Home / அரசியல் / பாமக , பாசக கட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

பாமக , பாசக கட்சிகளை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்?

கடந்த ஐம்பது ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளும் மாற்று அரசியல் பற்றிய விவாதத்தை எழுப்பியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க. வுக்கு மாற்று என்பது அவர்களுடைய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளுக்கான மாற்று என்றுதான் பொருள். அதை விவாதப்படுத்தாமல் அவர்களைவிட மோசமான கொள்கைகளைக் கொண்டவர்கள் தங்களை மாற்று என்று தலைதூக்குவதுதான் இன்றைய மாற்று அரசியல் களத்தின் பரிதாபமாக இருக்கிறது.

எல்லாக் கட்சிகளும் ஊழல் எதிர்ப்பு, டாஸ்மாக் எதிர்ப்பு, திறமையற்ற நிர்வாகம் என்பதை மட்டுமே இந்நாட்டின் சிக்கல்களாக முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுகின்றனவே ஒழிய திராவிடக் கட்சிகள் அமல்படுத்திய எந்தெந்த தவறானக் கொள்கைகள் இந்த நெருக்கடிகளுக்கு காரணமாயிருக்கின்றன என்று பேசத் தயாராயில்லை. இது ஒரு பொதுப்போக்காக இருக்கிறது. சாதியவாதத்தையும் மதவாதத்தையும் இனவாதத்தையும் கொள்கையாக கொண்ட கட்சிகள் தங்களை மாற்று என்று சொல்வது இன்னொரு போக்காக இருக்கிறது. இக்கட்சிகள் உண்மையிலேயே மாற்றாக அமைய முடியுமா? அப்படி இவர்களின் கைக்கு அரசியல் அதிகாரம் போனால் அது சமூக வளர்ச்சிக்கு துணை செய்யுமா? என்பது நம்முன் இருக்கும் கேள்விகள்.

பெயரோ பாட்டாளி மக்கள் – செய்வதோ சாதி அரசியல் – சேவையோ கார்ப்பரேட்களுக்கு!

பா.ம.க. சாதிவெறி அரசியல் கட்சியா?

ஒரு குறிப்பிட்ட சாதியை ஒரு கட்சியோ அமைப்போ அணி திரட்டினாலே அவ்வமைப்பை சாதிய அமைப்பு என்று நாம் சொல்வதில்லை. அந்த அமைப்பின் கோரிக்கைகள் முதலாவது அளவுகோலாக அமைகிறது. அந்த அமைப்பின் அரசியல் உள்ளடக்கம்தான் அதன் வரலாற்றுப் பாத்திரத்தைத் தீர்மானிக்கின்றது. தனக்கு மேல் இருக்கும் சாதிகளின் சாதி அடிப்படையிலான அரசியல், பொருளாதார, சமூக ஆதிக்கத்திற்கு எதிராகவும் தமது சனநாயக உரிமைக்களுக்காவும் அவ்வமைப்புப் போராடினால் அது வரலாற்றுரீதியில் முற்போக்கானப் பாத்திரத்தை வகிக்கிறது. ஏனெனில், சாதி அடிப்படையிலான அனைத்து வகையான ஏற்றத் தாழ்வுகளையும் களைந்து ஒரு தேசிய சமூகத்தைப் படைப்பதும் அதன்வழி சாதியை ஒழிப்பதுமே இன்றளவில் முற்போக்காகும். இதில் சாதி ஒழிப்பை அந்த அமைப்பு இலட்சியமாக கொண்டிருக்காவிட்டாலும் அவ்வமைப்பின் செயல்பாடுகள் சாதிய ஏற்றத் தாழ்வுகளுக்கும் மேல் கீழ் மதிப்பீடுகளுக்கும் எதிராக அமையுமென்றால் அந்த அமைப்பும் முற்போக்கானப் பாத்திரத்தை வகிப்பதே ஆகும். சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக அணி திரட்டப்பட்டால் அல்லது அணி திரட்டப்பட்ட மக்களைப் பயன்படுத்தினால் அது சாதி இறுக்கத்திற்கு துணைசெய்து தமிழ் மக்கள் ஒற்றுமைக்கு தடையாகி அழிவுக்கே வழிவகுக்கும் என்பதால் அவ்வமைப்புகளைப் பிற்போக்கானவையாக வரையறுக்கிறோம். இதுதான் ஒரு கட்சியை எப்படிப் பார்ப்பது என்பதற்கான வரையறை. எனவே, சாதி அடிப்படையிலான எல்லா அணி திரட்சியையும் நாம் சமப்படுத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, இலங்கையில் சிங்களர்கள் தமிழர்களை அடக்கி ஒடுக்கவும் அடிமைப்படுத்தவும் தங்களை அணி திரட்டுவதற்கும் தமிழர்கள் தங்களைச் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அணி திரட்டுவதற்கும் உள்ள வேறுபாட்டை எல்லோரும் ஏற்றுக் கொள்வர். சிங்களர்கள் செய்யும் அணி திரட்சி இன ஒடுக்குமுறைக்கானது. தமிழர்கள் செய்யும் அணி திரட்சி இன விடுதலைக்கானது.

