Home / கலை / இறைவி – ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு

இறைவி – ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு


படம் முடிந்தவுடன் இறுகிய முகத்தோடு ஆண்கள் வெளியேறுகிறார்கள். உடன் வந்த மனைவியோடு, காதலியோடு, என்ன வார்த்தை பேசுவது என்கிற பதட்டம் அவர்கள் உடல்மொழியில் இருக்கிறது . படத்தில் ஒரு கதாபாத்திரம் சொல்வது போல  “அது லவ்ஸ் இல்லீங்க…குற்றவுணர்ச்சி”…!   காட்சிகளில் எதாவது ஒரு இடத்தில் ஆண்கள் தம்மை அவர்கள் இடத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்கிறார்கள். 30 வயதான ஆண்களுக்கு திருந்த ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.  60 வயது ஆண்களுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை, குற்றவுணர்ச்சியால் நோக வேண்டியது தான்.

“என் மனைவிக்கு நான் எல்லா சுதந்திரங்களையும் கொடுத்திருக்கிறேன்” என பெருமை பேசும் முற்போக்கு கணவன்மார்களைக் கொண்டது தான் நம் சமூகம். குடிப்பது, மனைவியை வீட்டில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணோடு தொடர்பு கொள்வது, ஆண்களுக்கு மட்டுமே உரியது என்பது போல கோபம் கொள்வது, கையில் கிடைத்ததை உடைப்பது,  பழைய காதலைப் பற்றி மனைவியிடம் சோகமாக பெருமை பேசுவது,   “நான் மோசமானவன். என்னைத் திருத்தி வழிக்கு கொண்டு வந்தது அவள் தான்” என்று அப்பட்டமாக அவள் வாழ்நாளைச் சுரண்டுவது என‌ தம்மைக் கருதிக் கொள்ளும் ஆண்களுக்கு ஒரு எளிய பாடம் எடுத்திருக்கிறார் கார்த்திக்.  பல‌ புத்தகங்கள் செய்ய வேண்டிய ஒரு மாற்றத்தை,  காட்சி ஊடகம் நொடிப்பொழுதில் நிகழ்த்திக் காட்டி விடுகிறது. அதை சாத்தியமாக்குபவனே கலைஞன் ஆகிறான்.

 

Iraivi-Movie-Review-rating

கார்த்திக் சுப்புராஜ்ஜின் முந்தைய இரண்டு படங்களுமே, வர்த்தக ரீதியான வெகுசன சினிமா என்றாலும்,  அவர் உருவாக்கும் பெண் பாத்திரங்கள் அழுத்தமாகவே படைக்கப் பட்டிருக்கின்றன. பீட்சா டெலிவரி செய்யும் சாமானியனாக இருக்கும் கதா நாயகனின் வாழ்வை புரட்டிப் போடுகிறாள் ஒரு பெண்.  ஒரு சில வார்த்தைகளில் சினிமா இயக்கும் கனவோடு இருக்கும் ஒரு ஆணின் கதைப்போக்கையே மாற்றி விடுவதும் ஒரு சாதாரண பெண் தான்.  இறைவியில் அப்படியான பெண்கள் இல்லை. ஆனால் படம் முழுவதும் பெண்களின் வலியும், கண்ணீரும், போராட்டங்களும் ஒரு மறை பொருளாக, பின்னணியாக நம்மை தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன.

ஆண்களைக் கொடுப்பவர்களாயும், பெண்களை பெறுபவர்களாயும் மட்டுமே கற்பித்து வாழும் சமூகத்தின் கலைப்படைப்புகளும் ஆண்களை மையப்படுத்தியே உருவாவது தற்செயலானது அல்ல. கணவனின் பிணத்தைக் கடந்து,   இரயிலில் இருந்து இறங்கி மழையில் நனையச் செல்லும் பெண், இந்த எல்லா கற்பிதங்களையும் உடைத்துப் போடுகிறாள்!

“மனிதன் என்னும் கூட்டுக்குள்ளே அடங்காதே பெண்ணே ” என்கிற ஒற்றை வாக்கியம் பின்னணியில் ஒலிக்கிறது.

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*