதவியேற்ற‌ முதல் நடவடிக்கையாக, சமச்சீர் கல்விக்கு மூடுவிழா நடத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். நீதி மன்றங்களால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டாலும், இடைப்பட்ட காலங்களில் மாணவர்கள் பெரும் அலைக்கழிப்புக்குள்ளாயினர். அடுத்து அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி என்று அறிவித்து, படிக்கும் ஒரு சில ஆயிரம் மாணவர்களையும் கல்வியை விட்டே அடித்து விரட்டத் தொடங்கினார்.

ஜெயலலிதா ஆட்சி செய்த கடந்த ஐந்து ஆண்டுகளில் 2000-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. மாணவர் சேர்க்கை குறைவதால் அரசு பள்ளிகள் மூடப்படுகின்றன என்கிற காரணம் முன் வைக்கப்பட்டாலும், திட்டமிட்டே அரசு பள்ளிகளின் தரத்தை குறைத்ததையும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாத காரணத்தையும் அதிமுக அரசு விளக்கவில்லை. பள்ளி மானியக் கோரிக்கை கொள்கை விளக்க குறிப்புகளின்படி, கடந்த 2008–09ல், அரசு ஆரம்பப் பள்ளிகளில், 43.67 இலட்சம் மாணவர்கள் படித்தனர். இந்த எண்ணிக்கை, ஆண்டுதோறும் சரிந்து, 2012-13ம் ஆண்டில் 36.58இ லட்சமானது. அதேபோன்று, நடுநிலைப்பள்ளிகளில், 50.46 இலட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது, 45.3 இலட்சமாக குறைந்துள்ளது. அதாவது 2013 – 15 ஆகிய மூன்று கல்வியாண்டுகளில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த, 2008-09ல் 34.5 இலட்சமாக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை, தற்போது 45.4 இலட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைவால், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ, 1500 அரசு ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. 2015 கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையால் சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படி, 2000 பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிப்பதாகவும், 11 ஆயிரம் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களே பணி புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனியார் பள்ளிகள் லாபம் சம்பாதிக்க, சமச்சீர் கல்வியை எதிர்த்த ஜெயலலிதா, அது தோற்றுப் போகவே, தற்போது முழுமையாக கல்வியை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே அரசு பள்ளிகள் தொடர்ந்து மூடப்படுவதும் ஒரு பள்ளியோடு இன்னொரு பள்ளியை இணைக்கத் திட்டமிடுவதும் வெளிப்படையாகவே நடக்கின்றன. ஆசிரியர் பணியிட நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றாமை உள்ளிட்ட‌ சமூக நீதிக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் நடப்பு அதிமுக ஆட்சியில் அரங்கேறியிருக்கின்றன.

பொய்த்துப் போகும் விவசாயம்:

தமிழக விவசாயிகள் நிலை குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு தகவல் அறிக்கை முக்கியமானது. தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2011-ம் ஆண்டில் 623 பேர், 2012-ம் ஆண்டில் 499 பேர், 2013-ம் ஆண்டில் 105 பேர், 2014-ம் ஆண்டில் 68 நில உரிமையாளர்கள், 827 விவசாயத் தொழிலாளர்கள் என 895 பேர், 2015-ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் சுமார் 300 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்துள்ளது.

வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள், கட்டுப்படியாகும் கொள்முதல் விலை கிடைக்காதது, அந்த விலை முழுமையாக வழங்கப்படாதது, பெரு நிறுவனங்களுக்கு சாதகமான அரசின் கொள்கைகள் உள்ளிட்ட செயற்கை சுரண்டல்கள் என பலமுனை தாக்குதல்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகின்றனர். இதையெல்லாம் விட மிக முக்கியமான காரணம் மீள முடியாத கடன் சுமை தான். கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அந்த விலையைக் கூட வழங்க தனியார் சர்க்கரை ஆலைகள் மறுக்கின்றன. உரம், விதைகள் போன்ற இடுபொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்திருப்பதுடன், உழவுத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்திருப்பதால் விளை பொருட்களின் உற்பத்திச் செலவு கள் அதிகரித்திருக்கின்றன. இதனால் விவசாயம் நட்டம் தரக்கூடிய தொழிலாக மாறி விட்டிருப்பது தான் தற்போதைய அவல நிலை. ஆண்டுக்கு ஆண்டு இழப்பு அதிகரித்து வருவதால் உழவர்கள் வாங்கிய கடன் சுமையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடன் கட்டுக்கடங்காமல் செல்லும் போது உழவர்கள் தற்கொலை தடுக்க முடியாத ஒன்றாகி விடுகிறது. ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களையும் நகைக்கடன்களையும் தள்ளுபடி செய்தது போல, ஜெயலலிதாவால் செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. விவசாய நிலங்களில் கெயில் குழாய்களை பதிக்கும் போது, காவல் துறையை துணைக்கு அனுப்பி விவசாயிகளை ஒடுக்கிய ஜெயலலிதாவிடம் இத்தகைய மக்கள் நல கொள்கைகளை எதிர்பார்க்க முடியாது தான்.

