Home / அரசியல் / பிரிட்டனில் நடந்ததும் – இந்தியாவில் நடக்காததும் “BREXIT”

பிரிட்டனில் நடந்ததும் – இந்தியாவில் நடக்காததும் “BREXIT”

மிகப்பெரும் பொருளாதார பெருமந்தத்தையும், ஏதிலிகள் குடியேறுவதை எதிர்த்தும் பிரிட்டன்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா வேண்டாமா என்று பொது மக்களிடையே வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. இதில் 52 விழுக்காடு மக்கள் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 48 விழுக்காடு மக்கள்,  ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கலாம் என்று வாக்களித்திருக்கிறார்கள்.  வெளியேறும் வாக்குகள் வெற்றி பெற்றதால், தற்போது 60 ஆண்டு கால வரலாறு கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் இணைந்திருக்கின்றன.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் உறுப்பு நாடுகள் அனைவரும் பொது நாணயமான “யூரோ” வைப் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.  ஆனால் இதுவரை பிரிட்டன் அதனை ஏற்க மறுத்து, தன்னுடைய பவுண்ட் நாணயத்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி,  உறுப்பு நாடுகளில் வாழும் மக்கள், விசா இல்லாமல் மற்ற உறுப்பு நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.  பணி புரியவும் முடியும்.

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஐரோப்பிய யூனியனில் இணைந்திருப்பதை ஆதரித்தவர். பொது வாக்கெடுப்பில் அவரது நிலைப்பாடு தோல்வியடைந்ததால், அவர் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார். புதிய பிரதமர் அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப் படவுள்ளார்.  உலகின் மிகப்பெரிய இராணுவ பொருளாதார வல்லரசான பிரிட்டன்,  வெளியேறுவதால், ஐரோப்பிய யூனியன் வலுவிழக்கும் என்பது உறுதி.  ஜெர்மானிய பிரதமர் ஏஞ்சலா மார்க்கெலும் இது மிகப்பெரிய வருத்தம் என்று தெரிவித்திருக்கிறார்.  ஐரோப்பிய யூனியனின் 6 முக்கிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, லக்சம்பர்க் ஆகிய நாடுகள் நாளை (சனிக்கிழமை) பெர்லினில் அவசரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

poll1

பேச்சுவார்த்தைகள் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டாத நிலையில், பிரிட்டன் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்குமேயானால்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முழுமையாக வெளியேற இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது பிடிக்கும். அது வரை , பிரிட்டன் உறுப்பினராகநீடித்துத் தான் ஆக வேண்டும். இந்நிலையில், உலக பங்கு சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியிருக்கிறது. இது இந்தியாவையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. இங்கிலாந்தில் பணி புரியக் கூடிய இந்தியர்கள் பணியிழக்கக் கூடும் அல்லது இந்தியாவிலிருந்து செய்யக் கூடிய இங்கிலாந்து பிராஜெக்ட்டுகள் (UK IT Projects ) மூடக்கூடிய அபாயம் இருப்பதால், அத்துறையில் பணியாற்றும் நம் மக்களையும் வேலையை விரட்டு துரத்த, இந்திய நிறுவனங்கள் தயாராகலாம்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் இப்படி நிறைய சாதக பாதகங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செய்திகளையெல்லாம் விட, இந்த “பொது வாக்கெடுப்பு” என்கிற நடைமுறை,  சம காலத்தில் அதிகரித்து வருவதை நாம் கவனிக்கிறோமா ?

அது என்ன பொது வாக்கெடுப்பு ?

