Home / சமூகம் / வன்முறைக்கு மருந்து சமூக மாற்றமே

வன்முறைக்கு மருந்து சமூக மாற்றமே

தமிழகத்தில் தற்பொழுது தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்று வருகின்றன பாலியல் வன்முறை தொடங்கி இணைய வன்முறை வரை மட்டுமல்ல இன்னும் பல. குற்றவாளியைப் பிடித்து தூக்கிலிட்டு தண்டிக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், பெண் பிள்ளைகள் அடக்க ஒடுக்கத்துடன் இருந்திருந்தால் எந்த ஒரு சிக்கலும் ஏற்பட்டு இருக்காது என்று பேசிக்கொண்டு இன்னொரு தரப்பும் எங்கு எப்போது பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்கும் போதும் முழங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

பெண்கள் மீது எந்த ஒரு வன்முறை நடத்தப்பட்டாலும் இந்தச் சமூகத்திற்கு முதலில் அந்தப் பெண்ணின் நடத்தை மீது தான் சந்தேகம் வரும். கொலை அல்லது தற்கொலை என நேரடி மறைமுக படுகொலைகளுக்கு ஆளாகும் எந்த பெண்ணும் தன்னை நல்ல பெண் என்று நிரூபிக்க நன்னடத்தை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என இச்சமூகம் நினைக்கிறதா?  இன்னொருபுறம் கொலையை செய்த ஆண்  “தலித்தா?” “இசுலாமியனா?” என்று தங்கள் அற்ப எண்ணங்களை வெளிப்படுத்தும் அல்லது அக்கொலையை காரணம் காட்டி  சாதி, மத மோதல்களை தீ மூட்டி சமூக விரோத சக்திகள் குளிர்காய ஆசைப்படும்.

தொழில்நுட்பங்கள் அசகாய வளர்ச்சி பெற்றுள்ள இந்தக் கால கட்டத்திலும் பெண்கள் துன்புறுத்தப்படுவது குறையவில்லை மாறாக அதுவும் வளர்ந்தேயுள்ளது. சமீபத்தில் சேலம் வினுப்பிரியா (தற்)கொலை வரை
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பெண்களை நிந்திப்பது என்பதிலும் இந்தச் சமூகம் கைதேர்ந்துள்ளதையே காண முடிகிறது. இதில் காவல்துறையின் பங்களிப்பு வேறு. குற்றம் பதியப்பட்டும் அதன் மீது நடவடிக்கை எடுக்க, இணைய தளத்தில் ஒரு அப்பாவிப் பெண்ணின் முகத்தை ஆபாச படங்களுடன் போலியாக வடிவமைக்கப்பட்டு பதிவேற்றப்பட்ட தகவலை நீக்க இலஞ்சம் வாங்கியுள்ள காவல்துறை. இலஞ்சம் வாங்கியும் வேலையில் மெத்தனப்போக்கு, இன்று அந்த பெண் உயிரோடு இல்லை. இதே தனது வீட்டு பெண்ணுக்கு இவ்வாறு நடைபெற்றிருந்தால் இப்படி மெத்தனமாக செயலாற்றுவார்களா? காவல்துறையிடம் மட்டுமல்ல, சமூகத்திலும்  குறை உள்ளது.

images

சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கொலையுண்ட சுவாதிக்காக நடைபெற்ற நினைவேந்தலில் பங்குகொண்ட போது, தனது வீட்டு பெண் பிள்ளையை வெளிநாட்டில் படிக்க அனுப்பி வைத்திருக்கும் தாய் ஒருவர் மிகுந்த ஆதங்கத்துடன், கொலையாளியைப் பிடிக்க முடியாத நீங்கள், அவனைக் கொல்ல‌ முடியாத நீங்கள், அவனைத் தூக்கிலிட முடியாத நீங்கள் நினைவேந்தல் நடத்தி என்ன பயன் என்று கூச்சலிட்டார். அவர் ஆதங்கத்திலும் நியாயம் உண்டு தான். ஆனால் ஆதங்கத்தில் அந்த ஒரு குற்றவாளியை மட்டும் தூக்கிலிட்டு கொன்றுவிட்டால் இங்கு நடைபெறும் அனைத்து வன்முறைகளும் நின்றுவிடுமா? தண்டனைகள் வலுத்துவிட்டால் தவறுகள் குறைந்துவிடும் என்பது உண்மை தானா? அவனை தூக்கிலிட்டு தண்டிப்பதால் இனி எந்த ஒரு பெண்ணுக்கும் எதிரான வன்முறை
நடைபெறாதா? அல்லது பறிபோன சுவாதியின் வாழ்வுதான் மீண்டு வருமா?

அல்லது கொலை செய்தவன் ஆட்சி அதிகாரம், பணபலம் கொண்டிருக்கும் குற்றவாளியாக இருந்தால் உண்மையான குற்றவாளியை நமது காவல்துறையும், நீதித்துறையும் கண்டுபிடிக்கப் போகிறார்களா? தண்டிக்கப்போகிறார்களா?

