Home / அரசியல் / தோழர்.திருமாவின் பேச்சும், உடன்பிறப்புகளின் நையாண்டியும்

தோழர்.திருமாவின் பேச்சும், உடன்பிறப்புகளின் நையாண்டியும்

422179_357235961019185_1958784365_n

மே 25 அன்று காலச்சுவடு நடத்திய நூல் வெளியிட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்.தொல்.திருமாவளவனின் பேச்சில் பின்வரும் வரிகளை மட்டும் வெட்டி ஒரு உடன்பிறப்பு முகநூலில் கருத்து சொல்லியுள்ளார்.

“இந்த மண்ணில் சாதி ஒழிப்பு என்பது தலித் சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாகுவதால் அல்ல, தலித் அல்லாத சமூகத்திலிருந்து அம்பேத்கர்கள் உருவாக வேண்டும்.” – திருமாவளவன்

இதை விமர்சித்து, நீங்கள் தான் அம்பேத்கரை தலித் வட்டத்திற்குள் வைத்துள்ளீர்கள், நீங்கள் தான் உங்களை ஒரு தலித் தலைவராக தனிமைப்படுத்திக் கொண்டுள்ளீர்கள், இப்படியே போனால் நீங்கள் வைகோ, விஜயகாந்தைத் தான் அம்பேத்கராக பார்ப்பீர்கள், என விமர்சித்துள்ளார்.

இதை எப்படி புரிந்து கொள்வது ?

“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டுள்ளது – மார்க்ஸ்”

இந்தியாவில் ஒருவர் பேசும் சொல்லிற்கு பின் அவரது வர்க்கம், சாதி, பாலினம், கட்சி என எல்லாம் உள்ளது.

பேசியவர் உடன்பிறப்பு என்பதால் அவர் சொல்ல வருவது, நீங்கள் திமுக-விலிருந்து பிரிந்து, மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தது தவறு, நீங்கள் திமுகவிலேயே இருந்திருக்க‌ வேண்டும் என்ற தனது கருத்தை பொது கருத்து சொல்வது போல சொல்லியுள்ளார்.

சரி பேசியவர் உடன்பிறப்பாகவே இருந்தாலும் அவர் சொல்லவரும் கருத்து சரிதானே என நீங்கள் கேள்வி கேட்கலாம், அதற்கான பதில் இதோ.

அம்பேத்கரை தலித் வட்டத்திற்குள் அடைத்தது தலித்துகள் அல்ல, சாதி இந்துக்களே.  சாதி இந்துக்களின் வீட்டில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கக்கூடாது, அவரின் புத்தகத்தை யாரும் படிக்கக்கூடாது என இங்கு எந்த தலித் அமைப்பும் எந்த தீர்மானமும் போட்டு, அந்த தீர்மானத்தை மீறுபவர்களின் மீது வன்முறையை ஏவியதில்லை, அப்படியிருக்க எதை வைத்து அம்பேத்கரை தலித் அமைப்புகள் குறுகிய வட்டத்திற்குள் அடைக்கின்றன என குற்றம் சாட்ட முடியும்?

மேலும் அம்பேத்கர் படம் தமிழில் வந்த பொழுது அதை நீங்கள் சார்ந்திருக்கும் திமுக‌ கட்சி அம்பேத்கர் படத்தை தங்களது கட்சியைச் சார்ந்த எல்லா உறுப்பினர்களும் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனரா?  அந்த படத்தை திரையிடக்கூட பெரும்பாலான திரையரங்குகள் மறுத்தன, அப்பொழுது திமுக போராடி திரையிட அனுமதி பெற்றுதந்தனரா?  செய்தது எல்லாம் தலித் அமைப்புகளே, படத்தின் காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி தங்களது உறுப்பினர்களை எல்லாம் படம் பார்க்க வைத்தார்கள். திரையரங்கு கிடைக்காத பொழுது அதற்காக போராடினார்கள். இது தான் நடந்த உண்மை. நிலைமை இப்படி இருக்க என்னமோ தலித் அமைப்புகள் தான் அம்பேத்கரை குறுகிய வட்டத்திற்குள் வைத்திருப்பது போல சொல்வது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயலே அன்றி வேறல்ல.