எளிமையாகச்  சொல்வதானால் ஒடுக்குவதற்காக, சனநாயக உரிமையை மறுப்பதற்காக, சலுகைகளையும், தனி உரிமைகளையும் பெரும்பான்மை அடிப்படையில் கோருவதற்காக, ஆதிக்கம் செய்வதற்காக சாதி, மத, தேசிய அடிப்படையிலான அணி திரட்சிகள் ஆதிக்கத்திற்கானதாகும்.  சனநாயக உரிமைக்காக, தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக செய்யப்படும் சாதி, மத, தேசிய அடிப்படையிலான அணி திரட்சிகள் ஆதிக்கத்திற்கு எதிரானது. ஆதிக்கத்தை எதிர்க்கிறோம்; ஆதிக்கத்திற்கு எதிரானதை ஆதரிக்கிறோம்.

chithirai vizha marakanam violence

இதன்படி   சாதி ஆதிக்கத்திற்கு எதிராக தலித் மக்களிடையே நடக்கும் சாதி அடிப்படையிலான அணி திரட்சியை ஆதரித்து நிற்கிறோம். தலித் மக்களுக்கு தமது சாதியடையாளம் இழிவாக இருப்பதால் வரலாறுதோறும் அவர்கள் அந்த அடையாளத்தைக் கைவிடத் தயாராய் இருந்துள்ளனர்; இருந்து வருகின்றனர்.  காங்கிரசு, கம்யூனிஸ்ட், திராவிட, தமிழ்த் தேசியம் என்று எல்லா அரசியல் நீரோட்டத்திற்கும் தலித் மக்களே சமூக அடித்தளமாக இருந்து வருகின்றனர். அவர்கள் எந்த அரசியல் அடையாளத்திற்குள் அடியெடுத்து வைத்தாலும் மீண்டும்மீண்டும் அவர்கள் மீது சமூக அடையாளத்தைச் சுமத்துவது இந்த சாதிய சமூகம்தான். எனவே, சாதியடையாளத்தைக் கைவிட மறுப்பவர்கள் தலித் மக்கள் அல்ல. சாதியைப் பெருமையாக கருதுபவர்கள், சாதியால் அரசியல் பொருளாதார ஆதிக்கம் செய்பவர்கள், சாதியால் வரலாற்றுரீதியாகப் பலனடைந்தவர்கள்தான் அதை கைவிட மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அவ்வகையில் சாதி அடையாளத்தைக் கைவிட மறுப்பவர்கள் தலித் அல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக சாதியப் படிநிலையில் மேல்தட்டுகளில் இருப்பவர்கள்தான் சாதியடையாளத்தைக் கைவிட மறுத்துவருகிறார்கள். எனவே, நாம் ஒருபோதும் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிதிரளும் தலித் இயக்கத்தையும் சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தச் செயல்படும் சாதி அமைப்புகளையும் ஒரே தட்டில் வைப்பதில்லை.

இப்போது பா.ம.க. வுக்கு வருவோம். 1987 இல் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி வன்னியர் சங்கம் போராடியதும் அதில் உயிர் தியாகம் செய்ததும் தமிழ்ச் சமூகத்தின் சமூகநீதி இயக்கத்திலும் சாதி ஒழிப்பு வரலாற்றிலும் இருந்து பிரித்தெடுக்க முடியாததாகும். இந்தப் போராட்டப் பின்னணியில் 1989 இல் பூத்ததே பா.ம.க. வாகும்.  1994 இல் தேர்தலில் போட்டியிடுகிறது. அம்பேத்கர் சிலைகள் திறப்பு, ’தமிழ் குடிதாங்கி’ அரசியல், வன்னியர் – தலித் மக்கள் ஒற்றுமை, ஈழ ஆதரவு மாநாடு, புலிகள் ஆதரவு, தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், தலித் எழில் மலைக்கு அமைச்சர் பொறுப்பு, தலித் ஒருவருக்கு(திரு.வடிவேல் இராவணன்) துணைப் பொதுச் செயலாளர் என்று வன்னியர் அடையாளத்தில் இருந்து பொது அடையாளத்திற்கு வருவதற்கான பல செயல்பாடுகள் இருந்தன. இந்த போக்கு ஒருபுறம் இருக்கும் போதே 1999 இல் பா.ச.க. கூட்டணிக்குள் தி.மு.க. வோடு பா.ம.க. வும் அடியெடுத்து வைத்து இந்துத்துவ எதிர்ப்பில் தமக்கு இருக்கும் உறுதியற்றத் தன்மையை வெளிப்படுத்தியது. 1994 முதல் 2011 வரையிலான இந்தப் பயணத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பா.ச.க. கட்சிகளோடு கூட்டணி வைத்து எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர் பதவிகளை அனுபவித்தது பா.ம.க. 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்ததும் 2011 சட்டமன்றத் தேர்தலில் வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும் வெற்றியடைந்ததும் பா.ம.க. வை வேறு அரசியல் திசையில் வழிநடத்தியது. அதன் நீலச் ( பாட்டாளி?) சாயம் வெளுக்கத் தொடங்கியது.

தலித் எதிர்ப்பு அரசியலைக் கையில் எடுத்தது பா.ம.க. காதல் திருமண எதிர்ப்பு, இளவரசன் திவ்யா பிரச்சனை, இளவரசன் கொலை, தலித் அல்லோதார் பாதுகாப்புக் கூட்டமைப்பு, நுகும்பல், சேஷசமுத்திரம், திருநாள்கொண்டச் சேரி ஆகிய இடங்களில் தலித் மக்கள் மீதான வன்முறையாட்டங்கள் என்று பலவற்றையும் செய்து பா.ச.க. வுடன் கூட்டணி வைத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தலித் மக்களுடைய குடியிருப்புகளின் சாம்பல் மேட்டில் வெற்றிக்கொடி நாட்டினார் அன்புமணி.

caste groupism

தமிழர் ஒற்றுமை அரசியல் தேர்தல் நலனுக்கு எடுபடவில்லை என்பதால்  தேர்தல் நலனுக்காக தலித் எதிர்ப்பு அரசியல். இவ்வளவே பா.ம.க. வின் கொள்கை அரசியல். எழுத்திலும் பேச்சிலும் ஆயிரம் உன்னதமான விசயங்களைப் பேசலாம். ஆனால், தேர்தலை மட்டுமே அதிகாரத்திற்கான ஒற்றைக் கொள்கையாக கொண்ட கட்சிகளின் சமூக அடித்தளம் அக்கட்சிகளை யாருடன் கூட்டணி வைக்க அனுமதிக்காது என்பதைக் கொண்டு அதன் உண்மையான கொள்கையைத் தீர்மானித்துவிடலாம். பா.ம.க. கூட்டணி வைக்காத கட்சியே இல்லையெனலாம். கேவலம் பா.ச.க.வுக்கு கூட காங்கிரசோடும் கம்யூனிஸ்ட்களோடும் கூட்டணி இல்லை என்ற கொள்கை இருக்கிறது. பா.ம.க. வுக்கு அப்படி எதுவும் இல்லை.

