Home / அரசியல் / மோடி அரசின் இரண்டாண்டு – சாதனையா? சோதனையா?
அதானியின் வானூர்தியில் மோடி

மோடி அரசின் இரண்டாண்டு – சாதனையா? சோதனையா?

   கடந்த மே 26ஆம் தேதியுடன் மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. இதோ மூன்றாம் ஆண்டு தொடங்கி விட்டது. தேர்தல் வாக்குறுதியாக‌ மோடி சொன்னதை இந்த இரண்டு ஆண்டுகளில் செய்தாரா? மோடி அரசின் சாதனைகளாக ஊடகங்களில் கூறப்படுவதெல்லாம் உண்மையா என நோக்குகின்றது இக்கட்டுரை.

விலை வாசி உயர்வும் – வரி சலுகைகளும் :

20bg_bgadb_turd_21_2518511f

         2014ல் மோடி ஆட்சிக்கு வந்த பொழுது பருப்பு விலையையும், சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் பருப்பின் விலை அதிகரித்ததையும் மேலே உள்ள ஒப்பீடு தெளிவாக காட்டுகின்றது (1). இதுவே அக்டோபர், நவம்பர் மாத இறுதியில் 200 ரூபாய்க்கும் மேலே சென்றது. விலை உயர்வை மோடி ஆட்சிக்கு வந்தாலும் கட்டுப்படுத்த முடியாது என பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிட்ட போதே நாங்கள் எழுதியிருந்தோம் பா.ஜ.க தேர்தல் அறிக்கை – ஒரு பருந்துப் பார்வை. அதற்கான காரணங்களாக நான் குறிப்பிட்டிருந்தது  – விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விவசாயப் பொருட்களின் விலையை அரசு நிர்ணயம் செய்து, சந்தையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதும், ஊக வணிகத்தை நிறுத்தவதன் மூலமும் தான் செய்ய முடியும். ஆனால் இதை இன்று வரை மோடி செய்யவில்லை.

      அதுமட்டுமின்றி இந்த பருப்பு விலையேற்றத்தின் பின் அதானி குழுமம் (மோடியின் நெருங்கிய நண்பர்) செய்த ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மிகப்பெரிய ஊழலும் இருக்கலாம் என்ற ஐயத்தை சில இணைய ஊடகங்கள் எழுப்பியுள்ளன(3). ஆனால் பொதுவெளியில் எந்த ஊடகமும் விவாதிக்கவில்லை , குறிப்பாக Mainstream Media எதுவும் ஒரு வார்த்தை கூட பேசாதது இந்த செய்தி உண்மை தானோ என்ற ஐயத்தை உறுதியாக்குவது போல உள்ளது.

    அடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றம். உணவுப் பொருட்களின் விலையில் மிக முக்கிய பங்காற்றுவது எரிபொருட்களின் விலை.  சென்ற ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஏறும் பொழுதெல்லாம் அன்று குஜராத் முதல்வராக இருந்த மோடி விலை உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என அதை கடுமையாக கண்டித்தார்.  ஆனால் 2014 ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மோடி முந்தைய ஆட்சி செய்ததைத் தான் செய்தார்.  இன்னும் ஒரு படி மேலே போய் எரிபொருட்களின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்த போது கூட இந்தியாவில் விற்பனை விலையை குறைக்காமல் ஏற்றிக் கொண்டிருந்தார். சந்தையில் பொருளின் விலை ஏறும் பொழுது நடக்கும் விலை ஏற்றம், சந்தையில் பொருளின் விலை குறையும் போது மட்டும் நடக்கவில்லை.  இதனால் நுகர்வோர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். பல தனியார் பெட்ரோல் நிறுவனங்களின் இலாபம் பல மடங்கு அதிகரித்தது. இது குறித்த விரிவாக பின்வரும் கட்டுரையில் படிக்கவும் பெட்ரோல் விலையும் – ஏமாற்றப்படும் மக்களும்!

13346506_607641482732240_8186965583683619440_n

   இதைப் பற்றி ஏன் இங்குள்ள ஊடகங்கள் விவாதிக்கவில்லை என எண்ணும் போது எனக்கு ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் (Confessions of a Economic Hitman) என்ற நூலின் பின்வரும் வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன.

