Home / அரசியல் / மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா?

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. தேர்தல் களம் முழுக்கக் கட்சித் தலைவர்களின் பரப்புரை, வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள், ஊடகங்களின் கருத்துக்கணிப்புகள், வெற்றி பெற பதுக்கி வைக்கப்படும் பல கோடி ரூபாய்கள் பிடிபடுவது என மே மாத அனலுக்குச் சற்றும் குறைவில்லாமல் தகிக்கிறது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் எந்த முறையும் இல்லாத புது முறையாகத் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று, கூட்டணி ஆட்சி எனும் முழக்கங்கள் தமிழகம் பூராவும் எதிரொலிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர், பாரதீய சனதா கட்சி ஆகிய கட்சிகள் தங்களைத் தாங்களே மாற்று என்று முன்னிறுத்திக் கொண்டாலும் சமகாலத்தில் அவை தனிமைப்பட்டுள்ளன என்பதே நிதர்சனமாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் முதலிய கட்சிகள் இணைந்து தொடங்கிய “மக்கள் நலக் கூட்டியக்கம்”, தேர்தல் கூட்டணியாக உருமாறி தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம், தமிழ் மாநில காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா கூட்டணி பற்றிய பார்வையைப் பதிவு செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தே.மு.தி.க – மக்கள் நலக் கூட்டணி – த.மா.கா என இந்தக் கூட்டணி பற்றி ஜெயலலிதா விமர்சிக்காமல் போனாலும், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மூன்றாவது அணி என்கிற ஒன்றே தெரியவில்லை எனக் கருணாநிதி கருத்து சொன்னாலும், தமிழக வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் ஒரு பெரிய கூட்டணி உருவாக மக்கள் நலக் கூட்டணி காரணமாக இருந்துள்ளது.

சிபிஐ(எம்), சிபிஐ, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தைத் தேர்தல் கூட்டணியாக மாற்றிய போது, இது மாற்றுக்கான கூட்டணியா?, இவர்களால் தொடர்ந்து இணைந்து இருக்க முடியுமா? போன்ற பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்பட்டன. இவை அனைத்தையும் தாண்டி, தேர்தல் களத்தில் ஒரு வலிமையான அணியாக நிற்கிறது மக்கள் நலக் கூட்டணி.

mnk four

மக்கள் நலக் கூட்டணியால் ஏற்பட்ட மாற்றம் என்ன?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்று அணிகள் களத்தில் இருந்தன. தி.மு.க தனியாகவும், அ.தி.மு.க ஓர் அணியாகவும், பாரதீய சனதா கட்சி உள்ளிட்ட பா.ம.க, தே.மு.தி.க, ம.தி.மு.க, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் மூன்றாவது அணியாகவும் போட்டியிட்டனர். இது ஒரு சாதியவாத, மதவாத கூட்டணி ஆகையால் நாடெங்கும் மோடி பெயரைச் சொல்லி பரப்புரை நடைபெற்றாலும், தமிழகத்தில் வெறும் இரண்டே இடங்களில் வெற்றிப் பெற்றது இந்த அணி. இந்தியாவில் பலித்த மோடி மந்திரம், தமிழகத்தில் செல்லாக் காசாகிப் போனது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பாரதீய சனதா அரசின் பெருமுதாலாளித்துவ, இந்துத்துவச் செயல்பாடுகள் காரணமாக அந்தக் கட்சி தனிமைப்படுத்த வேண்டிய சூழல் உருவானது.

இந்தச் சூழலை ஒட்டி, அ.தி.மு.க தலைமையிலான ஒரு அணி, மதச்சார்பற்ற அணி என ஒன்று உருவாவதற்கான வாய்ப்பே இருந்தது. அத்தோடு, திராவிட அரசியலை விடுத்து அடுத்தகட்ட நகர்வாக வளர்ந்து வரும் தமிழ் தேசிய அரசியலுக்குள் உட்புகுந்து கொண்டிருக்கும் இனவாத அரசியல் , தி.மு.க-வை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருந்தன.