தமிழகத்தில் நடந்துவரும் வேகமான ஏகாதிபத்தியப் பொருளாதார வளர்ச்சி விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கிறது. கிராமப்புறக் கூலி விவசாயிகள் கிராமங்களைவிட்டு வெளியேறி நகரங்களுக்கு நகர்ந்துவந்து நகர்ப்புறப் பாட்டாளிகளாக வாழ்ந்து வருகின்றனர். விவசாயம் வீழ்ந்ததால் கிராமங்களிலேயே வாழ்ந்துவரும் சிறு விவசாயிகளின் வாழ்க்கையும் சீரழிந்து வருகின்றது.  இந்நிலையில், சிறு விவசாயிகளிடம் உருவாகியுள்ள இயல்பான அதிருப்தியை அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக வளர்த்தெடுக்காமல் தலித் மக்களுக்கு எதிராகத் திருப்பி அரசியல் ஆதாயம் அடைந்த கட்சிதான் பா.ம.க.

ஒட்டுமொத்த வன்னியர்களில் 85% பேர் சிறு விவசாயிகளும் கூலிகளும் ஆவர். சொற்பமான நிலவுடையாளர்களும், கணிசமான அரசுப் பணியாளர்களும், வன்னிய சாதியைச் சேர்ந்த பெரு முதலாளிகளும் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு சாரார் பா.ம.க. கட்சியில் இருக்கிறது. உண்மையில் பா.ம.க. ஒட்டுமொத்த வன்னியர்களின் பிரதிநிதி இல்லை. வன்னியர்களிடையே திராவிட அரசியலுக்கு இடதுசாரி அரசியலுக்கு தமிழ்த் தேசிய அரசியலுக்கு செல்வாக்கு உண்டு. அப்படியிருக்க வன்னியர்களில் உள்ள ஒரு சிறு ஆளும் வர்க்க சக்திகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்குமான கட்சியாக பா.ம.க இருக்கின்றது. அந்தப் பிரிவினரின் நலனுக்கு அரசியல் அரங்கில் பேரம் பேச வன்னிய உழைக்கும் மக்களில் ஒருபகுதியினரை வன்னியர்கள் என்ற சாதியடையாளத்தின் கீழ் அணி திரட்டிக் கொண்டுள்ளது பா.ம.க.

இடைநிலை சாதிகளிடம் இருக்கும் தலித் எதிர்ப்பு உணர்வை ஊதிப் பெருக்கி, வன்முறையைத் தூண்டிவிட்டு அதில் வாக்கு அறுவடை செய்வதால் பா.ம.க. வை சாதிவெறிக் கட்சி என்று வரையறுக்கின்றோம். இதுபோன்ற கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடுவதால் இவர்கள்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் உண்மையான நண்பர்களாக இருக்கின்றனர்.  அணு உலை எதிர்ப்பு, ஈழ ஆதரவு, மீத்தேன் திட்ட எதிர்ப்பு, கெயில் எதிர்ப்பு என எந்தப் பிரச்சனையானாலும் அதில் வெற்றியடைய ஒரு சாதியை மட்டும் திரட்டினால் போதாது. அந்தப் பிரச்சனையால் பாதிக்கப்படும் எல்லா சாதியைச் சேர்ந்த மக்களையும் திரட்டியாக வேண்டும். ஒரு சாதியைக் கீழ் என்று சொல்லி அவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தி அவர்கள் உரிமையை மறுத்து சாதிய சமூகத்திற்கு மாறான தேசிய சமூகமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு  உள்ளுக்குள் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகவும் வெளியில் இருந்துவரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட வேண்டிய காலகட்டத்தில் சாதிப் பெருமையைப் பேசிக் கொண்டு தலித் மக்களுக்கு எதிராக அரசியல் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளுக்குமானப் போராட்டத்தையும் சவப்பெட்டியில் அடைக்கும் பா.ம.க. போன்ற கட்சிகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

 பா.ம.க. – தி.மு.க. , அ.தி.மு.க. வுக்கு மாற்றா?

ஒற்றுமையும் வேற்றுமைகளும்

கொள்கைதி.மு.க. , அ.தி.மு.க.பா.ம.க.
சாதி எதிர்ப்புஎல்லா சாதி கட்சிகளோடு கூட்டணி, சாதி ஆதரவு அரசியல் அனைத்தும் உண்டுநேரடியாக சாதிக் கட்சி, தலித் எதிர்ப்பு அரசியல்
மதவாத எதிர்ப்புபோலி எதிர்ப்பே உண்டு. பா.ச.க. வோடு கூட்டணி வைத்தவை1999, 2004 இரண்டுமுறை பா.ச.க. வோடு கூட்டணி
பொருளியல் கொள்கைஉலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைஉலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கை
வாரிசு அரசியல்கருணாநிதி – ஸ்டாலின்எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாஇராமதாசு – அன்புமணி
ஊழல்உண்டுஅன்புமணி மீது இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் உண்டு.
மாநில உரிமைகள்அறிக்கைகள் விடுவதோடு சரிஅறிக்கைகள் விடுவதோடு சரி
ஈழம்அடையாள ஆதரவுஅடையாள ஆதரவு. 2009 ஆம் ஆண்டு கடைசி நிமிடம் வரை காங்கிரசு ஆட்சியில் அமைச்சர் பதவியில் இருந்தார் அன்புமணி.
தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது50 ஆண்டுகள்இருந்ததில்லை

இதுவரை ஆட்சியில் இருந்ததில்லை என்பதும் நேரடியாக ஒரு சாதியைப் பிரதிநிதித்துவம் செய்வதும்தான் திராவிடக் கட்சிகளுக்கும் பா.ம.க. வுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஆகும். பா.ம.க. எப்படி இக்கட்சிகளுக்கு மாற்றாக முடியும்?

