Home / ஈழம் / முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: நிகழும் அரசியல் மாற்றங்கள் நீதிக்கான திறவுகோல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: நிகழும் அரசியல் மாற்றங்கள் நீதிக்கான திறவுகோல்

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு போரின் ஏழாம் ஆண்டு நினைவில்

போரினாலும் போருக்குப் பின்னாலும் கடந்த ஏழு ஆண்டுகளாக இன அழிப்புக்கு ஆளாகி வரும் தமிழர்கள் தரப்பிலும் இன அழிப்பை முன்னெடுத்து வரும் சிங்கள ஆளும்வர்க்கத் தரப்பிலும் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள்  போர் முடிந்து 6 ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணைத் தேவை என ”சீன சார்பு” இராசபக்சே தலைமையிலான சிங்களப் பெரும்பான்மை அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து, கண்டித்து வந்தன. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு ‘மேற்குலக சார்பு” மைத்திரிபால தலைமையிலான அரசு ’மாற்றத்திற்கான வழி’ என அடையாளம் காட்டப்பட்டு அதன் அனைத்து நடவடிக்கைகளையும் கேள்விக்குள்ளாக்காமல் தாங்களும் ஆதரித்து பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பையும் இந்த ‘மாற்றத்தை’ ஏற்றுக் கொள்ள வலியுறுத்தி வருகின்றன மேற்குலக நாடுகள். இதுதான் இந்த ஆண்டின் மிக குறிப்பான மாற்றம்..

இதன் வளர்ச்சிப் போக்கை தனக்கு ஆதரவாக பயன்படுத்திவரும் சிங்களப் பேரினவாத அரசு ‘முள்ளிவாய்க்கால்’ இனஅழிப்புப் போரை பன்னாட்டு விசாரணை சூழலில் இருந்து மட்டுப்படுத்தி செம்மணி, மூதூர், வல்வெட்டித்துறை படுகொலைகள் போல இலங்கைத் தீவுக்குள்ளேயே விசாரணைப் பொறிமுறையை முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றது.

மேலும் இந்த ஆட்சி மாற்றத்தால் முள்ளிவாய்க்காலுக்குப் பின் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளான போரில் காணாமல் போனவர்களை மீட்பது, கைது செய்யப்பட்ட போராளிகளை முழுமையாக விடுவிப்பது, நீண்ட நாள் சிறையிலடைக்கப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை, காணிகளை மக்களிடம் மீள ஒப்படைப்பது, சிங்கள ஆக்கிரமிப்பைத் தடுப்பது உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளைப் பின்னுக்குத் தள்ளி  ‘நல்லிணக்க’ அரசியலே முதன்மை அரசியலாக இலங்கை – மேற்குலக அரசுகள் தரப்பில் முன்வைக்கப்படுகின்றது. இதனை ஏற்றுக்கொள்ள ஈழத் தமிழர்களின் அரசியல் தலைமைகளும் வழிநடத்தப்படுகின்றனர். அண்மைக் காலமாக முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பலரை சிறிசேன அரசு காரணமின்றி மீண்டும் கைது செய்து வருகின்றது. தமிழ் அரசியல் தலைமைகளிடமிருந்தும் இந்த கைதுகளுக்கு குறிப்பிடப்படும் அளவிற்கு எதிர்ப்புகள் எழவில்லை. இது சிறிசேன அரசின் அடக்குமுறை போக்கை மக்களிடமும் உலக நாடுகளிடமும்  அம்பலப்படுத்தாமல் ஆதரிக்கும் போக்கே ஆகும்.

இந்த நல்லிணக்க அரசியல் மூலமாக இன அழிப்பை மூடிமறைக்கும் நடவடிக்கையின் நீட்சி தான் தற்பொழுது முன்வைக்கப்படும் இலங்கை அரசியலமைப்பு மாற்றம். ஒற்றையாட்சி முறைக்குள்ளான இந்த யாப்பு மாற்றம் தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கிவிடும் என்ற தோற்றத்தை அனைத்துலக மட்டத்திலும், தமிழர் அரசியல் தலைமைகள் மத்தியிலும் உருவாக்கும் வேலையைச் சிங்கள அரசு முன்னெடுத்து வருகின்றது. அதன் வழியே யாப்பு மாற்றத்திற்குள்ளாக இன அழிப்பு குற்றச்சாட்டைக் கடந்து செல்ல முனைகின்றது.

