Home / அரசியல் / காட்டு யானையும், போலி என்கவுன்டர்களும், பொது சமூகமும்.
நீலகிரி சோலூரில் மின்சாரம் தாக்கி இறந்த யானை

காட்டு யானையும், போலி என்கவுன்டர்களும், பொது சமூகமும்.

நீலகிரி சோலூரில் மின்சாரம் தாக்கி இறந்த யானை

நீலகிரி சோலூரில் மின்சாரம் தாக்கி இறந்த யானை

மின்சாரம் தாக்கி யானை பலி என்பது வெறும் பெட்டி செய்தியாகவும், அதே நேரம் காட்டு யானை அட்டகாசம், அடக்க கும்கி யானை வருகை என்பது முக்கியமான செய்தியாக தொடர்ந்து இந்து நாளிதழில் (செய்தி தொலைகாட்சிகளிலும் ) தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது.

இந்த இரண்டு செய்திகளையும் பார்த்தால் வெளித்தோற்றத்தில் தொடர்பில்லாது போலத் தெரியும். ஆனால் இரண்டையும் இணைக்கும் புள்ளி உண்டு, அது வேறு எதுவும் இல்லை, மனிதர்களாகிய நாம் தான்.  முதல் செய்தியில் தான் சுக போகத்துடன் காட்டில் வாழ தன் இருப்பிடத்தைச் சுற்றி மின்வேலியை அமைத்த மனிதனால் தான் யானை கொல்லப்பட்டது.

இதே “மனிதன்” இயற்கை வளங்களை சுரண்டி “தான்” மட்டும் வாழ வேண்டும் என்ற பேராசையின் வெளிப்பாட்டால் காட்டில் உள்ள நீராதாரங்களை அழித்து, காட்டின் நடுவே உல்லாச விடுதிகள், ஆன்மீக மடங்கள் (ஈசா யோகா மையம்) தொழிற்சாலைகள், மக்கள் குடியிருப்புகள் என காட்டை அழித்து, விலங்குகளின் இருப்பிடத்தை அபகரிப்பதால் தான் காட்டு யானைகள் ஊருக்குள் புகும் நிலை ஏற்படுகின்றது.

இப்படி தவறுகள் செய்யும் மனிதன் விலங்குகள் ஊருக்குள் புகும் பொழுது அந்த மிருகங்கள் தங்கள் வயிற்றுபசிக்காக மற்ற வீட்டு விலங்குகளை கொல்வதை விலங்குகள் அட்டகாசம் செய்கின்றன , இனிமேல் மனிதர்களால் இங்கு வாழவே முடியாது என்பது போன்ற செய்திகளை திரும்ப, திரும்ப சொல்லி பொது சமூகத்தின் மனதில் அதைக் கொன்றே ஆக வேண்டும் என்ற ஒரு எண்ணத்தை   உருவாக்குகின்றனர்.

இப்படி தான் பொது சமூகம் கொலையை ஆதரிக்கும் மனநிலைக்கு தயார் செய்யப்படுகின்றது.  இதை அப்படியே காவல்துறை செய்யும் போலி மோதல் (Fake Encounter) நிகழ்வுகளிலும் பார்க்கலாம். விசாரணை படத்தின் இறுதி காட்சியில் காவல் துறை ஆய்வாளர் சமுத்திரக்கனியை கொல்லும் காவல்துறையே, அவரது மனைவி அழுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு ஒரு தலைப்பு செய்தியும், காவல்துறைக்கு இங்கு பாதுகாப்பே இல்லையா என தொலைகாட்சிகளில் விவாதமாக நடத்தவும் சொல்வார்.

அந்த புகைப்படத்தைப் பார்க்கும் பொதுச்சமூகம் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவர்களை (குற்றவாளிகளை அல்ல) கொலை செய்வது தவறல்ல அது சரியே என எண்ணும். இந்த எண்ணத்தை விதைக்கவே தமிழ் திரையுலகம் வால்டர் வெற்றிவேல்களையும், சேதுபதி ஐ.பி.எஸ்களையும், அன்புச் செல்வன்களையும், வேட்டையாடு விளையாடு ராகவன்களையும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றது. இரண்டு நாட்களாக தொடர்ந்து சொல்லப்படும் செய்தியே நம் மனதை மாற்ற போதுமானதாக இருக்கும் பொழுது, இங்கே தினந்தோறும் வெளியாகும் போலிஸ் சினிமாக்கள் நம் மனதை எப்பொழுதுமே போலி மோதல்களை ஆதரிக்க ஏதுவான நிலையிலேயே வைத்திருக்கின்றது.