PMK-Blaze cartoon

பா.ம.க. வால் அதிகாரத்திற்கு வர முடியுமா?

  1. பா.ம.க. தனித்துப் போட்டியென்றும் அன்புமணியை முதல்வராக ஏற்கும் எந்தக் கட்சியும் வரலாம் என்று சொல்லியும் ஒரு கூட்டணியை உருவாக்க முடியவில்லை. உண்மையில் எந்தக் கட்சியும் அன்புமணியை முதல்வராக ஏற்கத் தயாரில்லை என்பதே இதில் இருந்து பெறப்படும் செய்தி. பா.ம.க. தனிமைப்படுத்தப்பட்டதன் அப்பட்டமான வெளிப்பாடு இது.
  2. தென்பெண்ணைக்கும் பாலாற்றுக்கும் இடையில் மட்டும்தான் பா.ம.க. என்றக் கட்சி இருக்கிறது என்று இருவாரத்திற்கு முன்னான துக்ளக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்னியர்கள் தென் தமிழகத்தில் இல்லை. வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும்தான் இருக்கிறார்கள். பா.ம.க. வால் 27 ஆண்டுகளாகியும் வடக்கு தமிழகத்தில் மட்டும் செல்வாக்குப் பெற்றுள்ள ஒரு வட்டாரக் கட்சியாகவே நீடிக்கிறது. பொதுவில் சாதியின் வட்டாரத் தன்மையும் குறிப்பில் வன்னிய சமூகத்தின் வட்டாரத் தன்மையும் பா.ம.க. வின் எல்லைகளைத் தீர்மானித்து நிற்கிறது. கடைசியில் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றெல்லாம்கூட பா.ம.க. பகல் கனவு கண்டது.
  3. வன்னியர் அல்லாத அனைத்து சாதிகளும் பா.ம.க. என்ற வன்னியர் கட்சியை ஏற்றுக் கொள்ளாது. தன்னை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொண்டு எழுந்துவரும் பொழுது இயல்பில் பிற சாதிகளுக்கு எழும் அச்சமே இதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. ஆனால், வன்னிய சமூகத்தின் சாதி உணர்வை அறுவடை செய்யத் துடித்த பா.ம.க. தன்னை சாதிப் புதைக்குழியில் சிக்க வைத்துக் கொண்டதே ஒழிய மக்களை இதற்கு குறைசொல்ல முடியாது.
  4. அறிக்கைவிடுவது போராட்டங்களின்போது அடையாளமாக ஆதரவு தருவதெல்லாம் பா.ம.க.வில் அறிக்கை எழுதிக் கொண்டிருக்கும் பாவேந்தனைப் போல் ஒருவர் இருந்தால் எந்த லெட்டர் பேட் கட்சியும் செய்ய முடியும். தன்னுடைய கட்சி உறுப்பினர்களை மக்களுடையக் கோரிக்கைகளுக்காக வீதியில் இறக்குவதுதான் கடினம். சுமார் 27 ஆண்டுகளாகியும் இதை செய்ய முடியாததால்தான் இன்றும் சித்திரை விழாவில் வன்னிய குலசத்திரிய அரசியலை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

மேற்படி உண்மைகள் எல்லாம் பா.ம.க. வுக்கே தெரியும். இந்த தேர்தலில் அதிகபட்சம் 8 தொகுதிகளில் ஜெயிக்கலாம் என்பது பா.ம.க. வட்டாரத்தில் வரும் பேச்சு. பெண்ணாகரம் தொகுதியிலேயே வெல்வது கடினம்தான் என்றும் சொல்கிறார்கள் சிலர். தேர்தல் முடிவுகள் எல்லாவற்றிற்கும் விடைதரும். பா.ம.க. இப்போது தனித்து நின்று பெறும் வாக்கு சதவிகிதம் அடுத்த தேர்தலில் பேரம் பேசுவதற்கு உதவும். மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு, பா.ச.க. வோடு கூட்டணி வைக்கத்தான் போகிறார்கள்.

சாதிவெறிக் கட்சியென்பதால் சாதாரண காலங்களிலேயே நாம் இவர்களோடு ‘அன்னந் தண்ணிப்’ புழங்குவதில்லைதான். அப்படியிருக்கும் போது தேர்தலில் எப்படி ஆதரிப்போம். ஆதரிக்கவே மாட்டோம். சடங்கு போல் வரும் தேர்தல் அறிக்கையைப் பார்க்கவே தேவையில்லை. இருந்தாலும் 143 பக்கத்திற்கு தொண்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப நேர்த்தியுடன் பா.ம.க. கொண்டு வந்திருப்பதால் பக்கங்களைப் புரட்டி விடுவோமே. யாரும் அதைப் பார்த்து ஏமாந்துவிடக் கூடாதல்லவா?

பக்கத்திற்கு பக்கம் பளப் பளக்கும் மேற்கோள்கள்:

லூ வோ சி, ரோசா லக்சம்பர்க், தாமஸ் ஜெபர்சன், காந்தி, வள்ளுவர், அவ்வை, காரல் மார்க்ஸ், வின்செண்ட் சர்ச்சில், பெரியார், பான் கீ மூன், கவிஞர் வாலி, நவநீதம் பிள்ளை, விவேகானந்தர், நம்மாழ்வர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார், வி.ஆர். கிருஷ்ணய்யர், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பலரது மேற்கொள்கள் போட்டதில் பேச்சுப் போட்டிக்கு தயாராகும் ஒரு பள்ளி மாணவரின் நேர்த்தி தெரிகிறது. அதை மட்டும் எடுத்து ஒரு சிறு வெளியீடு கொண்டு வந்து குழந்தைகளைப் படிக்கச் சொல்லலாம்!