உண்மையில் நடைபெறும் வன்முறைக்கான காரணங்கள் அவற்றில் தொடர்புடைய ஒரு ஆண், அல்லது ஒரு பெண்ணிடமோ மட்டும் தான் உள்ளதா? உங்கள் பார்வைகளை விசாலமாக்கி தேடிப்பாருங்கள். இந்த தொடர் வன்முறைக்கான காரணங்கள் நம்மிடம் இந்த சமூகத்தில் தான் உள்ளது என்பது எத்தனை பேர் உணரத் தயாராக உள்ளோம். பெண்களை ஒழுக்கமாக இரு, அடங்கி நட, சூதானமாக சென்று வா, வாய் பேசாதே, என்று சொல்லிக்கொடுக்கும் நாம் எத்தனை ஆண் பிள்ளைகளிடம் ஒழுக்கமாக இரு, அடங்கி நட, பெண்களை மதி என்று
சொல்லிக்கொடுத்துள்ளோம்.

index

எனது சிறு வயதில் என் நண்பன் ஒருவன் வீட்டிற்கு நான் அடிக்கடி சென்று வருவது வழக்கம். என் நண்பனுக்கு ஒரு அக்கா, ஒரு தங்கை. அவர்கள் வீட்டில் ஆண் பிள்ளையை வளர்ப்பதற்கு ஒரு முறையும், பெண்பிள்ளைகளை வளர்ப்பதற்கு வேறொரு முறையும் கொண்டிருந்தனர்.

ஆம் என் நண்பன் உணவு உண்ண‌ வருகையில் சுடு சோறு தயாராக இருக்க வேண்டும், பழைய சோற்றை தொடமாட்டான். பழைய சோறு பெண்களுக்கானது, அவன் அம்மா, அக்கா, தங்கை அனைவருக்கும். அதேபோல அவன் தட்டில் போட்ட சோற்றில் முடிந்தவரை தின்றுவிட்டு வைத்து விடுவான். அவன் வைத்த மீத சோற்றை அவன் சகோதரிகள் தான் உண்ண வேண்டும். அவனோ, அவன் தந்தையோ அல்லது பிற ஆண்களோ வீட்டில் இருக்கையில் பெண் பிள்ளைகள் யாரும் அந்த அறையில் அவர்களுக்கு நிகராக அமரவோ அல்லது அந்த அறையில் படுத்திருக்கவோ கூடாது. மேற்கூறியவற்றில் ஏதேனும் அவனது சகோதரிகள் மாறி நடந்துகொண்டால் அவர்களது பெற்றோர் முன்னிலையில் அவர்களை அடித்து உதைக்க இவனுக்கு அத்தனை அதிகாரங்களும் உள்ளது. என்ன நடந்தாலும் பெண் பிள்ளைகள் அவனை நோக்கி கை ஓங்கிவிடக் கூடாது. எதிர்த்து பேசிவிடக் கூடாது. என்னுடன் பெண் பிள்ளைகள் பிறக்காத‌தால் இங்கு என் நண்பனை உதாரணமாக கூறியுள்ளேன்.

இவ்வாறு ஆண் பிள்ளையை வளர்க்க ஒரு விதம் பெண் பிள்ளையை வளர்க்க ஒரு விதம் என்று பிரிக்கையிலேயே தொடங்கி விடுகிறது ஒரு பாலினத்தின் மீதான வன்முறை. பெற்ற பிள்ளையிலே ஆண் என்ன பெண் என்ன., பெற்றெடுத்தது பிள்ளையைத்தானே. ஆண் பெண் சமத்துவத்தை பெற்ற பிள்ளைகளிடத்திலிருந்து தொடங்குங்கள்.

பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என்பது சட்டமாக்கபட்டு எத்தனையோ ஆண்டுகள் ஆகியுள்ளபோதிலும், தமிழகத்தில் முறையாக எத்தனை பெண்களுக்கு சொத்தில் பங்களிக்கப்படுகிறது. சொத்தில் சம உரிமை கொடுக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாவோம் என்பது தெரிந்தும் இங்கு எத்தனை பேருக்கு சம உரிமையளிக்க மனம் வந்துள்ளது. கோகுல்ராஜை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட யுவராஜுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது. யுவராஜ் சிறையிலிருந்த காலத்தில் தான் உடுமலையில் சங்கரை பயங்கரமான முறையில் கொலை செய்தனர். எனவே இந்தச் சமூகத்தை தண்டனைகளால் மட்டுமே மாற்றிவிடமுடியாது. மாறாக சமூக மாற்றங்கள் தான் நமது மக்களிடையே, பிள்ளைகளிடையே ஆண் பெண் சமத்துவத்தை வளரச் செய்யும். ஆண் பிள்ளைகளிடையே ஒற்றுமையை, ஒழுக்கத்தை சொல்லிக்கொடுங்கள், பெண் பிள்ளைகளிடத்தில் தாங்கள் யாருக்கும் சலைத்தவர்கள் அல்ல யாருக்கும் அடிபணியத் தேவையில்லை என்பதைச் சொல்லிக்கொடுங்கள். இவ்வாறான சமூக மாற்றமே, நான் மேலே அதிகம் பயன்படுத்தியுள்ள பெண்கள் மீதான வன்முறையை என்ற சொற்களை நமது அகராதியிலிருந்தும் நம் எண்ணங்களிலிருந்தும் நீக்க வல்லது.

உமா மகேஸ்வரி, வித்யா,வினோதினி,கவுசல்யா,சுவாதி,வினுப்பிரியா – இவை யாவும் இன்று தமிழகத்தில் வெறும் பெயர்கள் மட்டுமல்ல,  வன்முறையின் அடையாளங்கள். இந்த அடையாளங்களின் பட்டியலை வளரவிடாமல் நிறுத்துவது நமது சமூக மாற்றங்க‌ளால் மட்டுமே சாத்தியம்.

– மு.தீபன் குமார்.  இளந்தமிழகம்.

About தீபன் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*