விடுதலைப் புலிகளுடனான இராணுவப் போரை இராசபக்சே தலைமையினால் முடித்தது. அதன் பின்னால் இலங்கை அரசிற்கு அனைத்துலக அளவில் எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களை மைத்திரிபால தலைமையைக் கொண்டு கையாள்வது என்ற தங்களது இராசதந்திர செயல்திட்டத்தை சிங்களப் பேரினவாத அரசு தொடர்ச்சியாக அனைத்துலக மட்டத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தமிழர் தரப்பை பொருத்தவரை வடமாகாண சபை உருவாக்கம் தமிழர் தரப்பை வடக்குப் பகுதியில் ஒரு அரசியல் திரட்சியாக உருவெடுக்க உதவி செய்தாலும் அடிப்படை அதிகாரங்கள் கூட அற்ற நிலையில் மாகாண சபை அதிகாரமற்ற ஒரு வடிவமாக கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. ஆட்சி மாற்றத்திற்குப் பிறகான வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேசுவரனின் இனப்படுகொலை மீதான தீர்மானம், பொதுவெளியில் உருவான தமிழ் மக்கள் பேரவை, காணி ஆக்கிரமிப்பு, பாலியல் கொலைகளுக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி எதிர்ப்பைப் பதிவு செய்தது உள்ளிட்டவை நம்பிக்கையளிக்கும் முன்னேற்றங்களாக உள்ளன.

ஆனால் ,போராட்டத்தின் அடிப்படையான அரசியல் உரிமைக்கான தீர்வைப் பொறுத்தவரை தமிழர் தரப்பில் இருந்து முன்வைக்கப்படும் குறைந்தபட்ச தீர்வான கூட்டாட்சிமுறை தீர்வுக்கு கூட இலங்கை அரசு செவிசாய்க்கத் தயாராக இல்லை என்பதே அரசு யாப்பு மாற்றத்தில் கையாளும் முறைகள் மூலம் விளங்குகின்றது. சாரத்தில் இலங்கை அரசின் சார்பாக நல்லிணக்கம், மாற்றம் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் இன அழிப்புக் குற்றச்சாட்டினால் ஏற்படும் அனைத்துலக அழுத்தத்தைத் தவிர்ப்பதை நோக்கியே அமைகின்றன.

mullivaaikkal remembrance

இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரசு அரசைப் போலவே பாரதிய சனதா கட்சியும் இலங்கையை வெளிப்படையாக ஆதரித்து வருகின்றது. சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இராசபக்சே போலவே சிறிசேனாவை விருந்தினராக ஆழைத்து ‘பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவு’ ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் மூலம் இலங்கைக்கு மேலும் சலுகைகளையும் இராணுவ உதவிகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும் மோடி அரசு இன அழிப்பு விசாரணை குறித்து கள்ள மெளனம் காத்து, விசாரணையை  மூடி மறைப்பதில் முன்னணியாக வேலை செய்துவருகின்றது.

அரசுகளின் கொள்கை என்பது அரசுகளின் நலன் என்பது தான். சிறிசேன அரசு சீனாவுடனான வர்த்தக வாய்ப்புகளை மேலும் தக்கவைத்துக் கொள்ளும் உடன்படிக்கைகளை செய்து வருகின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த  சிறிசேனாவை  ஆட்சிக்கு கொண்டு வந்த அமெரிக்க மற்றும் இந்தியாவின் நடவடிக்கை முழுபலனை அளிக்கவில்லை. இது நீண்ட கால போக்கில் இந்திய – அமெரிக்காவின் நலனுக்கு எதிராகவே அமையப்போகின்றது. இதை தமது பேர வலிமையாக ஈழத்தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்களப் பேரினவாத தலைமைக்கு யார் வந்தாலும் பேச்சுவார்த்தை, உடன்படிக்கை, யாப்பு திருத்தம், மாற்றம் என காலம் கடத்தப்படுமே தவிர  ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை அவர்கள் ஒருபோதும் வழங்கப் போவதில்லை இதற்கு சிறிசேனாவும் விதிவிலக்கல்ல. கூட்டாட்சி முறையைக்கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத சிறிசேனா தலைமையின் ஏமாற்று அரசியல் குறுகிய காலத்தில்  வெட்டவெளிச்சமாக அம்பலமாகும் பொழுது இதை மாற்றத்திற்கான அரசாக காட்ட முயலும் தமிழர் தலைமைகளும் தமிழ் மக்களிடம் அம்பலப்பட்டுப்போவார்கள்.

சிங்களர் மத்தியில் இந்த ஆட்சி மாற்றத்தின் தோல்வியைத் தனக்கு சாதகமாக பயன்படுத்த இராசபக்சே காத்துக் கொண்டிருப்பதைப் போல தமிழர்கள் தரப்பிலிருந்து இந்த ஆட்சி மாற்றத்தின் தோல்வி சிங்கள பேரினவாத அரசமைப்பின் தோல்வி என்பதை உலகுக்கு உரக்க சொல்ல வேண்டியது தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை.

