“ஒவ்வொரு எழுத்தாளரும் அரசியல் எழுத்தாளர்தான். இதில் உள்ள ஒரே கேள்வி ; எது , யாருக்கான அரசியல்?
-யூகி வா தியாங்கோ “
எழுத்தாளர் என்ற சொல்லிற்கு பதிலாக கலைஞன் என்ற சொல்லை வைத்தும் இதே சொற்றொடரைச் சொல்லலாம், நூறு விழுக்காடு பொருந்தும். இங்கே ஒவ்வொரு படமும் ஒரு அரசியலைப் பேசுகின்றது, அது யாருக்கான அரசியல் என்பது தான் கேள்வி.
“ஆதிக்க அரசியலா? ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலா?”, “சாதி ஆதரவு அரசியலா? சாதி எதிர்ப்பு அரசியலா?”, “ஆணாதிக்க அரசியலா? பெண்ணுரிமை அரசியலா?”,”மத அரசியலா? பகுத்தறிவு அரசியலா?”
பொதுவாகவே மக்களின் அரசியலைப் பேசும் திரைப்படங்கள் பிரச்சார நெடியுடன் கலைரசனையின்றி வறட்டுத்தனமாக இங்கு எடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு உண்டு, அதனால் தான் மக்களின் அரசியலைப் பேசும் படங்கள் அந்த மக்களாலேயே பார்க்கப்படாமல் அரசியல் பேசும் குழுக்களுக்குள்ளேயே சுற்றிக் கொண்டு உள்ளன.
அதே நேரம் மணிரத்னம் போன்றோர் எடுக்கும் ஆதிக்க, ஆளும் வர்க்க அரசியலை, எந்த மக்கள் பார்க்கின்றார்களோ, அவர்களையே எதிரிகளாக சித்தரிக்கும் திரைப்படங்கள், அந்த மக்களாலே பார்க்கப்பட்டு வணிக ரீதியாகவும், கலை விமர்சன ரீதியாகவும் வெற்றியடைகின்றன.
ஏன் இந்த பிரச்சனை ?
மக்களின் அரசியலைப் பேசும் திரைப்படங்களை எடுக்கும் நண்பர்கள், அரசியலை மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு, திரைக்கதை, தொழில்நுட்பம் போன்றவற்றை இரண்டாம் பட்சமாக கருதி எடுக்கின்றார்கள். அதே நேரம் மக்கள் எதிர்ப்பு அரசியலைப் பேசும் படங்களை எடுக்கும் மணிரத்னம் போன்றோர், ஆதிக்க அரசியலுக்கு கொடுக்கும் அதே கவனத்தை, முக்கியத்துவத்தை திரைக்கதைக்கும், தொழில் நுட்பத்திற்கும் கொடுக்கின்றார்கள்.
உதாரணத்திற்கு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை எடுத்துக்கொள்வோம் – படம் தொடங்கும் கொஞ்ச நேரத்திலேயே பார்வையாளனை கீர்த்தனாவோடும்(மகளாக நடித்தவர்), அவரது குடும்பத்தோடும் ஒன்றச் செய்கின்றார்கள், பின்னர் இது உனது குடும்பமல்ல, நாங்கள் உன்னை தத்தெடுத்தவர்கள், உனது பெற்றோர் இலங்கையில் இருக்கின்றார்கள் என களத்தை இலங்கைக்கு நகர்த்துவார்.
பின்னர் இலங்கைக்குச் சென்று அந்த குழந்தையின் பெற்றோரைத் தேடும் காட்சியில் தான் மணிரத்னம் – குழந்தைப் போராளிகள், தமிழ் போராளிகள் சிங்களர்கள் எல்லோரையும் தாக்குவார்கள் போன்ற அரசியலை கதையினூடே வைப்பார். பார்வையாளர்களாகிய மக்கள் கதையினுடன் ஒன்றி உணர்ச்சிப் பெருக்கில் இருக்கும் பொழுது அவர்களையும் அறியாமல் அவர்களுக்குள்ளே இந்த அரசியல் உள்ளே நுழைக்கப்படுகின்றது. இதை ரோஜா, உயிரே, பம்பாய் உள்ளிட்ட மற்ற படங்களிலும் நீங்கள் பார்க்கலாம்.
மூளைக்கு புரியுது, மனசுக்கு புரியமாட்டேங்குதுன்னு – இந்தியன் படத்தில் ஒரு வசனம் வரும். அது போல மக்கள் உணர்ச்சி பெருக்கில் இருக்கும் பொழுது அறிவு பின்னுக்குத் தள்ளப்பட்டு, மனது முன்னுக்கு வருகின்றது, அந்த நேரத்தில் அவர்களின் உள்ளே செல்லும் அரசியல் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து விடுகின்றது.
அதே நேரத்தில் மக்களின் அரசியலை பேசும் படங்கள் தங்கள் அரசியலை நேரடியாகவும், முகத்தில் அறைந்தாற் போலப் பேசுவதாலும் அது மக்களைச் சென்று சேருவதில்லை, முன்பே கூறியது போல மணிரத்னங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தங்கள் ஆளும் வர்க்க, அதிகார அரசியலை மக்கள் மனதில் ஏற்றிவிடுகின்றன.