“ தவிர உங்கள் செய்தி ஏடுகள் (தொலைகாட்சி நிறுவனங்கள்) பெருமளவு எண்ணெய் நிறுவனங்களால் கட்டப்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதானே! என்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எதைக் கேட்க விரும்புகிறார்களோ அதையே ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் பேசுகிறார்கள், முதலாளிகள் எதைப் படிக்க விரும்புகிறார்களோ அதையே எழுதுகிறார்கள்”.

     Network 18 குழுமத்திற்கு சொந்தமாக 28 செய்தி தொலைகாட்சி அலைவரிசைகள் மட்டும் உள்ளன(22), இந்த குழுமத்தை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை அடுத்து ரிலையன்ஸ் நிறுவனம் தான் பெரிய அளவில் எரிபொருள் விற்பனையை கொண்டிருக்கும் தனியார் நிறுவனமாகும்.

       மோடி ஆட்சிக்கு வந்த பொழுது 12.36% ஆக இருந்த சேவை வரி இன்று 15% ஆக உயர்ந்துள்ளது. நடுத்தர, ஏழை மக்களை பெருமளவில் பாதிக்கும் வகையில் சேவை வரியை ஒருபுறம் ஏற்றியும்,  நடுத்தர மக்களின் நீண்ட காலமாக வருமான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை புறக்கணித்து வரும் மோடி அரசு மறுபுறம் கார்ப்பரேட் எனும் பெரு நிறுவனங்களுக்கான வரியை 30% லிருந்து 25% ஆக 2015-2016 நிதிநிலை(Budget) அறிக்கையில் குறைத்துள்ளது(4).

13267800_1738669113058338_1452035431827113712_n       அதுமட்டுமின்றி 2015-2016 நிதிநிலை அறிக்கையில் Revenue Foregone னின் (திட்டமிட்டிருந்த வருவாயில் வாரா வருவாய் என புரிந்துகொள்ளலாம்) கீழ் ஐந்து இலட்சத்தி என்னூற்றி இருபத்தி மூன்று கோடி ரூபாய் (Rs5,00,823 Crore )தள்ளுபடி செய்யப்பட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒராண்டிற்கு கட்ட வேண்டிய வருமான வரி,  சுங்க, கலால் வரியின் மூலம் வரும் என திட்டமிடப்பட்ட தொகையில் இருந்து தான் இந்த ஐந்து இலட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது (2014-2015ல் திட்டமிடப்பட்ட வருவாயில் வராதது ஐந்து இலட்சம் கோடி). இது 2016-2017ற்கான நிதிநிலை அறிக்கையில்  Revenue Foregone னின் கீழ் ஐந்து இலட்சத்து ஐம்பத்தோராயிரம் கோடி ரூபாயாக (Rs.5,51,000 Crore ) என்ற அளவில் உயர்ந்துள்ள‌து(2015-2016ல் திட்டமிடப்பட்ட வருவாயில் வராதது ஐந்து இலட்சத்தி ஐம்பாதியிர‌ம் கோடி) (5).

         பெரு நிறுவனங்களுக்கு அரசு கொடுக்கும் இந்த சலுகை Revenue Foregone னின் கீழ் வெளிப்படையாக தெரிவதால் இனி மத்திய அரசு இந்த பெயரில் அறிக்கை கொடுக்காது. இது இனி “மத்திய வரித்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட சலுகைகளால் ஏற்பட்ட வருவாய் பாதிப்பு அறிக்கை “(‘The Statement of Revenue Impact of Tax Incentives under the Central Tax System’) என்ற பெயரில் கொடுக்கப்படும் என மோடி தலைமையிலான அரசு அறிவித்துள்ளது (5).  இதே நிதிநிலை அறிக்கையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வெறும் 35,000 கோடி ஒதுக்கப்பட்ட உடனே ஊடகங்கள் எல்லாம் இது விவசாயிகளுக்கான நிதிநிலை அறிக்கை என உண்மைக்கு மாறாக தம்பட்டம் அடிக்கின்றன.

