Home / சமூகம் / அட்றா ஆஆஆ அவள…வெட்றா ஆஆஆ அவள…தேவையே இல்ல….

அட்றா ஆஆஆ அவள…வெட்றா ஆஆஆ அவள…தேவையே இல்ல….

சுவாதி படுகொலையை ஒட்டி பல்வேறு விவாதங்கள் நடந்து முடிந்துவிட்டன. அந்த பெண் பார்ப்பனப் பெண், இந்து, கொன்றவர் இஸ்லாமியர், தலித் பெண்ணாக இருந்திருந்தால் எனப் பல குரல்கள் எழுந்தன. நீதிபதி கிருபாகரன் தொடங்கி ஒய்.ஜி. மகேந்திரன், கல்யாண ராமன் வரை எல்லோரும் கருத்து சொன்னார்கள்.  குற்றவாளி என்றொருவரை காவல்துறை கைது செய்துள்ளது. ஒரு தலைக் காதல் என்று சொல்லப்படுகின்றது. இது குறித்த விவாதங்கள் பெண் உரிமை, சமகாலப் பாதுகாப்பு  எனத் தொடங்கி பெண் விடுதலை வரை விரிந்து செல்கின்றன. இது ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சனை இல்லை என்பதை பலரும் எளிதில் ஏற்றுக் கொள்வர். இது ஒரு சமூகப் பிரச்சனை என்பதையும் முதல் நிலையில் ஏற்றுக் கொள்வர். ஓர் ஆணாதிக்க சமூகத்தில் நடக்கும் பெண்கள் மீதான வன்முறை இது. அதற்கடுத்தப் படியாக இந்தப் பிரச்சனையின் வேர்கள் எங்கிருக்கிறது? என்ற கேள்வி எழுகிறது. இதில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.

முதலாவது பக்கம்-
ஒரு பெண் காதலை ஏற்கவில்லை என்றால், அல்லது காதலித்துப் பாதியில் நமக்குப் பொருத்தமிருக்காது என்று சொன்னால் அந்தப் பெண்ணின் மீது வன்முறை நிகழ்த்தலாம் என்ற கருத்துருவாக்கத்தின் செயல் வடிவமே ஆசிட் வீச்சு, கடத்தல் கொலைகள், அரிவாள் வெட்டுக் கொலைகள் யாவும்.  வினோதினி, வித்யா, சுவாதி என்ற பட்டியல்கள் இதனால்தான் பெருகுகிறது.

இந்தக் கருத்துருவாக்கம் அண்மைக்கால திரைபடங்களில் அதிகமாக நடக்கிறது. பெரும்பான்மையான தமிழ் திரைப்படங்களில் காதல் என்பது பெண்ணிற்கு பிடிக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பின்தொடர்வது (Continuous Harrsement),  பெண்ணை கேலி செய்வது, அவமானப்படுத்துவது (Eve Teasing), பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது (kiss, sexual violence) என்பதாகவே உள்ளன. அரிதிலும் அரிதாகவே வழக்கு எண் 18/9 போன்ற படங்கள் இங்கு வருகின்றன.

201512191506442707_Beep-song-controversy-Simbu-moves-to-High-Court_SECVPF.gif

பெரும்பான்மையான படங்களில் – அட்றா அவள..கொல்றா அவள…தேவையேயில்லை…  எவன்டி ஒன்னப் பெத்தா……. ஒய் திஸ் கொலை வெறி…. உன் பாய் ஃபிரண்ட் எல்லாம் கேயா மாறப் பிரே பண்ணுவேன்…. என்னம்மா இப்படி பன்றீங்களேமா… பீப் பாடல் எனப் பலப் பாடல்களை அடையாளம் காண முடியும். காதலிக்க மறுக்கும் பெண், காதலைத் தொடராமல் இடையில் பிரிவது ஆகிய நிலைமைகளில் பெண்ணை நோக்கிப் பாடப்படும் திரைப்பாடல்கள் இவை. ஓர் ஆண் உருகி உருகி காதலித்தால் அதை அந்தப் பெண் நிச்சயமாக ஏற்க வேண்டும் என்ற உளவியல் கட்டமைக்கப்படுகிறது. அழகான, பணம் சம்பாரிக்கும், படித்த , வெளிநாட்டுப் பையனைத் தேர்வு செய்வதைக் கடுமையாக விமர்சிப்பதாக அப்படங்கள் அமைகின்றன. யாரைத் தேர்வு செய்கிறாள் பெண் என்பதைவிட தேர்வு செய்யவும் , ஒருவரை துணையாக ஏற்க மறுக்கவும் ஒரு பெண்ணுக்கு இருக்கும் உரிமைதான் முக்கியமானது. அதை ஏற்கும் பண்பாட்டை வளர்த்தெடுக்க வேண்டும். ”உனக்கும் எனக்கும் செட்டாகுதுப்பா” என்று ஒரு பெண் சொன்னால் வருத்தப்படலாம்.அதற்கு மேல் அங்கு வேறொன்றுமில்லை. அவரது உரிமை என்று ஏற்கக் கூடிய பண்பாட்டை வளர்க்க வேண்டும். ஆனால், மேற்கத்திய நுகர்விய பண்பாடு பெண்ணைப் பண்டப் பொருளாக சித்தரிப்பதில்தான் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறது.