தமிழகத் தேர்தல் களத்தில் இந்நாள் வரை எப்போதும், தி.மு.க ஓர் அணியாகவும், அ.தி.மு.க ஓர் அணியாகவுமே போட்டிக் களத்தில் இருந்துள்ளன. அதிலும், மெகா கூட்டணிகளை அமைத்து வெற்றியை அடைவதில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் அனுபவம் என்பது அதீதமானது. ஆணவத்தின் உச்சத்திற்குச் சென்று கொண்டிருக்கும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா அண்மைக் காலங்களில் கூட்டணிக் கட்சிகளைப் படுத்திய பாடு என்பது இந்திய நாட்டின் எந்தத் தேர்தலிலும் நடைபெறாதது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாரதீய சனதாவுடன் கூட்டணியில் இருந்த ம.தி.மு.க, மோடியின் பதவியேற்பு நிகழ்விற்கு அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே வருவதைக் கண்டித்துக் கூட்டணியைவிட்டு வெளியேறி இருந்தது.

2009 -ல் ஈழப் போரின் உச்சகட்டத்தில், தி.மு.க-வின் மீதான பழிகளைத் தூக்கி சுமந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனை, இடைநிலை சாதியினர் வாக்குகளுக்காக உதாசீனப்படுத்தி வெளியேற்றியது தி.மு.க தலைமை.

ஜெயலலிதாவின் அராஜகப் போக்கிற்கு இனிமேலும் முட்டுக் கொடுக்க முடியாது என்கிற நிலைமையிலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையில் தா.பாண்டியன் மாறி இரா.முத்தரசன் என்கிற மாற்றம் போன்றவை கம்யூனிச இயக்கங்களைத் தி.மு.க, அ.தி.மு.க கூட்டணியைத் தவிர்க்க வைத்தது.

இவ்வாறு, தி.மு.க , அ.தி.மு.க கட்சிகளின் கூட்டணிச் சகதியில் இருந்து, வெளியேறிய தமிழகத்தின் குறைந்தபட்ச சனநாயக சக்திகளான வி.சி.க, ம.தி.மு.க, சிபிஐ(எம்), சிபிஐ ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை ஏற்படுத்தின. அந்தக் கூட்டியக்கம் கூட்டணியாக மாறியது தி.மு.க-வுக்குக் காங்கிரசைத் தவிர எந்தக் கட்சியுடனும் கூட்டணி உறுதியாகாத நிலையைத் தோற்றுவித்தது. அத்தோடு, இந்த நான்கு கட்சிகள் இணைந்து தே.மு.தி.க, த.மா.கா கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு பா.ச.க, பா.ம.க ஆகிய மதவாத, சாதியவாத கட்சிகளைத் தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தியுள்ளது. இறுதி வரை, தே.மு.தி.க கூட்டணிக்கு வரும், ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் தேர்தல் கடலில் கரையேறிவிடலாம் என்றிருந்த தி.மு.க-வின் சொம்பில் பழம் விழுவதையும் தடுத்துவிட்டது.

சாதியவாத, மதவாத கட்சிகள் தனிமைப்பட்டு, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய பெருமுதலாளிய, ஊழல் கட்சிகளுக்கு மாற்று உருவாவதின் காலத்தேவையை உணர்ந்தது மக்கள் நலக் கூட்டணியின் பலமே.

அதே சமயம், ஊழல் எதிர்ப்புப் பேசிக்கொண்டே தளி சட்டமன்றத் தொகுதியில் குற்றவழக்கு பின்னணிக் கொண்ட ராமச்சந்திரன் என்பவரை வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது பலவீனமே.

கடந்த காலங்களில் பா.ச.க-வுடன் கூட்டணி வைத்த ம.தி.மு.க -வின் வரலாறும், தி.மு.க வின் கூட்டணியில் இருந்து அவர்களைத் தற்காப்புச் செய்து வந்த வி.சி.க-வின் பின்னணியும், அ.தி.மு.க -வை வளர்த்துவிட்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாறும், கடந்த காலத் தேர்தல் கூட்டணிகளும் பலவீனமே.

மாற்றத்திற்கான பங்கேற்பாளரா தே.மு.தி.க ?