    அதே நேரம் ஏழைகளுக்கு செயல்படுத்தப்படும் எல்லா நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.  ஏழைகளுக்கு கொடுக்கப்படும் மானியத்தை கேள்வி கேட்கும் எந்த ஒரு ஊடகமும் முதலாளிகளுக்கு கொடுக்கப்படும் இந்த மானியத்தை(வருவாய் இரத்தை) கேள்வி கேட்பதில்லை. முன்னர் கூறியுள்ள ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலின் வரிகளை இங்கே நீங்கள் நினைவு கூறலாம். இவையனைத்தையும் வைத்து பார்க்கும் பொழுது மோடி தலைமையிலான அரசு பெரும் பணக்காரர்களின், முதலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே செயல்படுகின்றது. பெரும்பான்மையான நடுத்தர, ஏழை மக்களுக்காக அல்ல என ஒரு சாரார் கூறுவது உண்மை என்றே தோன்றுகின்றது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் – வேலை வாய்ப்பும் :

        2011-2012 ஆம் ஆண்டின் கணக்கு படி ஒவ்வொரு ஆண்டும் 24 இலட்சம் தொழில்நுட்ப பட்டதாரிகள் (இதில் 19 இலட்சம் பொறியியல் பட்டதாரிகள்)  இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் இருந்து வெளியே வருகின்றனர் என்கிறது அகில இந்திய தொழில்நுட்ப கழகம் (AICTE) (23). இதே போல அறிவியல், கலை, வர்த்தக பட்டதாரிகளின் எண்ணிக்கை 2 கோடி.

       ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி தொழில்வாய்ப்புகளை உருவாக்குவோம் என மோடி தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார் . இந்திய‌ தொழிலாளர் ஆணையத்தின் தகவல்கள் படி மோடி பதவியேற்ற பின்னர் 2014ஆம் ஆண்டில் மூன்று, நான்காம் காலாண்டில் 1.58 , 1.17 இலட்சம் பேர் வேலையில் புதிதாக சேர்ந்துள்ளனர்(எட்டு பெரிய துறைகளில்). இது 2015 ஆண்டு மொத்தத்திற்கும் சேர்த்து 1.35 இலட்சம் மட்டுமே என்றானது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைவான வேலை வாய்ப்பு உருவாக்கமாகும். விரிவான தகவல்களுக்கு கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்(6,7,8).

Employment-data-table

        தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் துறைகள் அனைத்தும் தானியங்கி இயந்திரங்கள் (Automatic Machines) மூலம் தொழிலாளர்களின் தேவையை பெரிய அளவில் குறைத்துள்ளது. இது இந்தியாவில் இன்றைய அளவில் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை வழங்கி வரும் ஐ.டி துறையில் இனி தான் நடைமுறைக்கு வரப்போகின்றது. இந்தியாவில் இன்றைக்கும் அதிக பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வரும் விவசாயத்துறையை வளர்ப்பது பற்றி எந்த ஒரு வேலையையும் மோடி அரசு செய்யவில்லை.

  அதே நேரம் மோடி இன்னும் ஆறுமாதத்தில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு அதிகமாகும் எனக் கூறுகின்றார். ஆனால் கடந்த ஓராண்டில் (2015) மட்டும் இந்தியா முழுக்க 16000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் பா.ஜ.க 2014 இறுதியில் ஆட்சியைப் பிடித்த மகாராஷ்டிரா 4238 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது(9).  இது கடந்த ஆண்டுகளை விட ஒப்பிடும் பொழுது அதிகமாகும்.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்:

 * இந்தியாவில் வெறும் 2.8 கோடி பேர் அமைப்பு சார் (Organized Sector) துறைகளில் வேலை செய்கின்றனர். இதில் 1.75 கோடி பேர் அரசு துறையிலும், 1.14 கோடி பேர் தனியார் துறையிலும் உள்ளனர். இவர்களுக்கு மட்டும் தான் ஓரளவு பணி பாதுகாப்பு உண்டு

* 43.7 கோடி பேர் அமைப்பு சாரா துறைகளில் (Unorganized Sector) வேலை செய்கின்றனர். இவர்களுக்கு பணி பாதுகாப்பும் இல்லை, அடுத்த நாள் வேலை என்பதும் நிரந்தரம் இல்லை.

