Home / அரசியல் / அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ?

அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ?

சுவாதியின் கொலையை ஒட்டி முகநூலில் சிலர் பகிர்ந்த கருத்துகளில் “அந்த பெண் தலித்தாக இருந்திருந்தால் ” இந்நேரம் ராகுல்(காந்தி) ஓடி வந்திருப்பான், ஊடகங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும், தலித் இயக்கங்கள் மறியல் , போராட்டம் என இறங்கியிருக்கும் ……. என நீண்டு கொண்டே செல்கிறது அப்பதிவு.

காலையில் அலுவலகத்திற்கு வந்தால் உடன் பணிபுரியும் நண்பர், இந்த மீடியாகாரங்க ஸ்வாதின்னு எழுதுறாங்க, அதே நேரம் இன்னொரு செய்தியை தலித் பெண் கொல்லப்பட்டார்னு எழுதுறாங்க, அதை சாதியோட சொல்லும் போது, இதையும் சாதியோட சொல்ல வேண்டியது தானேன்னு கேட்டார்.  இது நண்பரது கருத்து அல்ல, முகநூலில் அவர் படித்த கருத்துகளின் பிரதிபலிப்பு . இப்படித் தான் இங்கு பொது கருத்துகள் உருவாக்கப்படுகின்றன.

“ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னால் ஒரு வர்க்கம் ஒளிந்துகொண்டுள்ளது – மார்க்ஸ்”

இந்தியாவில் ஒருவர் பேசும் சொல்லிற்கு பின் அவரது வர்க்கம், சாதி, பாலினம், கட்சி என எல்லாம் உள்ளது.

இங்கு “சுவாதி தலித்தாக இருந்திருந்தால்” என்று எழுதியவர்களும், அதை பகிர்ந்தவர்களிடம் சுவாதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை விட தங்கள் மனதில் உள்ள தலித்துகளுக்கு எதிரான உயர் சாதி மனநிலையே முதன்மையாக இருக்கின்றது. அப்படி இவர்கள் சொல்வது போல முன்பு தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு நீதி கிடைத்ததா எனப்பார்ப்போம்.

1957  முதுகுளத்தூர் சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் தேவர் சாதி வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால்  நாற்பத‌ற்கும் அதிகமான தலித் மக்கள் கொலைசெய்யப்பட்டனர். அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.

1968ல் தஞ்சை கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டு போராடிய 44 பேர் (தலித்) பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உயிரோடு கொழுத்தப்பட்டார்கள். இந்த படுகொலையை நடத்திய பண்ணையார்.கோபாலகிருஷ்ணன் எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

1999ல் கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கச் சென்ற போது காவல்துறையால் 17 பேர் கொல்லப்பட்டனர். கொன்ற அரசே ஆணையம் அமைத்து “பேரணிக்கு வந்தவர்கள் ஒருவருக்கொருவர் அடித்து கொண்டு செத்தனர் ” என அறிக்கை கொடுத்தது.

2011 பரமகுடியில் 7 பேர் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் மீதான விசாரணை அறிக்கையும், காவல்துறை சட்டம் ஒழுங்கை, பாதுகாக்கவே சுட்டது என கொலையை நியாயப்படுத்தியது.

2012 தர்மபுரி படுகொலை, 2013 மரக்காணம் என நீண்டு கொண்டே செல்கின்றது இந்த பட்டியல். இந்த பட்டியலிலும் கூட பெரிய படுகொலைகளை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளேன்.  இந்த படுகொலைகள் எதற்கும் நீதி கிடைக்கவில்லை. சிலர் சொல்வது போல ஊடகங்கள் பேசியிருக்கலாம், எதிர்கட்சி தலைவர்கள் வந்து பார்த்திருக்கலாம், ஆனால் நீதி ? அவர்களுக்கு எட்டாக்கனி.cbc4353abc46c5f7

தலித்துகளின் வாழ்க்கை என்னவோ மிகவும் சொகுசான வாழ்க்கை என்பது போல சாதி இந்துக்களால் இங்கு சித்தரிக்கப்படுகின்றது. ஆனால் உண்மை நிலை என்பது வேறு. பின்வரும் இந்திய புள்ளிவிவரத்தை பாருங்கள்.

ஒரு நாளைக்கு 27முறை தலித்துகளின் மீது வன்முறை நிகழ்த்தப்படுகின்றது.
ஒரு வாரத்தில் 13 தலித்துகள் கொலை செய்யப்படுகின்றார்கள்
ஒரு வாரத்தில் 5 தலித்துகளின் வீடுகள் எரிக்கப்படுகின்றன‌
ஒரு வாரத்தில் 6 தலித்துகள் கடத்தப்படுகின்றனர்.
ஒரு வாரத்தில் 21 தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
தலித்துகளின் மீது 18 நிமிடத்திற்கு ஒரு குற்றம் நடந்து கொண்டிருக்கின்றது.  (1)

இப்படி அனுதினமும் ஏதாவது ஒரு சித்ரவதையை அனுபவித்து வாழ்ந்து வரும் தலித் மக்களின் துயரங்களை நாம் புரிந்து கொண்டு அவர்களுக்காக போராடவில்லையென்றாலும் பரவாயில்லை. அவர்களை மேலும் துயரப்படுத்தாமல் இருந்தால் போதும் என்பதே சாதி இந்துக்களுக்கு நாம் வைக்கும் கோரிக்கை.

