Home / அரசியல் / பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?
பொய் செய்தியின் மூலம் இந்து-முஸ்லிம் கலவரத்தை உண்டாக்க பொய் செய்தியின் மூலம் இந்து-முஸ்லிம் கலவரத்தை உண்டாக்க முயன்றவர்கள்.

பிலால் மாலிக்கை உருவாக்கியவர்களை யார் கைது செய்வது?

       சுவாதி கொலை வழக்கு தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் பல, அதில் சுவாதி தலித்தாக இருந்திருந்தால் என்ற வாதத்திற்கு எமது முந்தைய கட்டுரையில் விரிவாக பதிலளித்திருந்தோம். இரண்டாவது முக்கியமான குற்றச்சாட்டு சுவாதி கொன்றவன் பெயர் “பிலால் மாலிக்”.  இரண்டு குற்றச்சாட்டை எழுப்பிய அனைவரும் இந்துத்துவவாதிகள் என்பது எதேச்சையான ஒன்றல்ல.

      ஒரு கொலையை வைத்து தலித்துகளை எட்டி உதைத்து கொண்டே சாதிய சமூகத்தை கட்டி காக்க வேண்டும், சிறுபான்மையினரான இசுலாமியரின் மேல் அவநம்பிக்கை உண்டாக்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் தான் மேலே கூறிய இரண்டு குற்றச்சாட்டுகளையும் கொண்ட பொய் செய்தி சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

     காவல்துறை சுவாதியை கொலை செய்தது யார் என கண்டுபிடிக்கத் தொடங்கும் முன்னரே “பிலால் மாலிக்” குற்றவாளி என்ற செய்தி பரவத்தொடங்கிவிட்டது.  ட்விட்டரில் RamkiXLRI  என்பவர் தான் முஸ்லிம் கொலைகாரன் என்றார். நடிகர்.ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர்.எஸ்.வி.சேகர், பா.ஜ.க தலைவர். கல்யாண ராமன்,  பா.ஜ.க தலைவர்.எச்.ராஜா உள்ளிட்டோர் தான் கொலை செய்தவன் “பிலால் மாலிக்”என்ற செய்தியை பரப்பிய பிரபலமானவர்கள். ஒய்.ஜி.மகேந்திரன் மேல் காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், நான் அந்த செய்தி நான் எழுதியது அல்ல, தெரியாமல் பகிர்ந்துவிட்டேன் என்றார்.

பொய் செய்தியின் மூலம் இந்து-முஸ்லிம் கலவரத்தை உண்டாக்க முயன்றவர்கள்.

பொய் செய்தியின் மூலம் இந்து-முஸ்லிம் கலவரத்தை உண்டாக்க முயன்றவர்கள்.

   ஒரு கருத்தை பகிர்ந்துவிட்டு,  அதனால் பாதிப்பு ஏற்படும் பொழுது அது என்னுடையதல்ல, இன்னொருவருடையது, நான் தெரியாமல் என்னுடைய பக்கத்தில் பகிர்ந்து விட்டேன் எனக்கூறுவது தெரியாமல் கொலை செய்துவிட்டேன் எனக்கூறுவதற்கு ஒப்பானது. ஒய்.ஜி.மகேந்திரனின் செயல்பாடு இவ்வகைப்பட்டதே.

         ஒய்.ஜி மகேந்திரன் இந்த செய்தியை பகிர்ந்த பின்னர், அவரை தாடி வைத்து, தொப்பி அணிந்தவராய் மார்ப்பிங் செய்து அவரது கருத்தை எதிர்க்கின்றோம் என பல “முற்போக்காளர்கள்” பகிர்ந்தார்கள். இது அவரது கருத்தான பிலால் மாலிக் என்ற பெயருக்கு இசுலாமிய உருவம் கொடுத்தார்கள். உண்மையில் அவரது கருத்தை எதிர்ப்பதற்கு பதில், இவர்கள் அந்த கருத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில் ஆதரித்துள்ளார்கள். இதை கண்டித்து நண்பர். இரபீக் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பின்வரும் கருத்தை எழுதியிருந்தார்.  அவரது கருத்து முற்றிலும் நியாயமான ஒன்று.

“ஒய்.ஜி. மகேந்திரனை, தாடிவைத்து, தொப்பி அணிந்தவராய் மார்ப்பிங் செய்து வெளியிடும் பொதுஉளவியல் சொல்லவருவது என்ன?

நியாயமாகப் பார்த்தால், அவரைச் சங்கராச்சாரி அல்லது வேறு ஓர் இந்துத்வ பூசாரி போன்றல்லவா நீங்கள் வெளியிடவேண்டும்?”