 அரசியல்:

  1. பா.ம.க.வின் கொள்கை சமூக ஜனநாயகம் என்று பிரகடனப்படுத்தி மேற்கத்திய முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ள விழுமியங்களை எங்கிருந்தோ ’கட் காபி பேஸ்ட்’ செய்து போட்டிருக்கிறார்கள். ”வன்னியர் ஓட்டு அன்னியருக்கில்லை” என்று செம்பில் சத்தியம் வாங்கும் திண்ணை மேடைகளில் பா.ம.க. காரர்கள் இதைப் பற்றி பேசுகிறார்களா? என்று தெரியவில்லை.
  2. ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்புகள், நூறு நாள் சட்டமன்றக் கூட்டம், ’மாண்புமிகு’வுக்கு பதிலாக அன்புள்ள ’அடைமொழி’, காவல் நிலையத்தில் ‘சி.சி.டி.வி’ எல்லாம் சரிதான். ஐயா, சின்ன ஐயா அடைமொழியெல்லாம் எந்த ஊர் சனநாயகத்தில் இருக்கிறதென்று தெரியவில்லையே?
  3. தி.மு.க., அ.தி.மு.க. வுக்கு இருப்பது போல் அறிவுசார் குழுவொன்று பா.ம.க. வுக்கு இருப்பதால் தேர்தல் அறிக்கை என்ற அளவில் பல்வேறு சமூகப் பிரிவுகளுடையக் கோரிக்கைகளைக் கொண்டு வந்ததிலும் முந்தி நிற்க முடிகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பது தெளிவாகிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு. தி.மு.க. வின் தேர்தல் அறிக்கையில் மாநில சுயாட்சி முதல் தலைப்பு. பா.ம.க. வின் தேர்தல் அறிக்கையோ வழி நெடுக ’மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைப்போம், வேண்டுகோள் வைப்போம்’ என்று சொல்லிவிட்டு கடைசி பக்கத்தில் கூட்டாட்சி பற்றி பேசுவதிலேயே தெரிந்துவிடுகிறது அவர்களின் அரசியல் கண்ணோட்டம்!

தனியார்மய , தாராளமய சந்தைப் பொருளாதாரம்:

சாதிக் கட்சிகள் எப்படி கார்ப்பரேட் அடியாளாக இருக்கிறது என்பதற்கு தேர்தல் அறிக்கையே சாட்சி.

தொழில்துறை:

அன்னிய முதலீட்டை ஈர்க்க 5 மண்டலகங்கள் ஆணையரகம் அமைக்கப்படுமாம், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள இயற்கை வளங்களைக் கண்டறிந்து அதற்கேற்ற தொழில்களைத் தொடங்கி அன்னிய மூலதனத்தை வரவேற்பார்களாம். வெளிமாநிலங்களுக்கு வெளிநாடுகளுக்கும் முதல்வர் (அதாவது அன்புமணி) பயணம் சென்று முதலீட்டை ஈர்ப்பாராம். மொத்தத்தில் தமிழ்நாட்டின் மோடி மாதிரி என்று புரிந்துகொள்ளுங்களேன். முதலீட்டு ஈர்ப்புப் பிரச்சாரம் செய்வாராம். ஏழு நாளில் மின்சாரம் இணைப்பாம். இன்னும் எத்தனை எத்தனையோ திட்டங்கள். ஒரு இலட்சம் பேருக்கு வேலை, தொழில் திறன் பயிற்சி என்றெல்லாம் சொல்கிறது அறிக்கை.

 தொழிலாளர்களுக்கு வேலைப் பறிப்பு, ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, ஆலைமூடல் ஆகியவற்றைத் தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என்று ஒருவரி கூட இல்லை. தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்கும் திட சித்தம் இல்லையென்று சொன்னால் தானே மூலதனத்தை ஈர்க்க முடியும். கனகச்சிதமாக அறிக்கையில் இது பளிச்சிடுகிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் பற்றியும் குறிப்பேதும் இல்லை.

 ஒரு பக்கம் விவசாயத்தைப் பாதுகாத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுப்புறச் சூழல் நலன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இன்னொரு பக்கம் இவையனைத்துக்கும் ஆப்பு வைத்த உலகயப் பொருளாதாரக் கொள்கையை தி.மு.க. , அ.தி.மு.க. வைவிட தாங்கள் எபப்டி சிறப்பாக அமல்படுத்துவோம் என்று சொல்கிறது அறிக்கை.

விவசாயம்:

வட்டியில்லா கடன், விவசாயத்திற்கென்று மூன்று அமைச்சர்கள், மதிப்புக் கூட்டுத் தத்துவம், பிரேசிலில் இருப்பது போல் ஒரு வாரத்தில் மின் இணைப்பு, சூரிய ஒளி மின்னாற்றலுக்கான உபகரணங்கள், நன்செய் நிலப் பாதுகாப்பு, 1 டன் கரும்புக்கு 4200 ரூ, எத்தனால் உற்பத்தி, குளிர்பதனக் கிடங்கு, உணவுப் பதனிடும் தொழிற்சாலைகள், கருவேல மர ஒழிப்பு, தோட்டக் கலைப் பல்கலை கழகம் , வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்று அறிக்கை நீள்கிறது. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்று கலந்து கட்டிய ஃப்ரூட் மிக்சராக காட்சி தருகிறது.

வேளாண் சிறப்பு மண்டலங்கள் விவசாயத்தைக் கார்ப்பரேட்மயமாக்கும் முயற்சி. இடுபொருட்களை விற்கும் நிறுவனங்களின் இலாபக் கணக்கில் சிக்கிக் தவிக்கிறான் விவசாயி. அந்நிறுவனங்களிடம் இருந்து உரம், பூச்சி மருந்து ஆகியவற்றை இலவசமாக கொடுப்பது, கடன் ரத்து எல்லாம் ’கம்பெனிகளின்’ கல்லாவையும் குறைவின்றி நிரப்பிவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. விவசாயத்தை நவீனமயப்படுத்தல், இயற்கை வேளாண்மை இவற்றுக்கிடையே இருக்கும் சிக்கல்கள் பற்றிய கொள்கைரீதியான பார்வையோ தீர்வோ முன்வைக்கப்படவில்லை.

