Home / அரசியல் / நாம் தமிழர் கட்சியை 2016 தேர்தலில் ஆதரிக்கலாமா? கூடாதா?

நாம் தமிழர் கட்சியை 2016 தேர்தலில் ஆதரிக்கலாமா? கூடாதா?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களம் முன்பு எப்போதையும் விட பல அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதிமுக அணி, திமுக அணி பலப்பரிட்சையைத் தாண்டி இந்த தேர்தலில் பல அணிகள் களம் காண்கின்றன. பெருவாரியான மக்களிடமும், இளைஞர்களிடம் இன்று அதிமுகவும், திமுகவும் செல்வாக்கை இழந்துள்ள நிலையில் யார் மாற்று என்பதில் ஒரு மிகப்பெரிய போட்டியே நடந்துவருகிறது. இந்த நிலையில் 2008-09 ஈழப்போர் நேரத்தில் தமிழகத்தில் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டத்தின் தொடர்ச்சியாக உருவான நாம் தமிழர் கட்சியும் தான்தான் அந்த மாற்று எனப் போட்டியில் குதித்துள்ளது.

கடந்த 7 ஆண்டு செயல்பாட்டுடன், ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, திருநங்கை – தலித் – இளைஞர்கள் என எல்லா தரப்பினரையும் உள்ளடக்கி 234 தொகுதியிலும் வேட்பாளர்களாக‌ நிறுத்தி மக்கள் மன்றத்திலும், இணையத்திலும் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்கள் நாம் தமிழர் கட்சியினர். கதாநாயகப் பிம்ப அரசியலில் ஊறிய தமிழக அரசியலின் இளைஞர்கள் மத்தியில் சீமான் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியை இந்த தேர்தலில் ஆதரிக்கலாமா? கூடாதா? என்ற விவாதம் நாளுக்கு நாள் இணையத்தில் நடந்துகொண்டே இருக்கின்றன.

தேர்தல் அறிக்கை – 2016 :

பொது மக்கள், இளைஞர்களின் விழிப்புணர்வுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கைகள் புதிய பரிமாணங்கள் எடுத்துக்கொண்டேதான் இருக்கின்றன. அந்த வகையில் நா.த.க. தேர்தல் அறிக்கை ஈழ விடுதலை ஆதரவைத் தாண்டி, தமிழகத்தின் வேளாண்மை, கல்வி, மருத்துவம், மொழி, குடிநீர், இயற்கை வளம் சார்ந்த தேசிய இன உரிமைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முற்போக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது. இலவசங்கள் எதுவும் இல்லை என்பது சிறப்பம்சமாகும்.

தாய்மொழி தமிழ் வழிக் கல்வியை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும். மீனவர் பிரச்சனையைத் தடுக்க தனிக் காவல் படை அமைக்கப்படும். தமிழ்நாட்டுக்கென்று தனி வைப்பகம் ஆரம்பிக்கப்படும் என்று கூறியுள்ளது.

இதையெல்லாம் நா.த.க. வெற்றிபெற்று தமிழகத்தின் ஆட்சி அமைத்தாலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? அவர்களுடைய கொள்கைகள், கடந்தகால அரசியல் செயல்பாடுகள் அடிப்படையில் எதற்கு முன்னுரிமை  கொடுக்கப்படும்? என்பதை ஆராய வேண்டியுள்ளது.

நா.த.க. கொள்கைகள் எதை நோக்கியிருக்கின்றன?

“இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை”

தமிழீழ தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட எழுச்சி இளைஞர்களை இந்திய அரசமைப்புக்குள் சுதந்திரமில்லாமல் சிறைப்பட்டு கிடப்பதால் ஈழத்திற்கு உதவமுடியாத நிலையை கையறு நிலையில் இருந்த தமிழ்நாட்டு தேசிய இனத்தின் விடுதலை அரசியலைத் தீவிரமாகப் பேச வைத்தது. அதற்கு சரியான அமைப்பு வடிவம் கிடைக்காத நிலையில் நா.த.க. முழக்கம் ”இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை”, தமிழ்நாடு முழுவதும் பல இளைஞர்களை ஈர்த்தது.