Fake-Encounter

ரூபாய். பத்து இலட்சம் கோடி   அளவிற்கு தாது மணலை கொள்ளையடித்த‌ வைகுண்டராஜனையோ, மதுரையின் ஒட்டுமொத்த இயற்கை வளத்தையும் கிரானைட் என்ற பெயரில் கொள்ளையடித்த‌ பி.ஆர்.பழனிசாமியையோ, கோடிக்கணக்கில் ஊழல் செய்த‌ அரசியல்வாதிகளையோ, அரசு அதிகாரிகளையோ, சாதி,மத வன்முறைகளை திட்டமிட்டு உருவாக்குபவர்களையோ இதுவரை இந்த காவல்துறை போலி மோதலில் கொன்றதே இல்லை. இவர்களை கொல்வ‌தெல்லாம் திரைப்படத்தில் மட்டும் தான் நடக்கும். மாறாக அவர்களை காவல் காப்பது தான் காவல்துறையின் பணி. ஏனென்றால் அவர்கள் தான் இங்கே ஆளும் வர்க்கம்.

காவல்துறை கொன்றவர்கள் எல்லாம் சாதி, மத‌ மோதலில் பாதிக்கப்பட்டு நீதி கேட்டு போராடியவர்களையும், தங்கள் வாழ்வாதாரம் பறி போகக்கூடாது என போராடும் அடித்தட்டு மக்களையும், விளிம்பு நிலை மக்களை மட்டுமே. ஏனென்றால் இவர்கள் தான் அரசால் ஒடுக்கப்படும் வர்க்கம்.

இதை நமது பொது உளவியலும் ஏற்றுக்கொள்கின்றது. தன்னை விட கீழே உள்ளவன் தண்டிக்கப்பட வேண்டும், மேலானவன் தண்டிக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை. ஒரு தனியார் பேருந்து விபத்து ஏற்பட்டால் பொது உளவியல் தண்டிக்க கோருவது அந்த வாகன ஓட்டுநரைத் தானே தவிர, அவ்வளவு மோசமான நிலையில் உள்ள வாகனத்தை இயக்கி அதில் இலாபம் கொழிக்கும் முதலாளியையோ, அல்லது இப்படி ஒரு வாகனத்தை இயக்க அனுமதித்த அரசையோ அல்ல. இதில் நாம் நடுநிலையானவர்கள் என்று நமக்கு நாமே சான்றிதழ் வேறு கொடுத்துக் கொள்கின்றோம்.

காட்டு விலங்குகளை, ஒடுக்கப்பட்ட மனிதர்களை கொல்வது நமது (ஊடகங்களால் உருவாக்கப்பட்ட) பொது சமூகத்திற்கு மன ஆறுதல் அளிப்பதால், அவர்கள் தங்கள் வேலையை பார்க்க சென்றுவிடுகின்றார்கள். ஆனால் பிரச்சனையின் ஆணி வேரும், பிரச்சனைக்கான மூலகாரணத்தை உருவாக்கியவர்களும் சமூகத்தில் அப்படியே இருப்பதனால், மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் வருகின்றன. அப்பொழுதெல்லாம் நமது பொது உளவியலுக்காக சில மனிதர்களும்/விலங்குகளும் பலிகொடுக்கப்படுகின்றன.

“உயிரியல்ரீதியாகப் பார்த்தால் வில‌ங்குக‌ளிலேயே வேட்டையாடுவ‌தில் மிக‌வும் திற‌மைவாய்ந்த‌வ‌ன் ம‌னித‌ன் தான். திட்ட‌மிட்டு த‌ன‌து சொந்த‌ இனத்தையே வேட்டையாடும் ஒரே வில‌ங்கும் ம‌னித‌ன் தான்”. –  Memories and Studies – Willam James – எரியும் பனிகாடு நூலிலிருந்து.

நற்றமிழன்.ப‌ – இளந்தமிழகம் இயக்கம்

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*