கல்வி:

தனியார் பள்ளிகளில் படித்தாலும் அரசே பணம் கொடுத்துவிடும் என்று சொல்லி எல்லோருக்கு இலவசக் கல்வி என்று சொல்கிறது அறிக்கை. தனியார் பள்ளிகளுக்கு இலாபமோ இலாபம். அரசு பள்ளியைவிட்டு எல்லோரையும் தனியார் பள்ளியை நோக்கி விரட்டிவிடலாம். ’ஆள்வரவில்லை’  என்று சொல்லி மெல்ல அரசுப்பள்ளிக்கு மூடுவிழா நடத்தலாம். இப்போது தனியார் பள்ளிகளில் இருக்கும் 25% இட ஒதுக்கீட்டைக் கூட அமல்படுத்தாதப் பள்ளிகளின் பணப்பையை நிரப்புவதற்கு வாக்குறுதி தந்துவிட்டார்.

மேலும் மாணவர்களின் உயர் கல்விக் கடனையும் ரத்து செய்வதாக சொல்கிறது அறிக்கை. கல்விக் கடனைக் கட்ட முடியாமல் போனதற்கு என்ன காரணம்? 540 பொறியியல் கல்லூரிகள் எதற்கு? தனியார் பொறியியல் கல்லூரி கல்வி முதலாளிகள் பணம் சம்பாதிக்கவா? தேவை மற்றும் வழங்கலை ஒழுங்கப்படுத்துவதற்கு மாறாக கல்விக் கடனை ரத்து செய்வதென்பது தனியார் கல்வி முதலாளிகளுக்கான கோரிக்கையா? மாணவர்களுக்கான கோரிக்கையா?

மருத்துவம்:

இதுதான் அன்புமணியின் சூப்பரோ சூப்பர் வாக்குறுதி. மருத்துவர் அல்லவா? தனியார் மருத்துவமனையிலும் இலவசமாக மருத்துவமாம். அரசே மருத்துவமனைக்கு பணத்தைக் கட்டிவிடுமாம்.

முதலில் ஏற்கெனவே இருக்கும் காப்பீட்டுத் திட்டக் கதையைப் பார்த்துவிடுவோம். 2003 இல் கர்நாடகாவிலும் 2007 இல் கேரளாவிலும் 2009 இல் தமிழகத்திலும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் அமலுக்கு வந்தன. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி அரசு மருத்துவமனையில் விலையுயர்ந்த சிகிச்சைப் பெறுவது குறைவாகவே உள்ளது. இந்த 7 ஆண்டுகளில் தனியார் மருத்துவமனைகளுக்கு செய்யப்பட்டுள்ள பணப்பட்டுவாடா எவ்வளவு தெரியுமா? 2500 கோடி ரூபாய். இதைக் கொண்டு 15 பல்நோக்கு மருத்துவமனை கட்டியிருக்கலாம் என்று மருத்துவத் துறையை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அன்புமணி ஆட்சிக்கு வந்துவிட்டால் தனியார் மருத்துவமனைக்கு அரசு பணம் கட்டும். தனியார்மயம்! தனியார்மயம்! தனியார்மயம்! வலிமையான தமிழகம் படைக்க அன்புமணியின் தாரக மந்திரம்.

சமூக சனநாயகம்:

ரோசா லக்சம்பர்க்கின் மேற்கோளோடு சமூக ஜனநாயகப் பற்றை பறைசாற்றும் அறிக்கையின் உள்ளே வெளிப்படும் சனநாயகத்தின் மீதான அக்கறை இதோ.

தலித் மக்கள்:

அகமணத் திருமண முறையை ஒழிக்க வேண்டும் என்று ஆணித்தரமாக சொன்ன அம்பேத்கரிடம் இருந்து இவர்கள் எடுத்துக் கொண்ட மேற்கொள் திறமையான அரசு நிர்வாகம் பற்றியதாகும். தலித், பழங்குடிகள், சிறுபான்மையினர் எல்லோருக்கும் சேர்த்து இரண்டு பக்கள் அறிக்கையில் ஒதுக்கியுள்ளனர். நல்ல வேளையாக தலித் அல்லாதோர் கூட்டமைப்பில் வைத்த ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை வைக்கவில்லை! அன்புமணி முதல்வராக வேண்டுமல்லவா!

பெண்கள்:

இதுதான்  மிகச் சிறந்த நகைச்சுவை. பெண்கள் நலன் பற்றி அறிக்கையில் வரும் வரிகள் அப்படியே இங்கே

“ உலகின் உன்னதமான பிறவி என்றால் அது பெண்கள்தான். அவர்கள்தான் இந்த உலகின் ஆக்கும் சக்திகள் ஆவர். அவர்களால்தான் குடும்பமும், சமுதாயமும் ஊரும் மாநிலமும் நாடும் முழுமைப் பெறுகின்றன. இத்தகைய சிறப்பு மிக்க மகளிருக்கு உரிய அங்கீகாரம் வழங்க இதுவரை ஆண்ட தமிழக அரசியல் கட்சிகள் தவறிவிட்டன.

பெண்களை மதிக்காத வீடும், பெண்களை நிம்மதியாக வாழ அனுமதிக்காத நாடும் சாத்தானின் சாபத்திற்கு ஆளானவையாகக் கருதப்படும். மனித குலத்திற்கு உயிரை வழங்கிய மகளிரைப் போற்ற வேண்டியது அனைவரின் கடமையாகும்.”

திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அடித்து வீட்டில் முடக்கியவர்களின் வரிகளே இவை. சாத்தான் வேதம் ஒதுகிறது. ஆனால், பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவோம் என்று சொல்லி காதல் திருமணங்களைத் தடுப்பதற்கான தங்களுடைய இராஜதந்திரக் கோரிக்கையை மறக்காமல் வைத்துவிட்டது.

