அவ்வளவு ஏன் அம்மா என்ற சொல்லையே இங்கு ………………… வசைச் சொல்லாகவே இந்த சமூகம் (நாம்) பயன்படுத்துகின்றது. ஒரு புறம் அம்மா என்றால் தெய்வத்திற்கு இணையானவள் எனச்சொல்லும் இந்த சமூகம் தான் இதையும் செய்கின்றது. ஒருவனது குடும்பம் அந்த குடும்பத்தில் உள்ள பெண்களின் நடத்தையின் மூலமாகவே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. ஆண்களின் நடத்தை மூலமாக அல்ல. இதற்கு ஆண்களின் ஆதிக்கம் தான் காரணம்.
ஆண்கள் மட்டும் தான் இந்த வசைச்சொற்களைப் பேசுகின்றார்களா? பெண்களும் தானே பேசுகின்றார்கள் என நீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். இங்கு சமூகம் என்பது தந்தை (ஆண்) வழி சார்ந்ததாக உள்ளது. தந்தை தான் பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு முதல் நாயகன். இப்படியிருக்கும் நிலையில் அந்த தந்தையும், அவருக்கு நிகரான ஆண்களும் சொல்லும் சொற்களை அவர்கள் சரியான ஒன்றாகவே பார்த்து வளர்க்கின்றார்கள். சிறு வயதில் எந்தப் புரிதலுமின்றி மனதில் பதியும் இந்த வார்த்தைகளைத் தான் அவர்கள் பின்னாட்களில் பயன்படுத்துகின்றார்கள், வார்த்தைகளுக்கு பின்னுள்ள அரசியலைப் புரிந்து கொண்டு அல்ல.
மேலும் மொழியில் பெண்களை நோக்கி பயன்படுத்தும் சில சொற்களுக்கு நிகரான சொற்கள் இருப்பதில்லை, அல்லது அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமல் அழிந்து போய்விட்டன. விதவை, கைம்பெண் என கணவனை இழந்த பெண்ணை நோக்கி சொல்கின்றோம். ஆனால் மனைவியை இழந்த ஆண்ணைக் குறிக்கும் சொல் இருக்கின்றதா எனத் தேடித் தான் பார்க்க வேண்டும். அதே சமயம் ஆண்களை உயர்வாக சொல்லும் சொற்களுக்கு நிகரான சொற்கள் பெண்பாலில் இருப்பதில்லை.
அப்படித் தான் இறைவன் என்ற சொல்லிற்கான பெண்பால் சொல் இங்கு இருந்தும் அதிகம் பயன்படுத்தப்பட்டதில்லை. இது போல சில ஆண்பால் சொற்கள் ஆண்/பெண் இருபாலருக்குமான சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது மாற வேண்டும். பெண்பால் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்.”இறைவி” இந்த சொல்லை முதன் முதலாக பொது வெளியில் கேட்கின்றேன். சங்க இலக்கியங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த சொல்லை தனது படத்தில் வைத்ததற்காக கார்த்திக் சுப்புராஜிற்கு வாழ்த்துகள். ஆண்களால் அவர்களின் ஆதிக்கத்தை, அரசியலை மட்டுமே பெரும்பான்மையாக பேசும் திரையுலகத்தில் இது போன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கது. படத்தின் கதையும், தலைப்பும் பொருந்துகின்றதா என படம் வெளியான பின்பு பார்ப்போம்.
பெண்களின் உரிமைகளுக்காக ஆண்களும் சேர்ந்து போராடுவோம், சமத்துவ சமூகத்தை அமைப்போம்.