     இந்திய அரசு இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக மாற்ற முயற்சி செய்தும், புதிய வேலைவாய்ப்புகளை முற்றிலுமாக நிறுத்தியும் உள்ளது. அதே நேரம் தனியார்துறையும் புதிய வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கவில்லை.  இந்தியாவின் வளர்ச்சி கொள்கை என்பது முதலீடு அதிகம் சார்ந்து உள்ள தொழிற்சாலைகளை கொண்டுவருவதில் உள்ளதே தவிர, தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தொழிற்சாலைகளை கொண்டு வருவதில் இல்லை. அதிக முதலீடு சார்ந்து வரும் தொழிற்சாலைகளால் உருவாகும் வேலைவாய்ப்பு என்பது மிகவும் சொற்ப அளவிலேயே உள்ளது.

        ஒரு கோடி முதலீட்டிற்கு ஒரு நேரடி வேலை என்ற விகிதத்திலேயே இங்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகின்றது(10) .  மறைமுக வேலைவாய்ப்பு 10 பேருக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட ஒரு கோடிக்கு 11 வேலைவாய்ப்புகளே இங்கு உருவாக்கப்படுகின்றன. இதற்கான காரணம் முந்தைய பத்தியில் கூறியது போன்ற தானியங்கி இயந்திரங்களின் வருகையும், முதலாளிகள் தங்களது இலாபத்தை தக்கவைத்துக்கொள்வதுமே காரணம். இதை வைத்து பார்க்கும் பொழுது ஒரு இலட்சம் கோடி முதலீடு ஒரு மாநிலத்திற்கு வந்தாலும் அங்கு உருவாகும் வேலை வாய்ப்புகள் பதினொரு இலட்சம் தான்.

           புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவது குறைந்து வரும் இந்த நேரத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் காப்பற்றப்பட வேண்டும். இதை தான் இங்கிலாந்து , அமெரிக்க உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் செய்கின்றன. டாட்டா ஸ்டீல் தனது பிரிட்டன் நிறுவனத்தை மூடும் முடிவிற்கு செல்ல இருப்பதால்  ஆயிரக்கணக்கானோரின் வேலை இழப்பைத் தடுக்க அரசு அந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அந்த ஆலையை மீண்டும் இயக்கும் முடிவுகளை எல்லாம் பரிசீலித்து வருகின்றது (11).  அமெரிக்காவில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பணிபுரிய கொடுக்கப்படும்  H1B Visa வை ஒபாமாவின் இந்த ஆட்சியில் குறைப்பதற்கு ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதையும்,  வெளிநாட்டு மக்கள் உங்களது வேலைவாய்ப்பை பறிக்கின்றார்கள், நான் ஆட்சிக்கு வந்தால் இதை மாற்றுவேன் என டொனால்ட் ட்ரம்ப்பின் வாக்குறுதிகள் அமெரிக்க மக்களிடையே பெரிய ஆதரவையும் பெறுவதையும் இந்த கோணத்திலிருந்து தான் அணுக வேண்டும்.

       அதே நேரம் வளர்ந்து வரும் மோடி தலைமையிலான இந்திய அரசோ “பத்தாயிரத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்பையும், மேலும் சில ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்பையும்” கொடுத்து வந்த நோக்கியா நிறுவனம் சென்னை ஆலையை மூடும் பொழுது அதை தடுக்க எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. தொலைபேசி உருவாக்கப் பணிகளில் மட்டுமே திறமையான பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்று வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். வேலையிழப்பு மட்டுமின்றி, நோக்கியா மத்திய, மாநில அரசுகளுக்கு கட்ட வேண்டிய பல நூறு கோடி வரியையும் ஏமாற்றிவிட்டு சென்றுள்ளது. மிகவும் வலிமையான பிரதமர் என‌  சொல்லப்படும் மோடி இதை கண்டும் காணாமல் இருந்தார்.