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டம்தான் முதல்வர் வேட்பாளர் என்று தொடங்கப்பட்ட கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டது இந்தக் கூட்டணியின் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், கொள்கை அடிப்படையிலான கட்சியாக இல்லாமல், ஊழல் எதிர்ப்பு எனும் மேம்போக்கான முழக்கத்தோடு தோன்றிய கட்சியாகவும், விஜயகாந்த் எனும் நடிகரின் நாயக பிம்பத்தை மட்டுமே நம்பி இருக்கும் கட்சியாகத் தே.மு.தி.க இருப்பதுதான், மாற்றத்தின் பங்கேற்பாளராகத் தே.மு.தி.க எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

mnk vijayakanth

தமிழகம் சார்ந்த மாநில உரிமைப் பிரச்சினைகளிலும், ஈழப் பிரச்சினையிலும் உறுதியான நிலைப்பாடுகள் கொண்ட ம.தி.மு.க, தமிழ்நாட்டு நலன், தலித் உரிமைகள், சாதி ஒழிப்பு, சமூக நீதி ஆகியவற்றில் கொள்கையுடைய விடுதலைச் சிறுத்தைகள், ஊழல் எதிர்ப்பு, சாதி ஆதிக்க எதிர்ப்பு, தொழிலாளர் நலன், உலகமய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளைக் கொண்ட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து, அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுபவர் ஒரு அறிந்த முகமாகவும், வெறும் 10 விழுக்காடு வாக்குவங்கி மட்டும் கொண்ட கட்சியை நடத்துபவராகவும் இருந்தால் போதும் என்பதுதான் தமிழகத் தேர்தல் அரசியலின் பரிதாபம்.

மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தல் உடன்பாடு அடிப்படையிலான கூட்டணி எனும் பட்சத்தில் தே.மு.தி.க அதில் இடம்பெறுவதும், கூட்டணி அமைப்பது பற்றியும் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால், மாற்று அணி எனக் கூறி குறைந்தபட்ச செயல்திட்டத்தோடு முன்நகரும் ஒரு அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்பதுதான் நெருடலுக்குரியதாக உள்ளது.

த.மா.கா-வை எப்படிப் பார்ப்பது?

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று சொன்ன மக்கள் நலக் கூட்டணி, தற்போது தமாகாவுடன் கூட்டணி வைத்திருப்பது வினோதமே. காங்கிரசின் ஆட்சியில் இறுதி வரை பதவியில் இருந்து வெளிவந்த ஜி.கே.வாசனை எப்படி மாற்றத்திற்கான பங்கேற்பாளராக ம.ந.கூ. பார்க்கின்றது என்பது தெரியவில்லை.

ஈழம், உலகமயப் பொருளாதாரம், மீட்கப்பட வேண்டிய தமிழக உரிமைகள் என காங்கிரசில் இருந்து எந்தக் கொள்கையிலாவது தமிழ் மாநில காங்கிரஸ் வேறுபடுகிறதா என்றால் அதுவும் இல்லை.

இறுதிவரை, அ.தி.மு.க கூட்டணிக்கு முயற்சி செய்த தமிழ் மாநில காங்கிரசும், தி.மு.க-வுடனும், பா.ச.க-வுடனும் கூட்டணி பேச்சு நடத்திக் கொண்டிருந்த தே.மு.தி.க-வும் மக்கள் நலக் கூட்டணியில் இருப்பது கூட்டணிக்குப் பின்னடைவுதான்.

mnk vasan

மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை என்ன சொல்கிறது?

வெகுசனவாத அறிவிப்புகளை முன்வைத்திருக்கும் தி.மு.க-வின் அறிக்கையையும், இலவசங்களை அள்ளித் தெறித்திருக்கும் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிடுகையில், மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை தொலைநோக்கோடு தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

  • தமிழகத்தில் வேளாண்துறையை வளர்த்தெடுப்பதற்கான வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகளின் அடிப்படையில்தான், விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தங்களது ஆதரவை மக்கள் நலக் கூட்டணிக்கு தெரிவித்துள்ளனர்.
  • காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை. பெண் காவலர்களை இரவு நேர பணியில் அமர்த்த மாட்டோம் என்பன வரவேற்கப்பட வேண்டியவை.
  • சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிக் காவல் பிரிவு உருவாக்கப்படும் என்பது இன்றைய சூழலில் ஒரு முக்கியமான வாக்குறுதி. வேறு எந்தக் கட்சியும் வாய் திறக்காத நிலையில் மக்கள் நலக் கூட்டணியின் அறிக்கை சாதி ஆணவப் படுகளைகளுக்கு எதிராகப் பேசுவது வரவேற்கப்பட வேண்டியதே.
  • தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களைப் பற்றி வேறு எந்த அறிக்கையும் பேசாத நிலையில்,
  • 8 மணி நேர வேலை
  • பணி நீக்கங்களுக்கு எதிரான வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது.
  • அந்நிய நேரடி முதலீட்டுக்கு நேரடியான ஆதரவு இல்லை.
  • அனைத்து தேர்தல் அறிக்கைகளும் முதலாளிகளுக்கான உதவியைப் பற்றிக் கூறும் போது, தொழிலாளர்களுக்கான  தேர்தல் அறிக்கையை முன் வைத்துள்ளது மக்கள் நலக் கூட்டணி.