தமிழ் மண்ணை இனித் தமிழனே ஆள வேண்டும்:

அதே நேரம் இந்திய அரசின் சிறையைக் காட்டிலும் இங்கு ஆண்டுகொண்டிருக்கும், ஆண்ட திராவிட கட்சிகளின் முதல்வர்கள் அயல் தாய்மொழியைச் சார்ந்தவர்களாக இருப்பதால் துரோகம் இழைத்தார்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் முதல்வராக இருந்தால் தமிழீழத்திற்கு உதவியிருப்பார்கள். தமிழ் மண்ணைத் தமிழன் ஆண்டிருந்தால் தமிழர்கள் உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கும். தமிழர் அல்லாத வந்தேறிகளுக்கு இங்கு வாழும் உரிமை உண்டு; ஆனால், ஆள உரிமை இல்லை என்ற நா.த.க. முழக்கமும் இளைஞர்களிடம் இன்று வீச்சாகப் பரவிக்கொண்டிருக்கிறது.

நா.த.க. செயல்பாடுகள் எப்படி இருந்தன?

ஈழப்போருக்குப் பின்னணியில் உருவான அமைப்பு என்றாலும், 2009க்குப் பிறகு வந்த ஐநா மனித உரிமை மன்றத் தீர்மானங்கள், இனப்படுகொலை மீதான பன்னாட்டு நீதி விசாரணை தொடர்பான போராட்டங்களில் நா.த.க. அதிக தீவிரம் காட்டவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஈழப்போராட்டத்தில் வீதிக்கு வந்த இளைஞர்களை அமைப்பாக்கிய சீமான் மொழியுரிமை போராட்டத்திலோ, தேசிய இன உரிமைப் போராட்டத்திலோ, இயற்கைவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்திலோ அவர்களை ஈடுபடுத்தவில்லை. அதற்குப் பதிலாக ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு திராவிடக் கட்சிகளையும் – அந்தக் கட்சித் தலைமைகள் அயல் தாய்மொழியினர் என்பதையும் காரணமாகக் காட்டினார்.

அதுவும் குறிப்பாக அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக-வின் தலைமை கருணாநிதியையும், இவர்கள் அழுத்தம் கொடுக்காததால் உதவாத மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசின் தலைமை சோனியாவையும் மட்டும் எதிரியாக உணர்ச்சிப் பொங்க அறைகூவல் விட்டார். தமிழ்த் தாய்மொழியினர் முதல்வரானால் பாலாறும், தேனாறும் ஓடும் என்கிற தன் பித்தலாட்ட அரசியலுக்காக ஈழ இனப்படுகொலைக்கு முற்றும் உறுதுணையாக இருந்த இந்திய அரசையும், அதன் வெளியுறவுக் கொள்கையையும் எதிரியாகக் காட்டத் தவறினார். அதனால்தான் மோடியையும், பா.ச.க.வையும் ஈழ எதிரிகள் என்று சொல்ல மறுக்கிறார்.

இது ஈழ அரசியலில் மட்டும் எதிரொலிக்கவில்லை. தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த இந்திய அரசும், இந்தியப் பெருமுதலாளிகளின் மீத்தேன், கெயில், கூடங்குளம் போன்ற திட்டங்களானாலும் சரி, அண்டைத் தேசிய இனங்களுடன் உள்ள பிரச்சனைகளான காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு பிரச்சனையானாலும் சரி, இல்லை டாஸ்மாக் மதுக்கடை பிரச்சனையானாலும் சரி, தாய்மொழிவழிக்கல்வி – ஆட்சிமொழியுரிமை பறிப்பானாலும் சரி எல்லாவற்றிற்கும் இங்கிருக்கும் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களே காரணம் எனக் காட்டுகிறார் சீமான்.