ஊழல் முறைகேடுகள் அதிமுகவுக்கு புதுசா?

சொத்து குவிப்பு ஊழல் வழக்குகளுக்காக இருமுறை சிறை சென்ற முதலமைச்சர் என்கிற பெருமை ஜெயாவையே சாரும். ஓட்டுநர் வேலைக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டதில் பணம் வாங்கித் தரச் சொல்லி அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் அவரது ஆட்களும் மிரட்டியதால் முத்துக்குமாரசாமி என்கிற அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வாய் திறக்காத ஜெயலலிதா, ஊடகங்களில் பரபரப்பானதும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நீக்கினார். ‘டாப் 10 ஊழல் பெருச்சாளிகள்’ என பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள் பட்டியல் வெளியிட்டதும் நினைவிருக்கலாம்.

சில்லறை விற்பனையில் குறைந்த விலைக்குக் கிடைக்கும் முட்டைகளை, அதைவிட அதிக விலை கொடுத்து வாங்கும் கொடுமையும் நடந்தது. ‘கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி’ என்ற நிறுவனம் கர்நாடகத்தில் குழந்தைகள், கருவுற்ற பெண்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று தரமற்ற, பூச்சிகள் நெளியும் உணவுப்பொருளை வழங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிறுவனம். அந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு முட்டைகளை விற்றுக் கொண்டிருக்கிறது. சத்துணவு முட்டை கொள்முதலில் பல புதிய விதிமுறைகள் மாற்றப்பட்டு,
தமக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டது ஜெயா அரசு.

12651071_10205810132878854_796306369879226813_n

பருப்புக் கொள்முதல் ஊழல், ஆவின் பாலில் தண்ணீர் கலந்து தரமற்ற பாலை விற்று கொள்ளை லாபம் சம்பாதித்த அமைச்சர் வைத்தியநாதன் என கடந்த ஜெயா அரசின் ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 35.32 இலட்சம் டன் அரிசியில் 3.76 லட்சம் டன் அரிசி கடத்தப்பட்டதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை. ( 2011 – 12 ) தெரிவிக்கிறது. அதாவது 610 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன. கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை போன்ற இயற்கை வளச் சூறையாடல்களால், லட்சம் கோடி ரூபாய்கள் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. 1000 கோடி ரூபாய்க்கு அடித்துப் பிடுங்கி சசிகலா தோழிகள் வாங்கிய‌ சத்யம் திரையரங்குகளையும் ஒரு தகவலுக்காக இங்கு இணைத்துக் கொள்கிறேன்.

இலை மலர்ந்தது. ஈழம் மலர்ந்ததா ?

ஈழத்தின் இறுதி கட்டப்போரில் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாய் நம் உறவுகளை இழந்து நின்ற போது, கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, இந்திய அரசை ஆதரிக்கும் நிலை எடுத்ததால், அரசியல் அரங்கில் அவருக்கு மாற்றாக இருக்கும் ஒரே நபரான செயலலிதா ‘ஈழத்தாயாக’ உருவெடுத்தார். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என ஈழ ஆதரவு அரசியல் சக்திகளின் ஒரு சாராரால் கொண்டாடப்பட்ட ஜெயலலிதா அடிப்படையில் ஈழ விடுதலைக்கு எதிரானவர் என்பது ஒரு எளிய உண்மை. பாலச்சந்திரன் படத்தைப் பார்த்து கொந்தளித்த தமிழகம் 2013 மிகப்பெரும் மாணவர் போட்டத்தைச் சந்தித்தது. அனைத்து துறைகளைச் சேர்ந்த மக்களும் தொழிலாளர்களும் வீதிக்கு வந்த நடத்திய போராட்டத்தின் நெருக்கடியால், வேறு வழியின்றி ஈழ விடுதலைக்காக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா. அதுவும் பொருளாதாரத் தடையை பெயரளவில் கூட கடைபிடிக்கவில்லை.