அதானியின் வானூர்தியில் மோடி

அதானியின் வானூர்தியில் மோடி

           இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி (GDP) 2014-2015 நிதி ஆண்டில் 7.2% ஆக இருந்தது 2015-2016 நிதி ஆண்டில் 7.9%ஆக உள்ளது. இது 2013-2014ல் 6% ஆக இருந்தது(12).  வேலைவாய்ப்பை உருவாக்காத வளர்ச்சியைத் தான் மோடி அரசு நமக்கு பரிசளித்துள்ளது(13,14,15).  சரி இந்த பொருளாதார வளர்ச்சியாவது சரியாக பங்கிடப்பட்டு எல்லோரையும் சென்றடைந்துள்ளதா என்றால் அங்கும் நமக்கு ஏமாற்றமே.

  மே 2014லிருந்து மே 2015வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 48% (51,600 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது(16).  மோடியின்  நெருங்கிய நண்பர் அதானி. அவரது தனிப்பட்ட வானூர்தியில் (Charted Flight) தான் மோடி 2014 தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் மூடப்படும் நிலையில் இருந்த நிலக்கரி சுரங்கத்தை எடுத்து நடத்த இந்தியாவின் பொதுத்துறை வங்கி வரலாற்றிலேயே பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் அளிக்க ஒப்புக்கொண்ட‌தும் இவருக்கு தான். அதானி உள்ளிட்ட ஒரு சிலரின் வளர்ச்சியை ஒட்டு மொத்த நாட்டின் வளர்ச்சியாக காட்டுகின்றன இந்த புள்ளிவிவரங்கள், எப்படி என சொல்கின்றது பின்வரும் வரிகள்.

 “மொத்த தேசிய உற்பத்தி(GDP) என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”. – ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூலிலிருந்து (Confessions of a economic hit man – Book)

        இதை இன்னும் கூட விரிவாக பார்ப்போம். 2013-2014ஆம் ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம்(மொத்த தேசிய உற்பத்தியையும், மொத்த மக்கள் தொகையையும் வகுத்து கிடைப்பது) 80,388 ரூபாய், இது 2014-2015ஆம் ஆண்டு 87,748 ரூபாய் (17). இந்த புள்ளிவிவரப்படி  9.2% வளர்ச்சி.  அதாவது அதானி , அம்பானி சேர்ந்த இலட்சம் கோடி ரூபாய்கள் இங்கு 100 கோடி மக்கள் தொகையால் வகுக்கப்பட்டு வரும் தொகை எல்லோரது கணக்கிலும் சேர்த்து (காகிதத்தில்) எல்லோரும் வளர்ந்ததாக, இந்தியா வளர்ந்ததாக ஒரு கானல் நீரை காட்டுகின்றது இந்த‌ பொருளாதார புள்ளிவிவரங்கள்.

ஊழல் :

        மோடியின் இரண்டு ஆண்டு ஆட்சியில் ஊழலை காட்டமுடியுமா என ஊடகங்கள் கேட்கின்றன. இந்தியாவில் இதுவரை நடைபெற்ற ஊழல்களிலேயே அதிகம் பேரை கொலை செய்த ஒரே ஊழல் பாரதிய சனதா கட்சியின் ஆட்சியில் மத்திய பிரதேசத்தில் நடந்த வியாபம் ஊழல் தான். இது வரை 50க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வாரம் கூட இந்த ஊழல் வழக்கை விசாரித்து வந்த ஒரு உளவு துறை அதிகாரி பட்டபகலில் வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார்(18). ஆனால் ஊழல் கறைபடியாத கரங்களுக்கு சொந்தக்காரராக சொல்லப்படும் மோடி இந்த ஊழலைப் பற்றி வாயே திறப்பதில்லை. இத்தனைக்கும் அவர் மன்மோகன் போல பேசா பிரதமர் அல்ல, ட்விட்டர், ஊடகங்கள், வானொலி நிலையம் என எங்கும் பேசிக்கொண்டே இருக்கும் பிரதமர் அவர். வியாபம் ஊழலைப் பற்றி விரிவாக படிக்க – வியாபம்” ஊழல் –  என்றால் என்ன?

13327376_606980366131685_5424626246721498222_n

         மகாராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்த பாரதிய சனதா கட்சி சத்துணவில் மாணவர்களுக்காக கடலை மிட்டாய் வாங்குவதில் ஊழல் செய்துள்ளது (19).  இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கூறிய அதானியின் ஒரு இலட்சம் கோடி ரூபாய் பருப்பு விலை ஊழல். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த பொழுது அதானி, அம்பானி நிறுவனங்களுக்கு இலாபம் சேர்க்கும் வகையில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது என மத்திய தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது (20).