எப்படி இந்தியாவின் எதிரி பாகிஸ்தான், அதன் பிரதிநிதிகள் நம் அண்டை வீட்டில் இருக்கும் இசுலாமியர்கள் – இவர்கள் தான் நம் எதிரிகள் என்று சொல்லியே இங்குள்ள பெரும்பான்மை இந்துக்களுக்கு, இசுலாமியர்களுக்கு எதிரான மக்கள் விரோத மதவாத அரசியலை ஆர்.எஸ்.எஸ். கட்டவிழ்த்துவிடுகிறதோ அதுபோல தமிழ்நாட்டின் எதிரி தெலுங்கு வடுக நாயக்கர் ஆட்சி, அதன் பிரதிநிதிகள் இங்குள்ள தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சாதியினர் – இவர்கள்தான் தமிழ் மண்ணின் எதிரிகள் என்று சொல்லியே பெரும்பான்மை தமிழ்த்தாய்மொழி சாதியினருக்கும் எதிரான – சனநாயக விரோத இனவாத அரசியலை தமிழக இளைஞர்களிடம் கட்டவிழ்த்து விடுகிறது நா.த.க.

seemn mumbai election campaign

மும்பை மாநகராட்சித் தேர்தலில் சீமான் பரப்புரை நிழற்படம் : http://www.naamtamilar.org/

இப்படித் தான் மராத்தியர்களுக்கான அரசியலைப் பேசுகின்றேன் என உருவான சிவ சேனா இன்று ஆர்.எஸ்.எஸ்‍யையும் விஞ்சிய ஒரு இந்து தேசிய அமைப்பாக உள்ளது, மும்பையில் வாழ்ந்த தமிழர்களை தாக்கித் தான் தங்களது அரசியல் அத்தியாயத்தை துவக்கினார் பால் தாக்கரே, அது இசுலாமியர்களின் மேல் வன்முறையை திட்டமிட்டு நடத்தி, இன்று பீகாரிகளைத் தாக்குவதில் வந்து நிற்கின்றது. சிவ(னின்) சேனையைப் போல அவரது மகனை வைத்து முருக சேனையை வீரத் தமிழர் முன்னணி சார்பில் துவங்கியிருக்கின்றார் சீமான்.

அதுமட்டுமின்றி சென்ற மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்களின் மேல் திட்டமிட்டு வன்முறை வெறியாட்டம் ஆடிய சிவ சேனா வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரமும் செய்தார் சீமான். கேட்டால் வேட்பாளர் தமிழர் என்பார், அப்படியென்றால் சிவ சேனா கட்டவிழ்த்துவிட்ட வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா? உண்மையிலேயே உங்களது இலட்சியம் தமிழர் நலனா? அல்லது ஒரு சில தமிழர்களுக்கு அரசியல் பதவியா?  இசுலாமியர்களை தமிழர்கள் என்ற பொது அடையாளத்தில் இருந்து பிரித்து உருது பேசும் தமிழர்கள் என்பதும், அவர்களை வந்தேறிகளாக காட்டுவதும்  நாம் தமிழர் கட்சி ஒரு தமிழக  சிவ சேனா அல்லது தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது. உண்மையான எதிரியை எதிர்த்து மக்கள் ஒன்று திரளாமல் தடுக்க அவர்களை பிரிப்பது என்ற மிகவும் எளிய உத்தியைத் தான் நா.த.க இங்கு பயன்படுத்துகின்றது.

தமிழர் – தேசிய இன அடையாளமா? சாதிய அடையாளமா?