வன்னியப் பெண்களுக்கு மட்டும் பா.ம.க. எதிராகவில்லை. வன்னிய இளைஞர்களின் திருமண உரிமை பறிக்கப்படும்போதும் வாய் மூடிக் கிடக்கிறது பா.ம.க. மேற்கு தமிழகத்தில் வன்னியர்களை ‘பள்ளி’ என்று தரக்குறைவாக அழைக்கப்படும் சாதி ஆதிக்கம் நிலவி வருகிறது. வன்னிய இளைஞர்கள் கவுண்டர் சாதியைச் சேர்ந்தப் பெண்களைக் காதலிக்கும்போது அந்த இளைஞர்கள் இளவரசனைப் போல், சங்கரைப் போல், கோகுல்ராஜைப் போல் கொலை செய்யப்படுகிறார்கள்.   ஆனால், அதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாதபடி பா.ம.க. வின் ‘நாடகக் காதல் அரசியல்’ தடுக்கிறது. ஆப்பசைத்த குரங்கு கதையாய்தான் ஆகிவிட்டது.

சரி, இதற்கு மேலும் வாக்களிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு கடைசியாக சில வரிகள்.

ஓபாமா- மோடி – அன்புமணி:

பசுமை தாயகம் என்ற பன்னாட்டு தொண்டு நிறுவனத்தில் தன் பொது வாழ்வைத் தொடங்கியவர் அன்புமணி. அதிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகி 2004 இல் நாடாளுமன்றம் போனார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும் ஆனார். அதற்கு பிறகுதான் பா.ம.க. வின் இளைஞர் அணி தலைவர்த் பொறுப்புக்கு வந்தார். அவர் அப்போது செய்த சாதனைகள் பற்றி குறிப்பிடுகிறது தேர்தல் அறிக்கை. அவர் மீதான ஊழல் குற்றச் சாட்டுகள் பற்றிய குறிப்பை நாம்தானே கொடுத்தாக வேண்டும்.

ஒன்று தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பானது. அது அடிக்கடி செய்தியில் வந்து கொண்டிருக்கிறது. இன்னொன்று தடுப்பூசி தயாரிக்கும் மூன்று அரசு நிறுவனங்களைத் தயாரிப்பை நிறுத்தச் சொல்லிவிட்டு அன்புமணியின் நண்பர் சுந்தர பரிபூரணத்தின் கிரீன் சிக்னல் பயோ பார்மஸியிடம் சுகாதாரத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் போட்டது. இந்த முறைகேடு பற்றிய தொடர் கட்டுரைகள் ‘பயோனீர்’ பத்திரிக்கையில் வந்துள்ளன.

 முழுக்க மேற்கத்திய மனத்துடன் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கைகளுடன் ஒபாமாவையும் மோடியைக் காப்பியடித்தபடி ”அன்புமணி ஆகிய நான்” என்று சொல்லி முதல்வர் வேட்பாளராக வலம் வருகிறார் அன்புமணி. அவர் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் முதலாளிக்கு சேவை செய்தால் மட்டும் போதாது, எப்படியாவது அடித்தட்டு வர்க்கங்களை அணிதிரட்ட வேண்டும். அப்படி அணிதிரட்டி முதல்வராவதற்கு உங்கள் தாராளவாத முகமும் காடுவெட்டி குருவின் சாதிய பக்கவாத்தியமும் மட்டும் போதாது. உங்களைவிட சிறந்த அடிமைகளாக தி.மு.க. வும் அ.தி.மு.க.வும் இருக்கிறார்களே!

மாற்றம், முன்னேற்றம் வரும். அது நிச்சயம் அன்புமணியால் அல்ல!

மதவாத பா.ச.க. தத்ததளிக்கிறது தனிமையில்….

பா.ச.க. மதவெறிக் கட்சி என்பதில் நமது வாசகர்களுக்குப் பெரிய மாற்றுக் கருத்து இருக்காது. அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதிலும் குழப்பம் எதுவும் இருக்காது. இருந்தாலும் சில பத்திகள் அவர்களைப் பற்றியும் சொல்லிவிடுவோம். இந்த அங்கீகாரத்தைக் கண்டாவது அவர்கள் ஆறுதல் அடையட்டும்.

கூட்டணிக் கட்சிகளைத் தக்க வைக்கக் கூட முடியவில்லையா? என்று அமித் ஷா கடிந்து கொண்டு 50 தொகுதிகளைத் தேர்வு செய்து வேலை செய்யுங்கள் என்று தமிழிசைக்கு உத்தரவிட்டார். தமிழகத்தின் தேர்தல் சதுரங்கத்தில் நகர்வுகள் புரியாமல் விழிப் பிதுங்கித்தான் போனது பா.ச.க.. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. ஐ.ஜே.கே, புதிய நீதிக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி என்று பெரிய கூட்டணி கண்டது. மோடி அலை அப்படி. ஆனால் இம்முறை இவர்களில் ஐ.ஜே.கே மட்டும் இருக்கிறது.  அவ்வளவு பலமான கூட்டணி அமைந்தும் மண்ணைக் கவ்வியது பா.ச.க. வழக்கமான குமரியில் மட்டும் வெற்றி பெற்றது. தர்மபுரியில் பெற்ற வெற்றியோ பா.ச.க. வின் பராக்கிரமத்தால் அல்ல, பா.ம.க. வின் ‘சேரி எரிப்பு’ அரசியலால்தான். இம்முறை சட்டமன்ற தேர்தல் வேறு. புயலில் சிக்கிய பாய்மரக் கப்பல் போல் திசை தெரியாமல் இருக்கிறது பா.ச.க. நாடாளுமன்றத் தேர்தலிலேயே நடுவீதியில் விட்ட தமிழ் மக்கள் சட்டமன்ற தேர்தலுக்கு கேட்கவே வேண்டியதில்லை. நிச்சயம். ஒன்றிரண்டைத் தவிர அனைத்து தொகுதியிலும் பா.ச.க டெபாசிட் இழக்கும்.