இலங்கையுடனான பொருளாதார உறவைத் துண்டியுங்கள் என இந்தியாவிற்கு சட்டமன்றத்தில் கோரிக்கை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் ஆட்சியில் Sri Lankan Airlines உள்ளிட்ட பல இலங்கை நிறுவனங்கள் தமிழகத்தில் வழமை போல இயங்கத்தான் செய்தன. அவ்வளவு ஏன் தமிழகத்தில் உள்ள ஈழ ஏதிலியர் மேல் நடக்கும் கொடுமைகள் எண்ணிலடங்காதது. கொடுமை தாங்காமல் இரவி என்கிற ஈழத்தமிழர் முகாமிலே தன் உயிரை மாய்த்துக் கொண்டார். எழுவர் விடுதலையிலும் இன்று வரை நாடகமாடிக் கொண்டிருக்கிறார். மீனவர் பிரச்சினையிலும் பிரதமருக்கு எழுதிய‌ கடிதங்களைத் தவிர ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அடிப்படையில், இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கும் முழுமையாக சேவகம் செய்யும் ஒரு அரசாகத் தான் தமிழக அரசு இருந்தது.

அழுகும் ச‌னநாயகம்:

சாமான்ய‌ மக்களின் அரசியல் பங்களிப்பில், ஜனநாயக செயல்பாடுகளில், தேவையான ம‌க்க‌ள் பிர‌ச்சினைக‌ளை பேசுவ‌தில், விவாதிப்ப‌தில்,தீர்மான‌ங்க‌ள் நிறைவேற்றுவ‌தில்,ச‌ட்ட‌ங்கள் இய‌ற்றுவ‌தில் ம‌க்க‌ளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ பிர‌திநிதிக‌ளைக் கொண்டிய‌ங்கும் ச‌ட்ட‌ம‌ன்றத்தின் பங்கு அளப்பரியது. ஆனால் அப்படி ஒரு சனநாயக செயல்பாடு கடந்த நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியில் ஒரு நாளும் நடந்ததில்லை. மாற்றுக் கருத்துடைய எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவது வாடிக்கையாக இருந்தது. க‌டந்த ஆண்டு தலித் மக்களுக்கு எதிராக ஒரு மாபெரும் வெறியாட்டம் சாதி வெறி கும்பல் இராமதாஸால், தருமபுரியில் நடத்தப்பட்டது. கடும் மின்வெட்டு, விவசாயம் பொய்த்தது, காவிரி டெல்டா விவசாயிகள் தற்கொலை,ஸ்டெர்லைட் நச்சு ஆலை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் என எந்த மக்கள் பிரச்சினைகளுமே சட்டமன்றத்தில் பேசப்படவும் இல்லை. விவாதிக்கப்படவும் இல்லை. இந்த நெருக்கடிகளையெல்லாம் பேசாமல் அவர்களுக்கு அங்கு என்ன வேலை? என்று பார்த்தால் அது ஜெயலலிதாவை பாராட்டிப் பேசுவதும், கை வலிக்க மேசைகளைத் தட்டுவதும் என்ற அளவில் மட்டுமே வந்து நிற்கிறது. தனது பட்ஜெட் உரையில் சரியாக முதல் அரைமணி நேரம் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, பொற்பாதக் கமலம், அடியேன், தாயன்பு போன்ற சொல்லாடல்களையெல்லாம் அடி பிசகாமல் கூவுகிறார் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்ற அமைச்சர்களும் இன்று வரை காவிரித்தாய், ஈழத்தாய் என்றெல்லாம் மக்கள் மன்றத்தில் தனி நபர் துதி பாதி மகிழ்ந்தனர். ஒட்டுமொத்த அதிமுக கூடாரமே அடிமைகளின் கூடாரமாகவும், ஜெயலலிதா என்ற சர்வ வல்லமை பொருந்திய எதேச்சதிகாரிக்கு சேவகம் செய்யும் அடிமை வம்சமாகவும் மாறிப் போயிருப்பது நமது ஜனநாயக விழுமியங்களைத் தேடும் வரலாற்றுப் பாதையில் ஒரு கொடூர நகைச்சுவைக் காட்சி. அதுவும் அடிமைகளில் யார் விஞ்சி நிற்பது என்று இன்றைய சட்டசபையில் ஒரு கடும் போட்டியே நிலவுகிறது. சபை விதி எண் 110ன் கீழ் தான் முதல்வர் ஜெயலலிதா எப்பொழுதும் பேசுவார். விதி எண் 110 – முதல்வர் பேசி முடித்தவுடன் அதன் மேல் யாரும் பேசக்கூடாது, கேள்வி கேட்கக் கூடாது.வேண்டுமானால் நன்றி தெரிவித்து உரையாற்றலாம். இப்படியான 110 விதியின் கீழ் 189 அறிவிப்புகளைச் செய்தார் ஜெயலலிதா. அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற வில்லை என்பதும் தனிக்கதை.

