Home / அரசியல் / இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

இட ஒதுக்கீடு இன்றும் தேவையா? – ஒரு விவாதத் தொடர்

2006ல் பெங்களூரில் நான் வேலைக்கு சென்று ஆங்கிலம் பேசும் பயிற்சிக்காக ஒரு பயிற்சி பள்ளியில் சேர்ந்த பொழுது ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியை எடுத்து கொண்டு அதன் மீது விவாதம் நடக்கும். அப்படியான ஒரு விவாதத்தின் தலைப்பு “இட ஒதுக்கீடு”. அன்று நான் இட ஒதுக்கீடு கூடாது என்றும், இன்னும் எவ்ளோ நாளைக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்போறீங்க என ஆவேசமாக பேசி விவாதம் செய்தேன்.

அன்றைய விவாதத்தையும், நான் என்ன பேசினேன் என்றும் அறை நண்பர். ஆல்வினிடம் பெருமை பொங்க கூறினேன். நீங்க பேசினது சரியில்லைங்க,  நீங்க இன்னும் படிக்கனுங்கன்னு சொல்லிட்டு போயிட்டார். அவர் நிறைய புத்தகங்கள் படிப்பவர், அப்பொழுதெல்லாம் நான் புத்தகங்கள் படித்ததில்லை, டி.வி, பேப்பரில் வரும் செய்திகளை மட்டும் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தவன்.

பின்னாட்களில் நான் படித்த புத்தகங்களும், நண்பர்களுடனான விவாதங்களில் அறிந்து கொண்ட செய்திகளும் எனது கருத்தை மாற்றின . நான் தெரிந்து கொண்டதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக‌ இந்த கேள்வி-பதில் தொடர் எழுதுகின்றேன் நண்பர்களே. நண்பர்கள் எழுப்பிய கேள்விகளை முதலில் தொகுத்துவிட்டு, கேள்வி-பதிலுக்குச் செல்கின்றேன்.

கேள்விகள்/கருத்துகள்:

சாதிவாரியான இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கலாம் ? என்றாவது ஒரு நாள் இது நிறுத்தப்பட வேண்டியது தானே ? ஏன் இன்றிலிருந்து தொடங்கக்கூடாது ?  50-60 ஆண்டுகள் ஒதுக்கீட்டை வைத்து அவர்கள் எல்லாம் முன்னேறி இருக்கலாமே ?

இப்பெல்லாம் யாரு சார் சாதி பார்க்குறா?

யாருங்க சார் இந்த மண்டல்? எதுக்கு இடஒதுக்கீடு வேணும்னு சொன்னார்?

சாதி சான்றிதழ் இருக்குறதுனால தான் சார் சாதி வாழுது, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தானே சாதியை வளர்க்கிறது? இட ஒதுக்கீட்டை ஒழித்தால் சாதி ஒழிந்து விடுமல்லவா ?

இட ஒதுக்கீடு ஏன் வேண்டுமென கேட்கிறார்கள்.மற்றவர்களைப் போல தகுதி திறமையை வைத்து அவர்கள் உழைத்து முன்னேற ஏன் முயற்சி செய்வதில்லை ?

இடஒதுக்கீட்டின் பயன் குறித்த சமூகங்களுக்கு சீரிய முறையில் சென்று அடைகிறதா ? முன்னேறிய சில குடும்பங்களே மீண்டும் மீண்டும் பயனை அனுபவிக்கிறார்கள்

பெண்களுக்கான இட ஒதுக்கீடு தேவை இல்லையா?

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவது தானே சரி ? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களில் பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஐயரில் ஏழைகளும் இருக்கிறார்கள்.

இட ஒதுக்கீடு இருக்குறதால தான் சார் நம்ம நாடு முன்னேறாம இருக்கு.

இட ஒதுக்கீடால தகுதி , திறமை இல்லாதவங்க எல்லாம் படிக்குறாங்க, வேலைக்கு வருகின்றார்கள்.

வெளிநாடுகளிலெல்லாம் இட ஒதுக்கீடு இல்லை சார்.

தமிழ்ச்சாதிகளுக்கு கிடைக்க வேண்டிய இடஒதுக்கீட்டை, மற்றவர்கள் அனுபவிக்கின்றார்கள், இது மாற்றப்பட வேண்டும்.

indian-reservation-policy-system-2-728

இட ஒதுக்கீடு முதன் முதலில் இந்தியாவில் சட்டமானது எப்போது? யாரால்?