tamilnadubjpnew

திராவிட இயக்கத்திற்கு முன்னால் இருந்த பார்ப்பன செல்வாக்கையும் பக்தி இயக்க காலத்து சைவ எழுச்சியையும் நினைவு கூர்ந்து பா.ச.க. வின் எதிர்காலத்திற்கு கட்டியம் அக்கட்சியினர் கூறுகிறார்கள். திராவிட அரசியல்தான் தடையென்று கருதி பெரியாரையும் திராவிடர் அரசியலையும் கொச்சைப்படுத்துவதையே முழு நேர வேலையாக கொண்டிருக்கும் எச்.ராஜா போன்றவர்களுக்கு வரலாறு தெரியவில்லை. வட இந்தியாவைப் போல் இங்கு முஸ்லிம் மன்னர் படையெடுப்புகள் வரலாறெல்லாம் கிடையாது. மசூதிக்கு மந்திரிக்கப் போவது, துளுக்க நாச்சியார் வழிபாடு, உமறுப்புலவர் படைப்புகள் என்று தமிழ்நாட்டின் கதையே வேறு. 1980 க்குப் பின்னான இசுலாமிய எதிர்ப்பை மையப்படுத்திய சர்வதேச அரசியல் நிலைமையால் வளர்ந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகளை நம்பிக்கொண்டிருக்காமல் பா.ச.க. வேறு மாநிலங்களில் கவனம் செலுத்தலாம்.

சரி, 35 பக்கத்திற்கு வெளிவந்திருக்கும் பா.ச.க. தேர்தல் அறிக்கையையும் பார்த்துவிடுவோம். பெரிதாக தேர்தல் அறிக்கை எழுதி நேரத்தை விரயம் செய்ய வேண்டாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும்.

விவசாயிகள் பற்றி சடங்குக்காக சில பக்கங்கள் இருக்கின்றன. விவசாயிகள் நாடெங்கும் தற்கொலை செய்து கொண்டிருக்கும்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எந்த யோசனையும் இல்லாத மத்திய அரசை ஆளும் கட்சி, தமிழ்நாட்டுக்கு வாக்குறுதிகளை மட்டும் அள்ளி வீசியுள்ளது.  நீர் மேலாண்மை, சுற்றுச் சூழல் மாசுக்கட்டுப்பாடு, தொழில் வளர்ச்சி, சூரிய ஒளி மின்சாரம், கல்வி , பல்வேறு சமூக பிரிவினர், மற்றும் பல இந்துத்துவ சமாச்சாரங்கள் என அறிக்கை சுருங்கிச் செல்கிறது.

தரமான கல்வி என்ற தலைப்பில் மாநிலப் பாடத்திட்டத்தைக் குறை கூறி சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை உயர்த்திப் பிடித்துள்ளமை வழக்கமான பொய். 6 ஆம் வகுப்பு முதல் யோகா மற்றும் தியானப் பயிற்சி, சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை. கல்வி நிறுவனங்கள் ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் எவ்வித மதப்பாகுபாடுமின்றி அனைத்து மதத்தினருக்கும் சம உரிமை. மாவட்டத்திற்கு ஒரு நவோதயா பள்ளி என்று ’தரமான கல்விப் பக்கங்களில்’ வரிவரிக்கு நச்சு விதைகள்.

bjp_2830349f

தாழ்த்தப்பட்டோர் நலனில் ஆதிதிராவிடர் நலத்துறை என்பது இனிமேல் ”பட்டியலின மக்கள் நல்வாழ்வு துறை” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுமாம். சுவாமி சகஜானந்தரின் பிறந்தநாள் ”தாழ்த்தப்பட்டோர் உரிமை காக்கும் நாள்”    என அரசின் சார்பில் கடைபிடிக்கப்படுமாம். அருந்ததியர் நல வாரியம், தேவேந்திர குல வேளாளர்களின் உட்பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் தங்களை அந்தப் பொதுப் பெயரில் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு துணை நிற்பார்களாம். கோயில், சுடுகாடு, நீர்நிலைகள் மீதான பொது உரிமை. இந்த ஐந்து கோரிக்கைகள்தான் பா.ச.க. வின்  வாக்குறுதிகள். எவ்வளவு முக்கியமானக் கோரிக்கைகள் பாருங்கள்.

தொழிலாளர் நலன் பற்றி ஆறே வரிகள் தான்.

இந்துத்துவம் பற்றி ஐந்து தலைப்புகள் – மதச் சுதந்திர சட்டம் (மத மாற்றத் தடை சட்டம்),  பசுப் பாதுகாப்பு, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு, ஹிந்துக் கோயில்களின் சுதந்திரமான செயல்பாடு , அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளின் நலன் என்று ஆசை தீர எழுதி வைத்துள்ளனர். சரி, இந்த ஆண்டு ட்ரெய்லர் தானே.

ஒரு தொங்கு சட்ட சபையே அமையும். இரண்டு ஆண்டுகளில் மீண்டும் தேர்தல் வரும். அப்போது இரண்டு திராவிடக் கட்சிகளில் ஒன்றோடு கூட்டணி வைத்து 40 இடங்கள் வரை பெற்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெறலாம் என்று பா.ச.க. கருதுவதாக ஒரு செய்தி.

அவர்களே இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கும் நாம் ஏன் நேரத்தை வீணடித்துக் கொண்டு இருப்பானேன்.

– செந்தில்

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழகம்

நிழற்படங்கள்: கார்ட்டூனிஸ்ட் பாலா, மற்ற இணையதளங்களுக்கு நன்றி

About செந்தில்

One comment

  1. கி.நடராசன்

    சிறப்பான கட்டுரை..வாழ்த்துக்கள் செந்தில்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*