         அதானி குழுமமும், எஸ்ஸார் குழுமமும் அதிக விலைக்கு மின்னுற்பத்தி பொருட்கள் வாங்கியதாக கூறப்படுபதில் 50,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல்(21) என தொடர்ந்து ஒவ்வொரு ஊழலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் மோடியின் நண்பர் அதானி நிறுவனம் தொடர்பான ஊழல்கள் அதிகம். ஊழல் என்பது தான் பலனடைவதற்காக திட்டம் தீட்டுவது மட்டுமல்ல, தன்னைச் சார்ந்தவர்கள் பயனடைவதற்காக திட்டம் தீட்டுவதும், செயல்படுவதும் கூட ஊழல் தான்.

      ஆனால் ஊடகங்களோ மோடியின் ஆட்சியில் ஊழலே இல்லை என சூடம் ஏற்றி சத்தியம் செய்கின்றன. தூங்குபவர்களை எழுப்பிவிடலாம் தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை நம்மால் எப்பொழுதும் எழுப்ப முடியாது.

தொடரும்.

 அடுத்த பாகத்தில் மோடி அரசின் நிர்வாகம், Digitizing India, கருப்பு பணம், Make in India, இந்தியாவின் பாதுகாப்பு,  Provident Fund சட்டதிருத்தம், புதிய சட்டங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்

தரவுகள் / மேலும் படிக்க‌:

2) http://www.visai.in/2014/04/10/%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9c-%e0%ae%95-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81/

3http://thepoliticalfunda.com/Politics/Detail/Gautam_Adani_Wilmar_and_a_probable_190000_Crores_Pulses_scam10187

4) http://www.firstpost.com/business/budget-2015-why-cut-corporate-tax-but-not-personal-tax-mr-jaitley-2128125.html

5) http://psainath.org/if-this-is-pro-farmer/

6) http://www.firstpost.com/business/where-are-the-jobs-mr-modi-2731002.html

7) http://indiatoday.intoday.in/story/employment-scenario-job-crunch-jobless-growth-economy/1/647573.html

8) http://indianexpress.com/article/india/india-others/job-growth-falls-down-to-lowest-in-3-quarters/

9) http://infochangeindia.org/agriculture/news/ncrb-claims-46-farmers-commit-suicide-every-day-in-india.html

10) http://www.business-standard.com/article/news-ians/rs-1-crore-investment-for-one-job-in-tamil-nadu-114022101004_1.html

11) http://www.ft.com/cms/s/0/37e6eefe-00cf-11e6-ac98-3c15a1aa2e62.html#axzz4AZymhTL2

12) http://www.tradingeconomics.com/india/gdp-growth-annual

13) http://scroll.in/article/806223/with-hardly-any-new-jobs-created-for-whom-is-indias-economy-growing

14) http://thewire.in/2016/04/18/indias-high-growth-rate-isnt-translating-to-job-creation-30081/

15) http://www.livemint.com/Money/1UZDnb9QcCz5s5dKnJ8maO/The-growing-disconnect-between-economic-growth-and-jobs.html

16) http://indianexpress.com/article/business/business-others/indian-billionaires-gautam-adani-dilip-shangvhi-see-highest-growth/

17) http://statisticstimes.com/economy/gdp-capita-of-india.php

18) http://www.khabarbar.com/news/another-vyapam-death-ib-officer-crushed-by-unknown-vehicle-in-broad-daylight/

19) http://indianexpress.com/article/india/india-news-india/maharashtra-chikki-scam-hc-to-begin-final-hearing-from-february-8/

20) http://timesofindia.indiatimes.com/india/Gujarat-govt-unduly-favoured-Reliance-Adani-CAG-report/articleshow/39005042.cms?from=mdr

21) http://www.epw.in/journal/2016/20/web-exclusives/power-tariff-scam-gets-bigger-rs-50000-crore.html

22) https://en.wikipedia.org/wiki/Network_18

23) https://www.quora.com/How-many-people-graduate-in-India-every-year-with-at-least-a-bachelors-degree

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*