யார் தமிழர் ? என்ற ஆய்வை இவர்கள் எப்படி நடத்தினார்கள் என்பதைக் கேட்டாலே எல்லோரும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள், எப்படி யாரெல்லாம் கிருத்துவர்கள், இசுலாமியர்கள், பார்சிகள் … இல்லையோ அவர்கள் தான் இந்துக்கள் என சொல்வது போலத் தான் உள்ளது இவர்களின் யார் தமிழர் என்ற வரையறையும். தமிழ் சாதியில் பிறந்திருந்தால் தமிழன் என்கிறார்கள், எப்படி தமிழ்ச் சாதிகளை கண்டுபிடித்தார்கள் என்பதை எந்த மானுடவியல் அல்லது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வை வைத்து அவர்கள் கண்டறிந்தார்கள் என்பதை மட்டும் பரம இரகசியமாக வைத்துள்ளார்கள். இப்படி சொல்லி தமிழகத்தில் இன்றும் மனிதக் கழிவை தூய்மை செய்யும் அருந்ததியர்களைத் தெலுங்கர்கள் என்றும் அதனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்றும், இது போல தமிழ்ச் சாதி (100) தவிர்த்த ஏனைய சாதியினருக்கு உள்ள இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும்  என்கிறார்கள், அடுத்து இசுலாமியர்கள் உருது பேசுகின்றார்கள் அவர்களுக்கும் இங்கு இட ஒதுக்கீடு கிடையாது என சொன்னாலும் சொல்வார்கள்,  இப்படித் தான் மலையகத் தமிழர்கள் இலங்கையின் பூர்வ குடிகள் அல்ல‌ எனக்கூறி சிங்கள பாசிசவாதிகளால் நாடு கடத்தப்பட்டார்கள். அது தவறு என்றால், இதுவும் தவறு தானே. இந்திய அரசமைப்பும், அரசின் கொள்கைகளும் தமிழ்நாட்டை ஆளும் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுமே இந்திய அரசிற்கு கட்டுப்பட்டவர்களாகத்தான் உள்ளார்கள். மீத்தேன் – கெயில் பிரச்சனையோ, காவிரி – முல்லைப்பெரியாறு பிரச்சனையோ, தமிழ் நாட்டைக் கூறுபோடும் சாதியப் பிரச்சனையோ, தமிழ் ஆட்சிமொழி – கல்விமொழி பிரச்சனையோ அது தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான – தமிழ்த்தேசிய இனத்தின் பிரச்சனை. அது தமிழ்த்தாய்மொழி சாதியினர் பிரச்சனை என்று சுருக்கிவிட முடியுமா? தமிழர் என்கிற அடையாளம் தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் குறிக்கிறது, அப்படியில்லாமல் தமிழர் – தெலுங்கர் – கன்னடர் – மலையாளி – உருதுமொழி பேசுபவர் என்று தமிழ்நாட்டு மக்களைப் பிரித்து தமிழகத்தை ஒரு தமிழர் ஆண்டுவிட்டால் தமிழினத்திற்கு விடுதலையே கிடைத்துவிடும் என்று பரப்புரை செய்வது உண்மையில் எதிரியான இந்திய அரசிற்குத்தான் உதவும்.

seeman virathamizhar munnaniseeman muruga senai2

பொருளாதாரக் கொள்கைகள்:

1990களுக்கு பிறகு தாராளமயம், ‍தனியார்மயம், உலகமயம் என்ற மூன்றின் அடிப்படையில் தான் இந்திய அரசு செயல்படுகின்றது, இதை திமுக, அதிமுக கட்சிகள் ஒரு கங்காணிக்குரிய வேகத்தோடு செயல்படுத்தி வருகின்றன. இந்த மூன்று கொள்கைகள் தான் தமிழகத்தில் அரசு கல்விக்கூடங்களை அழித்து தனியார் கல்விக்கூடங்கள் உருவாவதற்கும், அரசு மருத்துவமனைகள் மோசமாக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் வளர்வதற்கும், அரசு மின்னுற்பத்தியிலுருந்து வெளியேறி தனியாரிடம் மின்சாரம் வாங்கவும், நோக்கியா போன்ற பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் வந்து நமது வளத்தையும், தொழிலாளர்களின் திறனையும் உறிஞ்சி இலாபமீட்டி விட்டு நடுத்தெருவில் விட்டு செல்ல‌ முக்கிய காரணம். இந்த பொருளாதாரக் கொள்கையில் நாம் தமிழர் கட்சியிடமோ,அவர்களின் 316 பக்க‌ தேர்தல் அறிக்கையிலோ  எந்த ஒரு மாற்றும் தென்படவில்லை. இந்த பொருளாதார கொள்கைகள் தான் விவசாய சீரழிவிற்கும் காரணம், இதை மாற்றாமல் இயற்கை வேளாண்மை பேசுவது என்பது காற்றில் கத்தி சுற்றுவது போல அழகாக சுற்றலாம். இன்றிருக்கும் தாராளமய, தனியார்மய, உலகமய பொருளாதாரக் கொள்கைகளை மாற்றாமல் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது, இல்லை மாற்றலாம் என சொல்வது பிரச்சனைக்கான மூல வேரை அகற்றாமல், அதிலிருந்து வரும் இலை, கிளைகளை மாற்றுவது போலத்தான் இருக்கும்.

தமிழ்மண்ணை தமிழர் ஆளக்கூடாதா?

தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டைத் தமிழர் ஆள்வது என்பதாகும். அப்படி என்றால் அதற்கு தமிழக சட்டமன்றத்திற்கு இறையாண்மை வேண்டும், இன்று இறையாண்மை இருக்கிறதா?

இந்திய அரசமைப்புக்குள் பொம்மையான ஒரு பதவியான வெறும் முதல்வர் பதவிக்கு ஒரு தமிழர் வந்தாலும் ஒன்றும் செய்துவிடமுடியாது என்பதுதான் யதார்த்தம்.  அதுமட்டுமின்றி தான் முதலமைச்சர் ஆகிவிட்டால் ஒரே கையெழுத்தில் எல்லாவற்றையும் மாற்றிவிடுவேன் என்கிறார் சீமான். ஒரு திரைப்படத்தில் நடிகர் வடிவேலு தமிழ்நாட்டை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தில்லிக்கு பக்கத்தில் வைத்துவிட்டால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என சொல்வதற்கும் சீமான் சொல்வதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது. கெயில் பிரச்சனையில் தமிழக அரசிற்கு அதிகாரமில்லை என்கிறது உச்ச நீதிமன்றம், தமிழக மீனவர்களைக் கொல்லும் இலங்கையுடனான‌ இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தமிழ்நாடு தீர்மானிக்க  முடியாது என சொல்கின்றது மத்திய அரசின் செயல்பாடுகள் இப்படியாக தமிழக முதல்வர் பதவி என்பது மத்திய அரசின் கொள்கைகளைத் தமிழகத்தில் எப்படி செயல்படுகின்றது என மேற்பார்வை பார்க்கும் ஒரு கங்காணி பதவியாக மட்டுமே உள்ளது. இதை ஏதோ ஒரு பிரதமர் பதவியைப் போல சித்தரிக்கின்றார் சீமான்.உண்மையில் இந்திய அரசுதான் தமிழ் மண்ணை ஆண்டு கொண்டிருக்கிறது, எந்த அயல்மொழி முதல்வரும் அல்ல என்பதுதான் உண்மை.  தமிழக அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவிந்துள்ளது என சொல்வது உண்மையான எதிரியான‌ இந்திய அரசின் மீதும், இப்போதுள்ள அமைப்பின் மீது போலி நம்பிக்கையைத்தான் கொடுக்கும்.

மேலும், அவர் சொல்லும் தமிழரே ஆள வேண்டும் என்கிற கொள்கை, நோக்கம் மறைமுகமாக, “அதிகாரப் பறிப்பை” வலியுறுத்துகிறது. இப்படித் தான் துவக்க கால சிங்கள அரசு தனது நடவடிக்கையைத் துவங்கியது, முதலில் மலையகத் தமிழர்களை நாடு கடத்தினார்கள், பின்னர் ஈழத் தமிழர்களின் மேல் படிப்படியாக ஒடுக்குமுறையை ஏவினார்கள், இதே முறையைத் தான்  இப்போது சீமான் கையிலெடுக்கிறார்.   முதலில் தெலுங்கர்கள், பின்னர் மற்ற மொழி பேசும் மக்கள், இறுதியாக இசுலாமியர்கள் என எல்லோரின் மீதும் வெறுப்பை விதைக்கின்றார், இது மிகவும் ஆபத்தான பாசிச அரசியல். முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய நச்சுச் செடி இந்த வெறுப்பு அரசியல்.

ஒரு குறிப்பிட்டப் பகுதியில் தமிழைத் தாய் மொழியாய் கொண்டிராதவர்கள் அடர்த்தியாக வாழவில்லை என்றாலும்   ’வெளியார்’ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடிய உளவியல் சுவரை எழுப்பும் பணியை சீமான் செய்யத் தொடங்கிவிட்டார். அது நமது வரலாற்றின் வழியெங்கும் முட்களைப் பரப்புவதற்கு சமமாகும். ஈழத்தில் தமிழர் – இசுலாமியர் முரண்பாடு போல், வடக்கு கிழக்கு பிரதேச முரண்பாடு போல் தமிழர், தமிழர் அல்லாதோர் என்ற முரண்பாடு எழ வாய்ப்புண்டு. சீமான் தேசிய ஓர்மையை சீர்குலைப்பவர். நாகப்பதனியா? நாகபதனியா? என்று 23 ஆம் புலிகேசி  மன்னன் செய்ததைப் போல் உள்ளது சீமானின் செயல்பாடுகள்.

தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம்

இந்த தேர்தல் அறிக்கையில் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியாக நா.த.க. ஆட்சி இருக்கும் என்று சொல்கிறது. இது ஊழல், சுரண்டல், பதுக்கல், இயற்கைவளக் கொள்ளை இவற்றில் ஈடுபடும் பெருமுதலாளிகளுக்கா? இல்லை உழைப்பை மட்டும் சாமானிய மக்களுக்கா? என்று பார்க்கும்போது அது சிங்கப்பூரையும், குழந்தைக்கு ஊசி போடுவதையும் எடுத்துக்காட்டாகச் சொல்வதை ஆழமாக இளைஞர்கள் நாம் பரிசீலிக்க வேண்டும்.

vaikunta-rajan-wedding-seeman

தாது மணற்கொள்ளையன் வைகுண்டராஜன் இல்லத் திருமண விழாவில் சீமான். நிழற்படம்: வினவு

கடற்கரைத் தாதுமணல் கொள்ளையில் ஈடுபடும் விவி மினரல்ஸ் (நியூஸ் 7) வைகுண்டராஜன், கிரானைட் கொள்ளையில் ஈடுபடும் பி.ஆர்.பழனிசாமி, கல்விக் கொள்ளையில் ஈடுபட்டுவரும் எஸ்.ஆர்.எம். (புதிய தலைமுறை) பச்சைமுத்து போன்றோர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்துவருகின்றார் நா.த.க தலைவர் சீமான், இந்தக் கொள்ளைகளுக்கு எதிராக அவர்களின் 316 பக்க தேர்தல் அறிக்கையில்  ஒரு வார்த்தை கூட இல்லை. இவர்களெல்லாம் பச்சைத் தமிழர்கள் என்பதாலா?  பச்சைத் தமிழர்கள் திருடினால் தவறில்லையா? இதே சீமான் தான் ஒரு ஓரமாக‌ டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை வந்தேறி என்றும். பீகாரிலிருந்து வயிற்றுப் பிழைப்புக்காக சுரண்டப்படும் மெட்ரோ கூலித் தொழிலாளிகளை வந்தேறிகள் என்றும் கூறி,  இவர்கள் தான் தமிழக வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள் என கூறுகின்றார்.

சாதிய வன்கொடுமைகள் நடக்கும்போதெல்லாம் தமிழர் ஒற்றுமையை குலைக்கும் பிரச்சனையென்று ஓடோடிச் சென்று மக்களைப் பார்க்காமல் அது அண்ணன் – தம்பி பிரச்சனை, காதல் பிரச்சனை என்று சாதி ஆதிக்க சக்திகள் பக்கம் நின்ற சீமான் தான் முதலமைச்சர் பதவிக்கு வராவிட்டாலும் சகோதரர்(?) அன்புமணி முதல்வரானால் மகிழ்வேன் என்று சொன்னதையும் இளைஞர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

இத்தகைய காரணங்களால் 2016 தேர்தலில் நாம் தமிழர் கட்சியை மக்களும் இளைஞர்களும் ஆதரிக்க முடியாது, புறக்கணிப்பது என்பதே சரியானது. அதே நேரம் தமிழ்த் தேசிய கருத்தியலையும், அரசியலையும் முன்பைவிட ஆழமாகவும் – சரியானதாகவும் தமிழகம் முழுவதும் எடுத்துச் சென்று முழுமாற்று அரசியலை உருவாக்கும் பொறுப்பு இளைஞர்களான நம்மிடம்தான் உள்ளது என்பதையும் நினைவு படுத்துகிறோம். தமிழ்ச் சமூகம் தமிழர் அறத்தோடு சனநாயகப் பாதையில் நடைபோடட்டும்.

”முதலமைச்சர் பதவிக்கான போராட்டமல்ல எங்களுடையது,

தமிழீழ விடுதலைக்கானது” – தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்

–    விசை ஆசிரியர் குழு

நிழற்படங்கள்: இணையதளங்களுக்கு நன்றி

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*