* அம்பேத்கர்
* பெரியார்
* பிரிட்டிஷ் (ஆங்கிலேயர்கள்)
* சாகு மகராஜ்

        என பல பதில்கள் வரும், ஆனால் இந்த பதில்கள் எல்லாம் சரியில்லை. இட ஒதுக்கீட்டை இங்கு முதன் முதலில் சட்டமாகக் கொண்டு வந்தது “மநு” .  சுவயம்பவ மநு என்பவர் ரிக் வேதத்தை எழுதிவிட்டு பின்னாட்களில் மனவ தர்ம சாஸ்தரா என்ற மனுஸ்மிரிதி (மனுவின் விதிகள்) என்ற நூலை எழுதுகின்றார். இந்த மனுவின் விதிகள் தான் இந்து மதத்தின் அடிப்படை விதிகள் . இது நாலு வர்ணத்தாருக்கும் உரிய பணிகளை வகுக்கின்றது. மனுவிற்கு முன்னரே இங்கு வேலைப்பிரிவினை அடிப்படையில் இந்த முறை இருந்தாலும் அதை சட்டமாக்கியதும், மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் விதிகளை உருவாக்கியது தான் மநுவின் பணி.

*பூசைகள் செய்வது, கல்வி கற்று நிபுணத்துவம் பெறுவது, கல்வி கற்பிப்பது (ஆசிரியர்) போன்ற பணிகளை பிராமண வர்ணத்திற்கு.

*மன்னராவது, போர் புரிவது, நிர்வாகம் செய்வது போன்ற பணிகளை சத்திரிய வர்ணத்திற்கு.

*விவசாயம் செய்வது, வணிகம் செய்வது, வர்த்தகம் செய்வது போன்ற பணிகளை வைசிய வர்ணத்திற்கு.

* கூலிக்கு வேலை செய்வது போன்ற பணிகளை சூத்திர வர்ணத்திற்கு.

இந்த நான்கு வர்ணத்திற்கும் வெளியே அவர்ணர்கள் (தீண்டத்தகாதவர்கள்) என்ற ஒரு பிரிவினரும் பின்னாட்களில் உருவாக்கப்பட்டனர். சமூகத்தால் தீண்டத்தகாதது எனக் கருதப்பட்ட பணிகளை அவர்கள்  செய்யுமாறு விதிகள் உருவாக்கப்பட்டன.  இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என பகவத் கீதையும் கூறுகின்றது. இன்றும் நமது நீதிமன்றங்கள் பகவத் கீதையின் மீது தான் சத்தியம் பெறுகின்றார்கள் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விதிகளை வைத்து தான் பின்னர் எல்லா மன்னர்களும் இந்தியாவை ஆண்டார்கள். தமிழகத்தில் சோழர்களையும் சேர்த்தே. கல்வி கற்பது, கற்பிப்பது இரண்டு பணியும் பிராமண வர்ணத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே என்றானது. அவர்கள் சத்திரியர்களுக்கு தேவையான போர் கல்வியையும், வைசியர்களின் வணிகம், வர்த்தகர்த்திற்கு தேவையான கணக்கு பாடங்களை மட்டும் போதித்தார்கள். சூத்திரர்கள் படிக்கவே கூடாது. வேதத்தை சூத்திரன் காதால் கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் போன்ற தண்டனைகளும் மனுவின் விதிகளில் உள்ளது.

போர்த் தொழிலான அம்பு எய்தலை துரோணாச்சாரியாரின் சீடன் அர்ச்சுனனை விட , அவரை மானசீக குருவாக கொண்டு கற்ற ஏகலைவன் சிறப்பாக கற்றான், ஆனால் குருதட்சணையாக கட்டை விரல் கேட்கப்பட்டது. அம்பு எய்தலில் கட்டை விரல் தான் பிரதானம். தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை விடுத்து சூத்திரனான சம்பூகன் இறைவனை நோக்கி தவம் செய்தான். இந்து தர்மம் மீறப்பட்டதால் பிராமணக் குழந்தை இறந்து விடுகின்றது. இதனை மன்னனான இராமனிடம் முறையிடுகின்றார்கள் பிராமணர்கள். இந்து தர்மத்தை மீறியதற்காக‌ இராமனால் கொல்லப்பட்டான் சம்பூகன். உடனே இறந்த அந்த பிராமணக் குழந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது.

இந்தியாவின் இரு பெரும் காப்பியங்களாகச் சொல்லப்படும் மகாபாரதமும், இராமாயணமும் இந்து தர்மம்(மனுவின் விதிகள்)  மீறப்படும் போதெல்லாம் மீறியவர்களை கடுமையாக தண்டித்திருக்கின்றன என ஏகலைவன், சம்பூகன் கதை மூலம் நமக்கு சொல்கின்றன.  இப்படித் தான்  நண்பர்களே இந்தியாவில் படிப்பு என்பது ஒரு சில வர்ணத்தாருக்கு(சாதிகளுக்கு எனக் கொள்க) என “இட ஒதுக்கீடு” செய்யப்பட்டது. இது தான் வரலாறு.

விவாதங்கள் தொடரும் …

பின் குறிப்பு – வாசகர்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கேட்கலாம்.

– நற்றமிழன்.ப

இளந்தமிழகம் இயக்கம்.

தரவுகள் :
http://iskconeducationalservices.org/HoH/practice/701.htm

https://en.wikipedia.org/wiki/Varna_(Hinduism)
https://mathimaran.wordpress.com/2008/12/19/article148/
http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_castes.html

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*