11073568_10204083714359470_1095854032558991474_n

இந்துத்துவ அரசியல் வேரூன்றல் :

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களிலிருந்து, ஜெயலலிதா ஆட்சி வரை இந்துத்துவ சங்க பரிவாரங்களின் கிளை பரப்பலுக்கு அதிமுக அரசு முழுமையாக‌ உதவியிருக்கிறது. அயோத்தியில் இராமர் கோயில் கட்ட, கரசேவைக்கு செங்கல் அனுப்பியதிலிருந்து தொடங்குகிறது ஜெயலலிதாவின் சங்க பரிவாரப் பாசம். மத்தியில் நரேந்திர மோடி பதவியேற்ற சில காலங்களில், இந்துத்துவ வெறியாட்டங்கள் அதிகரித்தன. மாட்டுக்கறி உண்டதாக சந்தேகிக்கப்பட்டு அஹ்லாக் எனும் முதியவர் உ.பி மாநிலத்தில் கொல்லப்பட்ட போதும், 3 எழுத்தாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தேவாலயங்கள் இடிக்கப்பட்டு சிறுபான்மையினர் தாக்கப்பட்ட போதும் தமிழகத்திலிருந்து ஜெயலலிதா ஒரு சிறு கண்டன அறிக்கை கூட வெளியிடாமல் மெளனமாகவே இருந்தார். தேர்தலில் அதிமுக நிற்காத இடங்களில் பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுங்கள் என சோ ராமசாமி மக்களுக்கு அறிவுரை வழங்கும் அளவுக்கு, பா.ஜ.கவுக்கும் அதிமுகவுக்கும் இருக்கும் இந்துத்துவக் கொள்கை உடன்பாட்டை புரிந்து கொள்ளலாம்.

சர்வாதிகாரி :

ஜெயலலிதா ஒரு ச‌னநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த போதும் ஒரு முழுமையான சர்வாதிகாரியாகத் தான் இருக்கிறார். அவருக்கு இணையாக ஒரு அணு அசைவதையும் அவர் விரும்புவதில்லை. அவர் பொற்பாதங்களில் அமைச்சர்கள் அடிமைகளாக விழுந்து கிடப்பதை மட்டும் ரசிப்பவர் அல்ல ஜெயலலிதா. தமிழக மக்கள், அரசு அதிகாரிகள், காவல் துறை என எல்லா மட்டங்களும் தனக்கு கீழ் தான் என்கிற அதிகார போதையின் உச்சத்தில் இருக்கிறார். மத்திய அமைச்சர்களே முதல்வரை சந்திக்க முடியாது என்கிற நிலை இருக்கும் போது, சாமானிய‌ மக்கள் எப்படி அவரை சந்திக்க முடியும். ஐந்தாண்டுகளில் ஐந்து முறை மட்டுமே ஊடகங்களை சந்தித்திருக்கிறார். ஆகவே ஜெயலலிதாவின் அனுமதிக்காக பல மக்கள் திட்டங்கள் காக்க வைக்கப்பட்டிருக்கின்றன. அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை மீண்டு விடுதலையாகும் வரை, எந்த அரசு அலுவல்களும் நடக்கவில்லை. ஓ.பவிலிருந்து, எல்லா அமைச்சர்களும் ஜெயலலிதாவின் விடுதலைக்காக, கோவில் குளம் என சுற்றியலைந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். இந்த காவடிகளில் ஒரு சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கூட கலந்து கொண்டனர்.

அமைச்சர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாது. “அம்மாட்ட கொண்டு போறேங்க” என்கிற அளவில் மட்டும் அமைச்சர்களின் அதிகாரம் கட்டுப் படுத்தப்பட்டிருந்தது. அரசு அதிகாரிகள் முக்கிய முடிவுகளுக்காக முதலமைச்சரை சந்தித்து ஒப்புதல் பெறுவது என்பது குதிரைக் கொம்பாக இருந்தது. இந்த நடைமுறை, ஜெயா ஆட்சியின் இறுதியில் மக்களுக்கு ஒரு மிகப்பெரிய செயற்கைப் பேரிடரை பரிசளித்தது.

