Home / சமூகம் / சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்

சுவாதி, விணுபிரியா – பெண்களை மதிப்பதே அத்தியாவசியப் பாடம்

   சுவாதி படுகொலையும் – சேலம் விணுப்ரியா தற்கொலையும் நம் சமூகத்தை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இதனை வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்த்துக் கடந்து விட முடியாது. நம் சமூகத்தில் தொடர்ச்சியாக பெண்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களின் சமீபத்திய கொடூரம் தான் சுவாதியும் விணுப்ரியாவும்.

நமது சமூகத்தின் அழுகிப் போன வக்கிரம் ஒன்று வெளியே துருத்திக் கொண்டு தனது அருவெறுப்பான முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

 “நான் ஆம்பள – பெண் எனக்கு அடங்கிப் போக வேண்டும். என்னை மறுக்கும் உரிமை பெண்ணுக்கு கிடையாது”  என்ற அந்த வக்கிரமே இம்மண்ணில் பலப் பல பெண்களின் உயிரை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது.

பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்ற கருத்து நம் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்குத் தான் பெண் என்ற கருத்தை நமது கலாச்சாரம் நம்மிடையே பதிய வைத்திருக்கிறது.

பெண்ணுக்கு முடிவெடுக்கும் உரிமைகள் கிடையாது , அவள் வெறும் உடல் மட்டுமே என்று இங்கு பல ஆண்கள் நம்புகிறார்கள் அதன் விளைவே பணிக்குச் செல்லும் பெண்களை சித்ரவதை செய்வது , தன்னை காதலிக்காத அல்லது தனக்கு உடன்படாத பெண்ணை ஆசிட்டால் தாக்குவது,  கொலை செய்வது ,புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பது எல்லாம்.  டெல்லி நிரூபையாவை வன்புணர்வு செய்து கொன்றவன் அதனை அவளுக்கு புகட்டிய பாடம் என்று கூறிய அருவெறுப்பை நாம் மறந்திருக்க மாட்டோம்.

1920

  நமது ஆணாதிக்க சமூகம் இயல்பாகவே பெண்களை ஒரு உடல் என்னும் அளவிலே மட்டும் பார்க்கிறது . அந்த உடலுக்கு ஒரு ஆணை மறுக்கும் உரிமையில்லை என்று ஆணாதிக்க சமூகம் நினைக்கிறது. பாதிக்கப்பட்டாலும் அது பெண்ணின் குற்றமே என்று ஆணாதிக்க சமூகம் கூறுவது இந்த அடிப்படையில் தான்.

பெண் மீது செலுத்தப்படும் மனித உரிமை மீறலை தனது உரிமையாக பாவிக்கிறது ஆண் மனம். பெண்ணை தன் சக மனுஷியாக ஏற்றுக் கொள்ள இந்த சமூகத்தின் ஆண்கள் பழக்கப்படவில்லை என்பதே அடிப்படை பிரச்சினையாக நம் முன் நிற்கிறது.

 குடும்பம் , பள்ளி , கல்லூரி , திரைப்படம் , தொலைக்காட்சி , பத்திரிகை , என ஒரு மனிதனை உருவாக்கும் அனைத்து சமூக நிறுவனங்கள் மூலமும் பெண்ணை சக மனுஷியாக மதிப்பதற்கும் , அணுகுவதற்கும் ஆண்களுக்கு கற்றுக் கொடுப்பதே , பெண்களின் நிம்மதியான வாழ்வுக்கு நாம் எடுக்கும் முதல் முன்நகர்வாக இருக்க முடியும்.

குடும்பத்தில் குழந்தைகள் முன்பு மனைவியை அதட்டுவதும் அடிப்பதையும் நிறுத்துவது மிக அத்தியாவசியமான ஒன்று. பெண்ணை விட ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணம் இங்கு தான் வேரூன்றப்படுகிறது. அதே போல் ,  ஆண் பிள்ளை திமிர்த்தனம் செய்தால் அழகு என ரசிக்கும் குடும்பங்கள் ,பெண் பிள்ளை அடம்பிடித்தால் உடனே அடக்கி வைப்பதும் குழந்தைகள் மத்தியில் ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணத்தை வளர்க்கிறது. அதே போல் வீட்டு வேலைகளிலும் பெண் பிள்ளைகளை மட்டும் ஈடுபடச் செய்வது போன்ற செயல்களால் , அவன் ஆம்பள..  நீ பொம்பள அடங்கித் தான் இருக்கனும் என்ற எண்ணம் நம் குடும்பங்களிலிருந்தே முதலில் ஆண்களிடம் வளர்க்கப்படுகிறது.

இப்படி “தான்” உயர்ந்தவன் என்ற மனநிலையோடு வளர்ந்தாலும் , ஆண்.. ஒரு பருவம் வரையில் பெண்களோடு தோழமையோடு விளையாடி வளர்கிறான்.  இது பெண் தனது சக மனுஷி என்ற எண்ணத்தை வளர்த்து அவனது ஆண் திமிரை கரைத்திருக்கும்.