இரண்டாவது பக்கம் –

சாதியப் பண்பாட்டின் கூறாகும். சாதிய சமூகம் ஒரு பெண்ணுக்கு இருக்கும் தேர்வு உரிமையை மறுக்கிறது.
தன் சாதிக்குள் திருமணம் செய்ய நிர்பந்திக்கிறது உட்சாதி திருமண முறை. தன் சாதிக்கு வெளியே உள்ள ஓர் ஆணை அப்பெண் விரும்பினால் சாதியக் கட்டமைப்பு அதை எளிதில் அனுமதிப்பதில்லை.

அதுதான் கெளரவக் கொலைகளுக்கு வித்திடுகிறது. விமலா தேவி, கலைச் செல்வி, திவ்யா எனப் பெரும் பட்டியலே தரலாம். பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் செய்ய வேண்டும் என்கிறார்கள். திருமண வயதை உயர்த்துவது அல்லது குறைப்பது என இரண்டையும் இதற்கான தீர்வாகப் பிற்போக்காளர்கள் முன்வைக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு இருக்கும் தேர்வு உரிமையை மறுப்பதில் மையம் கொள்கிறது கெளரவக் கொலை சிக்கல்.

எனவே, பெண்ணை ஓர் உயிருள்ள மனிதராய் ஏற்பது. அவரது சுயமரியாதையைப் போற்றுவது. ஓர் ஆணைத் தேர்வு செய்ய அவளுக்கு இருக்கும் உரிமை, தேர்வு செய்த ஆணுடனான உறவைக் கைவிட அவளுக்கு இருக்கும் உரிமை, ஓர் ஆணின் காதல் விருப்பத்தை ஏற்க மறுக்கும் உரிமை என்ற பெண்ணின் தனி மனித உரிமையாக இது வடிவம் பெறுகிறது. பெண்ணின் தனி மனித உரிமைகளான – ஆடைத் தேர்வு, விரும்பிய படிப்பைப் படிக்கும் உரிமை, இணையைத் தேர்வு செய்யும் உரிமை, மறுமண உரிமை, சொத்துரிமை, விவாகரத்துரிமை, வழிபாட்டுரிமை போன்றவையே இன்னும் கடக்க வேண்டியவையாக உள்ளன.

தேசியம் என்பது அரசியல் பண்பாட்டுத் தளத்தில் ஒவ்வொரு குடிமகனையும் சமதையானவராக ஆக்குவதாகும். யாரை திருமணம் செய்வதென்ற பண்பாட்டு உரிமையை சரி பாதி குடிமக்களாக இருக்கும்  பெண்களுக்கு மறுக்கிறது இன்றைய சமூகம். இவ்விடயத்தில் அவர்கள் சமதையானவராக ஆக்க வேண்டியது ஒரு தேசியக் கடமையாக அமைந்துவிடுகிறது.

எனவே,   பெண்ணின் தனி  மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது சனநாயகக் கோரிக்கையாகவும் அதன் வழி தமிழ்த் தேசிய கோரிக்கையாகவும் விளங்குகிறது.

மொத்தத்தில், எனக்கு அவனைத் தான் பிடிக்குது..அவனத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்வதற்கும் எனக்கு ஒன்ன பிடிக்கலை என்று சொல்வதற்கும் நமக்கு செட் ஆகாதுப்பா…பிரிஞ்சுருவோம் என்று சொல்வதற்கு ஒரு பெண்ணுக்கு இருக்கும் அடிப்படை மற்றும் பிறப்புரிமையை நமது சமூகம் அங்கீகரிக்க  வேண்டும். இது நுகர்வியப் பண்பாட்டிற்கும் சாதியப் பண்பாட்டிற்கும் எதிரான சனநாயகப் பண்பாட்டிற்கானப் போராட்டமாகும்.

செந்தில் – இளந்தமிழகம் இயக்கம்

About செந்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*