Home / அரசியல் / நெருக்கடி நிலையில் காஷ்மீர்

நெருக்கடி நிலையில் காஷ்மீர்

பத்திரிக்கை செய்தி

10 ஜூலை 2016

ஹிஸ்புல்-முஜாகிதீனின் தளபதி புர்ஹான் வானியும் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் இரு உறுப்பினர்களும் சட்டத்திற்கு புறம்பான முறையில் கொல்லப்பட்டதன் பிற்பாடு, அதைக் கண்டித்து போராடுவதையும், கொல்லப்பட்டவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதையும், அவர்களுக்காக துக்கம் அனுசரிப்பதையும் தடுக்கும் நோக்கில் ஜம்மூ காஷ்மீர் காவல்துறையும் இந்திய ராணுவமும் அத்துமீறிய வகையில்  தனது பலத்தை பயன்படுத்தி வருகின்றன. சோபியன், புல்வாமா, குல்கம் மற்றும் இஸ்லாமாபாத் மாவட்டங்களில் இதுவரை பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒட்டுமொத்தமாக 350 பேர் வரை காயமடைந்துள்ளனர். காவல் துறையும், மத்திய ரிசர்வ் காவல் துறையும் அசையும் மற்றும் அசையாத சொத்துக்களை சேதப்படுத்தி வருகின்றனர். காஷ்மீரின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது ஆனால் பல்வேறு இடங்களில் மக்கள் அதை மீறிய வண்ணம் இருக்கின்றனர். துக்கம் அனுசரிப்பவர்கள் மீதும் போராட்டக்காரர்கள் மீதும் இந்திய ராணுவம் தற்போது மீண்டுமொரு முறை கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறையும் அதன் விளைவாக கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் மடிவதும் அதிர்ச்சியாகவும் துயரகரமானதாகவும் உள்ளது. கொல்வதற்கு, காயப்படுத்துவதற்கு, சித்திரவதை செய்வதற்கு, சொத்துக்களை சேதப்படுத்துவதற்கு காவல்துறைக்கும் இராணுவத்துக்கும் முழு சுதந்திரம் இருப்பதாகவே தெரிகிறது. பொது மக்கள் மடிவதை தடுப்பதற்கெனவோ அதன் எண்ணிக்கையை குறைப்பதற்கெனவோ மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கென்ற கொள்கை ஒன்றை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கத்திற்கும் ஜம்மு காஷ்மீர் அரசாங்கத்திற்கும் எவ்வித விருப்பமுமில்லை. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பதை ராணுவம் தடுக்கும் அதே நேரத்தில், எவ்வித நம்பகமான விசாரணையும் நடைபெறுவதற்கு முன்பாகவே, நடந்த வன்முறையில் மரித்தவர்களையும் காயம்பட்டவர்களையுமே கைநீட்டி குற்றம் சாட்டுகின்றனர் மூத்த காவல்துறை அதிகாரிகள். போராட்டக்காரர்கள் தம்மால் ஹாஞ்சிபோரா காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களை களவாடி, அதை காவலர்களுக்கு எதிராக பயன்படுத்தியதாக கூடுதல் டி.ஜி.பி ஜெனரல் எச்.எம்.சஹாய் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார். பொதுமக்களால் சுடப்பட்டு காயமடைந்த காவலர்கள் யார் யார், அவர்கள் எங்கு சிகிச்சையளிக்கப் படுகின்றனர் என்ற விவரங்களை அரசு வெளியிட வேண்டும்; இல்லையெனில் திரு.சஹாயின் குற்றச்சாட்டை அரசு வழக்கமாக நடத்தும் உளவியல் போரெனவே புரிந்து கொள்ள வேண்டி வரும். 

burhan wani

attack on ambulance1

போராட்டக்காரர்கள் மீது மட்டுமின்றி மருத்துவமனைகளுக்குள்ளும் ஆம்புலன்சுகளுக்குள்ளும் இருந்த நோயாளிகள் மீதும் அவர்கள் உடன் இருந்தவர்கள் மீதும் ரிசர்வ் போலீஸ் படையும் காவல் துறையும் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி இஸ்லாமாபாத் மாவட்ட மருத்துவமனை, லால்போரா ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனை ஆகியவற்றின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிய வருகிறது.

மருத்துவமனைகள் மீதும் ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தும் இக்கொள்கையினால் Jammu Kashmir Coalition of Civil Society (JKCCS) கவலை கொண்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு உள்ளேயும், ஆம்புலன்ஸ் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுவது இது முதன்முறையல்ல. 2008, 2009 மற்றும் 2010 மக்கள் எழுச்சிகளின் போதும் இதே போன்ற தாக்குதல்களை காஷ்மீர் மக்கள் எதிர் கொண்டிருக்கின்றனர். மருத்துவமனைகளின் மீதும் ஆம்புலன்ஸ்களின் மீதும் தாக்குதல் நடத்துவது சர்வதேச மனிதஉரிமை சட்டங்களின் படி ஒரு குற்றம். இதை காஷ்மீரில் செய்ததற்காக இந்திய ராணுவம் மறுபடி மறுபடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்திய ராணுவம் சட்டத்திற்கு கட்டுப்படாமலும், அதை மீறுவதற்கான முழு சுதந்திரத்துடனும் செயல்பட்டு வருகிறது, இந்தியாவிலும் சர்வதேசத்திலும் வசிக்கும் மனசாட்சியுள்ளவர்கள் இதைக் கண்டிக்க வேண்டும்.