ஆனால் , பருவ வயதிற்குப்பின் ஆண் -பெண்ணை நம் சமூகம் இயல்பான தோழமையிலிருந்து பிரித்து விடுகிறது. அப்போதிலிருந்து பெண்ணின் அருகாமையை இழக்கும் ஆண் , அதன் பின் அவளை உடலாக மட்டுமே பார்க்க விழைகிறான்.  பெண்ணின் இயல்பான தோழமையிலிருந்து அவனை அந்நியப்படுத்தியது , அவனுக்குள் பெண் மீதான வன்மத்தை வளர்க்கிறது.

  இந்நிலையில் சினிமாக்களும் , பெண்களை கவர்ச்சிப் பண்டமாக மட்டும் மீண்டும் மீண்டும் காட்டி  ஆண் மனதின் வக்கிரத்தை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் , பாடல்கள் வைத்து ஆணின் வக்கிரத்திற்கு தீனி போடுகிறது.

 இப்படி ஒவ்வொரு ஆண் மனதிலும் , பெண் சிறுமையானவள் என்ற எண்ணம் வலுவாக விதைக்கப்படுகிறது. பெண்ணின் அருகாமையுமற்று ,அவளை உடலாக மட்டுமே பாவித்து, அவள் தன்னை விட சிறுமையானவள் என்ற எண்ணத்துடன் வளரும் ஒரு ஆணால் ஒரு பெண் தனக்கு உடன்படாததை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை . தன்னை ஒரு பெண் காதலிக்காததை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.தன்னை விட்டு ஒரு பெண் பிரிந்து செல்வதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதன் விளைவு ஆசிட் வீச்சுகளாகவும் , கொலைகளாகவும் , பெண்ணை ஆபாசமாக சித்தரிப்பதாகவும் போய் முடிகிறது.

respecting_a_woman-1902009

பெண் தெய்வங்கள் நிரம்பியிருக்கும் இந்த தேசத்தில் தான் , நதிகளுக்கு பெண் பெயர் வைத்து மகிழ்வதாகக் கூறும் இந்த தேசத்தில் தான் , பெண்களை புனிதமானவர்களாக கருதுவதாகக் கூறும் இந்த தேசத்தில் தான்..பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் அதிகமாக நடக்கிறது ,வன்புணர்வுகள் அதிகமாக நடக்கிறது , கொலைகள் அதிகமாக நடக்கிறது. ஆபாச சித்தரிப்புகள் அதிகமாக நடக்கிறது.

ஆம் , பெண் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டே ,அவர்களை மதிப்பதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது இந்தச் சமூகம். பெண்ணை அடக்குவதற்கு இந்த சமூகம் போட்டுக் கொள்ளும் முகமூடி தான் பெண் தெய்வங்களும் , பெண் புனித நாடகமும்.

பெண்களை தெய்வமாகவும் பார்க்க வேண்டாம் , புனிதமாகவும் பார்க்க வேண்டாம் ,  நதிகளுக்கு பெண் பெயரை சூட்டவும் வேண்டாம்.பெண்ணை சுயமரியாதையுள்ள சக மனுஷியாக மட்டும் பார்ப்பதற்கு எதிர்கால தலைமுறைகளை பழக்கப்படுத்துவோம்.

ஆணின் தோள் பெண்ணை அடக்குவதற்கும் தாக்குவதற்கும் அல்ல.. நட்புடன் அவள் சாய்வதற்கு . வரும் தலைமுறை நிகழ்த்தப் போகும் இந்த தோள் சாய்தலே..பெண்ணின் மீதான ஆணின் வக்கிரத்தையும் , ஆணின் மீதான பெண்ணின் அச்சத்தையும் போக்கும் . ஆண் – பெண்ணின் இந்த இயல்பான அன்பு பரிமாற்றம் தான்  ,பெண்ணின் மீதான ஆணின் complex மனநிலையை மாற்றி , இரு பாலரும் ஒருவர் மீது ஒருவர் ஆரோக்கியமான அணுகுமுறையைக் மேற்கொள்ளச் செய்யும்.  தோழிகளோடு அன்பாய்க் கரம் கோரு தோழா , அந்தக் கோர்ப்பில் நொறுங்கட்டும் உன் மனதின் ஆண் வக்கிரங்கள்.

பல நூற்றாண்டுகள் கலாச்சார சிறையிலிருந்து , இப்போது தான் நமது சக மனுஷி விடுதலையாகி சிறகடிக்க ஆரம்பித்திருக்கிறாள். அந்த சிறகை ஒடிக்கப் பார்க்கும் அயோக்கியனின் முகத்தில் ஓங்கி அறைந்து விட்டு ,அந்த சிறகு பறப்பதை நேசத்தோடு ரசி தோழா. ஏனெனில் நீ அவளது சக மனிதன், நண்பன்.

— அருண் பகத்

About சிறப்பு கட்டுரையாளர்கள்

2 comments

  1. Chandra Barathi

    சிறப்பு. சிறகுகளைக் கோதி விடுங்கள், இறக்கைகளை உடைத்து விடாதீர்கள்….

  2. அருமை நண்பா அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*