ஏன் தலித் படுகொலை என ஊடகங்களால் சொல்லப்படுகின்றது ?

இங்கு சாதி என்பது நீங்கள் பிறப்பதிலிருந்து, இறக்கும் வரை உங்களை தொடர்கின்றது. சாதி படிநிலையில் இறுதியில் உள்ள தலித் மக்கள் எல்லா சாதியினராலும் ஒடுக்கப்படுகின்றனர்.  இங்கு செருப்பு அணிந்ததற்காக, ஜீன்ஸ் அணிந்ததற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காக, நிலம் வாங்கியதற்காக, கல்லூரியில் பெண்ணை சேர்த்ததற்காக என தலித் மக்கள் மீது ஏவப்பட்ட வன்முறைகள் எண்ணிலடங்காதது.

அண்மையில் படித்த செய்தி காசுமீரில் கொல்லப்பட்ட ஒரு இராணுவ வீரரின் உடலை உள்ளூர் சுடுகாட்டில் புதைக்கவிடவில்லை(2), காரணம் சாதி, பஞ்சாயத்து தலைவராக இருந்தாலும் இந்திய கொடியை ஏற்ற அனுமதிக்கவில்லை, காரணம் சாதி.  இப்படி தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அதே நேரம் ஒரு கவுண்டராக, வன்னியராக, முக்குலத்தோராக, பிராமணராக இருப்பதால் அவர்கள் மீது பெரும்பான்மையாக வன்முறை நட‌ப்பதில்லை.

சுவாதி வழக்கையே எடுத்துக்கொள்வோம் அவர் இன்ன சாதியாக இருப்பதால் கொல்லப்படவில்லை, ஆணாதிக்கத்தினால் கொல்லப்பட்டார். ஆனால் டி.எஸ்.பி விஸ்ணுபிரியாவின் (தற்)கொலை அவர் தலித்தாக  இருந்ததாலும், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜை கைது செய்ய முயன்றததால் மட்டுமே நடந்தது. அப்படி இருக்கும் போது அந்த செய்தியை தலித் காவல்துறை அதிகாரி “விஸ்ணுபிரியா (தற்)கொலை என்று தானே சொல்லமுடியும்.

நம்மில் ஒரு சிலர் சாதி பார்க்காமல் இருக்கலாம், ஆனால் இங்கு பெரும்பான்மை சமூகம் சாதி பார்த்து தான் செயல்படுகின்றது. அதனால் தான் சாதி மறுப்பு திருமணங்கள் கொலையில் முடிகின்றன.  நாம் சாதி பார்க்கவில்லை என்பதற்காக இங்கு ஒட்டுமொத்த சமூகமும் சாதியை பார்க்கவேயில்லை எனச்சொல்வது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விட்டது என எண்ணிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

ஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும்.

நற்றமிழன்.ப‌

1) http://www.superarlaviolencia.org/fileadmin/dov/images/women_campain/Dalit%2520Fact%2520Sheet.pdf

2) http://www.dnaindia.com/india/report-shocking-upper-castes-refuse-to-give-land-for-crpf-jawan-s-funeral-who-was-martryed-in-pampore-2228379

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

2 comments

  1. I accept the last para as it is Natramilan. BUT why should we need separate law.if it is not based on castes (mean the punishment) How suppressed castes get solatiums&compensations.if you accept the last para, why should there be mentioning of castes in the Cols. FIRST OUR REVOLT FOR NO CASTES ,

    • ஒரு குற்றம் எதனை அடிப்படையாக வைத்து நடைபெற்றதோ, அதனை அடிப்படையாக வைத்து தான் நீதி வழங்கப்படவேண்டும். தலித்துகள் மேல் ஏவப்படும் வன்முறை பெரும்பான்மையாக‌ சாதி சார்ந்தே நடப்பதால் அவர்களை தலித் என சொல்லி செய்தியை சொல்வது தான் நீதியும் கூட. அப்படி இருக்கும் பொழுது அதற்கு தனி சட்டம் சரிதானே.

      சாதி ஒழிக்க வேண்டுமென்றால் , முதலில் இங்கு சாதி இருப்பதை அங்கீகரித்து, சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளை எதிர்த்து போராடவேண்டும். சாதியின் பெயரால் நடக்கும் அநீதிகளால் அதிகம் பாதிக்கப்படுவது தலித் மக்களே. அதனால் தான் அவர்கள் அதிகம் மதம் மாறுகின்றார்கள். வெறுமனே சாதி இல்லை என்று சொல்வதனால் சாதி காணாமல் போய்விடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*