அரசியல் தீர்மானங்களில் மக்களுக்கும் பங்கு இருக்கிறது என்கிற ஜனநாயக பொது விதியை மீண்டும் நமக்கு நினைவு கூறுகிறது இந்த பொது வாக்கெடுப்புகள்.  பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து இணைந்து இருப்பதா, பிரிந்து செல்வதா என்று கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதையும், கிரீஸ் பொருளாதார பிரச்சனையிலும் கூட‌  பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதையும் இங்கே நினைவு கூறுகிறேன்.  அதாவது, ஒரு அரசு கொண்டு வரும் இலட்சியம் எத்தகைய உயர்ந்த இலட்சியமாக இருந்தாலும்,  மக்கள் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதே ஜனநாயக உரிமையின் அடிப்படை சாராம்சம். அதை மேற்கத்திய நாடுகள், பெயர் அளவிலாவது கடை பிடிக்கிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய அணு உலை பூங்காக்கள் மக்களின் விருப்பத்திற்கு மாறாக திணிக்கப்படுகின்றன. உயர்கல்வியும் பாதுகாப்புத் துறையிலும் அந்நிய முதலீடு ஊக்குவிக்கப் படுகின்றது. திட்டக்குழுவைக் கலைத்து நிதி ஆயோக் என்றொரு உளுத்துப் போன துறை கொண்டு வரப்படுகிறது. மக்களின் கருத்தைக் கேட்காமலேயே, இந்நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தும் தனியொருவரின் சட்டைப்பைக்குள் வைக்கப்படுகின்றன. நமது நாட்டின் நீராதாரங்கள் அனைத்தும் கோக் பெப்சி சீசாக்களுக்குள் சுருங்கிப் போகின்றன. முக்கியமான அரசியல் தீர்மானங்களில் மக்களுக்கு எந்த பங்கும் இல்லை. எந்தவொரு முடிவெடுக்கும் அதிகாரமும் மக்களுக்கு இல்லை.

poll2

42 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஸ்காட்லாந்து நாட்டிற்கு, தான் யாருடன் இணைந்து இருக்க வேண்டும் என்கிற தேர்ந்தெடுக்கும் உரிமை,  இருக்கிறது.1.2 கோடி மக்கள் தொகை கொண்ட கஷ்மீரிய மக்களுக்கு,  அத்தகைய சுய நிர்ணய உரிமை இல்லையா என்று நாம் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.  18% ஸ்காட்லாந்து அல்லாத மக்கள் அத்தகைய வாக்கெடுப்பில் பங்கேற்கிறார்கள். அதே சமயம் இலங்கையின் பூர்வ குடிகளான தமிழ் மக்களுக்கு,  அத்தகைய சுய நிர்ணய உரிமையும்,  பிரிந்து போகும் உரிமையும் இலங்கையின் சனநாயகத்தில் மறுக்கப்படுகின்றது. ஏழரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு , இந்திய யூனியனில் இணைந்திருக்கும் நாம் இத்தகைய கேள்விகளை இந்நேரம் எழுப்பியிருக்க வேண்டுமல்லவா?

அமெரிக்காவின் ஒரு மாகாணத்தில் கட்டப்படவிருந்த ஒரு அணு உலையை எதிர்த்து, ஒரு சிறு கவுண்டியில் ( நம் சென்னையில் வியாசர்பாடி அளவு என்று வைத்துக் கொள்வோம் ) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அரசு அத்தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, அணு உலையை அங்கு கட்டும் திட்டத்தை கை விட்டது. நம் நாட்டில் மிகப்பெரிய அணு உலை பூங்காக்கள் கட்டப்படும் போது, குறைந்த பட்சம் அனுமதி கூட வேண்டாம். மக்களின் கருத்துகளாவது கேட்கப்படுகிறதா ?

ஓட்டுப் போடுவது மட்டும் நமது ச‌னநாயகக் கடமை கிடையாது. நமது நாட்டின் அரசியல் தீர்மானங்களில் மக்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வேண்டும். அதற்கு நாம் அரசியலை கூர்ந்து கவனிக்க வேண்டும். விவாதிக்க வேண்டும்.  பொதுத் தளங்களில், சமூக ஊடகங்களில் இது குறித்து கேள்வி எழுப்புதல் வேண்டும்.   மக்கள் வெறும் பயனாளர்கள் அல்ல. அரசியல் முடிவுகளில், தீர்மானங்களில் மக்களின் பங்கேற்பு இல்லை என்றால், அங்கு மக்களுக்கு என்று ஒன்றும் இல்லை.

அ.மு.செய்யது – இளந்தமிழகம் இயக்கம்

About அ.மு.செய்யது

2 comments

  1. அயலாரிடம் ஆட்சியதிகாரம் தந்ததால் தமிழர்கள் நாம் நாதியற்று அடிமைகளாகக்கிடக்கிறோம், எப்போது விடியுமோ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*