தமிழகத்தைப் பொறுத்தவரை 2016 தேர்தல் களம் ஓருண்மையைச் உரக்கச் சொல்கிறது. தேர்தலில் ஈழம் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இல்லை. தமிழகத்தின் சுயநிர்ணய உரிமையைக் கோரக் கூடிய முகாமொன்று வலிமைபெறும் பொழுதுதான் ஈழப்பிரச்சனையை அரசியல் களத்தில் தக்க வைக்க முடியும். துண்டு துண்டாகப் பிரச்சனைகளைக் கண்ணுறும் போக்கு எழுந்துவரும் போராட்டங்களை ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்றதாக்கி மக்கள் முகாமை பலவீனப்படுத்துகிறது. இந்திய விரிவாதிக்க எதிர்ப்பை காங்கிரசு எதிர்ப்பு, சோனியா எதிர்ப்பு, தி.மு.க. எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, தெலுங்கர் எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்று குறுக்கி குறுக்கி நிற்பதும் உலக ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதன் பெயரால் உலகையே தமிழர்களின் எதிரியாக கட்டியெழுப்பி பீதியூட்டுவதும் என முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடிய இரத்தச் ஆற்றில் மீன்பிடிக்கத் துடிக்கும் சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக ஈழ ஆதரவு அரசியல் மாறிக் கிடப்பதைத்தான் 2016 தேர்தல் களம் காட்டி நிற்கிறது. இனப்படுகொலை நடந்தேறி ஏழாண்டுகள் கடந்த பின்னும் இந்திய சிங்களக் கூட்டை உடைக்கும் போராட்டத்தைக் கூர்மைப்படுத்துவதில் நாம் தோல்வி அடைந்தால்  இது மற்றுமொரு அரசியல் தோல்விக்கு போடும் விதையாகித்தான் போகும். இன்னொருபுறம் தமிழகத்தில் சாதிய சிக்கல் மேலோங்கி வருகிறது. தலித் மக்களுக்கு எதிரான தலித் எதிர்ப்பு அரசியல் ஈழ ஆதரவு முகாமைப் பிளவுபடுத்திவிட்டது. சாதி எதிர்ப்பு சனநாயகப் போராட்ட்த்தயும் தமீழீழ ஆதரவு போராட்ட்த்தையும் இணைக்கும் புள்ளியில்தான் இந்தியச் சிங்கள் கூட்டை உடைக்கும் உள்ளார்ந்த ஆற்றல் பிறக்கும் என்பதே புறநிலைமை நமக்க்ய் விடும் அறைகூவலாக இருக்கின்றது. வரலாற்றின் கட்டளைக்கு காது கொடுப்போம்.

கடந்த ஏழு ஆண்டுகளில் தமிழர்களின் இன அழிப்பும், விடுதலைப் போராட்டமும், நீதி கோரிய போராட்டங்களும் அனைத்துலக கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழர்கள் தங்களுக்கான இறுதித் தீர்வை வென்றெடுக்க பல்வேறு சாத்தியக்கூறுகள் வளர்ந்து வருகின்றது, அதனை ஒன்றுதிரட்டி வெற்றியாக்க வேண்டியதும் ஒற்றுமையாக முன்நகர வேண்டியதும் தமிழர் தலைமைகளின் பொறுப்பாகும்.  அதுவே முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு முழுமையான நினைவு கூறுதலாக அமையும்.

– இளங்கோவன்

இளந்தமிழகம் இயக்கம்

About இளங்கோவன்

One comment

  1. /** சாதி எதிர்ப்பு சனநாயகப் போராட்ட்த்தயும் தமீழீழ ஆதரவு போராட்ட்த்தையும் இணைக்கும் புள்ளியில்தான் இந்தியச் சிங்கள் கூட்டை உடைக்கும் உள்ளார்ந்த ஆற்றல் பிறக்கும் என்பதே புறநிலைமை நமக்க்ய் விடும் அறைகூவலாக இருக்கின்றது. வரலாற்றின் கட்டளைக்கு காது கொடுப்போம். **/

    அருமை தோழரே… சரியாக சொன்னீர்… ஆனால் இன்றைய நிலையில் இச்சிந்தனையின் நிழல்கள் கூட படராத அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு கைகள் ஒடுக்கப்பட்ட நிலையில், மறுபடியும் புரட்சி ஒன்றே விடியலைத் தரும் என்பதில் ஐயமில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*