கன மழை பெய்ய இருப்பதால், இப்பொழுதே செம்பரம்பாக்கம் ஏரியின் நீரைத் திறந்துவிடலாம், இதனால் கன‌ மழை பெய்யும் பொழுது நீரைத் திறந்துவிடத்தேவையில்லை எனத் தொடங்கி, கன மழை பெய்யத் தொடங்கி விட்டது இப்பொழுதாவது நீரைத் திறந்து விட அனுமதி கொடுங்கள் என மாறி, இறுதியில் ஒரு நள்ளிரவில் ஏரியிலிருந்து பெருமளவிலான நீர் வாய்கால்கள் வழியே வெள்ளமாக திறந்து விடப்பட்டு சென்னையே வெள்ளக்காடானது. இந்த செயற்கை பேரிடர் பல நூறு மக்களின் உயிரையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்நாள் சேமிப்பையும் தின்றது.
இந்நடவடிக்கை ஜெயா அரசின் மக்கள் விரோத அலட்சியப் போக்கிற்கு ஒரு தக்க சான்று. தன்னார்வலர்களும் மற்ற இயக்கங்களும் சென்னை மழை வெள்ளத்தில் முழுமையாக‌ களப்பணியாற்ற, அதிமுக தலைமையிலான அரசு முழுமையாக முடங்கிக் கிடந்தது. அதிமுக அமைச்சர்களை மக்கள் விரட்டியடித்தனர்.

12002082_10205077882813060_5697102841719135928_n

இன்றளவும் தேர்தல் பரப்புரைக்காக வான் மார்க்கமாக ஜெயலலிதா பறந்து கொண்டிருக்கிறார். சாலை மார்க்கமாக சென்று மக்களின் வாழ்வு எப்படியிருக்கிறது என்று அறிந்து கொள்ள கொஞ்சம் கூட அவருக்கு அக்கறையில்லை. ஹெலிபேட் அமைப்பதற்காக‌, 4000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன. ஏழெட்டு ஏர் கூலர்களோடு தான் மட்டும் ஒரு தனி மேடையிலும், வேட்பாளர்கள் அடுத்த மேடையிலும் அமர்த்தப்படுகின்றனர். தப்பித் தவறி கூலர் காற்று மற்றவர்களுக்கு போய், ஜெயலலிதாவின் காதில் ஒரு துளி வியர்வை வழிந்து விட்டால்? ஒரு புறம் இப்படியிருக்க, மதியம் மூன்று மணிக்கு ஜெயலலிதா வருகிறாரென்றால், காலை 11 மணியிலிருந்து சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வைக்கப்பட்டு ஐந்து பொதுமக்கள் இதுவரை உயிரிழந்திருக்கின்றனர். “ஐந்தாண்டு அதிமுக ஆட்சி மக்களுக்கு வசந்தத்தை வீசியிருக்கிறது. உங்களுக்காக நான் தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று வெயிலில் இறக்கும் எளிய மக்களைப் பார்த்து கேலி செய்கிறார்.

ஜெயலலிதா இரும்புப் பெண்மணி தான். 30,000 மக்கள் நலப்பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி நடுத்தெருவில் நிறுத்திய இரும்புப் பெண்மணி. ஜெயலலிதா புரட்சித் தலைவி தான். இரண்டு முறை ஊழல் வழக்கில் சிறை சென்று, சிறை மீண்டு வெளிவரும் வரை, தமிழக அரசையே முடக்கி வைத்த புரட்சித் தலைவி. தமிழகமே வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த போது, சொகுசு ஊர்தியில் அமர்ந்து கொண்டு, வாக்காளப் பெருமக்களே என அழைத்த “ம‌க்களின் முதல்வர்” அவர். மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்றே நாட்களில் கொட்டித் தீர்த்தது என வாட்ஸப்பில் நொந்து கொள்ளும் தங்கத் தாரகை அவர். கேரளாவில் முதல்வர் உம்மன் சாண்டியை சாமானிய மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்க முடியும். பாண்டிச்சேரி முதல்வர் சாலையோரங்களில் டீ குடிக்கிறார். கெஜ்ரிவால் காலையில் நடை பயணம் செய்கிறார். மக்களோடு தான் நாங்கள் இருக்கிறோம் என காட்டிக் கொள்ள‌ குறைந்த பட்சம் மற்றவர்கள் நடிக்கவாவது செய்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை சாமானிய மக்கள் சந்திப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. தேர்தல் காலங்களைத் தவிர மக்களுக்கும் அவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மக்களைப் புறக்கணித்து விட்டு, அந்தரத்தில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா போன்ற சர்வாதிகாரிகளை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் அனுப்புவதே, இன்று மக்களாகிய நம் முன் இருக்கும் கடமை.

–விசை ஆசிரியர் குழு – இளந்தமிழகம் இயக்கம்.

கேலிசித்திரங்கள் – நன்றி கார்ட்டூனிஸ்ட் பாலா

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*