ஒருபுறம், மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் உலகமயப் பொருளாதாரம் சிறு வணிகர்களை நசுக்கி வணிக வளாகங்களில் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே நலன் பயக்கும் என்று பேசி வருகிறார். ஆனால், இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தின் தே.மு.தி.க-வின் தேர்தல் அறிக்கை நகரங்கள் தோறும் வணிக வளாகங்கள் கட்டப்படும் என்று உறுதி அளிக்கிறது. இதுதான் இந்தக் கூட்டணியின் ஆகப்பெரும் முரண்.

மக்கள் நலக் கூட்டணியை ஆதரிக்கலாமா?

முழுமையான மாற்று என்பது தேர்தல் களத்தில் உருவாவது அல்ல. மாறாக, மக்கள் மத்தியில், மக்கள் போராட்டங்களில் இருந்தும் சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தில் இருந்தும் தான் உருவாகும் என்பது உறுதி.

போராட்ட அரசியலில் இருந்தே மாற்று அரசியல் உருப்பெறும். தேர்தலைக் கடந்து மாற்று அரசியல் அணியைக் கட்டியெழுப்பும் போராட்டத்தைத்  தொடர வேண்டியுள்ளது.

கடந்த காலத் தேர்தல்களில், தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, பா.ச.க, பா.ம.க-வுடன் கூட்டணி வைத்ததும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு சந்தர்ப்பவாத முடிவுகளை எடுத்த பின்னணிகளை மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் நான்கு கட்சிகளுக்கும் உள்ளது. இருப்பினும், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்று என்கிற கதவுகளைத் திறக்க வேண்டிய சூழலை உள்வாங்கிக் கொண்டதற்கும், சாதியவாதக் கட்சியான பா.ம.க, மதவாதக் கட்சியான பா.ச.க தனிமைப்பட்டதற்கு மக்கள் நலக் கூட்டணி உருவானதே காரணம்.

அதனடிப்படையில், தொழிலாளர் நலன்களுக்காகவும், உலகமயப் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகப் போராடும் கம்யூனிஸ்ட் கட்சிகள், சாதி ஒழிப்பு, சமூக நீதி, ஆகிய தளங்களில் செயல்படும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஈழத் தமிழர் பிரச்சினை, தமிழக மாநில உரிமைகள், சமூக நீதி, இயற்கை வளச் சுரண்டல்களுக்கு எதிராகத் தொடர்ந்து களத்தில் நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அடங்கிய மக்கள் நலக் கூட்டணி முழுமையான மாற்று இல்லை எனும் போதிலும், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்று என்று முன்னிறுத்திக் கொள்ளும் மதவாதக் கட்சியான பா.ச.க, சாதியவாதக் கட்சியான பா.ம.க, இனவாதத்தை பரப்பி வரும் நாம் தமிழர் ஆகியவற்றை புறக்கணிக்கும் வேண்டிய தேவை முன்னெப்போதையும் விட தேர்தல் களத்தில் எழுந்துள்ளது.

இந்த சமகாலத் தேவையின் பொருட்டு மக்கள் நலக் கூட்டணியை ஆதரிப்பதே நம்முன் உள்ள வாய்ப்பு. இனி வரும் காலங்களில், மக்களின் போராட்டக் களத்தில் இருந்து உருவாகும் மாற்று, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை புறந்தள்ளுவதற்கான தொடக்கமாக இது அமையும்.

– கதிரவன்

இளந்தமிழகம் இயக்கம்

About கதிரவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*