        இப்படியான‌ குற்றச்சாட்டுகள் இன்று ஏதோ புதிதாக முளைத்த ஒன்றல்ல, காந்தியை கொன்றது சங் பரிவாரின் ( R.S.S) கருத்துகளின் படி செயல்படும் இந்துத்துவவாதியான நாதுராம் கோட்சேவின் நோக்கம் காந்தியைக் கொல்வது மட்டுமல்ல. அந்தக் கொலையின் மூலம் அப்பாவி முஸ்லீம்களை ஒழித்துக் கட்டுவதும்தான். பிடிபட்டுவிட்டால் கொலைப் பழி முஸ்லீம்கள் மீது விழுவதற்காகத் திட்டமிட்ட கோட்சே ‘இஸ்மாயில்‘ என தன் கையில் பச்சை குத்தியிருந்தான். இதனால் காந்தி கொலையுண்ட சில மணித் துளிகளில் கண்ணில் தென்பட்ட முஸ்லீம்கள் எல்லோரும் தேடித்தேடி வெட்டப்பட்டார்கள்.அந்த நேரத்தில், அதை நேரு கவனமாக கையாண்டு ஒரு பெரும் படுகொலையைத் தவிர்த்தார்.  அதன் தொடர்ச்சி தான் இந்த குற்றச்சாட்டு.

     இப்படியான ஒரு பொய்யான குற்றச்சாட்டை எழுப்பியவர்களும், அதை திட்டமிட்டு பரப்பிய ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கல்யாண ராமன் உள்ளிட்ட அனைவரையும் சமூக நல்லிணக்கத்தை குலைக்க திட்டமிட்ட சதிக்காக கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் இது போன்ற பொய் செய்திகளை உருவாக்குபவர்களும், அதை பரப்புபவர்களும் திருந்துவார்கள்.

     இப்படியாக உருவாக்கப்பட்டு, பரப்பப்படும் “அடையாளத்தின்” மீதான அவதூறுகள் என்பது சக மனிதனை பற்றிய அச்சத்தை நம்முள் விதைப்பதால் ச‌மூகத்தில் மிக மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.  அன்பே சிவம் படத்தில் கமலின் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட “வெட்டு” முகத்தைப் பார்த்து மாதவன் தீவிரவாதி என ஐயப்படுவார். அதே நேரம் மயக்க மருத்து கொடுத்து ஏமாற்றும் கோட், சூட்டுடன் வரும் “யூகி சேது” கதாபாத்திரத்தை நம்புவார்.  இந்த மனநிலையில் தான் இங்கு பெரும்பான்மை சமூகம் இருக்கின்றது. இந்த மனநிலையை வலுப்படுத்துவதற்காக இப்படியான பொய் செய்திகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு, பரப்பப்படுகின்றன.

13439004_1708193162766344_6848614314017417233_n

       இன்று இசுலாமிய வெறுப்பு என்பது ஒரு தொழில் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. அமெரிக்காவில் 2008 முதல் 2013 வரை யான ஐந்தாண்டுகளில் மட்டும் 200 மில்லியன் டாலர்களுக்கு மேலான பணம் இசுலாமியர்கள் மேல் வெறுப்பை விதைப்பதற்காக மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது. (1) இன்று இந்திய அரசையே இந்துத்துவவாதிகளின் கட்சி பிடித்துள்ள சூழ்நிலையில் இசுலாமிய வெறுப்பு என்பது தினமும் ஏதாவதொரு வகையில் வெளிப்பட்டு கொண்டே இருக்கின்றது. ஆட்சியதிகாரத்தில் இருப்பதால் பெரும்பான்மை ஊடகங்களும் இந்த “இசுலாமிய வெறுப்பு” பொய் செய்திகளை தெரிந்தே செய்திகள் என்ற பெயரில் வெளியிட்டு வருகின்றன.

இங்கு “ஒரு இசுலாமியன் எப்போதும் உங்களிடம் தன்னை, நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டுமா?

இந்தியச் சமூகம் சாதியச் சமூகம் மட்டுமா? மதவெறிச் சமூகமில்லையா?”

என்று நண்பர் .ரபீக் ராஜாவின் கேள்விகளில் வெளிப்படுவது ஒடுக்கப்படும் சிறுபான்மைச் சமூகத்தின் கோபம்.

        காந்தி கொலை தொடங்கி சுவாதி கொலை வரை வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் இந்துத்துவவாதிகள் திட்டமிட்டு வன்முறைக்கான சூழலை உருவாக்கி கொண்டே வருகின்றனர். ஆனால் அவர்கள் இதற்காக தண்டிக்கப்படுகின்றார்களா என்றால் இல்லை.  அப்படி அவர்கள் தண்டிக்கப்படாமல் காப்பாற்றுவது எது? என்ற கேள்விக்கு நமது “இந்து பொது உளவியல்” என்பது தான் பதிலாக உள்ளது. இந்திய சமூகம் என்பது உண்மையாகவே வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட சமூகமாக தொடர வேண்டும் என்றால் நாம் இந்த “இந்து பொது உளவியலை” தகர்த்து நம்முடன் வாழும் சகமனிதரை நேசிக்க கற்றுகொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்தியா மற்றொமொரு மதவாத நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

நற்றமிழன்.ப – இளந்தமிழகம் இயக்கம்.

1) http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article8778731.ece

About நற்றமிழன்

ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் தரக்கட்டுபாட்டுத் துறையில் பணி புரிகின்றார். தற்சமயம் திருப்பூரில் வசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*