மக்களுக்கான அரசியலை திரைப்படங்களாக கொடுக்கும் இயக்குநர்கள் இதை மனதில் வைத்து தங்களது படங்களை உருவாக்க வேண்டும். உங்களது திரைப்படங்கள் வெகு மக்களைச் சென்று சேர்ந்தால் தான் உங்கள் இலக்கில் நீங்கள் வெற்றியடைய முடியும்.
இது மட்டும் தான் பிரச்சனையா?
மணிரத்னம், கமல்ஹாசன், ஷங்கர், பாலா, முருகதாஸ் உள்ளிட்டோர் ஆளும் வர்க்க , அதிகார அரசியலைப் பேசுவதால் அவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்கின்றன/கொடுக்கப்படுகின்
அதே சமயம் மக்கள் இயக்குநர்களாகிய உங்களுக்கோ வாய்ப்புகள் வருவது அரிதிலும், அரிதான ஒன்று, அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும் நீங்கள் எடுக்கும் படங்கள் சென்சார் அமைப்பு கத்தரியை தாண்டி வருவது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. இதே சென்சார் அமைப்புகள் தான் ஆதிக்க சாதி வெறியை ஊட்டி வளர்க்கும் தேவர் மகன், சின்ன கவுண்டர் போன்ற படங்களையும், சிறுபான்மையினரை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் படங்களையும் எல்லோரும் பார்க்கும் வண்ணம் “U” சான்றிதழ் கொடுத்து அனுப்புகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் இரானில் படம் எடுக்கும் எல்லோருக்கும் இருக்கின்றது, அதையும் தாண்டி தரமான, அரசியல் பேசும் படங்களை அங்குள்ள சில இயக்குநர்கள் எடுக்கின்றார்கள் அதே சமயம் உங்களுக்கு இருக்கும் வணிக வெற்றி என்கின்ற நிர்ப்பந்தம் அவர்களுக்கு இருக்கின்றதா என்பது எனக்கு தெரியவில்லை.
இது ஒரு புறம் என்றால் அரசியல் இயக்கங்கள் தாங்கள் பேசும் அரசியல் எல்லாம் ஒரு புள்ளி கூட குறையாமல் அப்படியே இருந்தால் தான் அந்த திரைப்படத்தை ஆதரிக்கின்றன, இல்லையென்றால் அவற்றை முற்று முழுதாக நிராகரிக்கின்றன, உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும், நீங்கள் பயன்படுத்தும் களமான திரைப்பட வெளியையும், அதில் உள்ள அரசியலையும் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள் அல்லது மறக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி திரைப்படங்களை எப்படி விளம்பரப் படுத்துகின்றோம், திரைப்படம் என்கிற விற்பனைப் பண்டத்தை எப்படி சந்தையில் அறிமுகப்படுத்துகின்றோம் என்பதும் முக்கியம், அதிலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.
காதல், வழக்கு எண் 18/9, தங்க மீன்கள், ஜீவா, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, நீர்ப்பறவை, சதுரங்க வேட்டை, மெட்ராஸ், 36 வயதினிலே, காக்கா முட்டை (இங்கு குறிப்பிட்டுள்ள படங்கள் உதாரணத்திற்காகவே, இவை மட்டுமே முழுமையான பட்டியல் அல்ல) போன்ற படங்களின் வருகை நம்பிக்கையூட்டுகின்றது. இந்த வரிசையில் மேலும் பல படங்கள் வந்து மக்களை சரியான அரசியலை நோக்கி நகர்த்தவேண்டும்.
கலை மக்களுக்கானது.
நற்றமிழன்.ப
இளந்தமிழகம் இயக்கம்.
// மணிரத்னங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தங்கள் ஆளும் வர்க்க, அதிகார அரசியலை மக்கள் மனதில் ஏற்றிவிடுகின்றன. மணிரத்னம், கமல்ஹாசன், ஷங்கர், பாலா, முருகதாஸ் உள்ளிட்டோர் ஆளும் வர்க்க , அதிகார அரசியலைப் பேசுவதால் அவர்களுக்கு வாய்ப்புகள் நிறைய கிடைக்கின்றன // – utharanam kooruga?
மக்கள் இயக்குநர்களாகிய உங்களுக்கோ வாய்ப்புகள் வருவது அரிதிலும் – yaru makkal iyakunargal? ethai poruthu intha varaimurai?
உதாரணம் நீங்கள் கொடுத்த பகுதிக்கு அடுத்து வருகின்றது .
யார் மக்கள் இயக்குநர்கள் ?
ஒடுக்கப்பட்ட மக்களின் , சாதி வெறி, மத வெறியால் பாதிக்கப்படும் மக்களின், பெண்களின் உரிமைகளை பேசும் இயக்குநர்கள்.
அதிகார வர்க்க அரசியலைப் பேசுபவர்கள், ஒடுக்குமுறையை ஆதரிப்பவர்கள், ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவர்கள் எல்லோரும் ஆளும் வர்க்க ஜால்ராக்கள்.