index
அம்பேத்கர் என்பவர் தலித் வட்டத்திற்குள் சுருக்கக்கூடியவர் அல்ல. இந்தியாவில் அன்று அரசியலறிவியலிலும் , பொருளாதாரத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர். பொருளாதாரத்தில் இரட்டை முனைவர் பட்டம் பெற்ற ஒரே அரசியல் தலைவர். ரிசர்வ் வங்கியை உருவாக்க மூலகாரணமாக இருந்த‌வர். தொழிலாளர் நலச்சட்டங்களை உருவாக்கியவர். பெண்களுக்கு சொத்தில் உரிமை, விவாகரத்து செய்யும் உரிமை போன்ற சட்டங்களை இந்துத்துவவாதிகளின் எதிர்ப்புக்கு இடையே சட்டமாக்கியவர். மிகவும் முற்போக்கான இந்து சட்ட மசோதாவிற்காகவும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான‌ இட ஒதுக்கீட்டிற்காகவும் போராடி தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தவர். இந்தியாவில் நீர்மேலண்மை பற்றி தொலைநோக்கோடு சிந்தித்து “ஹிராஹூட், தாமோதர்” போன்ற மிகப்பெரிய அணைகள் உருவாக பாடுபட்டவர். தந்தை பெரியார் தனது வாழ்க்கையில் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் அண்ணல்.அம்பேத்கர் மட்டுமே எனச் சொல்லிக்கொண்டே போகலாம், அதுவே ஒரு தனிக் கட்டுரையாகிவிடும் வாய்ப்புள்ளதால் இத்தோடு நிறுத்திக் கொள்கின்றேன்.

அடுத்து திருமாவளவன் தன்னை ஒரு தலித்தாக குறுக்கிக் கொள்கின்றார், பொதுச் சமூகத்துடன் இணைய மறுக்கின்றார் என்ற குற்றச்சாட்டிற்கான பதில். இங்கு இராமதாஸ் தான் எல்லா தொகுதிகளிலும்(சில தொகுதிகள் தவிர்த்து) தங்கள் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தி தனித்து போட்டியிட முடியும், திருமாவளவனல்ல. மேலும் விடுதலை சிறுத்தைகளால் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற முடியாது அதற்கு காரணம் சாதி.

என்ன தான் முற்போக்கு முகமூடியை மாட்டிக்கொண்டு, பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் ஒரே கட்சி எனக்கூறிக்கொண்டாலும் திமுக ஒரு தொகுதியில் பெரும்பான்மை சாதியினர் யாரோ அந்த சாதியைச் சேர்ந்த ஒருவரைத் தான் அந்த தொகுதியின் வேட்பாளராக நிறுத்துகின்றது. வன்னியர், கவுண்டர், தேவர்களுக்கு தான் அதிக அமைச்சர் பதவிகளை கொடுத்து அழகு பார்த்தது என்பது தான் நடந்த, நடக்கின்ற யதார்த்தங்கள். அதிமுகவிலும் இதே தான் நிலை.

index1

விடுதலை சிறுத்தைகள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் திமுக தான் ,  வன்னியர் ஓட்டுகள் பறிபோகின்றன என அவர்களை சென்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின் புறக்கணித்தது திமுக தானே, அதுமட்டுமின்றி செத்து போன காங்கிரசிற்கு 41  சீட்டுகள் ஒதுக்கிய திமுகவால் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு 15 அல்லது  20 சீட்டு ஒதுக்க முடியாததும் தான் விடுதலை சிறுத்தைகள் வெளியேறி  மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததற்கான காரணம். இதை அந்த கூட்டத்திலேயே சொன்னார் திருமாவளவன்.

அதுமட்டுமின்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியோ, திருமாவளவனோ தங்களை தலித் அடையாளத்திற்குள் அடைத்துக் கொள்ளவில்லை, கடந்த தேர்தல்களை எல்லாம் இரண்டு பெரிய கட்சிகளான திமுக, அதிமுக உடன் சேர்ந்து  சந்தித்திருக்கின்றார், இந்தத் தேர்தலைக் கூட மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்து தான் சந்தித்தார். சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை என எல்லா  கொள்கைகளையும் கொண்டு செயல்படும் திருமாவையும், விடுதலை சிறுத்தைகளையும் இந்த சாதிய சமூகம் தான் தலித் என சுறுக்குகின்றது.

இறுதியாக உடன்பிறப்புகளுக்கு ஒரு கேள்வி – 4 தொகுகளில் இரண்டாம் இடத்தையும் , 63 தொகுதிகளில் மூன்றாமிடத்தையும் தனித்து நின்றே பிடித்துள்ள சாதிய கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியையோ, 4 தொகுதிகளில் இரண்டாம் இடத்தையும், 19 தொகுதிகளில் மூன்றாமிடத்தையும் தனித்து நின்று பிடித்துள்ள மதவாத கட்சியான பாரதிய சனதா கட்சியையும் எதிர்த்து களமாட வேண்டிய நீங்கள் ஏன் தோழமை சக்தியான விடுதலை சிறுத்தைகளை எதிர்த்து களமாடுகின்றீர்கள் ?

நற்றமிழன்.ப‌ -இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*