attack on ambulance6   

இஸ்லாமாபாத் மாவட்ட மருத்துவமனையிலும், ஸ்ரீநகரில் உள்ள எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த காயமடைந்தவர்களின் பெயர் பட்டியலை JKCCS பெற்றது. இந்தப் பத்திரிக்கை செய்தியின் மூலமாக எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் பெயர்களை நாங்கள் வெளியிடுகிறோம். பின்னர் நாங்கள் இஸ்லாமாபாத் மருத்துவமனையிலும் சாத்தியமிருந்தால் மற்ற மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட காயமடைந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவோம்.

ஸ்ரீநகரில் உள்ள எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 100 நோயாளிகளில் 55 பேர் ஜூலை 9, இரவு 9 மணிக்குள்ளாக சேர்க்கப்பட்டனர். அந்த 55 பேரில் நான்கு பேர் பெண்கள், அவர்களுள் மூவருக்கு வயிற்றில் குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன, மேலும் அவர்கள் அனைவருமே பிஜிபெஹராவைச் சேர்ந்தவர்கள். அந்த 55 நபர்களில் இருவர் மருத்துவமனையில் மரணமடைந்து விட்டனர், மூவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

அம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 55 நபர்களில் 16 நபர்களுக்கு குண்டு பாய்ந்த காயங்கள் உள்ளன, இருவருக்கு ராணுவ வீரர்களால் சித்திரவதைக்குள்ளாக்கப் பட்டதால் உண்டான காயங்கள் உள்ளன, 37 நபர்களுக்கு ரப்பர் குண்டுகளால் உண்டான காயங்கள் உள்ளன. ரப்பர் குண்டுகளால் காயம்பட்டவர்களில் 19 பேருக்கு கண்களில் தீவிரமான காயங்கள் ஏற்பட்டு உள்ளன, அதன் விளைவாக அவர்கள் நிரந்தரமாக பார்வையிழக்க நேரிடலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். காயம்பட்டவர்களுள் குறைந்தது ஐந்து பேருக்காவது முதுகுப் பக்கம் குண்டுக் காயமோ ரப்பர் குண்டினால் உண்டான காயமோ உள்ளது, அதன் பொருள், திரும்பியோட முயற்சித்தவர்கள் கூட ராணுவத்தினரால் தாக்கப்பட்டனர். கிடைத்துள்ள தகவல்களின்படி, 55 பேரில் 40 பேருக்காவது இடுப்பிற்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்ட 55 பேரில் 18 பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள்.  

காவல்துறையும் ரிசர்வ் காவல் துறையும் மருத்துவமனையில் இருந்து சில நோயாளிகளை கைது செய்து சென்றதாலும், எஸ் எம் ஹெச் எஸ் மருத்துவமனையின் விபத்து சிகிச்சைப் பிரிவில் இருந்து இருவரைப் பிடித்து சென்றதாலும் காயம்பட்ட பலர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட விரும்பவில்லை. நேற்றில் இருந்து குறைந்தது நான்கு முறையாவது காவல்துறையும் ரிசர்வ் காவல் துறையும் மருத்துவமனைக்குள் தேடுதல் வேட்டை நிகழ்த்திச் சென்றது.

தமிழாக்கம்: முத்துவேல்

Original English version released by JKCCS is available @ http://www.jkccs.net/kashmir-under-state-of-emergency/

கடந்த மூன்று நாட்களாக இந்திய இராணுவம், காசுமீர் காவல்துறையும் சேர்ந்து 30 பொதுமக்களை கொன்றுள்ளார்கள். தங்களுடன் வாழ்ந்த ஒரு இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது எனத் தடுத்ததன் விளைவாக மக்கள் இராணுவத்திற்கு எதிராக கல்லை எறிகின்றார்கள்.  அதை தடுக்க எல்லா உபகரணங்களும் கொண்ட இராணுவம் மக்களை சுட்டுத்தள்ளியும், ஆம்புலன்ஸ்,  மருத்துவமனைகளில் சிகிச்சை எடுப்பவர்களை தாக்கி ஒரு கூலிப்படை போல செயல்படுகின்றது. ஊடகங்களோ காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன. இந்திய ஊடகங்கள் அரசின் புல்லாங்குழலாக செயல்படுகின்றது. காசுமீரி மக்களின் மேல் திட்டமிட்டு வன்முறையை ஏவும் இந்திய இராணுவத்தையும், அரசின் செயல்பாடுகளையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது. தங்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் காசுமீரிகளுடன் துணை நிற்கின்றது இளந்தமிழகம் இயக்கம்.

– விசை ஆசிரியர் குழு 

 

 

About விசை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*